தொடரும் தோழர்கள்

படைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

அம்மாவின் பொய்கள்!




அம்மா!

அன்போடு அரவணைப்பாள்!

பசி அறிந்து அமுதளிப்பாள்

நல் வழி நடத்திச் செல்வாள்

ஆனால் அவளே பொய்யும் சொல்வாள்!

அன்றொரு நாள்

என் பசிக்கு அவள் உணவளித்த நேரம்

ஏக்கப்பார்வை பார்த்தேன் 

உணவு போதாமல்

எடுத்து எனக்களித்தாள் 

எஞ்சிய உணவனைத்தும்

என்னம்மா உனக்கு 

ஒன்றுமில்லையே என்றேன்

அவள் சொன்னாள்

என்னவென்று தெரியவில்லை

எனக்கு ஏனோ பசியே இல்லை!

அவள் சொன்ன பொய்!

தீபாவளி நேரம்!

எனக்கு உடை வாங்குதற்காய்

மற்றவர் உடைகளைத்தைத்து

நேரத்தில் கொடுக்க முனைந்து

கண்விழித்து வேலை செய்தாள்!

கண் விழித்த நான்  சொன்னேன்

”தூங்கம்மா,களைத்திருப்பாய்”!

சொன்னாள் சிரித்தவாறு

உறக்கமும் வரவில்லை

களைப்பும் அறவே இல்லை!  

அம்மா சொன்ன பொய்!

ஆம்

வள்ளுவத்தின் வழி நடந்தாள்.....!

”பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
 நன்மை பயக்கும் எனின்”

திங்கள், மார்ச் 25, 2013

வாழ்க்கை கேள்வித்தாளா?கழிப்பறைத்தாளா?



”நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்” இதற்கு வழி என்ன? கேட்டேன்

ஞானி சொன்னார்”உன் கேள்வியில் இருக்கும் ”நான்” என்பதை எடுத்து விடு!அடுத்து  நீ சொன்ன ”விருப்பம்”என்பதை எடுத்து விடு.எஞ்சியிருப்பது மகிழ்ச்சியாக இருப்பது மட்டும்தான்!

ஆம்!முதலில் அகந்தை அகல வேண்டும்;பின் ஆசை அகல வேண்டும்;மகிழ்ச்சி தானே வரும்!  

......................................................................
 

தேவைப்படும்போது மட்டுமே பிறர் நம்மைப் பற்றி நினைக்கிறார்களே என வருத்தப் பட வேண்டாம்;இருட்டில் இருக்கும் போது ஒரு மெழுகுவர்த்தியின் நினைவு வருவது போல் அது எனப் பெருமை அடையுங்கள்

....................................................................
 
சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில் உபயோகித்தோம்.பெரியவர்களாக ஆனபின் பேனா உபயோகிக்கிறோம்.ஏன் தெரியுமா? 

சிறுவயதில் செய்யும் தவறுகளை அழிக்க முடியும். 

ஆனால் வயதான பின்னரோ?!

..................................................................
 
நேற்று என்பது குப்பைத் தாள்
இன்று என்பது செய்தித் தாள்;
நாளை என்பது கேள்வித்தாள்
கவனமாகப் படியுங்கள்.
சிந்தித்து விடை அளியுங்கள்
இல்லையென்றால் வாழ்க்கை
கழிப்பறைத் தாளாகி விடும்!

................................................................
 
பிறந்த நாள் என்பது என்ன?
வாழ்க்கையில் ஒரே ஒரு நாள்,
நீங்கள் அழுதபோது
உங்கள் தாய் சிரித்த நாள்!—(டாக்டர் அப்துல் கலாம்)

.....................................................................
ஒருவரால் கவரப்படுவதற்கு ஒரு மணித்துளி போதும்
ஒருவரைப் பிடிக்க ஒரு மணி நேரம் போதும்
ஒருவரைக் காதலிக்க ஒரு நாள் போதும்
ஒருவரை மறக்க ஒரு வாழ்நாள் போதாது!


வெள்ளி, மார்ச் 22, 2013

பயமுறுத்திய போலி ரெய்டு!

ரெய்டுகள் எல்லாமே உண்மையானவையாக இருக்க வேண்டியதில்லை.பல சமயங்களில் சம்பந்தப்பட்டவர்களைப் பயமுறுத்துவதற்காக நடத்தப்படும் ரெய்டுகளும் உண்டு  .அப்படிப்பட்ட ரெய்டுதான் இங்கு பார்க்கப் போகிறோம்.


  இதோ.........

திரைஅரங்கிலிருந்து வெளி வந்த லோகுவுக்கு உடல் முழுவதும் ஒரு சூடு பரவியிருந்தது. பார்த்த படத்தில் வந்த சில காட்சிகள் அவனை வதைத்துக் கொண்டிருந்தன.நண்பர்கள் யாரும் உடன் இல்லாததால்,இன்று எப்படியாவது அந்த அனுபவத்தை பெற்று விட வேண்டியதுதான் எனத் தீர்மானித்தான்.அந்த அரங்கு இருந்த தெருவுக்குப் பக்கத்திலேயே, அதற்காகச் சில ஆட்கள் இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறான்.

அவன் தெரு முனையை அடைந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.குறுக்கும் நெடுக்குமாக இரு முறை நடந்தான்.அப்போதுதான் இருட்டிலிருந்து வெளி வந்தான் அந்த ஆள்.

“என்ன சார்?ஆள் வேணுமா”எனக் கேட்டான் .லோகுவும் தயக்கத்துடன் தலயை ஆட்டினான்.

”சார் பார்த்தா ரீஜண்டா இருக்கீங்க.நேத்துத்தான் ஆந்திராவிலிருந்து பார்ட்டி வந்திருக்கிது.
ரூபாய் கொஞ்சம் அதிகம் .ஆனா பின்னால பிரச்சினை எதுவும் வராது. என்ன சொல்றீங்க”

லோகு மெல்லிய குரலில் கேட்டான்”எவ்வளவு?”

”பார்ட்டிக்கு 500.என் கமிசன் 50.லாட்ஜில ரூம்பு எடுக்கணும் அதுவும் ஒன் செலவுதான்.” 
அவன் சொன்னான்.

லோகு”லாட்ஜில் ரூமா?’ என இழுக்கவே அவன் சொன்னான் ”அதுக்கெல்லாம் பயப்படாதே சார்.பக்கத்திலேயே லாட்ஜ் இருக்குது.நமக்கு வேண்டியவங்கதான்.நல்ல ரூமாப் போட்டுடலாம். 250தான்.”

லோகு கூட்டிப் பார்த்தான்.800 தான் ,பர்சில் 1000 இருக்கிறது.

”சரி” என்றான்.

லோகுவையும் அழைத்துக் கொண்டு அவன் அருகில் இருந்த லாட்ஜுக்குச் சென்றான். பார்த்தாலே நிழலான விஷயங்கள் நடக்கும் இடம் எனத் தெரிந்தது.ரிசப்சனில் இருந்தவனிடம்.”மணி, சாருக்கு ஒரு டிலக்ஸ் ரூம் போடு ”எனச் சொல்லி விட்டு லோகுவிடம் 250 ரூபாயை வாங்கிக் கொடுத்தான்.மணி என்பவன் புத்தகத்தை விரித்து விட்டு கேட்டான்.

”சார் பேர் விலாசம் சொல்லுங்க.”

லோகுவுக்குக் கொஞ்சம் பயம் வந்தது.ஒரு நிமிடம் யோசித்தான் பின் சொன்னான் 

”முத்துசாமி” விலாசம் தவறாக ஏதோ கொடுத்தான்.

லோகுவை அழைத்து வந்த ஆள் லோகுவிடம்”சார் நான் போயிக் கூட்டிட்டு வரேன் . 100ருபாய் அட்வான்ஸ் குடுங்க,அங்க குடுக்க.”

லோகு 100 ரூபாய் கொடுத்தான்.

அந்த ஆள் புறப்பட்ட அந்த நேரத்தில்தான் அவர்கள் வந்தார்கள்------

இரண்டு போலீஸ்காரர்கள்!

உள்ளே நுழைந்த அவர்கள் அந்த ஆளைப் பிடித்துப் பிடரியில் ஒரு அறை விட்டனர். ”ஏண்டா நாயே .எத்தனை தடவை சொன்னாலும் திருந்தவே மாட்டியா? நடடா” என்று அவனை இழுத்துப் போகும்போது லோகுவைப் பார்த்தனர்.

லோகுவுக்குச் சப்தநாடியும் ஒடுங்கிப் போயிற்று.

அவர்கள் கேட்டனர்”யார் சார் நீங்க?”

“இல்ல ,தங்குவதற்கு ரூம் கேட்டு வந்தேன்” நடுங்கியபடி சொன்னான் லோகு.

”போங்க சார் போயி நல்ல லாட்ஜாப் பாருங்க!”

லோகு அவசரமாக அங்கிருந்து கிளம்பி திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினான் . கூடவே அவர்களும் கிளம்பினர்.

சிறிது நேரம் சென்றபின் போலிஸ்காரர்களும் அந்த ஆளும் திரும்பி வந்தனர்,சிரித்துப் பேசிக் கொண்டே!

லாட்ஜ் மணி அவர்கள் ஒவ்வொருவரிடமும் 50ரூபாயைக் கொடுத்தான்.

அந்த ஆள் புறப்பட்டான்”சரி,நான் அடுத்த வேட்டைக்குப் போறேன்”

போலிஸ்காரர்களும் கிளம்பினர்.அந்தச் சந்துமுனை இருட்டில் சென்று நின்றனர்!

“ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடியிருக்குமாம் கொக்கு”

இது இப்பதிவில் முன்பே நான் எழுதிய ”லோகுவின் ஆசை” என்ற சிறுகதை.தலைப்பை மாற்றி இப்போது வெளியிடலாம் என்று எண்ணினேன்! :))