தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 15, 2010

காதல்-திருக்குறள் கதை-பகுதி-2

அந்த நாளுக்குப்பின் குமாருக்கு உலகமே வெறுமையாய்த் தோன்ற ஆரம்பித்தது. ”எங்கெங்கு காணினும்” அவளே தெரிந்தாள்.நோயால் பீடிக்கப் பட்டவன் போல் ஆனான்.எதிலுமே பிடிப்பில்லாத ஒரு நிலையில் இருந்தான்.

ஒரு வாரத்துக்குப் பின்-
ஞாயிறன்று தவிர்க்க முடியாத ஒரு திருமணத்துக்குப் போக நேர்ந்தது.வேண்டா வெறுப்பாகத்தான் சென்றான்.மண்டபத்தில் நுழைந்து,தெரிந்த சிலரிடம் பேசியவன்,மேடைப்பக்கம் நகர்ந்தான்.சென்று கொண்டிருந்தவன் திடீரென்று நின்றான்.அவள்! அவளேதான்!ஒரு வாரமாக அவனைப் பிடித்திருந்த நோய் நீங்கியது போல் உணர்ந்தான்.உள்ளத்தின் வெறுமை நீங்கி மகிச்சி பொங்கியது.

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து,”

(நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன;ஆனால் அணிகலன்கள் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.)

அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.அவன் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது. அவளுடன் பேசிக்கொண்டிருந்த இருவர் அகன்று விடத் தனியாக விடப்பட்ட அவள் திரும்பினாள்.அவள் பார்வை அவன் மீது விழுந்த அதே நேரத்தில் அவன் அவளை நெருங்கி விட்டான்.

”ஹலோ!”
”ஹாய்!”
” நான் குமார்-அஷ்வின் குமார்.சி.டி.எஸ் ஸில் வேலை பார்க்கிறேன்”
“காயத்ரி-டி.சி.எஸ்.
”அன்று நகர் மையத்தில் பார்த்தபின் இவ்வளவு விரைவில் உங்களை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை”
அவள் லேசாகச் சிரித்தாள்.அவள் அழகிய கண்களும் சிரித்தன.
சிரிக்கும்போது அவள் அழகு கூடுகிறது என்று எண்ணினான்.(என்ன அழகு,என்ன அழகு!)

“முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு”

(மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி;முத்தே பல்;இயற்கை மணமே மணம்;வேலே மை உண்ட கண்.)

“பெண் வீட்டார் எனக்குத் தூரத்துச் சொந்தம்”-அவன்.
“பிள்ளை வீட்டார் எனக்குத் தூரத்து சொந்தம்”-அவள்

அவன் சிரித்தவாறு சொன்னான்”தூரத்து உறவினர்கள் வீட்டுத் திருமணத்துக்கு வந்த நாம் பக்கத்தில் வந்து விட்டோம்”.

அதன் பின் பேசினார்கள்,பேசினார்கள்,பேசினார்கள்--.சேர்ந்தே மேடைக்குச் சென்று பரிசுகளைக் கொடுத்தார்கள்;சேர்ந்தே சாப்பிடப் போனார்கள்.உறவினர்களிடம் விடை பெற்றார்கள். மண்டபத்தின் வாசல் வரை சேர்ந்தே வந்தார்கள்.

”மறுபடியும் எப்போது சந்திக்கலாம்?”அவன் கேட்டான்.
“ஏன் சந்திக்க வேண்டும்?’அவள் குறும்பாகக் கேட்டாள்.உடனே அவன் முகம் வாடியதைக் கண்டு சிரித்தவாறே சொன்னாள்”வரும் ஞாயிறன்று ஆர்ட் காலரியில் ஒரு ஓவியக் கண்காட்சி இருக்கிறது.காலை 10 மணிக்கு அங்கு இருப்பேன்."

அவன் சொன்னான்”அன்று அங்கு வருபவர்களுக்கு பிரச்சினைதான்-உயிரில்லாத ஓவியங்களை பார்ப்பதா அல்லது உயிருள்ள ஒவியத்தை ரசிப்பதா என்று”

அவள் அவன் தோளில் செல்லமாகத் தட்டி விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டாள்.

அவன் அவள் தட்டிய இடத்தைத் தடவிக் கொண்டே இருந்தான்.அவள் போவதை பார்த்துக் கொண்டே நின்றான்.
” என்ன மென்மையான தொடுகை!ஒரு பூவால் தட்டியதைப் போல் ஒரு தொடுகை!எவ்வளவு மென்மையானவளாக இருக்கின்றாள் இவள்!”எண்ணினான்.

“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்”
(அனிச்சப்பூவே!நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்!நீ வாழ்க!யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லிய தன்மை உடையவள்.)

ஒரு பெருமூச்சு விட்டான்.அடுத்த ஞாயிறுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

காத்திருப்பதும் ஒரு சுகம்தானே?

(உங்களுக்கும்தான்!)

8 கருத்துகள்:

 1. unless you have loved sometime in the past,you cannot write with so much feeling!am i right?
  very interesting to read.

  பதிலளிநீக்கு
 2. கதையோடு கூட, திருக்குறளை மேற்கோள் காட்டி இயல்பாக எடுத்து செ(சொ)ல்வதால், சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது.
  அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்,
  திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. @வே.நடனசபாபதி
  //எடுத்து செ(சொ)ல்வதால்,//
  சொல் விளையாட்டு நடத்தியி ருக்கிறீர்கள்!.
  //அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்,//
  நானும்தான்!ஏதாவது எழுதியாக வேண்டுமே!
  மிக்க நன்றி நடனசபாபதி அவர்களே.

  பதிலளிநீக்கு
 4. அஷ்வின் குமார் விடும் பெருமூச்சின் உஷ்ணம் என்னை தாக்குவது போல் உள்ளது . அடுத்த சந்திபிற்காக(ஞாயிறுக்காக) ஆவலுடன் காத்திருக்கிறேன் . இன்னும் நான்கு நாட்கள் போகவேண்டுமே ! வாசு

  பதிலளிநீக்கு
 5. வாசு அவர்களே,
  உங்களுக்கே இவ்வளவு கஷ்டமாக இருந்தால்,பாவம் குமாருக்கு எப்படி இருக்கும்?(காயத்ரிக்கு?)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. //காத்திருப்பதும் ஒரு சுகம்தானே? //
  முற்றிலும் உண்மை.காத்திருப்பது ஒரு எதிர்பார்ப்பையும்,அந்த எதிர்பார்ப்பு ஒரு துடிப்பையும்,அந்தத் துடிப்பு ஒரு சுகத்தையும் அளிக்கத்தான் செய்யும்.நானும் காத்திருக்கிறேன்- அடுத்த பகுதிக்காக.

  பதிலளிநீக்கு
 7. @sanjayan
  காத்திருப்பதன் சுகத்தை அனுபவியுங்கள்!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு