சில பயணங்கள் நம் நினவில் தங்கி விடுகின்றன;எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவை நம் நினைவை விட்டு மறைவதில்லை.காரணம் அப்பயணங்களின் போது நமக்கு ஏற்படும் அனுபவங்கள்;நாம் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்கள்.என் வாழ்க்கையில் பல பயணங்கள் என்னால் மறக்க முடியாதவை.ஆனால் இங்கு நான் பகிர்ந்து கொள்ளப் போவது இரு இரயில் பயணங்கள் மட்டுமே.நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களே காரணம்.
முதல் பயண அனுபவம்;அப்போது நான் டில்லியில் பணி புரிந்துவந்தேன்.ஒரு முறை விடுப்பில் சென்னை வந்து கொண்டிருந்தேன் என்னுடன் என் அம்மாவும். எப்போதும் போல் பயணத்தில் சாப்பிடுவதற்காக வீட்டில் செய்து கொண்டு வந்த சப்பாத்தி,புளி, தயிர் சாதங்கள்.காலை உணவு,பின் மதிய உணவு சாப்பிடும் போது கவனித்தேன்.எங்கள் பெட்டியில் பயணம் செய்த ஒருவர் யாருடனும் பேசாமல் எதுவும் சாப்பிடாமல் வந்ததை. அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.அவர் வேளாங்கண்ணிக்கு வேண்டுதலுக்காகச் செல்வதாகக் கூறினார்.நான் எங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னபோது பணிவாக மறுத்து விட்டார்.
மதிய நேரத்தில் ரயில் நாக்பூரை அடைந்தது.கீழே இறங்கி இரண்டு ஐஸ்கிரீம் வாங்கினேன்.ஒன்றை என் அம்மாவிடம் கொடுத்தேன்.இன்னொன்றைச் சாப்பிடும் முன் அந்த நபரைப் பார்த்தேன்."சாப்பிடுகிறீர்களா " என்று கேட்ட படியே அவரிடம் அதை நீட்டினேன்.அது வரை ஒன்றுமே சாப்பிடாமல் வந்த அவர் அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார்-ஆர்வமாக,அவசரமாக. மீண்டும் ஒர் ஐஸ்கிரீம் வாங்குமுன் ரயில் புறப்பட்டு விட்டது.என் அம்மாவுக்குக் கூட வருத்தம்-அந்த ஐஸ்கிரீமை நான் சாப்பிடவில்லையே என்று.ஆனால்,அந்த ஐஸ்கிரீமைச் சாப்பிட்டிருந்தால்,என் வயிறு மட்டும்தான் குளிர்ந்திருக்கும்;ஆனால் இப்போது என் மனமும் குளிர்ந்து விட்டது.சென்னை வந்து சேர்ந்த பின் என்னருகில் வந்த அவர்"ஐயா,உங்கள் நலனுக்காக நான் மாதாவிடம் பிரார்த்தனை செய்வேன்"எனச் சொல்லிச் சென்றார்.
இந்தப் பயணத்தை எப்படி மறக்க முடியும்?
நினைவில் நிற்கும் இன்னொரு பயணமும் இது போல, வித்தியாசமான ஒருவரைப் பற்றியது.இதுவும் விடுப்பில் சென்னை வந்து திரும்பிய ஒரு பயணம்.பூனாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்தேன்.வழக்கம் போல் கட்டுச் சாதம் வகையறாக்கள். நாங்கள் சாப்பிடும்போது எங்களுடன் பயணம் செய்த ஒரு இளம்பெண் எதுவும் சாப்பிடாமல் வந்தாள்.நாங்கள் அளித்த உணவை மறுத்து,அன்று விரதம் என்றும் பழம் தவிர வேறெதுவும் சாப்பிட மாட்டேன் என்றும் கூறினாள்.அன்று முழுவதும் அப்பெண் சாப்பிட்டது ஒரே ஒரு ஆப்பிள் மட்டுமே.கல்லூரியில் 'மாஸ் கம்யூனிகேஷன்' பட்ட மேற்படிப்புப் படிக்கும் ஒரு பெண் ,அவ்வாறு விரதம் இருந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ரயில் காலை 4 மணி அளவில் பூனாவை அடைந்தது.அந்த இருட்டில் அந்தப் பெண்ணைத் தனியாக அனுப்புவது சரியாகத் தோன்றவில்லை.அப்பெண் இருந்த ஹாஸ்டல் எங்கள் வீட்டைத் தாண்டிதான் இருந்தது.எங்களுடன் அப்பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்றோம். எங்கள் வீட்டில் விடியும் வரை தங்கி விட்டுப் பின் செல்லலாம் என நான் சொன்னேன்.அந்தப் பெண் எங்களைக் கவலைப்பட வேண்டாமென்றும்,போய்ச் சேர்ந்தவுடன் தொலைபேசுவதாகவும் கூறினாள். சொன்னது போலவே 20 நிமிடங்களில் அவள் ஃபோன் வந்து விட்டது. என்னால் மறக்கமுடியாத பெண் .அதனால் மறக்க முடியாத பயணம்.
"நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யாருக்கும் அஞ்சாதநெறிகளும், திமிர்ந்த ஞானச்செருக்கும்" மட்டுமன்றி நமது அடிப்படை கலாசாரத்தை, நம்பிக்கைகளையும் பேணிக் காக்கும் ஒரு வித்தியாசமான புதுமைப் பெண்.செய்யும் செயல் எதையும் ஈடுபாட்டுடன் செய்யும் அந்தப் பெண்ணுக்குச் சரியான பெயர்தான்
.--"ச்ரத்தா".