தொடரும் தோழர்கள்

திங்கள், பிப்ரவரி 23, 2015

ஸ்கூல் பையன்!



பள்ளிச் சிறுவன்- -ஸ்கூல் பையன்

இந்த ஸ்கூல் பையனின் இயல்புகள் என்ன?

இந்தக்காலத்து ஸ்கூல் பையன்களைப் பார்க்கும்போது எனக்கு என் ஆரம்பப் பள்ளிக்காலம் நினைவுக்கு வருகிறது.

இப்போதெல்லாம் சிறார் வகுப்புக்குச் செல்லும் குழந்தைகள் கூட மகிழ்ச்சியாகக் கிளம்பிப் போவதைப் பார்க்கிறேன்  

நான் அப்படியல்ல!

ஷேக்ஸ்பியர் சொல்வார்”முனகிக் கொண்டே கையில் பையுடனும்,பளபளக்கும் காலை முகத்துடனும்,நத்தை போல் ஊர்ந்து.விருப்பமின்றிச் செல்லும் ஸ்கூல் பையன் “ என்று.

இதுதான் நான்!

முதல் வகுப்பில் சேர்த்தபின் நான் விருப்பமின்றியே பள்ளிக்குப் புறப்படுவேன்.ஆனால்  விருப்பமின்றி ஊர்ந்து பள்ளி செல்வது கிடையாது .

போக்குக் காட்டி விட்டு வேறெங்காவது ஒளிந்து கொள்வேன்

ஆனால் முட்டாள்தனமாக வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவது இடங்களில் போய்ப் பதுங்கிக் கொண்டு கண்டுபிடிக்கப் பட்டுப் பள்ளிக்கு அனுப்பப் படுவேன்.

ஆரம்பத்தில் சண்டித்தனம் செய்த குதிரை இது முடியாது என்றுணர்ந்து ஓட ஆரம்பித்து விட்டது!

ஷேக்ஸ்பியரின் ஒரு வர்ணனை கவனியுங்கள்”பளபளக்கும் காலை முகம்-shining morning face”

பிள்ளையைக் குளிப்பாட்டி,தலையில் எண்ணெய் தவிப் படியத் தலைவாரி பள்ளிக்கு அனுப்புகிறாள் தாய்.

முகம் பள பளக்கத்தானே செய்யும்?!

(digression--  ஷைனிங் என்ற சொல் எனக்கு நமது புதிய கலையுலகப் புயல்,ஷைனிங் ஸ்டாரை நினைவு படுத்தி விட்டது!பள்ளிப் பருவத்தில் மட்டுமன்றி எப்போது அவருக்குப் பளபளக்கும் முகம்தானோ!)

இப்போது போல் அப்போது சீருடை கிடையாது.செருப்பு கூட அணியாமல் கரிசல் மண்ணில் கால் புதைய நடந்த காலம் அது!

இன்று முதுகில் ஒரு புத்தகச் சுமை நிறைந்த பையைக் கட்டிக் கொண்டு கூன் விழுந்து நடக்கும் நிலை அன்று இல்லை.

ஒரு சாதாரண துணிப்பை.அதன் பிடியில் கை நுழைத்து,பையை முதுகில் போட்டு ,பிடியைத் தோளின் மேலாக,முன்பக்கம் கொணர்ந்து,ஜாலியாக,வழியில் கிடக்கும் கல்லையும், டப்பாக்களையும் உதைத்தபடி நடந்து சென்ற காலம்.

பையில் ஒரு ஸ்லேட்,ஓரிரு புத்தக,நோட்டுக்கள்.அவ்வளவே.

தோளிலும் அழுத்தமில்லை;மனத்திலும் அழுத்தமில்லை!கவலைகளற்றுத் திரிந்த காலம் ஸ்கூல் பையனாயிருந்த காலம்.

கொடுக்காப்புளி பறித்துத் தின்ற வாதாம் கொட்டை உடைத்துத் தின்ற காலம்.

மனக்கணக்குப் போட்ட காலம்;மனத்தால் கணக்குப் பண்ணிய காலம் பின்னால் வந்தது.

இது ஒரு சுகம் ;அது ஒரு சுகம்!

கல்லூரிப் பருவம் பல விதங்களில் இனிமையானதான போதிலும்,கவலைகளும் கலந்த பருவம்.

ஆனால் ஸ்கூல் பையனாக இருந்த காலம்,பொறுப்புகளற்ற .கவலைகளற்ற காலம்!

என் ஸ்கூல் பையன் காலம் மூன்றாகப் பிரிக்கப்படலாம்.ஏனெனில் நான் ஒன்று முதல் பள்ளி இறுதி வரை மூன்று ஊர்களில் படித்தேன்-சாத்தூர்,கோவில்பட்டி,சிவகாசி.-கோவில்பட்டியில் பிரபல பதிவர் செங்கோவி படித்த அதே பள்ளியில் நானும் படித்தேன் என்பது எனக்குப் பெருமைதானே!

ஊர் வேறு; பள்ளி வேறு அனுபவங்களும் வேறு.

எழுத ஆரம்பித்தால் ஒரு வாரம் ஓட்டி விடலாம்.

பாவம் நீங்கள்!விட்டு விடுகிறேன்!


7 கருத்துகள்:

  1. பள்ளி நினைவலைகள் நிழலாடியது எனக்கும்.
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பள்ளிப்பருவ நினைவுகளை படித்தபோது நானும் கால இயந்திரத்தில் பயணித்து என்னுடைய பள்ளி பருவத்தை ‘பார்வையிட்டேன்’. நீங்கள் ஒரு வாரம் என்ன ஒரு மாதம் கூட எழுதலாம் தங்களின் பள்ளிப்பருவ நிகழ்வுகளை. படிக்க காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. மாணவப் பருவ நினைவுகள் என்றுமே இனிமையானவை
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  4. என்னுடைய பள்ளிக்கூட காலமும் நினைவுக்கு வந்தது! அருமையான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா.
    மறக்கமுடியாத நினைவுகள் பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. கவலைகள் என்றால் என்னவென்றே தெரியாதே...

    இன்னும் ரசிக்க காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  7. அருமையான நினைவுகள். ஒருவாரம் என்ன ஒரு மாதம் எழுதுங்க. மிகவும் நன்றாக இருக்கும் .நாங்களும் ரசிக்கிறோம்.

    பதிலளிநீக்கு