தொடரும் தோழர்கள்

சனி, ஜூன் 27, 2015

ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி?



ஆண்

1.காரை எடுத்துக் கொண்டு ஏடிஎம்முக்குச் செல்கிறார்
2.மெசினில் அட்டையைச் செருகுகிறார்
3.பின்எண்ணையும்,தொகையையும் அழுத்துகிறார்
4.பணத்தையும் ரசீதையும் எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்

பெண்
1.காரில் ஏடிஎம்முக்குப் போகிறார்
2.கைப்பையைத் துழாவி அட்டை அகப்படுகிறதா எனப் பார்க்கிறார்
3. கையில் கண்ணாடியும் அகப்படுகிறது.ஒப்பனையைச் சரி செய்து கொள்கிறார்,தலை முடியைத் திருத்திக் கொள்கிறார்.
4.கிட்டத்தட்ட இரண்டு பேர் மேல் மோத இருக்கிறார்.
5. ஏடிஎம் அருகில் காரை நிறுத்த முயல்கிறார்.
6.சரியாக வரவில்லை
7.இரண்டாவது முயற்சி வெற்றிகரம்
8.கைப்பையிலிருந்து அட்டையை எடுத்துச் செருகுகிறார்
9.ஏடிஎம் ஏற்க மறுக்கிறது
10.பேன் அட்டையைப் பையில் வைத்து விட்டு.ஏடிஎம் அட்டையை எடுத்துச் செருகுகிறார்
11,பின் எண் எழுதி வைத்திருந்த சீட்டு பையில் இல்லை
12.கணவருக்குப் போன் செய்து பின் எண் கேட்கிறார்
13.அழுத்துகிறார்
14 எவ்வளவு எடுப்பது என்று மீண்டும் யோசிக்கிறார்.
15.தொகையை அழுத்துகிறார்
16.பணத்தை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்
17.கார் அருகே வரும்போது கார் சாவி கையில் இல்லை என்பது தெரிந்து மீண்டும் ஏடிஎம் போய் சாவியை எடுத்து வருகிறார்.
18.காரில் புறப்பட்டதும் ரசீது எடுக்காதது நினைவுக்கு வருகிறது
19.போய் எடுத்து வருகிறார்.
20.கார் கண்ணாடியில் பார்த்து ஒப்பனையைச் சரி செய்து கொள்கிறார்.
21.கடைக்குப் போய் எல்லாம் செலவான பின் மீண்டும் நம்பர் 1!

டிஸ்கி:சகோதரிகள் கோபித்துக் கொள்ள வேண்டாம்.இது நடப்பை ஒட்டி வராத நகைச்சுவை என்பதே என் ஆணித்தரமான நம்பிக்கை.

(இந்த டிஸ்கி எழுதலேன்னா இன்று இரவு  சோறு கிடைக்காது!)



வெள்ளி, ஜூன் 26, 2015

தமிழ் நாட்டில் புதிய கட்சி பிறந்தது!



ஆயிரம் உண்டிங்கு சாதி என்றான் பாரதி.

இப்போது இருந்தால் ஆயிரம் உண்டிங்கு கட்சி என்றும் பாடியிருப்பானோ என்னவோ!

அந்த அளவுக்கு நாட்டில் கட்சிகள் பெருகி விட்டன

ஒவ்வோரு சாதிக்கும் ஒரு கட்சி.அதைத்தவிர இடது ,வலது,மேலே,கீழே, என்று கட்சிகள்.

இரண்டு பேர் இருந்தால் ஒரு கட்சி தொடங்கி விடலாம்.

வியாழன், ஜூன் 25, 2015

மைனர் குஞ்சு!



”இதோ பாருங்க!நீதி மன்றமே சொல்லியாச்சு.உங்களுக்கு வேண்டியவங்க நாலு பேரை அழைச்சிட்டு வாங்க.எல்லோரும் கூடிப்பேசி சமாதானமாப் போயிடலாம் உங்களுக்கு என்ன வேணுமோ அதை யோசிச்சுச் சொல்லுங்க.ஓர் உடன்படிக்கைக்கு வந்துட்டோம்ன சட்டப் படியே அதை நீதி மன்றத்தில தாக்கல் செய்து வழக்கை முடிச்சுக்கலாம்.நான் சிறைக்குப் போறதாலயோ ,நீதி மன்றத்தில அபராதம் கட்டுவதாலயோ உங்களுக்கு என்ன பயன்? அந்தப் பணம் உங்களுக்குக்  கிடைச்சாலாவது பிரயோசனமா இருக்குமே.ஆறு வயசுக் கொழந்தை வேற இருக்கு.அதுக்கு எதிர்காலத்துக்குப் பணம் தேவையில்லையா?சீக்கிரம் முடிவு செய்யுங்க.”

2008! அந்த 15 வயதுப் பெண்ணுக்கு அவள் வாழ்வின் இருண்ட நாள்.அன்றுதான் அவள் அந்த மிருகத்தால் வன்புணர்வுக்கு ஆளானாள். அந்தப் பதின்ம வயதுச் சிறுமியின் வேதனை அந்த மிருகத்துக்குச் சுகமாக இருந்தது. முடிந்தது.எல்லாம் முடிந்தது. 

நடந்ததை மறக்க முடியாத வாறு அடுத்த ஆண்டே அவள் ஒரு குழந்தைக்குத் தாயானாள்.

சட்டத்தின் முன் நின்ற அவனுக்கு மகளிர் நீதி மன்றம் ஏழு ஆண்டுச் சிறைவாசமும் இரண்டு இலட்சம் அபராதமும் விதித்தது.

 அவன் மேன் முறையீடு செய்தான்.

உயர் நீதி மன்றம் சமாதான உடன்படிக்கைக்குப் பரிந்துரைத்தது.

அதன் விளைவாக இதோ அவன் பாதிக்கப்பட்டவர்களிடம் பேரம் பேசிக் கொண்டி ருக்கிறான்.

ஒப்பந்தம் ஏற்படலாம். பணம் கைமாறலாம்.

அது அறியா வயதில் வன்புணர்வுக்கு ஆளாகி உடல் மட்டுமன்றி மனதளவிலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,அவள் உணர்வுக்கான நஷ்ட ஈடா?

வழக்கு விலக்கப்படலாம்.

அவன் விடுதலையாகி  ஊரைச் சுற்றலாம்.

கற்பழிப்புக்காகப் பஞ்சாயத்தின் முன் நின்று அபராதப்பணத்தை நான் முன் பணமாகவே கட்டியிருக்கிறேன் என்று விவேக்கிடம்  திமிராகச் சொல்லும் மைனர் குஞ்சுவின் நினைவுதான் வருகிறது.

இவன் போன்றவர்களுக்கு விவேக் அளித்த தண்டனைதான் சரியானது

“மைனர் குஞ்சைச் சுட்டுட்டேன்!”





புதன், ஜூன் 24, 2015

குடும்பக் கட்டுப்பாட்டுக் குழப்பம்!



2015
--------
சாலை ஓரத்தில் அந்த இளைஞன் காத்திருந்தான்.

யார் அவன்?  அவன் பெயர் என்ன?

பெயரில் என்ன இருக்கிறது? அருண் என்று வைத்துக் கொள்வோமே!

அவன் காத்திருந்தான்

கையில் சுருட்டி வைத்திருந்த செய்தித்தாளின் நடுவே அதுவும் காத்திருந்தது,அவன் கைவிரலின் அசைவுக்காக.

அவள் வழக்கமாக வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அதோ அவள் வருகிறாள்.இன்று தவற விடக்கூடாது

எத்தனை ஆண்டுகள் ?எத்தனை  வெற்றியடையா முயற்சிகள்?

இன்று கடைசி.

இன்றோடு முடியட்டும் இந்தத் தொடர்கதை.

அவள் நெருங்கி விட்டாள்.

சால ஓரத்திலிருந்து புறப்பட்டு அவளுக்கு நேராகச் சென்று,ஒளித்து வைத்திருந்த கைத் துப்பாக்கியால் அவளைச் சுட்டு விட்டு  அங்கிருந்து ஓடினான்.பலர் பார்க்க நடந்த நிகழ்வு ஆனால் யாரும் எதுவும் செய்ய முடியாமல் தடுத்தது அந்தத் துப்பாக்கி. 

அவள்..... 

அந்த இடத்திலேயே மரணம் அடைந்தாள்

1977
--------
ராம்னாத் அதிர்ச்சியடைந்தான்

அன்றுதான் அவன் மனைவி சொன்னாள்”நான் கருவுற்றிருக்கிறேன்”

இது எப்படி முடியும்?

சென்ற ஆண்டுதான் அவசர நிலைசட்டத்தின் ஒரு விளைவாக அவனுக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது

இப்போது இது எப்படி நடக்க முடியும்?

மருத்துவரை நாடினான்.

பரிசோதனைக்குப் பின் அவர் சொன்னார் அறுவைச் சிகிச்சை சரியாகவே செய்யப்
பட்டிருக்கிறது.குழந்தை தர அவனால் இயலாது என்று

அப்படியானால்,அவன் மனைவி ரமா அவனை ஏமாற்றி விட்டாளா?

வேறு ஒருவனின் தொடர்பு இல்லையெனில் இது எப்படி நடந்திருக்கும். ?

ஒரு முடிவுக்கு வந்தான்.இதையே காரணமாக வைத்து மண விலக்குப் பெற்றான்.

சில நாட்களுக்குப் பின் உடன் பணிபுரியும் ராதாவை மணந்தான்.

1992
-------
ராம்னாத் -ரமாவின் மகன்,அருண்.இப்போது அவனுக்கு வயது 19.

சிறு வயது முதலே தன் தந்தையையும்,அவரது இரண்டாவது மனைவியையும்  பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் வளர்ந்தவன்.

தன் தாயையும் தன்னையும் தவிக்க விட்டுப்போன தந்தையை அவன் மன்னிக்கத் தயாராக இல்லை,அவர் அவன் படிப்புக்கு உதவி செய்து வந்தபோதிலும்.

ஒரு நாள்,பணிக்குச் சென்று கொண்டிருந்த ராதாவை மடக்கி ஒரு நாட்டுத் துப்பாக்கியால் சுட முயன்றான்.குண்டு வெடிக்கவில்லை.அவன் தப்பி ஓடி விட்டான்.

நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.அதன் பின் இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன,

கடைசி முயற்சிக்குப் பின் ராம்னாத் அவன் மீது இரக்கப்பட்டு அவனைக் காப்பாற்றினார். 

அவனும் வருத்தம் தெரிவித்தான்

ஆனால் உள்ளுக்குள் வெறி கனன்று கொண்டுதான் இருந்தது.

2015 மே 14

சாலையோரத்தில் அந்த இளைஞன் காத்திருந்தான்.
....................
......................
.........................

(கதையல்ல,)

செவ்வாய், ஜூன் 23, 2015

அம்மாவிவின் கண்ணீர்!



அம்மாவிடம் மகன் கேட்டான்      
ஏனம்மா நீ அழுகிறாய்
அம்மா சொன்னாள்
நான் பெண்ணாய்ப் பிறந்ததால்!
புரியவில்லை எனக்கு என்றான் புத்திரன்
அணைத்தபடி அம்மா சொன்னாள்
உனக்கு எப்போதும் புரியாது.
அப்பா அம்மா ஏன் அழுகிறாள்?
அவர் சொன்னார்அம்மாஅழுவதற்குக்
 காரணம் வேறு உண்டா?
காலம் சென்றது,கட்டிளங்காளையானான்
கடவுளிடம் கேட்டான் அதே கேள்வியை
சிறப்பானதொன்றைப் படைக்க எண்ணினேன்
படைத்தேன் பெருமையுடன்அன்னையரை
குடும்பச்சுமை தாங்க வலிய தோள் தந்தேன்
குடும்பத்தார்   துன்பத்தில்
சாய்ந்து ஆறுதல் பெற
மென்மையும் தந்தேன் அத்தோள்களுக்கு!
 வலிமை தந்தேன்
குழந்தை பெறுவதற்கு மட்டுமல்ல
அவர்களின் அலட்சியத்தைப் பொறுப்பதற்கும்!
கணவனின் குறைகளைக் கொள்ளாமல்
கண்ணிமை போல் அவனைக் காக்கும்
கனிவான மனம் தந்தேன்!
கடைசியாய்…………
கண்ணீரும் தந்தேன்!
அவள்  வேண்டும்போது சிந்துவதற்கு!
அம்மாவின்அழகு
அவள் நிறத்தில் இல்லை
ஆடை அணிகளில் இல்லை
அந்தக் கண்களில் இருக்கிறது
 அவை
அவள் உள்ளத்தின் வாசல்!
அன்பின் நுழை வாசல்
அவள் கண்ணீரில் தெரிவது
அவள் அன்புள்ளம்தான்!
அடைக்குந் தாழின்றிப் பெருகும்
அன்பன்றோ அது!