தொடரும் தோழர்கள்

புதன், டிசம்பர் 31, 2014

தமிழ் இளங்கோ!



//எனக்குப் பிடித்த நூல் என்ற தலைப்பில் இன்றென்னைப் பேசப் பணித்திருக்கிறார்கள்
பல புதினங்களை நான் படித்திருந்தாலும்,எனக்குப் பிடித்த நூல் என்றால், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் என்று பாரதி பாராட்டிப் பரவசப்பட்ட சிலப்பதிகாரம்தான்.

உலத்துப் பிற மொழிக் காப்பியங்களெல்லாம் மன்னர்களையே,ஆள்வோரையே தலைவனாக் கொண்டு விளங்கி வந்த வேளையில்,சாதாரணக் குடிமகனையும், குடிமகளையும் தலைவன் தலைவியாகப் படைத்தார் இளங்கோவடிகள்.

ஏசாச் சிறப்பின் மாசாத்துவான் மகனான கோவலனையும்,மாநாய்கன் மகளான கண்ணகியையும் தலைமையாக்கி எழுதப்பட்டதிக்காப்பியம்..

மூன்றுநாடுகள்,மூன்று நகரங்கள்.மூன்று வாழ்க்கை நிலைகள்,முத்தமிழ் இவற்றை மூன்று காண்டங்களில் பாடினார் இளங்கோவடிகள்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்
உரைசால் பத்தினையை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் ”

எனும் முப்பெரும் நீதிகளை இப்பெரும் காப்பியத்தில் செப்பினார் இளங்கோவடிகள்.//


இது   சிவகாசிப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது,மாதாந்திர இலக்கியக் கூட்டத்தில் நான் பேசிய பேச்சின் ஒரு பகுதி;நினைவில் நின்ற அளவு,வெளிக் கொணர்ந்தி ருக்கிறேன்.

இதில் உண்மை என்ன வென்றால்,சிலப்பதிகாரத்தை நான் அந்நாளில் படித்ததே கிடையாது .என் தமிழாசிரியர்  திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் எழுதிக் கொடுத்ததை மனனம் செய்து பேசிக் கைதட்டல் வாங்கி விட்டேன் அவ்வளவே.இன்று வரை பாடத் திட்டத்தில் இருந்த பகுதி தவிர சிலப்பதிகாரத்தைச் சிறிதும் படித்ததில்லை.பட்டப்படிப்பின்போது,கோனாரின் துணை நாடாமல், ந.மு.வேங்கடசாமி நாட்டார்  அவர்களின் உரையைப் படித்தே தேர்வு எழுதினேன்.


(வேறு—தமிழாசிரியரைப் பற்றிப் பேசும்போது அவர் வீட்டுக்குச் சென்று மாணவர் மன்றம், தமிழ்ச்சங்கம் விடைத்தாள்கள் திருத்திய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போதெல்லாம் மனைவியிடம் சொல்வார்”சந்திரனுக்குக் கருப்பட்டிக் காப்பி குடுத்துடுடாதே;அய்யர் வீட்டுப் பிள்ளை;சீனிக்காப்பி கொடு”அவரையெல்லாம் மறக்க முடியுமா?ஓராண்டு மட்டுமே அப்பள்ளியில் படித்தாலும் பல இனிமையான மறக்க இயலாத அனுபவங்களின் பிறப்பிடம் அப்பள்ளி.அவற்றைத் தனியாகப் பகிர்வேன்)

இறுதியாக---இளங்கோவின் தமிழ்  என்றுதான் தலைப்புக் கொடுத்திருக்க வேண்டும்; ஆனால் நண்பரின் நினைவு வந்து, இளங்கோவின் தமிழ் என்பது தமிழ் இளங்கோ ஆகி விட்டது!

அப்பா!தலைப்பை நியாயப் படுத்தி விட்டேன்!

9 கருத்துகள்:

  1. சிலப்பதிகாரத்தின் சிறப்பை சிறப்பாக கூறியமைக்கு நன்றி ஐயா......

    பதிலளிநீக்கு
  2. நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  3. இளங்கோவையும் தமிழையும் பள்ளியில் சிறப்பித்ததை சொல்லி தமிழ் இளங்கோவை சிறப்பித்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. பதிவு தமிழ் இளங்கோ அவர்களைப் பற்றிய பதிவு என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  5. கருப்பட்டி காப்பி எப்படியிருக்கும் என்று.தெரிந்து கொள்ளவேயில்லை.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (தமிழ் PHONETIC இல் தட்டச்சு செய்யும் போது நிறைய பிழைகள் எப்படியோ வந்து விட்டன. எனவே முந்தைய கருத்துரையை நீக்கியுள்ளேன்)

      அய்யா சென்னைப் பித்தன் அவர்களுக்கு வணக்கம். பதிவின் தலைப்பைப் பார்த்ததும், நீங்களும் வலைச்சரம் போல, ஒரு பதிவினுக்கு ஒரு வலைப்பதிவர் என்று அறிமுகம் செய்து எழுதுகிறீர்கள் என்று எண்ணி விட்டேன். மூத்த பதிவரான தாங்கள் இப்படியும் எழுதலாம் என்பது எனது யோசனை. (தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்)

      செந்தமிழ், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள் மற்றும் உங்கள் ஆசிரியர் பற்றிய உங்கள் நினைவலைகளைச் சிறப்பாகவே சொன்னீர்கள்.

      எனது பெயரை, கேட்டவுடன் பலர், ”இளங்கோ என்றாலே தமிழ்தான். அப்புறம் அதென்ன தமிழ் ..... இள்ங்கோ?” என்று கேட்டதும் உண்டு. எது எப்படி இருப்பினும், உங்கள் அன்பிற்கு பாத்திரமானவர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

      அய்யா V.N.S (வே.நடனசபாபதி) அவர்கள் இந்த பதிவினைப் பற்றி தகவல் தெரிவித்து இருந்தார். அவருக்கு நன்றி. (இரண்டு நாட்களாக வீட்டில் இல்லை. திருச்சி டவுனில் மருத்துவ மனையில் ICU வில் இருக்கும் எனது சின்னம்மாவை பார்த்து வரச் சென்று விட்டேன். இதுவே எனது தாமதத்திற்கு காரணம். மன்னிக்கவும்)

      த.ம.4

      நீக்கு
  7. :)))) இனிமையான பதிவு.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு