தொடரும் தோழர்கள்

திங்கள், மார்ச் 11, 2013

சென்னையில் ஒரு காதலன்!

இன்று சில கவிதைகளின் மீள் பதிவு.
அனைத்தும் காதல் சொல்லும் கவிதைகள்.
தனித் தனிப் பதிவாக வந்தவற்றை ஒரே பதிவாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
பிடித்திருந்தால் சொல்லுங்கள்.....பிடிக்கா விட்டாலும் சொல்லுங்கள்!
இதோ.........



வியாழன், ஜனவரி 27, 2011
சாந்தோம் கடற்கரையின்
சாயங்கால நெருக்கங்கள்
இன்னும் மறக்கவில்லை!

கபாலி கோவில் பிரகாரத்தின்
கண்பேசும் பாஷைகள்
இன்னும் மறக்கவில்லை!

புளூ டயமண்ட் குளிர் இருட்டின்
உன் உஷ்ண ஸ்பரிசங்கள்
இன்னும் மறக்கவில்லை!

எல்பின்ஸ்டன் ஜஃபார்கோவின்
உன் எச்சில் பீச்மெல்பா
இன்னும் மறக்கவில்லை!

ஆனால்,

நிச்சயமாய் மறந்தது ஒன்று உண்டு

இரக்கமே இல்லாமல் நீ எறிந்த வார்த்தைகள்
என்னை மறந்து விடுங்கள்

அதை மறந்ததனால்தான் உன்னை
இன்னும் மறக்கவில்லை,இன்னும் மறக்கவில்லை!

இன்று--
சாந்தோம் கடற்கரை மறைந்து விட்டது;
புளூ டயமண்ட் தியேட்டர் தொலைந்து விட்டது;
எல்பின்ஸ்டன் டாக்கீஸ் இடிந்து விட்டது!.
ஆனால்?
அவற்றுடன் கலந்த உன் நினைவுகள்?..

சிறு குறிப்பு:-1)சாந்தோம் கடற்கரை-சிறிய,கூட்டமில்லாத இனிய கடற்கரை.படகு மறைவுகளும் உண்டு.இன்று அங்கு ஏதோ குப்பம் வந்து விட்டது.
2)புளூ டயமண்ட் தியேட்டர்-சஃபைர்,எமரால்டுடன் சேர்ந்த மூன்றாவது தியேட்டர்.நாள் முழுவதும் படம் ஓடும்.எப்போது வேண்டுமானாலும் உள்ளே போகலாம்;எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்.இதை விட வேறென்ன வேண்டும்!
3)நியூ எல்ஃபின்ஸ்டன்- அண்ணா சாலையில் இருந்தது;ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும்.இங்கிருந்த ஜஃபார்கோ ஐஸ்க்ரீம் பார்லரில் பீச் மெல்பா அலாதி சுவை!அதுவும், ”பணிமொழிவாலெயிறு ஊறிய நீருடன்சேர்ந்தால்?!

(பி.கு.நண்பர் கக்கு மாணிக்கம் அவர்கள் சென்னை பித்தனை மாற்றி சென்னை காதலனாக்கி விட்டார்.சென்னையின் காதலனாக மட்டும் இல்லாமல் அக்காலச் சென்னையில் ஒரு காதலனாகவும் இருதிருந்தால்?இன்றில்லாமல் போய்விட்ட சில இடங்களையும் என்றுமே இல்லாத காதலியையும் இணைத்துப் பார்க்கிறது இக்கவிதை.)

வெள்ளி, பிப்ரவரி 25, 2011
காத்திருந்து காத்திருந்து உள்ளம் வாடுதடி-வழி
பார்த்திருந்து பார்த்திருந்து கன்களும் நோகுதடி.
எத்தனை நேரம்தான் நீர் அலைகளை எண்ணுவது?
எத்தனை தடவைதான் கடல் மணலைக் கிளறுவது?
சுண்டல்காரச் சிறுவனும் சுற்றிச் சுற்றி வருகின்றான்;
கிண்டலாய்க் கேட்பானோஅக்கா வரல்லையா?”
நேற்றும் நீ வரவில்லை இன்றும் வரவில்லை இன்னும்;
தேற்றுவாரின்றித் தேம்பியழுகிறதென் உள்ளம்.
அம்மா,தங்கையு டன் அனுமார் கோவில் போனாயோ?
(தண்ணித்துறை ஆஞ்சநேயர் மிகப் பிரசித்தம்-என் விளக்கம்)
சிநேகிதிகள் பலர் சூழ சினிமாவுக்குப் போனாயோ?
மாமிகள் பட்டாளத்துடன் மாம்பலம் போனாயோ ?
என்ன செய்தாயோ,என்னை மறந்து போனாய்.
உனக்காகத் தவிக்கும் உள்ளத்தை மறந்து போனாய்.
அடியே!
நாளையேனும் வந்தென்னைப்பார்-இல்லையேல் எனக்கு
நாளைகளே இல்லாமல் போய்விடும் போ!

திங்கள், பிப்ரவரி 28, 2011
இன்று நீ வந்தாய்! கண்களில் கண்ணீரோடு,

ஏன் வந்தாய் என்னை உயிரோடு கொல்வதற்கா?

நின்றாய்,தள்ளி அமர்ந்தாய்,தரை நோக்கித் தலை கவிழ்ந்தாய்,

மெல்ல வாய் திறந்தாய் இரண்டு நாட்களாய்

என்னென்னவோ நடந்துபோச்சு;பெண்பார்த்தார்கள்,

பிடிக்குதென்று சொன்னார்கள்;நிச்சயம் செய்தார்கள்.

என் மனம் யார் பார்த்தார்கள்?என் குரல் யார் கேட்டார்கள் ?

அப்பா சொல்லி விட்டார்;ஆவணியில் கல்யாணம்.

என்ன நான் செய்வேன்,அழுவதற்கும் உரிமையில்லை.

உங்கள் மடியில் முகம் புதைத்து அழுவதென்றால்

என்னுயிரே இன்றெனக்கு அதற்கும் துணிவில்லை.

ஐ ஏ எஸ் மாப்பிள்ளை அனைவருக்கும் சந்தோஷம்.

என்னைத் தவிர எல்லோரும் சிரிக்கின்றார்,

எதிர்க்கவும் வழியில்லை காதல் உரைக்கவும் துணிவில்லை,

ஒன்றும் புரியவில்லை,ஒரு வழியும் தெரியவில்லை,

ஓடிப்போய் மணந்திடவும் உள்ளம் ஒப்பவில்லை,

மன்னியுங்கள் என்னை மகாபாவியாகிவிட்டேன்,

உங்களைப் பிரிந்து உயிரின்றிப் போகின்றேன்,

என்னை மறந்து விடுங்கள்என்றுரைத்துப் போய்விட்டாய்.

உனக்குரிமையில்லாத ஒரு விஷயம் சொல்லிச்சென்றாய்

"உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி?"

என் நெஞ்சில் ,நெஞ்சத்துடிப்பில்,உயிர் மூச்சில் கலந்ததனால்
இன்னுயிரே உன்னை நான் இன்னும் மறக்கவில்லை!

சந்தனக்காடுகள் பற்றியெரிகையில் சந்தனமே மணக்கும்
என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்(……)என்றே ஒலிக்கும்
(கடைசி இரண்டு வரிகள் நன்றி சேவற்கொடியோன்)

(காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களே! (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்!)


வெள்ளி, பிப்ரவரி 17, 2012
காதலி விட்டுச் சென்ற செல்வங்கள்!
என்னிடம் இருக்கும் செல்வங்கள் ஏராளம்
அடைந்தவை சில,அபகரித்தவை சில
அனைத்துமே விலை மதிப்பற்றவை
பார்த்தால் நீங்கள் சிரிப்பீர்கள்
அதன் மதிப்புத் தெரியாத காரணத்தால்
பார்க்கலாம் வாருங்கள்.

இதோ இப்பெட்டியில் பட்டுத்துணியில்
படுத்திருக்கும் இந்த ஸ்பூன்.
ஐஸ்க்ரீம் பார்லரில் ஆட்டையைப் போட்டது.
ஐஸ்க்ரீமைத் துளிதுளியாய் அவளெடுத்து
செம்பவள இதழ் திறந்து உண்ணும்போது
அவள் உதட்டில் உரசும் பாக்கியம் பெற்றது.
இன்றைக்கும் அவள் இதழின் இனிமை
இதை விட்டு நீங்கவில்லை!

இந்த டம்ப்ளரில் எழுதியிருக்கிறது
சாந்தி விஹாரில்  திருடப்பட்டதென்று
சாயம் பூசாமலே சிவந்திருக்கும்
அவள் உதடுகள் தழுவிய சுகம் கண்டவை.
வேறு யார் உதடும் இதில் படக்கூடாது.
எனவே நான் எடுத்து வந்து விட்டேன்.

அந்தக் கசங்கிய டிஷ்யூக் காகிதம்!
சாப்பிட்ட பின் நளினமாய் அவள்
இதழொற்றிக்  கசக்கியெறிந்த  காகிதம்
சட்டைப் பையில் வைத்து எடுத்து வரும்போது
அவள் இதழ் என் மார்பில் பதிவதாய் உணர்ந்த நாள்.

சாந்தோம் சந்திப்பில் ஒரு நாள்
கன்னத்தில் ஏதோ கறையென்று நான் சொல்ல
அவள் துடைத்தும் போகாத காரணத்தால்
நான் துடைக்க உதவிய  இக்கைக்குட்டை!
பட்டுக் கன்னத்தின் ஸ்பரிச சுகம் பெற்றதன்றோ!

அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்த மலர்
அவள் கைகள் அளைந்த கடல் மணல்
அவள் பொறுக்கிப் போட்ட சிப்பி
அவள் பல் பதிந்த என் பேனா

பிரியும் முன் ஒரு நிமிடம் என் நெஞ்சில் சாய்ந்து
கண்ணீர் உதிர்த்தபோது கரைந்த மையால்
கறையான என் சட்டை 
இவையெல்லாமே என் சொத்துக்கள்!

என்னுடன் அவள் இல்லை இன்று
ஆனால் அவள் நினைவுகளும்
அவள் காதலின் குறியீடாய் இவையும்
என்றுமே இருக்கும் என்னுடன்!


வியாழன், ஜூன் 21, 2012

இதயத்தின் ரணம்!


                                           
என்னவென்று தெரியவில்லை சகி
என் மனத்தின் ரணம்  திறந்துகொண்டது
இன்று.

உன் மடியில் சிறிது தலை வைத்துப் படுக்க
உன் விழிக்கடலில் மூழ்கி என்னை இழக்க
என் தோளில்  உன்னைச் சாய்த்தணைத்து
உன் கூந்தல்  தடவி ,உச்சி முகர்ந்து முத்தமிட
என்ன இந்த ஆசைகள்
இத்தனை ஆண்டுக்குப் பின்?

காதலுக்குச் சாட்சியான இடங்கள் பல இன்றில்லை
காதல் மட்டும் சாகாமல் கனன்று எரிகிறதே.

நீயின்றி நானில்லை என்றே நாமுரைத்தோம்
பொய்யாக்கி விட்டு இருவரும் இன்னும் இருக்கிறோம்!
அங்கும் இங்குமாய்!

உன் காதல் தோற்றதா என நண்பன் கேட்டான்
உண்மைக் காதலுக்குத் தோல்வியும் உண்டோ?
காதலித்துப் பிரிந்த பின் காலம் பல கடந்த பின்னும் ,
காதலின் நினைவிலேயே வாழ்கின்ற நம்
காதல் வென்றதன்றோ!

என் நாடி நரம்புகளில் ரத்த நாளங்களில்
என் உயிரோடு உயிராய்க் கலந்தவளே
என்னை நீ விட்டு விட்டுப் போனாலும்
என் நெஞ்சை விட்டுப் போகவில்லையே
உன் நினைவு?

 இக்கவிதைகளின் தொடர்ச்சியாகத் தொடர்புடைய ஒரு சிறுகதைஅடுத்த பதிவாக!


23 கருத்துகள்:

  1. //உண்மைக் காதலுக்குத் தோல்வியும் உண்டோ?//
    இல்லைதான்.

    அந்த முகம் தெரியா காதலனுக்கு அனுதாபங்கள். நினைத்தது நடக்காததற்கு.
    வாழ்த்துகள்! அருமையான கவிதைகள் பிறக்க காரணமாக இருந்ததற்கு.

    சிறுகதைக்கு காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. என் நாடி நரம்புகளில் ரத்த நாளங்களில்
    என் உயிரோடு உயிராய்க் கலந்தவளே - வார்த்தைகளில் இளமை தாண்டவமாடுகிறது..
    அருமை..

    பதிலளிநீக்கு
  3. நீண்ட கவிதை! மூச்சு வாங்கியது படிக்க!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா இன்னும் நீங்கள் அதையெல்லாம் மறக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  5. சென்னையின் காதல் கவிதைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  6. அருமை... சில நினைவுகளை மறக்கவே முடியாது... சிறுகதையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  7. கவிதைகள் அனைத்துமே மிக அருமை.

    பதிலளிநீக்கு
  8. என்னிடம் இருக்கும் செல்வங்கள் ஏராளம்
    அடைந்தவை சில,அபகரித்தவை சில
    அனைத்துமே விலை மதிப்பற்றவை
    பார்த்தால் நீங்கள் சிரிப்பீர்கள்...
    சிரிக்க சிந்திக்கவும் வைத்த வரிகள்.

    பதிலளிநீக்கு
  9. நல்லா இருக்குங்க. நாளைகள் இல்லாமல் போகும் ஆதங்கம் நிச்சயமாகப் புரிகிறது.
    ப்லூடைமன்ட் இப்போ இல்லையா? எத்தனை நினைவுகள்! ஆ... வலிக்குதே.
    வசந்த மாளிகை ஸ்டைல் கவிதை.. வித்தியாசம்.

    கதை படிக்கும் ஆவல் வந்துவிட்டது. சீட் போட்டாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இடத்தில் கட்டடமே இல்லை!ஆனால் நம் நினைவுகளில் வாழும் இடம்தான் சஃபயர் காம்ப்லெக்ஸ்!
      நன்றி அப்பாதுரை

      நீக்கு
  10. Ada... Arumai..... Padiththu mudiththadhum manadhukkul oru pattam poochi parakkiradhe? Pls visit my site. http://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு