தொடரும் தோழர்கள்

திங்கள், பிப்ரவரி 28, 2011

சாந்தோம் சந்திப்புகளின் முடிவு!

இன்று நீ வந்தாய்! கண்களில் கண்ணீரோடு,

ஏன் வந்தாய் என்னை உயிரோடு கொல்வதற்கா?

நின்றாய்,தள்ளி அமர்ந்தாய்,தரை நோக்கித் தலை கவிழ்ந்தாய்,

மெல்ல வாய் திறந்தாய் “இரண்டு நாட்களாய்

என்னென்னவோ நடந்துபோச்சு;பெண்பார்த்தார்கள்,

பிடிக்குதென்று சொன்னார்கள்;நிச்சயம் செய்தார்கள்.

என் மனம் யார் பார்த்தார்கள்?என் குரல் யார் கேட்டார்கள் ?

அப்பா சொல்லி விட்டார்;ஆவணியில் கல்யாணம்.

என்ன நான் செய்வேன்,அழுவதற்கும் உரிமையில்லை.

உங்கள் மடியில் முகம் புதைத்து அழுவதென்றால்

என்னுயிரே இன்றெனக்கு அதற்கும் துணிவில்லை.

ஐ ஏ எஸ் மாப்பிள்ளை அனைவருக்கும் சந்தோஷம்.

என்னைத் தவிர எல்லோரும் சிரிக்கின்றார்,

எதிர்க்கவும் வழியில்லை காதல் உரைக்கவும் துணிவில்லை,

ஒன்றும் புரியவில்லை,ஒரு வழியும் தெரியவில்லை,

ஓடிப்போய் மணந்திடவும் உள்ளம் ஒப்பவில்லை,

மன்னியுங்கள் என்னை மகாபாவியாகிவிட்டேன்,

உங்களைப் பிரிந்து உயிரின்றிப் போகின்றேன்,

என்னை மறந்து விடுங்கள்” என்றுரைத்துப் போய்விட்டாய்.

உனக்குரிமையில்லாத ஒரு விஷயம் சொல்லிச்சென்றாய்

"உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி?"

என் நெஞ்சில் ,நெஞ்சத்துடிப்பில்,உயிர் மூச்சில் கலந்ததனால்
இன்னுயிரே உன்னை நான் இன்னும் மறக்கவில்லை!

“சந்தனக்காடுகள் பற்றியெரிகையில் சந்தனமே மணக்கும்
என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்(……)என்றே ஒலிக்கும்”
(கடைசி இரண்டு வரிகள் நன்றி சேவற்கொடியோன்)

(காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களே! (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்!)

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

சாந்தோம் சந்திப்புகள்--கவிதை!

காத்திருந்து காத்திருந்து உள்ளம் வாடுதடி-வழி
பார்த்திருந்து பார்த்திருந்து கன்களும் நோகுதடி.
எத்தனை நேரம்தான் நீர் அலைகளை எண்ணுவது?
எத்தனை தடவைதான் கடல் மணலைக் கிளறுவது?
சுண்டல்காரச் சிறுவனும் சுற்றிச் சுற்றி வருகின்றான்;
கிண்டலாய்க் கேட்பானோ”அக்கா வரல்லையா?”
நேற்றும் நீ வரவில்லை இன்றும் வரவில்லை இன்னும்;
தேற்றுவாரின்றித் தேம்பியழுகிறதென் உள்ளம்.
அம்மா,தங்கையு டன் அனுமார் கோவில் போனாயோ?
(தண்ணித்துறை ஆஞ்சநேயர் மிகப் பிரசித்தம்-என் விளக்கம்)
சிநேகிதிகள் பலர் சூழ சினிமாவுக்குப் போனாயோ?
மாமிகள் பட்டாளத்துடன் மாம்பலம் போனாயோ ?
என்ன செய்தாயோ,என்னை மறந்து போனாய்.
உனக்காகத் தவிக்கும் உள்ளத்தை மறந்து போனாய்.
அடியே!
நாளையேனும் வந்தென்னைப்பார்-இல்லையேல் எனக்கு
நாளைகளே இல்லாமல் போய்விடும் போ!

அன்புள்ள அப்பா!-தொடர்கிறது!

14-8-1978

அன்புள்ள அப்பா,
கலிஃபோர்னியாவிலிருந்து இன்றுதான் திரும்பினோம்.அங்கே எடுத்த ஃபோட்டோக்கள் மற்றும் படக் கார்டுகள் அனுப்பியிருக்கிறேன்.எல்லோரும் பார்த்த பின்,என் மாமனார் வீட்டில் கொடுத்து விடவும்.இந்த டூர் ஒரு மிக நல்ல மாற்றமாக இருந்தது.ஆனால் நான் என் பாட்டு க்ளாஸை விட்டு விட்டுப் போனது கஷ்டமாகத்தான் இருந்தது.இன்று திரும்பி வந்து சாயந்திரமே வகுப்பை ஆரம்பித்து விட்டேன்.சில ஃபோட்டோக்கள் சக்திக்கும் அனுப்பியிருக்கிறேன்.

கொஞ்ச காலம் முன் சக்தி சில கேசட்டுகளும், இசைத்தட்டுகளும் அனுப்பியிருந்தான்.கேட்கக் கேட்க திகட்டவில்லை.ஆகாஷ்வாணி கேட்பது போல் உணர்ந்தேன்.என் மாணவிகளுக்கெல்லாம் போட்டுக் காட்டினேன்.திருச்சியிலிருந்து வந்த ஒரு தமிழ்ப்பெண் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னட,மராத்தி,பெங்காலி மாணவிகளுக்கு சம்ஸ்கிருத,தெலுங்குக் கீர்த்தனைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்!!

அப்பா!இந்த சங்கீதம் என்னை மீண்டும் பிறக்க வைத்திருக்கிறது.புது உற்சாகம் அளித்திருக்கிறது.இதற்கு நான் சக்திக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அவன் தூண்டுதல் இல்லையென்றால் இது நடந்திருக்காது.அவனைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தால் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்காமலிருக்க முடியவில்லை.உங்களை, .அம்மாவை, நம் குடும்பத்தின் உறவை இழந்திருப்பேன்.இப்போது என்ன வாழ்கிறது?நீங்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்க,நான் விசுவுடன் அமெரிக்காவில் வாழும் இந்த வாழ்க்கையில் என்ன அடைந்து விட்டேன்?எனக்கே பதில் தெரியவில்லை.பதில் என்றாவது கிடைக்கும் என்றும் தோன்றவில்லை.



அப்பா நான் மறுபடியும் சொல்கிறேன்.விசு மிக நல்லவர். எந்தக் குறையும் இல்லை.நீங்கள் எதிர்பார்த்திருந்த மாப்பிள்ளை.அமெரிக்காவில் பெரிய படிப்புப் படித்தவர், நல்லவேலையில் இருப்பவர்.நிறைய சம்பாதிப்பவர்,கடமை தவறாத கணவர்,தந்தை.இதற்கு மேல் வேறு என்ன எதிர்பார்ப்பது?அதெல்லாம் நான் முன்பே தொலைத்துவிட்ட ஒரு கனவு.-வெகு நாட்களுக்கு முன் திருச்சியில்,வேறு ஒருவரை நினைத்திருந்தபோது.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி.
14-4-1984

அன்புள்ள அப்பா,
19 வருடங்களுக்குப் பின் சக்தியை,டாக்டர்.சக்திவேலைப் பார்த்தேன்.நியூயார்க்குக்கு ஏதோ வேலையாக வந்தவன் நம்மாத்துக்கும் வந்திருந்தான்.விசுவும்,குழந்தைகளும் ரொம்ப சந்தோஷமாக அவனை வரவேற்றனர்.அவர்களுக்கு அவனை ரொம்பப் பிடித்து விட்டது.பேசிக் கொண்டே இருந்தனர்.அவன் எனக்காக புத்தகங்கள்,கேசட்டுகள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு,இன்னும் என்னென்னவோ வாங்கி வந்தான்.ரொம்ப சந்தோஷமான ஒரு நாள்!

இப்படிக்கு
உங்கள் அன்புள்ள
கல்யாணி.


20-1-1990
அன்புள்ள அப்பா,
என்னுடைய பீரோ லாக்கரில் கிடந்த இந்தக் கடிதங்களை யெல்லாம் இன்று எடுத்துப் படித்தேன்.உங்களுக்கென்று எழுதி அனுப்பாமல் விட்ட கடிதங்கள். ஏன் அனுப்பவில்லை என்று தெரியுமா?சக்தி பற்றி உங்களுக்கு எழுத முடியாது.காரணம் நீங்கள் கோபிப்பீர்கள் என்ற பயமல்ல.உங்களை நான் காயப்படுத்த விரும்பவில்லை.எனக்குத்தெரியும்,சக்தி நல்லவன்,வாழ்க்கையில் முன்னேறக் கூடியவன் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள்.ஆனால்,இந்த சமுதாயத்துக்குப் பயந்து,குடும்பத்தின் நல்ல பெயருக்காக,நீங்கள் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.இந்தக் கடிதங்கள் உங்களை மேலும் காயப் படுத்தியிருக்கும்.இன்று,உங்கள் மறைவுக்கு இரண்டு வருடத்துக்குப்பின்,ஒரு சாலை விபத்தில் டாக்டர்.சக்திவேல் அகால மரணம் அடைந்து 6 மாதங்களுக்குப்பின்,இக் கடிதங்களைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது.இந்த அனுப்பப்படாத,தபால் தலை ஒட்டாத கடிதங்கள் மாறியிருக்கக் கூடிய என் வாழ்க்கையின் பிரதிபலிப்பே!

இப்படிக்கு
கல்யாணி விஸ்வநாதன்.
(இது ஒரு பள்ளியில் நடைபெற்ற ஆங்கிலச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதையின் தமிழாக்கம்!தமிழாக்கம் செய்த பெருமை மட்டுமே எனக்கு.சில மாற்றங்கள் செய்தேன்.சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும்-சித்ரா அவர்கள் சுட்டிக்காட்டியது போல!)

வியாழன், பிப்ரவரி 24, 2011

அன்புள்ள அப்பா!

(இதுவும் ஒரு காதல் கதைதான்.ஒரு வித்தியாசமான காதலைப் பற்றி பேசும் கதை.நீளம் அதிகம்.பொறுமையாகப் படியுங்கள்.முடிவில் ஒரு கொக்கி!)
27-01-1965
அன்புள்ள அப்பா,
நீங்கள்,அம்மா,ராஜி,சீனு எல்லாரும் சௌக்கியமென்று நம்புகிறேன். இங்கே, நியூயார்க்கில், குளிர் நடுக்குகிறது;ஆனால் அவர் சொல்கிறார்,நான் கடுங்குளிரிலிருந்து தப்பி விட்டேன் என்று.

கொட்டுகின்ற பனியை பார்க்காமல் போய் விட்டேனே என்று வருந்துகிறேன்.அதே சமயம் திருச்சியை விட்டு வந்ததும் வருத்தமாகத்தான் இருக்கிறது.திருச்சி மற்றும் அதனுடன் இணைந்த மற்றவை-நீங்கள்,அம்மா,ராஜி, சீனு,பக்கத்தாத்து ரமா,உச்சிப்பிள்ளையார் கோயில், விகடன், ஃபில்டர் காஃபி,ஹோலி க்ராஸ் கல்லூரி,ஃபிசிக்ஸ் துறை, அனைத்துக்கும் மேலாய் சக்தி-இந்த நினைவாகவே இருக்கிறேன்.

இக்கடிதத்தில் சக்தி பற்றி எழுதியது உங்களுக்குப் பிடிக்காதுதான்.கவலைப் படாதீர்கள் அப்பா.நீங்கள் என் நன்மைக்காகவே என்னை விசுவுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தீர்கள் என்பது எனக்குத்தெரியும்.நான் சக்தி பற்றி உங்களிடம் சொன்ன அன்று,நீங்கள் கோபத்தில் கத்தியதும்,அம்மா தன் கண்ணீரை மடிசார் தலைப்பினால் மௌனமாகத் துடைத்துக் கொண்டதும் இன்னும் என் நினைவில் நிற்கின்றன.அதன் பின் பொறுமையாக நான் ஏன் சக்தியை மணக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விவரித்தீர்கள்.20 என்பது வாழ்க்கை பற்றித் தீர்மானிக்க மிகவும் சிறிய வயது என்பதையும், குடும்பத்துக்கும், ராஜிக்கும் இதனால் பாதிப்பு எற்படுவதையும், அக்ரஹாரத்தில் நமக்கு ஏற்படும் தலைகுனிவையும்,ஒரு மாமிசம் சாப்பிடும் ஆண், வெங்காயம் கூடச் சாப்பிடாத ஒரு பெண்ணுக்கு சரியான துணையாக முடியாது என்பதையும் இன்னும் எத்தனையோ காரணங்களயும் எடுத்துரைத்தீர்கள்.சக்தி ஒரு சமணமுனிவராக மாறினாலும் கூட உங்களால் வேறு பல காரணங்கள் சொல்லியிருக்க முடியும்.ஆனால் இதற்கு எதிராக,விசு,பூணல் அணிந்தவர், நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை,அமெரிக்காவில் கம்ப்யூடர் துறையில் உயர்ந்த வேலையில் இருப்பவர்,இப்படி எத்தனையோ காரணங்கள் உங்களுக்கு இருந்தன, விசுவைத் தேர்ந்தெடுப்பதற்கு..அப்பா,நான் குறை கூறவில்லை,விசுவும் ரொம்ப நல்லவர்தான்.
அம்மாவிடம் சொல்லுங்கள்,அம்மா சொன்னபடி நான் கொழுக்கட்டை செய்யவில்லையென்று,ஏனென்றால் இங்கே தேங்காய் விலை அதிகம்,அவருக்கு கொழுக்கட்டை பிடிக்காதாம்.

ஆனால் சங்கராந்தி அன்று,அவர் விருப்பப்படி வெளியில் போய் சாப்பிட்டோம்.ஒரு கடல் உணவு விடுதிக்குச் சென்றோம்.சாட்டர்ஜி குடும்பத்தையும் அவர் அழைத்திருந்தார்.அவர்கள் பேசிய அமெரிக்க ஆங்கிலம் எனக்குச் சரியாகப் புரியவில்லை.மெனு கார்டில் தலையைப் புதைத்துக் கொண்டேன்.மற்றவர்கள் என்னவெல்லாமோ ஆர்டர் செய்தனர்.நான் ஒரு சாண்ட்விச்சும் ஜூசும் கொண்டு வரச் சொன்னேன்.அன்றுதான் அப்பா நான் தெரிந்து கொண்டேன்,அவருக்கு மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும், மீனும் மிகவும் பிடிக்கும் என்று.

உங்களுக்குத் தெரியுமா அப்பா,எனக்காக சக்தி அசைவம் சாப்பிடுவதையே விட்டு விட்டாரென்று.அதுவும் நான் எதுவும் சொல்லாமல், அவராகவே.ஆனால் சக்தி நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை இல்லையே,அவரால் சுப்பிரமணிய ஐயரின் பெண்ணான கல்யாணியை எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும்?

அவ்வப்போது,எங்கள் நலம் பற்றி எழுதுகிறேன். என்னால் சீனுவின் பூணலுக்கு வர முடியாது என நினைக்கிறேன். எனக்குப் பட்டுப் புடவை வாங்க வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லுங்கள்.இங்கே அதையெல்லாம் கட்டிக் கொள்ள முடியாது.கோமாளித்தனமாக இருக்கும்.
இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி

அன்புள்ள அப்பா, 20-10-1968

நாங்கள் சௌக்கியம்
கௌதம் பேச ஆரம்பித்துவிட்டான்.அவன் ’தோசை’ என்று சொல்வதுபோல் எனக்குக் கேட்டது.ஆனால்,விசு அது வெறும் உளறல்தான் என்கிறார்.

உங்கள் முந்திய கடிதத்திலிருந்து பக்கத்தாத்து ராஜிக்குக் கல்யாணம் நடந்து ஜாம்ஷெட்பூரில் இருக்கிறாள் என அறிந்து கொண்டேன்.சந்தோஷம்.சாரதா மாமியிடம் கேட்டு அவள் விலாசத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.அவளுடன் தொடர்பு கொள்கிறேன்.

ராஜி கணவருடன் மெட்ராசில் சந்தோஷமாக இருப்பாள் என நம்புகிறேன்.சென்ற மாதம் அவளுடன் ஃபோனில் பேச ரொம்ப சந்தோஷமாக இருந்தது.சீனுவைப் பரிட்சைக்கு நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள்.சக்திக்குக் கல்யாணம் ஆகி விட்டதாக ராஜி சொன்னாள். அவனுக்கு என் வாழ்த்துக்களை மானசீகமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனென்றால் ராஜி என் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டாள்.என் காரணமாக நீங்கள் உங்கள் நீண்ட நாள் நண்பரான, சங்கரவேலுடன்(சக்தியின் அப்பா) உங்கள் நட்பைத்துண்டித்து விட்டீர்கள் என்று எனக்குத்தெரியும்.சக்தி அவன் அம்மா விருப்பப்படி மாமா மகளை கல்யாணம் செய்துகொண்டதாக அறிகிறேன்.


ஆவணி அவிட்டம் வழக்கம் போல் சிறப்பாக நடந்ததா? விசுவின் அம்மா ஒரு கட்டுப் பூணல் கொடுத்திருந்தார்கள், ஆவணி அவிட்டத்துக்காக.ஆனால் அன்று அவர் பாஸ்டனில் இருந்தார்.இங்கே இருந்திருந்தாலும் பூணலை உபயோகித்திருக்க மாட்டார்.சென்ற மூன்று வருடங்களில் அவர் பூணல் அணிந்து நான் பார்த்ததே இல்லை.கௌதம் இப்போது அந்த நூல் சுருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.அது வெறும் நூல்தான்,வேறென்ன சொல்ல.அதன் முக்கியத்துவம் அவனுக்கு என்றாவது தெரியுமா என்பது சந்தேகமே.விசு அவன் ஆங்கிலத்தை மட்டுமே கேட்கும்படி செய்து வருகிறார்.அதுவே அவனுக்கு நல்லது செய்யும் என்கிறார்.ஆனல் நான் தனியாக இருக்கும்போது பொன்னியின் செல்வனையும்,பாரதியார் கவிதைகளையும் படித்துக் காட்டுகிறேன்.அந்த கவிதைப் புத்தகம்,சக்தி எனக்கு பரிசளித்தது.அவன் கையெழுத்து அதன் முதல் பக்கத்தில் இருக்கிறது.அப்புத்தகத்தைப் பார்த்த விசு ஒரு முறை சக்தி பற்றி என்னிடம் கேட்டார்.பயப்படாதீர்கள்,அப்பா.விசு ரொம்ப நல்லவர்.அதை சாதாரணமாக எடுத்துகொண்டார்.பின் அவர் அவரது அமெரிக்க நண்பி பற்றிக்கூறினார்.அவருடன் பணி புரிந்த அவளுடன் மூன்று மாதம் சேர்ந்து வாழ்ந்தது பற்றியும் சொன்னார்.அவள் ஒரு நாள் வந்திருந்தாள்.நல்லவள்தான்.


அம்மாவை ஒரு வருஷத்துக்குப் போதுமான சாம்பார் பொடி அனுப்பச் சொல்லுங்கள்.என் ஃபிரண்ட் சுதா அடுத்த வாரம் மெட்ராஸ் வருகிறாள்,சீனுவை சென்னைக்கு அனுப்பி அவளிடம் பொடியைக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி

3-6-1974.

அன்புள்ள அப்பா,

நாங்கள் சௌக்கியமாக வந்து சேர்ந்தோம்.இரண்டு மாதங்கள் இந்தியாவில் கழித்துவிட்டு இங்கு வந்தவுடன்,இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது சிரமமாகத்தான் இருக்கிறது.கௌதமும் ரஞ்சனாவும் வடை பாயசத்தோடு வாழை இலையில் சாப்பாடு கேட்கிறார்கள்,இந்த ஊரில்!அமெரிக்காவுக்குத் திரும்பி வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர் விசுதான்.


நான் இந்தியாவில் சில புத்தகங்களை விட்டுவிட்டேன்.அவை என் மாமியாராத்தில்தான் இருக்கவேண்டும்.அவை கிடைத்தால் பத்திரமாக வைத்திருங்கள்,நான் அடுத்த முறை வரும் வரை.அவை எனக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை;ஏனென்றால்,அவை சக்தி எனக்களித்த பரிசு.அப்பா,சக்தியின் விலாசத்தை நான் சாரதா மாமியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.அப்பா,உங்களுக்குத் தெரியுமா,சக்தி இப்போது மெட்ராஸில் ஒரு பிரசித்தமான இதய நோய் நிபுணர்;எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.நான் அவனுக்குக் கடிதம் எழுதினேன்.அதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.அவன் பெண்களுக்கு என்ன பெயர் தெரியுமா அப்பா?-கல்யாணி,ராகமாலிகா.அவன் என்னுடன் ஃபோனில் பேசினான்.அவன் இன்னும் மாமிசம் சாப்பிடுவதில்லை;நான் கிடைக்கவில்லை என்பதனால் அவன் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.அவன் இன்னும் பாடுகிறாயா என்று கேட்டபோதுதான் எனக்கே நினைவு வந்தது,நான் ஒரு காலத்தில் பாடிக்கொண்டிருந்தேன் என்பது.ஆனால் நான் திருச்சியையும்,என் சிறந்த ரசிகனான சக்தியையும் பிரிந்து வந்தபின் அதை மறந்தே போனேன்.

அவன் ஃபோன் வந்தபின் நான் பாட முயன்றேன் ‘குறையொன்றும் இல்லை’ என்று.ஆனால் குறை இருந்தது.நீண்டநாள் பாடாததனால் மட்டுமல்ல;என் கண்களில் நீர் நிறைந்து தொண்டை அடைத்துக் கொண்டதாலும்தான்.ஒருநாள் விசு,குழந்தைகளின் முன் பாடினேன்.கௌதம் ரசித்துக் கேட்டான்;ஆனால் அப்பாவும் பெண்ணும் பாட்டு முடியும் வரை பொறுமையின்றித் தவித்தார்கள்.

அப்பா,அடுத்தமுறை யாராவது இந்தியா வந்து திரும்பும்போது மறக்காமல் ஒரு சுருதிப் பெட்டி அனுப்பவும்.நான் மீண்டும் பாட ஆரம்பிக்கப் போகிறேன்.

இப்படிக்கு

உங்கள் அன்புள்ள
கல்யாணி.

(இன்னும் வரும்)

(மயிலை சட்ட மன்றத்தொகுதி வேட்பாளர் சென்னை பித்தனின் வேண்டுகோள்!
இண்ட்லியைப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு!
தமிழ் 10 ஐப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு!
தமிழ்மணத்தைப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு!
அம்மாக்களும்தான்! )

திங்கள், பிப்ரவரி 21, 2011

வரலாறு-5...ராஜியின் பள்ளி நாட்கள்

இன்று—


ராஜிக்குத் தள்ளாமை அதிகமாகி விட்டாலும் கூட இப்போதும் காலை 5.30க்கு எழுந்து விடுகிறாள்.குளியலில் ஒரு மாற்றம்.முன்பெல்லாம் முதலில் குளித்து விட்டுச் சமையல் வேலைகளைத் தொடங்கி விடுவாள்.இப்போது அவள் பையன் முதலில் குளித்துவிட்டு ராஜிக்குக் குளிக்க வென்னீர் போட்டுக் குளியலறையில் உட்கார்ந்து குளிப்பதற்காக நாற்காலியும் போட்டபின் குளிக்கப் போகிறாள்.குளித்து வந்த பின் ஸ்லோகங்களைச் சொல்லியபடி அமர்ந்திருக்கிறாள்.அந்த நேரத்தில் காலனியிலிருந்து பள்ளி செல்லும் பெண்களை பார்க்கும் போது ,அவர்களின் சீருடைகளை,அவர்கள் பேசிக்கொண்டு செல்வதையெல்லாம் காணும்போது அவள் மனம் தன் சென்னைப் பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்கிறது!

அன்று!

“டீ என்ன டீ”
அந்தப்பெண்ணின் கோபம் நிறைந்த சீறலில் ராஜி நடுங்கிப் போனாள்.
அந்த நடுக்கத்துடனே அப்பெண்ணை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தாள்.
”வான்னா,போன்னா- இப்படித்தான் சொல்லணும்.அநாகரிகமா டீன்னெல்லாம்
சொல்லக்கூடாது”.
இது ராஜிக்குப் புதிதாய் இருந்தது.
அவள் முன்பு இருந்த சிற்றூரில் அவர்கள் ஒருவருக்கொருவர் வாடீ போடீ
என்றழைத்துதான் பழக்கம்.
இது புதுமையாகத்தோன்றியது.புதிய மக்கள்.அவர்களின் பழக்க வழக்கங்கள். இனி இங்கு எல்லாமே புதுமையாகத்தான் இருக்கும்,இந்தச்சூழலில் தான் எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்ற கவலையும் எழுந்தது.

அக்காலத்தில் இன்று போல் சீருடை எல்லாம் கிடையாது.சூரிதார் வகையறா எல்லாம் கிடையாது.இவள் வகுப்பில்,ஓரிரு பெண்கள் தவிர எல்லாரும் புடவைதான்.ராஜியிடம் நல்ல புடவைகள் கிடையாது.இருந்த ஒன்பது கஜம் புடவையையே ஒரு மாதிரிச் சுற்றி அணிந்து கொள்வாள்.மற்ற பெண்கள் நல்ல நல்ல புடைவகள் நகைகள் அணிந்து வருவதைப் பார்த்து அவள் நாணிப் போவாள். அதிலும் சில பெண்கள் பட்டுப் புடவையும் வைரத்தோடும்,மூக்குத்தியுமாக வருவார்கள். வகுப்பில் ஓரிரு மாணவிகளே அவளிடம் நெருங்கிப்பழகினார்கள்.அவள் படித்த நான்காம் படிவத்தில் ஒரே ஒரு பிரிவுதான்.மொத்தம் 36 மாணவிகள்.5ஆம் படிவத்தில் 12 பேர்;6ஆம் படிவத்தில் 8 பேர்தான்.

அக்காலத்திலும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள்.அவள் வகுப்பில் 26 வயது நிறைந்த ஒரு மாணவி இருந்தாள்.மணமானவள்;இரண்டு குழந்தைகள் வேறு. பையன் ஆறாம் வகுப்புப் படித்து வந்தான்.அவள் கணவனுக்குச் சொற்பச் சம்பளம். அவள் படித்து ஏதாவது வேலை பார்த்தால் நல்லது என்ற எண்ணத்தில் அவள் கணவனே அவளைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தான்.

ஆறாம் படிவத்தில் படித்து வந்த ஒரு பெண் கணவனை இழந்தவள்.அவளது எதிர்காலத்தை மனதில் கொண்டு அவள் பெற்றோர் அவளைப் படிக்க வைத்தனர்.(பின்னொரு காலத்தில் கல்லூரிப் பேராசிரியரான தன் கணவனின் கல்லூரிப் புகைப்படம் ஒன்றில் மாணவர்கள் வரிசையில் அவளை பார்த்த ராஜி மிகவும் ஆச்சரியப் பட்டுப் போனாள்)

அவள் வகுப்பில் இரு சகோதரிகள் படித்து வந்தனர்.அவர்களில் ஒருத்தி ராஜிக்கு நெருங்கிய தோழியாக இருந்தாள்.சகோதரிகள் பள்ளியில் பேசிக்கொண்டு அவள் பார்த்ததேயில்லை.ஒரு நாள் ராஜி அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோது அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்து ஆச்சரியப் பட்டுப் போனாள்.தோழியிடம் கேட்டாள்”ஏன்னா,நீங்க ரெண்டு பெரும் பேசுவீங்களா? வகுப்பில பேசவே மாட்டீங்களே,அதான் கேட்டேன்”
அந்தத்தோழி கேட்டாள்”என்னன்னா இப்படிக் கேக்குறே?அக்கா,தங்கை எங்காவது பேசிக்காம இருப்பாங்களா? அங்கே பேச வெட்கமாக இருக்கும்,அதுதான்”

அந்த அளவுக்கு ராஜி அப்பாவியாய்,ஏதுமறியாதவளாய் இருந்தாள்

இன்னொரு பெண்.பெயர் நீலா.அவள் அப்பாவுக்கு அந்தக் காலத்திலேயே 2000 ரூபாய் சம்பளமாம்.அவர்கள் மயிலாப்பூரில் வசித்து வந்த வீட்டு வாடகையே 100 ரூபாய் என்று அறிந்த போது ராஜி ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.ராஜியின் வீட்டு வாடகை 14 ரூபாய்தான்!

அவள் அப்பா ஒவ்வொரு மாதமும் அவள் பெயரில் வீட்டு விலாசத்துக்குத்தான் பணக்கட்டளை மூலம் பணம் அனுப்புவார்.ஆனால் தபால்காரர் வரும் நேரத்தில் ராஜி பள்ளியில் இருப்பதால் அவர் பள்ளிக்கே வந்து பணத்தைக் கொடுத்து விடுவார்!

படிப்பைப் பொறுத்தவரை சமஸ்கிருதம்,ஆங்கிலம் இரண்டிலும் ராஜி வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று விடுவாள்.ஆனால் கணிதம்---சுமார்தான்!சமஸ்கிருதத்தில் வீட்டுப்பாடம் நிறைய இருக்கும் வேறெதையும் படிக்க நேரமே இருக்காது. வீட்டுப் பாடம் எல்லாம் முடித்துக் களைப்படைந்து புத்தகத்தைக் கையில் எடுத்தால் கண்கள் செருகும். புத்தகம் நழுவிக் கீழே விழும்!

இன்று!

கையிலிருந்த ஜயமங்கள ஸ்தோத்திரம் புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது.ராஜி நிகழ்காலத்துக்கு வந்தாள்.விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்”குண்டலீக்ருத குண்டலீச்வர குண்டலம் வ்ருஷ வாஹனம்…..”

(இன்னும் வரும்)

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

ஒரு வரலாறு-மீண்டும் தொடர்கிறது!

ஒரு வரலாறு என்ற ஒரு தொடரை 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதத் தொடங்கினேன்.அறிமுக இடுகையிலேயே Dr.ருத்ரன் அவர்கள் பின்னூட்டத்தில் வாழ்த்துச் சொல்லியிருந்தார்.என்ன காரணம் என்று தெரியவில்லை அந்தப்பதிவு ஆமை வேகத்தில்தான் வளர்ந்தது.நீண்ட நாட்களாகத் தேக்கமடைந்து விட்ட அத்தொடரை மீண்டு தொடர எண்ணி நவம்பர் 2010ல் ஒரு இடுகை வெளியிட்டேன்.நண்பர் நடன சபாபதி அவர்கள் பின்னூட்டத்தில் சொன்னார்கள்

//வே.நடனசபாபதி கூறியது...
ஏப்ரல் 2009 ல் இந்த தொடரை நீங்கள் ஆரம்பித்தபோது விரும்பிப்படித்தவன் நான்.
இடையிலே நிறுத்தி இருந்தபோது ஏமாற்றமாக இருந்தாலும், "இந்த வரலாறு தேதி வாரியாக வராது.கால இயந்திரம் முன்னும் பின்னும் பயணிக்கும்.பயணம் ஆரம்பம்." என்று நீங்களே ஆரம்பித்த அன்று சொன்னதால், திரும்பவும் கால இயந்திரம் பயணிக்கும் என்று காத்திருந்தேன். பயணம் தொடங்கியது அறிந்து மகிழ்ச்சி. அடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//

ஆனால் என் கவனம் வேறு திசையில் திரும்பியதால் பதிவு மீண்டும் தடைப்பட்டு விட்டது.இன்று காலை யு.எஸ் ஸில் இருக்கும் என் அண்ணன் மகள் தொலை பேசியில் இத்தொடரை நான் தாமதம் செய்வதற்காக வருத்தப் பட்டாள். எனவே இத்தொடரில் வாரம் ஒரு இடுகையாவது எழுத விழைகிறேன்---இன்ஷாஅல்லா!
இதுவரை வந்த இடுகைகள்---

http://chennaipithan.blogspot.com/2009/03/blog-post.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post_15.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post_22.html
http://chennaipithan.blogspot.com/2009/05/3a.html
http://chennaipithan.blogspot.com/2010/11/4.html.

ஒரு வேண்டுகோள்.மேலே குறிப்பிட்ட பதிவுகளைப் படித்துவிட்டுத் தொடரைப் படித்தால் தொடர்ச்சி புரியும்.நேரமிருந்தால் படியுங்கள்.நேரமில்லாதவர்களுக்காக ஒரு சுருக்கம்—

1)ராஜி என்கிற வரலாற்று நாயகி அறிமுகம்.76 ஆண்டுகளுக்கு முன்(இப்போது 78)
14 வயதில் மணந்து 26 வயதுக்குள் ஆறு குழந்தை பெற்று 32 வயதில் கணவனை இழந்து நிர்க்கதியான பெண்மணியின் அறிமுகம்.90 வயதிலும் அதே மன உறுதியுடன்(இப்போது 92) வாழும் பெண்மணி.

2)கணவன் மறைவுக்குப் பின் சென்னையிலிருந்து குழந்தைகளுடன் ராஜி புறப்படுகிறாள்.குழந்தைகள் அறிமுகம்,பெயர் மாற்றத்துடன்.ராஜியின் துயரம்.

3)8ஆம் வகுப்பு வரை சாத்தூரில் படித்த ராஜி,அங்கு பெண்கள்
உயர் நிலைப் பள்ளி இல்லாத காரணத்தால் மேற்படிப்புக்காகக் கடலூரில் இடம் கிடைக்காமல்,சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளியில் சேர்க்கப் படுகிறாள்.அது பற்றிய விவரங்கள்.

4)கால இயந்திரம் நிகழ்காலத்துக்கு வருகிறது.ராஜி செய்தித்தாளில் தன் பள்ளித்தோழி ஒருத்தியின் மறைவு பற்றிய செய்தி பார்க்கிறாள்.பள்ளி நாட்களில் தானும் அவளும் பாடிய பாட்டு ஞாபகம் வருகிறது.

5)ராஜியின் புகுந்த வீட்டில் கொலு.நவராத்திரியின்போது பாடகர் ஜி.என்.பி வீட்டில் அவருக்கு முன் ராஜி பாடியது!

6)இந்த வயதான காலத்தில் ராஜி படும் சிரமங்கள்.

இனி அடுத்த இடுகை 22ஆம் தேதி வெளியிடப்படும்.அதுவரை பழைய இடுகைகளைப் படிக்க எண்னுபவர்களுக்கு நேரம் தருகிறேன்;எனக்கும் தகவல் திரட்ட!

சந்திப்போம்!

புதன், பிப்ரவரி 16, 2011

தலை வணங்கிகிறேன் தாயே!

”என்ன பிள்ளைகளா,மதிய உணவு சாப்பிட்டீர்களா?’-டீச்சர்
”டீச்சர்,மழை பெய்யுதில்லையா,கூரை ஓட்டை வழியாத் தண்ணி கொட்டித் தட்டுலே இருந்த சோறெல்லாம் நனஞ்சு போச்சு”-மாணவன்.

இதுதான் இன்று வரை அந்த மதிய உணவுக் கூடத்தின் நிலை.
உடைந்த அஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ்,அந்தக் கட்டிடம்.சமையல் வெட்ட வெளியில் .
இப்படித்தான் இயங்கி வந்தது அந்த மதிய உணவு மையம்!-இத்தனை நாள்.

இனியில்லை!

அழகிய புதிய கட்டிடம்,சமையல் அறை ,ஸ்டோர் ரூம் வசதியுடன் தயாராகி விட்டது!

அரசு புதுக் கட்டிடம் கட்டிக் கொடுத்துவிட்டதா?
அல்லது யாராவது வள்ளல் ஏற்பாடு செய்தாரா?
இல்லை!இல்லை!

கோடிக் கணக்கில் இலவசங்களுக்குச் செலவழிக்கும் அரசுக்கு இந்தச் சிறிய விஷயத்தைக் கண்டு கொள்ள நேரமிருக்குமா என்ன?
அது தவிர இதனால் என்ன பயன்?அந்த மாணவர்கள் ஓட்டுப் போடப் போகிறார்களா என்ன?
பின் எப்படி நடந்தது?

11 ஆண்டுகளுக்கு முன் பள்ளிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற,தற்போது 63 வயதாகும் ஓர் ஆசிரியையின் கருணை உள்ளம்!

29 ஆண்டு சேவைக்குப் பின் ஓய்வு பெற்ற அந்த ஆசிரியை,தனது ஓய்வூதியத்தை இத்தனை நாள் சேமித்து வந்த பணம்-ரூபாய்3.5 லட்சம்.

அதைப் பள்ளி நிர்வாகத்துக்குக் கொடுத்துதான் இந்தச் செயல் நடக்க உதவியிருக்கிறார் அந்த ஆசிரியை

“எனக்குக் குழந்தைகள் இல்லை.பள்ளி மாணவர்களெல்லாம் என்குழந்தைகள்தான்”என்று கூறும் பரந்த மனம் அவருக்கு இருக்கிறது!

”2009ஆம் ஆண்டு பார்கின்சன் வியாதியால் மரணமடைந்த என் கணவரின் நினைவாக இதைச்செய்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார்!

மதிய உணவு மையம் இருக்கும் பள்ளி---பல்லாவரம் கண்டோன்மெண்ட் அரசு உயர்நிலைப் பள்ளி.

அந்த மகத்தான செயல் புரிந்த ஆசிரியை—அந்தப் பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திருமதி.லலிதா.

தாயே!உங்களுக்குத் தலை மண்ணில் பட வணங்குகிறேன்!

இறைவன் அருள் என்றும் உங்களுடன் இருக்கட்டும்!

செவ்வாய், பிப்ரவரி 15, 2011

சென்னைக்காதல்-3.


சென்னையின் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பற்றி இதுவரை நான் எழுதவில்லை.அதுவும் இன்றில்லாத ஓரிடம்தான்.

எத்தனை புத்தகங்கள் அங்கே தேடித்தேடிஎடுத்திருப்பேன்?.அதற்காக எத்தனை மணி நேரம் செலவிட்டிருப்பேன்?எத்தனை விதமான பொருள்களை பேரம் பேசி வாங்கியிருப்பேன்?எத்தனை நாட்கள் சும்மா சுற்றியிருப்பேன்?மறக்க முடியுமா?இன்றைய மால்களின் முன்னோடியான அந்த இடத்தை மறக்க முடியுமா?
சென்னையின் மிகப் பெரிய இழப்பாக நான் நினைக்கும் அந்த இடம்—

”மூர்மார்க்கெட்”

அங்கு ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் உங்களுக்குக் கண்டிப்பாக நன்கு பேரம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.இல்லயெனில் ஏமாற வேண்டியதுதான்.
எனக்கு பேரம் பேசக் கற்றுத்தந்ததே மூர் மார்க்கெட்தான்.புத்தகம் வாங்க ,எப்பொருள் வேண்டுமாயினும் வாங்க,பொழுதுபோக்காகச் சுற்றி வர என மனிதர்கள் கூடிய இடம்!

இப்படி எத்தனையோ இடங்கள்!எத்தனையோ நினைவுகள்!
இதற்கு மேல் என்ன இருக்கிறது என் காதலியைப் பற்றிச் சொல்ல?

ஆனால் அவள் என்னை மாற்றினாள்!

சென்னை வரும் முன் அப்பாவியாக,நண்பர்கள் தவிரப் புதியவர்களிடம் பேசிப் பழகக் கூச்சப் படுவனாக,வீட்டுப் பெண்களைத்தவிர மற்றப் பெண்களிடம் பேசப் பயப்படும்,அவர்களாகப் பேசினால் கால் நடுங்கும், பதில் சொல்ல நாக் குழறும் ஒருவனாக இருந்த என்னை இரண்டே ஆண்டுகளில் முழுதுமாக மாற்றியது சென்னை.

பேசத் தெரிந்தவனானேன்.

பெண்களிடம் பேசப் பயந்த நிலை மாறியது.இரு சம்பவங்களை விவரிப்பதின் மூலம் இந்த மாற்றத்தைப் புரிய வைக்க முடியும் என நினைக்கிறேன்.

மதராஸ் வந்த புதிதில் பட்டமளிப்பு விழாவில் நேரில் கலந்து கொள்ளத் தீர்மானித்தேன்.அன்று காலை வெளியில் சென்று வந்தபோது ஹாஸ்டல் அலுவலகத்தில் அழைத்தார்கள்.நான் இல்லாதபோது எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகச் சொன்னார்கள்.மதுரை ஃபாத்திமா கல்லூரியில் பணி புரிந்து வந்த என் சித்தி, மாணவிகளுடன் வந்து மாநிலக்கல்லூரி மகளிர் விடுதியில் தங்கியிருப்பதாகவும், என்னைப் பார்க்க விரும்புவதாகவும் சொன்னார்கள்! அன்று மாலை பட்டமளிப்பு விழா முடிந்தபின் அங்கிருந்தே சென்று பார்த்து வரலாம் எனத் தீர்மானித்தேன்.விழா முடிந்ததும், விசாரித்துக்கொண்டு பேருந்தில் ஏறினேன்.நடத்துனரிடம் சொன்னேன்’மாநிலக் கல்லூரி மகளிர் விடுதியில் இறங்க வேண்டும்.இடம் வந்ததும் சொல்லுங்கள்” என்று.

இடம் வந்ததும்,நடத்துனர் உரத்த குரலில் சொன்னார்”யாருப்பா,மாநில மகளிர் விடுதி, இறங்கு!”நான் இறங்கும்போது பஸ்ஸில் இருந்த அனைவரும் என்னையே பார்ப்பது போன்ற ஓர் உணர்வு!

விடுதி காம்பவுண்டுக்குள் நுழைந்தேன்.வாசலிலிருந்து சிறிது தூரம் தள்ளி விடுதிக் கட்டிடம்.கேட்டிலிருந்து நீண்ட நடை பாதை.பாதையின் இரு புறமும் மரம்,செடி. புல்தரை நிறைந்த தோட்டம்!ஆங்காங்கே,கொத்துக் கொத்தாய் பெண்கள்!வித விதமான உடைகள்;அலங்காரங்கள்.ஆனால் நேரில் பார்க்கப் பயம்.கட்டிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.கழுத்தில் டை,கையில் மடித்துப் போட்ட பட்டமளிப்பு கவுன்,சுருட்டிப் பிடித்த பட்டம்,இந்தத் தோற்றத்தில் சென்று கொண்டிருந்த என்னை அப்பெண்கள் எல்லாரும் உற்றுப் பார்க்க ஆரம்பிப்பதாக உணர்ந்தேன்.கால்கள் பின்ன ஆரம்பித்தன. கழுத்திலிருந்து வேர்வை ஊற்றெடுத்து ஓட ஆரம்பித்தது-கழுத்து,முதுகு,கால்கள் என்று.ஒரு வழியாகக் கட்டிடத்தை அடைந்தேன், விசாரித்தேன்.சித்தி வெளியே சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.நான் வந்தவுடன் சொல்லுங்கள் என்று என் பெயரைச் சொன்னேன்.

திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.முன்பை விடப் பார்வைகள் தீவிரமாக இருப்பதாக உணர்ந்தேன்.யாரோ ஒரு பெண் என் பெயரைச் சொல்லி விட்டுச் சிரித்தாள்.கால் நடுக்கம் அதிகமானது!பாதை நீ..…..ண்டது.கடைசியாக கேட்டை அடைந்தேன்.

ஓராண்டுக்குப் பின்!
மூர் மார்க்கெட்!
முக்கியமான புத்தகங்களைத்தேடி வாங்கத் தனியாகச் சென்றேன்.கடையை விட்டு வரும்போது அப்பெண்ணைப் பார்த்தேன்.அழகும்,கம்பீரமும் கலந்த ஒரு தோற்றம். தோற்றத்தில் தன் அழகின் மீது செருக்குக் கொண்ட பெண்ணாகத் தோன்றவில்லை.ஒரு தோழி மட்டும் உடன். அவளுடன் பேச வேண்டும்;அவள் அழகைப் புகழ வேண்டும் எனத்தீர்மானித்தேன்.

இரண்டு மூன்று கடைகளில் சில பரிசுப் பொருள் பற்றி விசாரித்தேன், அவளைப் பார்வையால் பின் தொடர்ந்தவாறே! பின் அவளை நெருங்கினேன்.
“மன்னிக்கவும்.உங்களால் எனக்கு உதவ இயலுமா?” கேட்டேன்.
”சொல்லுங்கள்”
“தவறாக நினைக்காதீர்கள்.ஒரு பரிசுப் பொருள் வாங்க வேண்டும்.தேடித்தேடிப் பார்த்துவிட்டேன்.என்ன வாங்குவதென்று தெரியவில்லை.”
”யாருக்கு”
என் முகத்தில் வரவழைத்துக் கொண்ட ஒரு வெட்கம்.தயங்கிச் சொன்னேன்”என் நண்பிக்குப் பிறந்த நாள்.பரிசு அளவில் சிறியதாக இருக்க வேண்டும்;பெண்களுக்குப் பிடித்த பொருளாக இருக்க வேண்டும். எனவேதான் உங்கள் உதவி நாடினேன்.”

அவள் என்னை உற்றுப் பார்த்தாள்.என் முகத்தில் தப்பாக எதுவும் தெரியாத நிலையில் சொன்னாள்”அவளுக்கு ஏதாவது ஃபிலிக்ரி நகைகள் வாங்கிக் கொடுங்களேன். நிச்சயம் பிடிக்கும்—நான் அணிந்திருப்பது மாதிரி.”
“வாவ்!அழகாக இருக்கின்றன.அழகான பொருட்கள், இருக்கும் இடத்தைப் பொறுத்து மேலும் அழகாகின்றன.இங்கு கிடைக்குமா?”
என் பாராட்டை ஒரு தலையசைப்பால் ஏற்றுக் கொண்ட அவள் சொன்னாள் ”இல்லை.மவுண்ட் ரோடில்”கலிங்கா ஃபிலிக்ரியில் கிடைக்கும்”
“நன்றி” அவளை விட்டு விலகத்தயாரானேன்.
”ஒரு நிமிடம் ”அவள் அழைத்தாள்.முகத்தில் லேசான குறும்போ!
”அவளுக்குப் பிடித்ததா என்று என்னிடம் சொல்லுங்கள்.பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இங்கு இருப்பேன்!”
நான் திகைத்தேன். அவள் அகன்றாள்!
இந்தத் தைரியத்தை,மாற்றத்தை என்னில் ஏற்படுத்திய சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியுமா?
சென்னைக்காதல் (பதிவு) முடிந்தது!
(இப் பதிவுத்தொடரை எழுதக் காரணமான அமீரகப் பதிவர் நண்பர் கக்கு-மாணிக்கம் அவர்களுக்கு நன்றி)

திங்கள், பிப்ரவரி 14, 2011

காதல் என்பது எது வரை?

இன்று காதலர் தினம்.

உலகக் காதலர்களுக்கெல்லாம் இக்காதல் கதை சமர்ப்பணம்.
----------------------------


"ஏய்,சொர்ணம்,சொர்ண நாயகி,இங்க வாடி.ஒரே ஒரு தடவை."

"உங்களுக்கு வேற வேலையில்லை.பிள்ளையில்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடினானாம். "

"யாருடி கிழவன்?கையை மடக்கிக் காட்டறேன் பாரு,எப்படிக் கிண்ணுனு இருக்குன்னு.இரும்பு உடம்புடி, தெரியுமா?"

"ஆமாம் உங்க உடம்பைப் பத்தி எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியுமாம்? இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இருங்க.எனக்குத் தூக்கம் வருது."

"எனக்கு வரல்லையே.வாடி.ஒரே ஒரு தடவை மட்டும்."

"அய்யோ,சொன்னாக் கேக்க மாட்டிங்களே.எனக்கு லேசாத் தலையை வலிக்குதுங்க.அதை சொல்ல வேணாமுன்னு பாத்தேன்."

"தலைவலியா?இதோ நான் தைலம் தேச்சு விடறேன்.அப்படியே படுத்துக்க."

"வேண்டாங்க,தன்னாலே சரியாயிடும்"

"ஒண்ணும் பேசாதே. கண்ணை மூடிப் படுத்துக்கோ.இப்படி நல்லாத்தேச்சு, அமுக்கி விட்டாத் தலவலி பறந்து போயிரும்"

"உங்க கை பட்டதுமே வலி போயிருச்சுங்க.வாங்க.இப்ப நான் தயார்"

"வேண்டாம் சொர்ணம்.நீ ஒய்வெடுத்துக்கோ.நானும் அப்படியே படுக்கிறேன்."

"ரொம்ப ஆசையாக் கூப்பிட்டீங்க.ஏமாத்தமாப் போயிடும்.வாங்க. "

"சரி,வா.உன்னை எப்படிக் கட்டறேன் பாரு"

"ஆமாம்,அதிலெ நீங்கதான் கெட்டிக்காரராச்சே "

இருவரும் "ஆடு புலி ஆட்டம்"ஆட ஆரம்பித்தனர்.

கணவன் மனைவி உறவில் உடல் முக்கியமல்ல.மனமே பிரதானம்.வயதாகி உடல் தளர்ந்து இச்சைகள் அற்றுப் போனாலும்,அன்பு குறைவதில்லை.மாறாக அதிகமாகிறது.இது ஒருவரின் துணையை மற்றவர் உணர்ந்த நிலை.ஒருவர் இன்றி மற்றவர் வாழ்க்கையைப் பற்றி நினைப்பதற்கே பயப்படும் நிலை. ஒருவரைச் சார்ந்தே மற்றவர் வாழும்,இயங்கும் நிலை.

இதை விட வேறு காதல் வேண்டுமா?

இதுவே இல்லறம் என்னும் நல்லறம்!

(மீள் பதிவு)

சனி, பிப்ரவரி 12, 2011

அவசர அறிவிப்பு!

இரண்டு நாட்களாக ஒரு விசித்திரமான பிரச்சினை!

எல்லா வலைத்தளங்களும் கிடைக்கின்றன. எல்லா மெயிலும் -ஜிமெயில்,ஹாட் மெயில் யாஹூ எல்லாம்- வருகின்றன.வேர்ட்ப்ரஸ் வலைப் பதிவுகளும் திறக்கின்றன.ப்ளாக்கர் வழியாக என் வலைப்பூவின் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்ல முடிகிறது.ஆனால் என் ப்ளாக்கை மட்டுமல்ல எந்த ப்ளாக்கையுமே திறக்க, பார்க்க முடிவதில்லை. 'the connection has timed out' என்று வந்து விடுகிறது! இந்தப் பிரச்சினை ப்ளாக்ஸ்பாட் ப்ளாக்குகளில் மட்டும்தான். இது எனக்கு மட்டுமே உள்ள பிரச்சினையா,வேறு சிலருக்கும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.இதன் காரணமாக நண்பர்களின் வலைப் பூக்களைப் படித்துப் பின்னூட்டம் இட முடியவில்லை.மன்னிக்கவும்.
தயவு செய்து ஆலோசனை வழங்குங்கள்!
my email id--mukkannan@gmail.com

புதன், பிப்ரவரி 09, 2011

கதையல்ல,நிஜம்!!

“ட்ரிங்,ட்ரிங்”

“போலீஸ் கட்டுப்பாட்டு அறை”

”ஹலோ,போலீஸா,எங்களைக் காப்பாத்துங்க”

“நீங்க யாரு,எங்கிருந்து பேசுகிறீர்கள்,என்ன நடந்தது சொல்லுங்கள்!”

“அய்யா!நாங்க ஆபத்துல இருக்கோம்.காப்பாத்துங்க”

“ஹலோ,தெளிவா சொல்லுங்க”

“நாங்க மூணு பேர் இங்க,திலக் விஹாரில் ஒரு ஃப்லாட்டிலேருந்து பேசுறோம்.இந்த வீட்டில திருடிட்டு இருக்கும்போது,வெளில தெரிஞ்சு போய், நிறைய பேர் வீட்டுக்கு வெளில கூட்டமாக் கூடிட்டாங்க.இப்போ நாங்க வெளில வந்தோம்னா எங்களுக்குச் சங்குதான்!கூட்டம் ஒரு வேளைக் கதவைத் திறந்து உள்ள வந்தாலும் வரலாம்.அதுக்குள்ள வந்து எங்களைக் காப்பாத்துங்க!புண்ணியமாப் போகட்டும்!”

போலீஸிடமிருந்து தப்பியோடுவது போய் இப்போது திருடர்கள் போலீஸிடம் பாதுகாப்புக் கேட்கிறார்கள்.போலீஸ்காரருக்குச் சிரிப்பு வந்தது.

தன் கடமையைச் செய்தார்.

போலீஸார் சென்று அத்திருடர்களைப் பத்திரமாகக் கைது செய்து,வெளியே நின்று கொண்டிருந்த 250 பேரிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.
இது கதையல்ல,நிஜம்!

தலைநகர் டில்லியில் ஜனவரி 28 ஆம் தேதி நடந்த ஒரு உண்மைச் சம்பவம்!

truth is sometimes stranger than fiction!
உண்மை சில நேரங்களில் புனைவை விட விந்தையானது!( சினிமாவில் மேஜர் சுந்தரராஜன் பாணி!)

செவ்வாய், பிப்ரவரி 08, 2011

சென்னைக்காதல்-2

காதலிக்க நேரமில்லை’ என்று ஆரம்பமாயிற்று என் சென்னைக் காதல்!

பத்தொன்பது வயது வரை சிற்றூர்களிலேயே வாழ்ந்து பழகிய ஒருவன்,இருபதாவது வயதில் நகரத்துக்கு வந்தால் பிரமிப்பு ஏற்படாதா?

அந்தத் திரை அரங்கம்,,ஓட்டல்,அவை தவிர முதன் முதலாகப் பார்த்த அலை மோதும் கடல்,பரந்த கடற்கரை எல்லாமே புதிய அனுபவம்தான்.கடலில் கால் நனைய நின்றது, தே.மா.ப.சு. சாப்பிட்டது,குழந்தையாக மாறி மணலில் ஓடியது எல்லாமே புது அனுபவம்தான்.எல்லாவற்றையும் விட வியப்பை எற்படுத்தியது,அவன் பார்த்த இளம் பெண்கள்,அவர்களின் நாகரிக உடை,அவர்கள் பேசிய ஆங்கிலம்.

மெஸ்ஸில் சுவை உணவு
லஸ்ஸில் விண்டோ ஷாப்பிங்
பஸ்ஸில் ஊர் சுற்றல்
மிஸ்ஸிங்—வேறென்ன படிப்புதான்!
(கடைசியில் மேக்கப் பண்ணிட்டோமுன்னு வச்சிக்குங்க!)

கல்லூரி விடுதியில் மிக அருமையான சைவ உணவு கிடைத்தது.ஞாயிறன்று தயாராகும் மோர்க்குழம்பு மிகப் பிரசித்தம்.வெண்டைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி,எண்ணெயில் வறுத்து,மோர்குழம்பில் போட்டிருப்பார்கள்!பீன்ஸ் பொரியல்,மைசூர் ரசம்,தயிர்.
சாப்பிட்ட சாப்பாடு செரிக்க வேறென்ன செய்வது?—ஊரைச் சுற்று!

லஸ்!மயிலையின்ரத்த நாளம்!இன்றும் இருக்கும் சுக நிவாஸ்-மங்களூர் போண்டா பிரமாதம்.இல்லாமல் போய் விட்ட சாந்தி விஹார்.அன்றைக்கு ’காஃபி டே’ யோ,ஜாவா க்ரீனோ’ ‘மோக்கா’ வோ இல்லை—சந்திப்பதற்கும்,சல்லாபிப்பதற்கும்.(இப்போதெல்லாம் இம்மாதிரி இடங்களில் எழுதுகிறார்கள்—’காஃபியும், பேச்சும்’,காஃபியும் அதற்கு மேலும்,’என்றெல்லாம்!

அப்போது எங்களுக்கு இருந்ததெல்லாம் சாந்தி விஹார் தான்.வெறும் காஃபி மட்டும் குடிப்பதற்காகக் கூட்டமாய்ப் போய் அரைமணிக்கும் மேல் அங்கு அமர்ந்து பேசி விட்டு(பார்த்து விட்டும்!) வருவோம்.இல்லையென்றால், குளக்கரையில் இருந்த உடுப்பியின் ரூஃப் கார்டனில், மணக்கும் நிகரற்ற குழம்பியுடன் ஊர் வம்பு!

வெள்ளியன்று,பக்தி அதிகமாகி விடும்!கபாலீச்வரரையும், கற்பகாம்பாளையும், பார்க்காமல் இருக்க முடியாது—நல்ல தரிசனம் அன்றுதானே கிடைக்கும்!!அந்தக் கோவில் அன்றும் என்னைப் பெரிதும் கவர்ந்தது,இன்றும் கவர்கிறது,என்றும் கவரும்!வேறுபாடு பார்வகளில்தான்!

லஸ்ஸிங்கும்(லஸ்ஸுக்குப் போய் சுற்றி விட்டுப் பார்த்து விட்டு வருவதற்கு நாங்கள் வைத்த பெயர்),கோவிலிங்கும் இல்லாத நாட்களில் இருக்கவே இருக்கிறது அழகிய சாந்தோம் கடற்கரை.(பீச்சிங்).முன்பே எழுதியது போல சிறிய, ஆர்ப்பாட்டமில்லாத ,அழகிய கடற்கரை.இன்று இல்லாமல் போய் விட்டாலும் என் நினைவில் நிற்கும்,நினைவில் கலந்து விட்ட கடற்கரை.கச்சேரி ரோடு வழியாக நடந்தே போய்க் கடற்கரையில் பொழுதைக் கழித்துவிட்டு நடந்தே திரும்பி வருவோம்.

இன்று பெரிய பெரிய வணிக வளாகங்கள் இருக்கலாம்.ஆனால் அன்று சிறிய ’லாக்ஸ் அண்ட் லாக்ஸ்’, கடையில் பொருள் வாங்கிய(அல்லது பார்த்துவிட்டு வாங்காமல் வந்த),சுகமே தனிதான்!அச்சிறிய கடையின் நெரிசல் நெருக்கங்கள்,எங்கள் அலட்டல்கள்(பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆயிற்றே!) ,கடைக்காரரின் தனிக் கவனிப்பு எல்லாமே மறக்க முடியுமா?

சனிக்கிழமை இரவுகள் விடுதியில் கட்டவிழ்த்து விட்ட இரவுகள். பெரும்பாலும் சினிமா பார்க்கும் நாட்கள்.இன்றில்லாத அரங்குகளான மினர்வாவில் ‘ஹடாரி’ குளோபில் முதல் நாள் முதல் காட்சி ‘ஃப்ரம் ரஷ்யா வித் லவ்” சஃபைரில் ‘க்ளியோபாட்ரா’,’மை ஃபேர் லேடி’,சஹானிஸ்(ராஜகுமாரி)யில் ’சரேட்’ ’டாக்டர்.நோ’’எல்ஃபின்ஸ்டன், ஓடியன் அரங்குகளில் பல ஆங்கிலப் படங்கள்,--மறக்க முடியுமா?

எல்லாவற்றிலும் முக்கியமானது இந்தச்சென்னையென்னும் பெண் என்னில் நிகழ்த்திய மாற்றங்கள்!

அவை பற்றிப் பின்னால் பார்ப்போம்!

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

சென்னைக் காதல்!

சென்னையின் மீதான என் காதல் எப்போது ஆரம்பமானது?
நான் பிறந்தது இந்த தரும மிகு சென்னையில்தான்.-மதராஸ்- திருவல்லிக்கேணியில்..ஆனால் குடும்பத்தலைவரான என் தந்தையின் மறைவுக்குப் பின் ஐந்து வயதே நிறைந்த நான் புலம் பெயர வேண்டியதாயிற்று!தென் தமிழ்நாடு எங்களை வரவேற்றது.எனவே அந்த வயதுக்குள் என் சென்னைக் காதல் சாத்தியமில்லை!

பின் என் பள்ளி வாழ்க்கை தொடங்கியது .சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி என்று பல இடங்களில் தொடர்ந்தது.பள்ளி கோடை விடுமுறையில் ஒரு முறை என்னை சென்னையில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பவதாக என் அண்ணா சொல்லியிருந்தார்;நானும் சென்னையில் போய் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற கனவுகளிலும், கற்பனைகளிலும் மூழ்கியிருந்தேன்.ஆனால் என்ன காரணத்தாலோ அது நடக்கவில்லை.சில நாட்கள் மிக வருத்தத்தில் இருந்தேன்.எனவே காதல் தள்ளிப் போய் விட்டது(நான் என்ன காதல் கோட்டை அஜித்தா,பார்க்காமலே காதலிக்க!)

பின் கல்லூரி வாழ்க்கை.வங்கி ஊழியரான என் அண்ணா செல்லும் ஊர்களில்லாம் என் கல்வி தொடர்ந்தது போல்,புகுமுக வகுப்பும் பட்டப் படிப்பும் உத்தமபாளையத்தில் தொடர்ந்தன.சென்னை வெறும் கனவாகவே இருந்தது.கணிதத்தில் பட்டம் பெற்ற பின்,பட்ட மேற் படிப்புக்காக விண்ணப்பம் அனுப்பும் நேரம் வந்தது .அப்போதெல்லாம், விண்ணப்பம் பல்கலைக் கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.அதில் முன்னுரிமை அளித்து மூன்று கல்லூரிகளின் பெயர் குறிப்பிட வேண்டும்.இங்கேதான் விழுந்தது காதலின் வித்து!முதலில் குறிப்பிட்ட கல்லூரி,சென்னை விவேகானந்தா கல்லூரி..அவர்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள்!சில நாட்களுக்கு முன்தான் என் அக்காவுக்குத் திருமணம் முடிந்து,கணவனுடன் சென்னை சென்றிருந்தாள்.நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்.ரயிலில் செல்லும்போதே ஜுரம் வந்து விட்டது(காதல் ஜுரம்!) சென்னை சென்று அடைந்தேன்!

முதல் நாள் என் அக்காவுடனும்,என் அத்திம்பேருடனும்,சினிமா பார்க்கப் புறப்பட்டேன்-கேஸினோவில்.அதன்பின்,மவுண்ட் ரோடு மதுபன் ஹோட்டலில் போண்டா சாம்பார்,காபி,கடைசியில் மெரினா கடற்கரை.

சென்னையின் திரையரங்கும்,ஸ்பூனால் வெட்டியெடுத்துச் சாப்பிட்ட சாம்பாரில் மிதக்கும் மைசூர் போண்டாக்களும் , பிரம்மாண்டமான மெரினா கடற்கரையும்,ஆர்ப்பரித்து அலைக்கரங்கள் நீட்டும் வங்காள் விரிகுடாவும்,என்னை சென்னையின் பால் ஈர்த்தன.

காதல் தொடங்கியது!

மதராஸில்,முதலில் அன்று பார்த்த திரைப்படத்தின் பெயரில் ஒரு வேடிக்கையான பொருத்தம்,அல்லது முரண்நகை இருக்கிறது!

அந்தப் படம்---”காதலிக்க நேரமில்லை”!

(இன்னும் வரும்)

செவ்வாய், பிப்ரவரி 01, 2011

ஆன்மீகம் இங்கு வேண்டாமே!

எனது ஆன்மீகப் பதிவிலிருந்து திருமந்திரம் பற்றி நான் எழுதியவற்றை இப்பதிவில் இறக்குமதி செய்து இப்பதிவை ஒரு பல்சுவைப் பதிவாக மாற்றப் போகிறேன் என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். சில திருமந்திரப் பதிவுகளை இறக்குமதியும் செய்திருந்தேன்.


ஆனால் இப்போது யோசிக்கும்போது,ஆன்மீகத்தை இப்பதிவில் கலக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.இங்கு நான் எழுதும் விஷயங்களுக்கும்,ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே இந்தப் பதிவில் எழுதுவதாக இருந்த ”திருமூலரின் சூனிய சம்பாஷணை” என்ற தொடர் பதிவை என் மற்ற பதிவான “நமக்குத் தொழில் பேச்சு” வில் இன்று முதல் பதியப் போகிறேன்.

http://shravanan.blogspot.com

தொடர்ந்து வருகை தாருங்கள்;கருத்துச் சொல்லுங்கள்.