தொடரும் தோழர்கள்

புதன், டிசம்பர் 15, 2010

மார்கழிப் பொங்கல்!

நாளை மார்கழி மாதம் பிறக்கிறது.தட்சிணாயத்தின் கடைசி மாதம்.மாதங்களில் நான் மார்கழி(மாஸானாம் மார்கசீர்ஷ:) என்று கீதையில் கண்ணன் சொல்கிறான்.நாளை முதல் கோவில்கள் அதிகாலையில் களை கட்டி விடும்.தனுர்மாத பூசைகள் ஆராதனைகள் நடைபெறும். திருப்பாவை,திருவெம்பாவை ஒலி எங்கும் நிறைந்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாலை குளிருக்கு இதமாகச் சுடசுடப் பொங்கல் கிடைக்கும்!

எங்கள் குடியிருப்பின் நுழை வாயிலிலேயே ஒரு பிள்ளையார் கோவில் அமைத்திருக்கிறோம்.
ஒவ்வொரு கோவிலிலும் பிள்ளயாருக்கு ஒரு பெயர் உண்டல்லவா?எங்கள் குடியிருப்புப் பிள்ளையார் “லட்சுமி கணபதி” என்றழைக்கப் படுகிறார்.உண்மையிலேயே குடியிருப்பு வாசிகளுக்கு,லட்சுமி கடாட்சத்தை நல்கி வருபவர்.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தினம் அதிகாலை எங்கள் பிள்ளையாருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

மார்கழி பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே காலனி அறிவிப்புப் பலகையில் அறிவிப்பு செய்யப்படும்.தினமும் நைவேத்தியப் ப்ரசாதம் செய்பவர்கள்,பெயர்களைப் பதிவு செய்து கொள்வர்.மாதம் முழுவதும், காலையில் சர்க்கரைப் பொங்கல்,வெண்பொங்கல்,கேசரி,சுண்டல் என்று
தினம் ஒரு பிரசாதம் கிடைக்கும்.(சர்க்கரைப் பொங்கலில் இனிப்புக் கூடும்,குறையும்;வெண்பொங்கலில் உப்புக் கூடும் குறையும் –அதெல்லாம் அவரவர் திறமையைப் பொறுத்தது!,பக்தியைப் பொறுத்ததல்ல!)

இந்த ஆண்டும் பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டு ,நான்கு நாட்களுக்குப் பதிவாகிவிட்டது.பொங்கலுக்காகக் காத்திருக்கும்
இவ்வேளையில்,(!),திருமந்திரத்தின் பாயிரப்பாடலில் பிள்ளையார் பற்றிச் சொல்லப் பட்டிருப்பதை பார்ப்போமா?
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”

பொருள்:ஐந்து கரங்களையுடையவரும்,யானை முகத்தை யுடையவரும், இளம்பிறைச்சந்திரனையொத்த ஒற்றைத் தந்தத்தைஉடையவரும்,சிவனுடைய குமாரரும்,ஞானச்சிகரமாக விளங்குபவரும் ஆகிய விநாயக் கடவுளது திருவடிகளைச் சித்தத்துள் வைத்து வணங்குகிறேன்.
இப்பாடலின் விளக்கத்தை நாளை,மார்கழி முதல் நாள், பொங்கல் சாப்பிட்டு விட்டுப் பிறகு பார்ப்போம்!!

8 கருத்துகள்:

 1. அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி விட்டு, பாசுரங்கள் பாடுவதில் இருக்கும் சுகமே தனி

  பதிலளிநீக்கு
 2. @LK
  உண்மை.என் வழக்கமான பூஜை(ருத்ரம்,சமகம்),ஸ்லோகங்களுடன்இந்த ஒரு மாதம் திருப்பாவை, திருவெம்பாவையும் சேர்த்துக் கொள்வேன்.
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நகைச்சுவையோடு வாய்ச்சுவை பற்றியும் செவிக்கு நல்ல பாடலும்...அருமையாக.

  பதிலளிநீக்கு
 4. @ பயணமும் எண்ணங்களும்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. /சர்க்கரைப் பொங்கலில் இனிப்புக் கூடும்,குறையும்;வெண்பொங்கலில் உப்புக் கூடும் குறையும் –அதெல்லாம் அவரவர் திறமையைப் பொறுத்தது!,பக்தியைப் பொறுத்ததல்ல!/
  நன்றாக சொன்னீர்கள்! இந்த மார்கழி முடியும் வரை உங்களது பதிவு 'பிரசாதம்' தொடர வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. //இந்த மார்கழி முடியும் வரை உங்களது பதிவு 'பிரசாதம்' தொடர வேண்டுகிறேன்.//
  எங்கள் காலனி லட்சுமி கணபதியின் அருளால்,அவ்வாறே நடக்கப் பிரார்த்திக்கிறேன்.
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,நடனசபாபதி அவர்களே.

  பதிலளிநீக்கு
 7. நேற்று ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன் ஆனால் வரவில்லை எடிட் பண்ணீட்டீங்களா ஐயா !.

  பதிலளிநீக்கு
 8. இனியவன்,
  உங்கள் பின்னூட்டம் அடுத்த பதிவில் வெளியாகி அதற்குப் பதிலும் அளித்துள்ளேன்{மார்கழிப் பொங்கல்-2(பிள்ளையார்)}.வேறு வெளியிடப்படாத எந்தப் பின்னூட்டமும் இல்லையே!உங்களைப் போன்ற அன்பர்களின் பின்னூட்டத்துக்காகக் காத்திருப்பவனாயிற்றே நான்!

  பதிலளிநீக்கு