தொடரும் தோழர்கள்

திங்கள், டிசம்பர் 20, 2010

பரல்கள்

நிதி நிறைந்த மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு. காக்கும் தெய்வத்தின் அருளால்,’அறிவும்’,’கலை’’ யும் நிறைந்த தமிழ்நாட்டில், ’கருணை’யும்,’தயை’யும்,’உதய’மாகிச் செழிக்கின்றன.
வாழ்க தமிழ்நாடு.
--*-*-*-*-*-*-*-*-*-*-*
’அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்’.இது சிலப்பதிகார நீதி.
இதில் சொன்ன பிழைப்பு,பிழை செய்தல் என்பது-பாண்டியனின் நீதி போல.
ஆனால் இன்றோ அரசியலையே தங்கள் பிழைப்பாக்கிக் கொண்டு பிழைக்கு மேல் பிழை செய்து வருவோர்க்கு எந்த அறம் கூற்றாகப் போகிறது?
-*-*-*-*-*-*-*-*-*-*-*
நெல்லைப் பக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னைக்கு வந்தார்.பேருந்தில் பயணம் செய்யும்போது சீட்டு வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தார்.நடத்துனர்,சில்லறை இல்லை,அப்புறம் தருகிறேன் என்று சொல்ல,நெல்லைக்காரர்,”பையக் கொடுங்க”.என்று சொல்லியிருக்கிறார்.,”ஏய்யா,நாந்தான் தரேன் என்று சொன்னேனே,உன்னோட சில்லறைக் காசுக்கு என் பையையே கேக்குரியே” என்று சத்தம் போட,பயணி மிக சிரமப்பட்டு ’பைய’ என்பதை விளக்கினார்.
பைய என்பது ஒரு தூய தமிழ்ச் சொல்.
”பஞ்சு கொண்டு ஒற்றினும் பைய,பைய என
அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”
என்று கண்ணகியின் மென்மையான பாதங்கள் பற்றி சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது.
ஆனால் இப்போது இத்தகைய சொற்களை நமது பேச்சிலே உபயோகித்தால்,--நாம் பைத்தியக்காரர்கள்தான்.
-*-*-*-*-*-*-*-*-*-*
கவுஜ
-------

சின்னக் கல்லெடுத்து குளத்தின் நடுவெறிந்தேன்
கல் பட்ட இடம் சுற்றி வட்டங்கள்,வட்டங்கள்
சின்னச் சொல்லெடுத்து அவள் மீது நான் எறிந்தேன்
சொல் பட்ட நெஞ்சத்தில் வாட்டங்கள், வாட்டங்கள்
வட்டங்கள் போய் விடலாம்;வாட்டங்கள் போய் விடுமோ?

-*-*-*-*-*-*-*-*-*-*-*-
எதையாவது எழுதி ஒரு பதிவு போடுவது என்பது இதுதான்!

5 கருத்துகள்:

 1. பைய என்ற சொல்வழக்கு நாகர்கோயிலான எங்கள் ஊரிலும் உள்ளது.

  பதிலளிநீக்கு
 2. இனியவன் அவர்களே
  நெல்லை மற்றும் குமரி மாவட்டம் என்று போட்டிருக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் மாவட்டப் பேச்சு மொழி எனக்கும் கொஞ்சம் தெரியும்.எழுபதுகளின் பின் பாதியில் சில மாதங்கள் அங்கு இருந்திருக்கிறேன்(மொளகுமூடு தெரியுமா?) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. //எதையாவது எழுதி ஒரு பதிவு போடுவது என்பது இதுதான்!//
  என பதிவிட்டிருக்கிறீர்கள்.

  அரசியல், மொழி,புதுக்கவிதை(?) எனக்கலக்கியிருக்கிறீர்கள். தொடரட்டும் இந்த பஞ்சாமிர்தம்.

  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலசொல்லியிருக்கிறீர்கள்.
  புரியவேண்டியவர்களுக்கு
  புரியுமா என்பது தெரியவில்லை.

  தூய தமிழ்ச் சொல் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.
  மலையாளத்தை கேட்டுப்பாருங்கள். அதில் அநேக சொற்கள் தூய தமிழ் சொற்கள்தான்.(உ.ம்) அம்பலம்,
  நோக்குதல், அங்காடி,தொழுதல் ஊண்,உறக்கம் போன்றவை.

  பதிலளிநீக்கு
 4. ஆமாம் ஐயா முளகுமூடு சக்கை(பலாப்பழம்) ரொம்ப famous ஆச்சே.

  பதிலளிநீக்கு
 5. @வே.நடனசபாபதி
  //தொடரட்டும் இந்த பஞ்சாமிர்தம்//
  முயற்சி செய்கிறேன்.

  மலையாளத்தை கேட்டுப்பாருங்கள். அதில் அநேக சொற்கள் தூய தமிழ் சொற்கள்தான்.(உ.ம்) அம்பலம்,
  நோக்குதல், அங்காடி,தொழுதல் ஊண்,உறக்கம் போன்றவை.
  குமரி மாவட்டத் தமிழிலும்.(சரிதானா இனியவன்?)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  @இனியவன்
  சரிதான்.முளகுமூடு வரிக்கைச் சக்கை(கூழாஞ்சக்கை அல்ல) ரொம்ப பிரசித்தம்தான்.
  நன்றி

  பதிலளிநீக்கு