தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2026

வாசலில் நின்ற நிழல்

 வாசலில் நின்ற நிழல்

காலை ஏழு மணி.

வீட்டு வாசலைத் திறந்தேன். தெருவில் யாரும் இல்லை. ஆனால், எதிர் வீட்டின் வாசலில் ஒரு நிழல் மட்டும் நின்றிருந்தது. மனிதர்கள் இல்லாத நேரத்திலும் சில நிழல்கள் மட்டும் தங்கள் கடமையை மறப்பதில்லை.

ஒரு காலத்தில் இந்தத் தெருவில் ஒவ்வொரு வாசலும் ஒரு கதையைச் சொல்லும். ஒரு வீட்டிலிருந்து காபி மணம், இன்னொரு வீட்டிலிருந்து ரேடியோவில் பழைய பாடல், வேறொரு வீட்டிலிருந்து குழந்தையின் அழுகை. இப்போது எல்லா கதவுகளும் உயரமாகிவிட்டன; மனிதர்களின் குரல்கள் மட்டும் தாழ்ந்துவிட்டன.

எதிர் வீட்டில் இருந்த ராமசாமி ஐயா நினைவுக்கு வந்தார். தினமும் காலை, "சார், பேப்பர் படிச்சாச்சா?" என்று கேட்பார். அவருக்குப் பேப்பரில் வரும் செய்தியை விட, அதைப் பற்றிய உரையாடல்தான் முக்கியம்.

இப்போது பேப்பர் கைப்பேசிக்குள் வந்துவிட்டது. ஆனால் "படிச்சாச்சா?" என்று கேட்க யாருமில்லை.

அந்த நிழல் மெதுவாக நகர்ந்தது. அது மரக்கிளையின் நிழல் என்று புரிந்தது. ஒரு கணம் அதை மனிதன் என்று நினைத்தது என் கண்கள் அல்ல; என் தனிமை.

வாசலை மூடினேன்.

வீட்டுக்குள் வந்தபோது தோன்றியது—வயது கூடும்போது மனிதர்களை விட நினைவுகள்தான் அதிகம் நம்மைத் தேடி வருகின்றன. அவை கதவைத் தட்டுவ்தில்லை.

வாசலில் அமைதியாக நின்று கொண்டே இருக்கும்!