தொடரும் தோழர்கள்

இல்லறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இல்லறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 05, 2016

இல்லறமே நல்லறம்!



அழகியும் துறவியும்-நிறைவு

துறவியின் உள் உணர்வுகளை அறிய இயலாதவள் அழகி. சக்தியின் மாயப் படைப்பான அவள், துறவிக்கு அள்ளி அள்ளித்தரவே படைக்கப்பட்டவள். அவரது அந்தரங்க உணர்வுகளை மட்டுமன்றி, மற்ற சாதாரண உணர்வுகளைக் கூட அறிய இயலாதவள்.

துறவி அவள் தந்த இன்பத்தை ஆறு மாதத்திலேயே கரை கண்டுவிட்டார. வாழ்க்கையின் மற்ற உணர்வுகள் அவரை துரத்த ஆரம்பித்தன. குறிப்பாக தூக்கமின்மை அவரை துக்கத்தில் ஆழ்த்தியது. அழகியை ஒரு தொல்லையாக எண்ண ஆரம்பித்தார். அவரது வாழ்க்கையில் ஆசை, மோகம் இரண்டுமே ஆறு மாதங்களில் முற்றுப் பெற்றன. இப்போது சோகராகங்கள் தான் பாடுகிறார்.

என்ன ஆனாலும் பரவாயில்லை, தூங்கும் போது அழகியைத் தீண்டி மூளை வெடித்துச் சிதறி சாகலாம் என்று கூட துணிந்தார்.  ஆனால் ஞானிக்குக் கொடுத்த வாக்கை எண்ணி கட்டுப்பட்டார். அழகியின் தூக்கம் அதிகரித்தது. 22 மணி நேரம் தூங்க ஆரம்பித்தாள். அவளை விட்டு ஓடி விடலாம் என்றுகூட முயற்சி செய்தார். 20 மணி நேரம்  ஆனவுடன் அவளைக் காண விரைந்தோடி வருவார்.

கொஞ்சம் கொஞ்சமாக தூக்கம் அதிகமாகி 24 மணி நேரமும் தூங்கும் அழகியானாள். “தூங்கும் அழகி, தூங்காத துறவி”

துறவி தன் பொறுமையை இழந்தார். ஞான குருவை நினைத்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கினார். காமம் மறைந்தது. பல உயரிய எண்ணங்கள் மேலோங்கின.

உடன் தூங்கி உடன் எழுவது தான் தாம்பத்யம். பின் தூங்கி முன் எழுவது தான் மங்கையர்க்கு அழகு என்பதெல்லாம் தெளிவாகியாது. அவன் உணர்வுகளை அவளும் அறிந்து அவைகளை பரிமாறிக் கொள்ளுவதே உண்மையான, சிறப்பான இல்லறம் என்பதை பரிபூரணமாக உணர்ந்தார் இல்லறத்தில் பெண்கள் பங்கு ஒப்புயர்வற்றது என நன்கு அறிந்தார்.

மாலையுடன் வந்த அழகியை அணைத்து காமக்களியாட்டங்களில் ஈடுபட்டதில் உள்ள வெறுமையை முழுவதுமாக வெறுத்தார். காலங் “கடந்த மெய் உணர்தல்” இருப்பினும் சஞ்சலத்திலிருந்து மீண்டு அமைதி அடைந்தார்.

மெய்யறிந்து அமைதியான சில நாட்களுக்குப் பிறகு, தெளிவு பெற்ற துறவியின், முன் ஞான நட்சத்திரமாக ஒளிரும் அவரது குரு தோன்றினார். 


“தூக்கத்தை இச்சைக்காகத் துறந்த அஞ்ஞான அற்பப் பதரே! அஞ்ஞானத்தை முற்றிலும் துற. ரீதியான இல்லற வாழ்க்கை வாழ முற்படு. காமம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான். அதற்கு அளிக்க வேண்டிய அந்தஸ்தை அளித்து மேற்கொள்ளும் அன்யோன்யமான இல்லறமே இங்கிதம். இவைகளை மனத்திற்கொண்டு வேண்டும் வரம் கேள்” என்றார்.

“சுகதுக்கங்கள் அடங்கிய எளிமையான, அமைதியான இல்வாழ்க்கையை ப்ராப்தித்து எங்களை ஆசி புரியுங்கள்” என்று மன்றாடினார் சிஷ்யர்.

“ததாஸ்து” என்றருளி மறைந்தார் ஞானகுரு.

அழகி துயில் நீக்கம் பெற்றாள். படைப்பில் இருந்த மாயம் நீங்கி மானுடப் பெண் ஆனாள். துறவியின் துயிலும் மீண்டது.

துறவியும் அவரது இல்லத்தரசியும் குருவை நமஸ்கரித்து ஆசி பெற்றனர்.

அவர்கள் படைக்கப்போகும் இல்லற இலக்கணம் ஒரு தொல்காப்பியம்.

-பார்த்தசாரதி

திங்கள், ஜனவரி 04, 2016

அழகியும், துறவியும்!



முன்னமொரு காலத்தில் அடர்ந்த கானகத்தில் ஞானி ஒருவர் நதிக்கரையில் பர்ணசாலை அமைத்து அமைதியாக தியானம் செய்து வந்தார். இளம் வயதிலேயே இயற்கை இடர் பாடுகளால் தர்ம பத்தினியை இழந்தவர்.


அவர் தன்னிடம் குருகுல வாசம் செய்ய விரும்பும் மாணக்கர்களை கடுமையான சோதனைக் குள்ளாக்கித்தான் சிஷ்யர்களாக சேர்த்துக்கொள்வார். ஐந்து வருடங்களில் ஒரே ஒரு மாணவன் தான் சோதனைகளை மீறி சிஷ்யனானான் .புத்திசாலி, திறமைசாலி முன்னமே வேத, உபநிஷத் துக்களை கரைத்துக் குடித்தவன் மூன்று ஆண்டுகள் குருகுல வாசத்திற்குப் பிறகு துறவு பூண்டு குருவிற்கு நிரந்தரமாக பணிவிடை செய்ய விரும்பினான். இல்லற சுகத்தை அனுபவிக்காமல் துறவு பூணுவதை குரு அனுமதிக்கவில்லை. இருந்தாலும் அவன் குருவின் பணிவிடையிலேயே இரண்டு ஆண்டுகள் கழித்தான்.


குரு நூறு வயது வாழ்ந்து சமாதி அடைந்த பின் தன்னிச்சையாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டான். இல்லறம் மேற்கொள்லாமல் துறவறம் நாடக்கூடாது என்ற குருவின் ஆணையை சிஷ்யன் வேதமாக மதித்தான்.ஆனால் ஒரு துறவியைப் போலத்தான் வாழ்ந்து வந்தான்.



அமர்நாத் யாத்திரையை மேற்கொண்டு, பனிக்குகை அருகில் ஒடிக்கொண்டிருந்த லிட்டர் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த  போது ஒர் அழகி மான்போல் துள்ளி ஒடினாள். முழு நிலவை மேகம் மூடியது போல உணர்ந்தார். அமர்நாத் குளிரிலும் அவருக்கு வியர்த்து விருவிருத்தது. இதுநாள் வரை அறத்துப்பால், பொருட் பாலில் திளைத்தவருக்கு மூன்றாவது பாலின் மீது நாட்டம் வந்தது.

அழகி மின்னல் போல் தோன்றி மறைந்தது ஒரு மாயைதான்.

துறவி காதல் வசப்பட்டார். அழகியை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்ற இச்சை விஸ்வரூபம் எடுத்தது.ஆறு மாதங்கள் கடும் தவம் புரிந்தார் . அவரது சிரத்தையான தவத்தை மெச்சி, ‘அமர்நாத்தின் போலேநாத் சங்கர்” துறவியின் குருவை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார்.

“குருவே வந்தனம்.  அந்த அழகி என்னவள் ஆனால் தான் எனக்கு இல்லறம்.

“நன்று, அவளை உனதாக்கிக் கொள்ள உனக்கு அத்யாவசியமான ஏதாவது ஒன்றை நீ இழக்கவேண்டியிருக்கும்”.

எதை வேண்டுமானாலும் இழக்கத்தயார். அவள் தான் என் உயிர் மூச்சு”

“உணவு, உறக்கம் இவைகளுள் ஏதாவது ஒன்றை நிரந்தரமாக இழந்தால் அவள் உனக்கே”

உணவு செல்வதில்லை. அவளைப் பார்த்த நாழிகையிலிருந்து உறக்கம் கொள்வதில்லை. சதாசர்வ காலமும் அவளுடன் இருப்பதே என் வாழ்வின் லட்சியம். உறக்கத்தை துறக்கத் தயார்”.

“அவளை பண்புடன் நடத்த வேண்டும்” அவள் உறங்கும் போது நீ அவளை தீண்டினால் உன் மூளை  வெடித்துச் சிதறும். நீ கோரமாக இறப்பாய் (மடிவாய்). ஒரு வினாடி அவகாசம் தருகிறேன்,  நீ யோசித்து முடிவெடு.

எனக்கு எந்த அவகாசமும் வேண்டாம். இந்த வினாடியே அவள் வேண்டும்.

“நன்று இல்லறமே நல்லறம் என்ற உண்மையை நிலை நாட்டு” என்று கூறி ஞானி மறைந்தார்.

நொடிப் பொழுதில் அழகி மாலையுடன் தோன்றினாள்.

அந்த அழகியைக் கண்டதும் அகமகிழ்ந்து துறவறம் துறந்து இல்லறம் நாடினார்.

“இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும் அதை இருவர்க்கும் பொதுவாக்கலாம். அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்” என்று துறவி மொழிய இருவரும் ஒன்றாயினர்.
கானக விலங்குகளெல்லாம் துள்ளிக் குதித்தன. மான்கள் மருண்டன. முயல்கள் வேகமாக ஒடின.  அவள் இசைத்தால் குயில்கள் மருண்டன. ஆடினால் மயில்கள் வியந்தன. காமத்துப்பால் சிந்தாமல் சிதறாமல் பருகினார்.


அந்தி மந்தாரைப் பொழுதை துறவி(?) வெறுத்தார். அழகி கண் உறங்க ஆரம்பித்தால் பரிதவிப்பார்.

பர்ண சாலையை சுத்தம் செய்து, ஆடைகளை துப்புரவாக துவைத்து, சுவையாக ஆகாரங்கள் சமைத்து வாசல் தெளித்து, கோலம் போட்டு, அவளது திருப்பள்ளி எழுச்சிக்காக தவம் கிடப்பார். அழகி அவருக்கு பாடலும் கற்பிப்பாள். இருவரும் பாடுவதை கேட்டால் தேவகானம் தோற்றது. நாரத முனிவரே மெய் மறந்து லயத்தில் வயப்படுவார்.

காலம் பறந்தது. இரவு நேரம் துறவியை வதைக்க ஆரம்பித்தது. 

-தொடரும்.

-பார்த்தசாரதி

செவ்வாய், பிப்ரவரி 03, 2015

கன்னா,செம்மை நிறக் கன்னா!



தலைப்பைப் பார்த்ததும் என்ன இந்த ஆளுக்கு இரண்டு சுழி,மூணு சுழிக் குழப்பம் போலிருக் கிறதே என்று நினைக்கி றீர்களா.?

எனக்குப் பேசும்போதோ எழுதும்போதோ நிச்சயமாக னகர,ணகரக் குழப்பம் கிடையாது.

இது கண்ணா அல்ல.

கன்னாதான்

ஃபரிதாபாத்தில் என் உதவியாளராகப் பணியாற்றிய என்.கே.கன்னாதான்.

பஞ்சாபி,சிவப்பாக இருப்பார்.உயரம் கம்மி.

பல கிளை ஆய்வுகளில் என்னுடன் உதவியாளராக வந்தவர் அவர்.மற்றொருவர் டி.ஆர்.சாவ்லா.

எங்கள் ஆய்வின் போது இவர்கள் இருவரும் எனக்கும் சேர்த்து மதிய உணவு கொண்டு வருவது என்பது ஒரு எழுதப்படாத விதியாகிவிட்டது.ஒரு பரிதாப உணர்வுதான்!

மதியம் உணவு நேரத்தில் என்னை”சேகர் சாப்!சாப்பிடலாம்” என அன்போடு அழைப்பார் கன்னா.

பல கிளை ஆய்வுகளில் எனக்கு உதவியாளராகப் பணி புரிந்திருக்கிறார்.

குர்கான் நகரில்தான் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்,

எந்தக்கிளை ஆய்வென்றாலும் அங்கிருந்து தினம் வந்து போவார்

ஒரு முறை குர்கான் கிளை ஆய்வே நாங்கள் இருவரும் மேற்கொண்டோம்.

அப்போது கோடைக்கலம்.

டெல்லியின் கோடை பற்றி உங்களுக்குத் தெரியும்.

தினமும் நான் ஃபரிதாபாத்திலிருந்து வந்து போக வேண்டும்

சனிக்கிழமை அரை நாள் வங்கி அலுவல் என்பதால் அந்த மதிய வெயிலில் ஃபரிதாபாத் திரும்புவது கடினம்.

எனவே கன்னா எனக்கு ஓர் அன்புக்கட்டளை இட்டு விட்டார்-சனிக்கிழமைகளில் மதிய உணவை அவர் வீட்டில் முடித்துக் கொண்டு ஓய்வெடுத்தபின் மாலைதான் ஃபரிதாபாத் திரும்ப வேண்டும் ஏன்று.

அது முதல் ஆய்வு முடியும் வரை சனிக்கிழமை மதிய உணவு அவர் வீட்டில்தான்.உணவுக்குப் பின் அவர் குழந்தைகளுடன்--ஒரு பெண்,இரு பையன்கள்--, உடைந்த இந்தியில் பேசிக் கொண்டி ருப்பேன்.பையன்கள் செஸ் ஆட்டத்தில் செய்த தவறுகளைத் திருத்தினேன்.மாம்பழ சீசன்.அவர் சஃபேதா மாம்பழம் வாங்கி வந்தார்.அதை வெட்டித் துண்டுகளாக்கிச் சாப்பிடுவதா அல்லது மாம்பழ ,பால் சாறு அருந்துவதா என்று..குழந்தைகளின் ஆசை மில்க்‌ஷேக்.கன்னா சொன்னார்”சேகர் சாப் நீங்கள் சொல்லுங்கள் .என்ன வேண்டும்”. குழந்தைகளைப் பார்த்து ரகசியமாகக் கண் சிமிட்டி விட்டுச் சொன்னேன் ”மில்க் ஷேக்” இதுபோல் கிட்டத்தட்ட  ஐந்தாறு வாரங்கள்,ஆய்வு முடியும் வரை.

அன்று ஞாயிற்றுக் கிழமை,ஃபரிதாபாத்தில்.வீட்டில் ஓய்வாக அமர்ந்திருந்தேன்,

ஃபரிதாபாத் கிளை நண்பர்கள் இருவர் வந்தனர்

உற்சாகமாக வரவேற்றேன்

ஆனால் அவர்கள் முகம் இறுகிப்போயிருந்தது.

சொன்னார்கள்”கன்னா இறந்து விட்டார்’

நான் அப்படியே அருகில் இருந்த சோபாவில் சாய்ந்து விட்டேன்.

மிகப்பெரிய அதிர்ச்சி.

மறுநாள் ஓர் ஆய்வில் அவர் என்னுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டியவர்

இப்போது.....குர்கான் சென்று இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரும்பினோம்.

வேறொருவர் என்னுடன் ஆய்வுப்பணியில் சேர்ந்து கொண்டார்.

சில மாதங்களில் தெரிய வந்தது கருணை அடிப்படையில் அவர் மனைவிக்கு எங்கள் வங்கியில் ,குர்கான் கிளையிலேயே வேலை கொடுக்கப்பட்டது என்று.

சில நாட்கள் கழித்து ஒரு விசாரணைக்காக குர்கான் செல்ல வேண்டி இருந்தது.

கிளையில் கன்னாவின் மனைவியைப் பார்த்து நலம் விசாரித்தேன்.

மதிய இடைவேளையின் போது அவர் என்னருகே வந்து ஒரு கவரை நீட்டினார்””இதில் 1500 ரூபாய் இருக்கிறது.என் கணவருக்கு நீங்கள் கடனாக்க கொடுத்த பணம்’

திகைத்தேன்.கன்னாவுக்கு நான் பணம் கொடுத்தது எங்கள் இருவரைத் தவிர யாருக்கும் தெரியாது என எண்ணினேன். ஆனால்,,,

என் கண்களில் கண்ணீர் பெருகியது---அந்த நல்ல மனிதரையும் அவருக்கேற்ற மனைவியையும் நினைத்து!

கன்னா!உன் குடும்பத்துக்கு எந்தக் குறையும் வராது!
 



வெள்ளி, நவம்பர் 22, 2013

உன்னதத் தாம்பத்தியத்தின் உச்சக்கட்டம்!