தொடரும் தோழர்கள்

திங்கள், டிசம்பர் 13, 2010

ராதாகிருஷ்ணனின் கடிதம்!

இன்று ராதாகிருஷ்ணனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.அதில் இப்பதிவுக்குக் காரணமான பகுதி கீழே--
“இன்றோடு 44 ஆண்டுகள் ஓடிவிட்டன.ஆனால் நினைவுகள் இன்னும் மறையவில்லை.அதற்கு ஒரு அஞ்சலியாக அந்நிகழ்வு சம்பந்தமான உங்கள் பதிவை ஒரு மீள் பதிவாக மீண்டும் வெளியிட வேண்டுகிறேன்.
எங்கிருந்தாலும் வாழ்க;அவள் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க;அவள் மங்கலக் குங்குமம் வாழ்க”

அவன் வேண்டுகோளுக்கு இணங்கி இதோ ஒரு மீள் பதிவு:-

எங்கிருந்தாலும் வாழ்க
---------------------

பெண்ணே!(கண்ணே என்றழைக்க மனம் விழைந்தாலும்,நாகரிகம் தடுக்கிறது);நீ எங்கே இருக்கிறாய்?இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் என் நெஞ்சில் நிற்கும் நீயும்,உன் நினைவுகளும் அவை தரும் சுகமும்,அதோடு கூடிய வலியும் மறையவேயில்லை.

அந்த நாள்,உனக்கு நினைவிருக்கிறதா ?நாம் சந்தித்த நாள்.என்னைப் போல் நீயும் அந்த நாளை நினைத்துப் பார்ப்பதுண்டா.(மறந்தாலன்றோ நினைப்பதற்கு)

திருச்சி இரயில் நிலைய்த்தில் திருவனந்தபுரம்-சென்னை பகல் நேர விரைவு வண்டியில், சென்னை செல்வதற்காக நான் ஏறிய போது நினைக்கவேயில்லை,என் உள்ளத்தைத் தொலைக்கப்போகிறேன் என்று.

இரயிலில் ஒரே கூட்டம்.நான் ஏறிய பெட்டியிலும் கூட்டம்.உட்கார இடம் இல்லை.என் பார்வையை மெதுவாக பெட்டி முழுவதும் செலுத்தினேன்.சுழன்று வந்த என் பார்வை உன்னிடத்தில் வந்ததும் நிலை குத்தி நின்றது.அந்தக் கூட்டத்தில் நீ “பளிச்” என்று தனித்துத் தெரிந்தாய்-எனக்கு.

சராசரி உயரம்,ஆண்களைச்சுண்டி இழுக்கும் கவர்ச்சி ஏதுமில்லாத தோற்றம் பகட்டில்லாத புடவை,குறைவான அணிகலன்கள் ,மாநிறம்.ஆனால் என்னை ஈர்த்தது எது தெரியுமா?உன் முகம்.சாந்தம் தவழும் அந்தத் தெய்வீக அழகு.மற்ற நாகரிக மங்கையர் போலன்றி மூக்கின் இரு புறமும் நீ அணிந்திருந்த மூக்குத்திகள் .லட்சுமி கரமான தோற்றம்.எனக்கு ரவி வர்மாவின் லட்சுமியைப் பார்ப்பது போலிருந்தது.அந்த வினாடியிலேயே நான் வீழ்ந்து விட்டேன்.

நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் நீயும் என்னைப் பார்த்தாய்.நம் கண்கள் கலந்த அந்த நொடியில் என் நாடி நரம்புகளில் எல்லாம் ஒரு மின் அதிர்ச்சி ஏற்பட்டது.விவரிக்க இயலாத ஒரு உணர்வு.நெஞ்சு ‘பட,பட’ என வேகமாக அடிக்கத்துவங்கிய்து.உன் கண்கள் என்னும் கடலில் முழ்கி மூச்சுத் திணற ஆரம்பித்தேன்.பலவந்தமாக என் கண்களை உன் மீதிருந்து பிடுங்கி வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தேன்.யோசித்தேன்” என்ன ஆயிற்று எனக்கு?இது வரை எந்தப்பெண்ணும் பாதிக்காத அளவு இந்தப்பெண் ஏன் என்னைப் பாதிக்கிறாள்”.

மீண்டும் என் பார்வை பெட்டியைச் சுற்றி வந்தது.எங்கும் இருக்கை இல்லாத நிலையில் சாமான்கள் வைக்கும் மேல் பலகை மேல் உட்கார முடிவு செய்தேன்.ஒரு துள்ளலில் மேலே ஏறி அமர்ந்தேன்.இளமையின் வேகம்.நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்ற எண்ணம் தந்த எழுச்சி.மேலேறி அமர்ந்த பின் உன்னைப் பார்த்தேன்.நீ அவசரமாக உன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாய்.நான் தெரிந்துகொண்டேன்-நீயும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய் என்று.புரிந்துகொண்டேன்-உனக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் உணர்வுகளை.

மேலேறி அமர்ந்த பின் கையில் வைத்திருந்த’இந்து’ பத்திரிகையைப் பிரித்தேன்.படிப்பது போன்ற பாவனையில் அடிக்கடி உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன். உன் பார்வையும் அவ்வப்போது என் மீது விழுந்தது.நான் உன்னைப்பார்க்கும் போதெல்லாம். அவசரமாக உன் பார்வையைத் திருப்பிக் கொண்டாய் .(”யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்”). சிறிது நேரம் சென்று உன்னுடன் வந்த சிறுமியிடம் நீ சொன்னாய் ” இன்னைக்கு பேப்பரே பார்க்கவில்லை”.

நான் என் கையில் இருந்த பத்திரிக்கையை மடித்து அதன் மேல் பகுதியில் என் பெயரை எழுதி அந்தச்சிறுமியிடம் கொடுத்தேன்”படிச்சிட்டுக் கொடுக்கலாம்” என்றவாறே .நீ அதை வாங்கிப் பிரிக்காமலே மேலே எழுதியிருந்த என் பெயரைப் படித்தாய் .உன் செவ்வாய் அசைவையே நான் கவனித்தேன் “ராதாகிருஷ்ணன்,M.A.”கொஞ்ச நேரம் பேப்பரைப் புரட்டி விட்டு அந்த சிறுமியிடம் நீ என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னாய் “மெட்ராசில் பெரியம்மா இப்ப சொல்லிட்டிருப்பா-’ராதா ரயில்ல வந்திட்டிருப்பா’ என்று”.உன் பெயரை மிக நாகரிகமாக எனக்குத் தெரிவித்து விட்டாய். என்னில் பாதி நீ என்பதைத் தெரிந்து கொண்டேன்.இது நம் இருவர் வாழ்வின் முக்கியமான நாள் என உணர்ந்தேன்.நம் பார்வைகள் மீண்டும் கலந்தன, பிரிந்தன,மீண்டும் கலந்தன.இன்பமான ஒரு விளையாட்டு.

ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்ற போது பசியால் அழுத ஒரு குழந்தைக்குப் பால் வாங்கித் தர நான் சென்று திரும்புவதற்குள் வண்டி புறப்பட்டு விட ,நான் ஓடி வந்து ஏறும்போது சன்னல் வழியே தெரிந்த உன் முகத்தில் எத்தனை கவலை;உள்ளே வந்த என்னைப் பார்த்தபின் எத்தனை நிம்மதி;என்ன கனிவு; என்ன பாராட்டு .இது போதுமே ஒருவாலிபனுக்கு, சாதனைகள் படைக்க.

சென்னை நெருங்கிக்கொண்டிருந்தது.நாம் பிரிய வேண்டிய நேரமும்தான்.இருவருமே அமைதி இழந்திருந்தோம்.பார்வைகள் பிரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம் .

சென்னை வந்து விட்டது.எல்லோரும் பரபரப்பாக இறங்க ஆரம்பித்தனர்.அந்த நெரிசலில் இற்ங்கும் வழியில் அருகருகே நின்ற நம் கைகள் கலந்தன.மெல்லக்கேட்டேன்”மெட்ராஸில் எங்க?” நீ மெல்லிய குரலில் உன் பெரியப்பா பற்றிய விவரங்களைக் கூறும்போது பிளாட்பாரத்திலிருந்து எப்படியோ உன்னைப் பார்த்து விட்ட உன் உறவினர் உன்னைப் பெயர் சொல்லி அழைக்க நம் பேச்சு நின்றது.இறங்கிய பின் என்னை ஒரு முறை பார்த்துவிட்டு நீ சென்று விட்டாய்,என் மனதையும் எடுத்துக்கொண்டு.

நீ சொன்ன தகவலில் சைதாப்பேட்டை என்பது தவிர ஏதும் காதில் விழாத நான் மறு நாள் சைதாப்பேட்டை முழுவதும் தேடி அலைந்து சோர்ந்து போனேன்.உன்னைப் பார்க்க முடியாமலே ஊர் திரும்பினேன்.பல நாட்கள் பைத்தியம் பிடித்தது போல் இருந்தேன்.காலம் என்னும் மருத்துவன் என்னைச் சரியாக்கினான்.ஆனால் உள்ளே அந்த சோகம் புதைந்துதான் கிடக்கிறது,இன்று வரை.

நீ எங்காவது கணவன்,பிள்ளைகள்,பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பாய்.நீ இருக்கும் இடத்தைச் சிறப்படையச் செய்து கொண்டிருப்பாய் என்பதில் ஐயம் இல்லை.

ஒரு கவிஞன் பாடினான்”சந்தனக் காடுகள் பற்றி எரிகையில் சந்தனமே மணக்கும்;என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில் ‘சக்கு’ என்றே ஒலிக்கும்”என்று.அது போல என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்தான் என் நெஞ்சோடு சேர்ந்து உன் நினைவும் வேகும்.

பின்னூட்டங்கள்

1) ராதா said;

அன்புள்ள ராதாகிருஷ்ணன்,தற்செயலாக உங்கள் பதிவைப்படித்தேன்.என்னைப் போலவே நீங்களும் அந்த நாளை இன்னும் மறக்காதிருக்கிறீர்கள் என்றறியும் போது உள்ளம் நிறைந்து போனது.நமது சந்திப்பு பற்றி என் கல்லூரித்தோழிகளிடம் சொன்னபோது அவர்கள் இதெல்லாம் உங்களுக்கு பொழுது போக்குக்காக செய்திருப்பீர்கள் என்றுசொல்ல நான் அவர்களிடம் சண்டையிட்டேன்.எனக்குத் தெரியும் ஏதோ வலுவான காரணங்களால்தான் நீங்கள் என்னைத் தேடி வரவில்லையென்று.இப்போது ஆண்டுகள் பல கடந்து விட்டன.நானும் ஒரு பொறுப்பான குடும்பத்தலைவியாய்,அன்பான கணவன்,ஆதரவான குழந்தைகள்,என்று மகிழ்ச்சியாய் வாழ்கிறேன்.நீங்களும் அதே போல் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பது நிச்சயம்.அடுத்த இடுகையில் உங்கள் மகிழ்ச்சியான குடும்பம் பற்றி எழுதுங்களேன்.

உங்கள் அன்புள்ள

ராதா விச்வனாதன்

2) கடவுள் said:

இந்தப் பின்னூட்டம் ராதாகிருஷ்ணன்,ராதா இவர்களுக்குத் தெரியாது.மற்றவர்களுக்கு மட்டுமே தெரியும் .

ராதா பொய் சொல்கிறாள்.அவள் மகிழ்ச்சியாக இல்லை.அன்பில்லாத முரட்டுக் கணவன்,அடங்காத பிள்ளைகள்.அவள் வாழ்க்கையே நரகம்தான். ராதாகிருஷ்ணன் எழுதுவான்,தன் சந்தோஷமான வாழ்க்கை பற்றி. அதுவும் பொய்தான்.அவன் வாழ்க்கையும் சோகமயமானதுதான்.இருவரும் அடுத்தவர் மகிழ்வுக்காகப் பொய் சொல்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்க்கை சொர்க்கமாக இருந்திருக்கும்.ஆனால் நான் அப்படி(விதி) எழுதவில்லையே.

[(பி.கு) மேலே கண்ட பின்னூட்டங்கள் இடுகையின் பகுதியே தவிர உண்மையான பின்னூட்டங்கள் அல்ல.கடவுள் என்பது உண்மையான கடவுளையே குறிக்கும். let there not be any confusion.

9 கருத்துகள்:

 1. @ஆர்.கே.சதீஷ்குமார்
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நெஞ்சைத்தொட்ட ஒரு காதல்
  க(வி)தை. அல்ல அல்ல. சொல்லவேண்டியதை உடனே சொல்லத்தயங்கிதால்,அநேகருக்கு ஏற்படும் அனுபவம். காதலித்து,'இலவு காத்த கிளி' போல் காத்திருந்தவனின் உணர்வுகளை நன்றாக படம் பிடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. இள வயதில் எத்தனயோ பெண்களைப் பார்க்கிறோம்.ஆனால்,ஏதோ ஒரு பெண் மட்டுமே மனதைப் பாதித்து விடுகிறாள். ஆண்டுகள் பலவானாலும் அந்த பாதிப்பு நீங்குவதில்லை.
  வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி,நடனசபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 4. நல்லபதிவு. நானும் இரயிலில் போய்க்கொண்டுதான் இருக்கிறேன்,என்ன பயன்.ஒன்றும் மாட்டவில்லையே.

  பதிலளிநீக்கு
 5. அதெல்லாம் சிலருக்குத்தான் அமையும்,இனியவன்.ஆனால் இந்தக் காதல் நிறைவேறாக் காதலாகி விட்டதே?
  நன்றி இனியவன்.

  பதிலளிநீக்கு
 6. அதெல்லாம் சிலருக்குத்தான் அமையும்,இனியவன்.ஆனால் இந்தக் காதல் நிறைவேறாக் காதலாகி விட்டதே?
  நன்றி இனியவன்.

  பதிலளிநீக்கு
 7. நாள் முழுக்கப் பாதித்த பதிவு சார். சொன்ன கதை அருமை; சொல்லாத கதை அதை விட.

  பதிலளிநீக்கு
 8. நெஞ்சை விட்டகலா சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, உள்ளுணர்வுகளும் கூடவே போய்ச் சேருகின்றன!
  நன்றி அப்பாதுரை அவர்களே!

  பதிலளிநீக்கு