இன்று புலவர் சா.இராமாநுசம் அவர்களின் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நடை பெற்றது.படத்தில் இருப்பது அப்புத்தகமே.
மாலை 3.30 க்கு வீட்டிலிருந்து புறப்பட்டு,23-சி பேருந்தைப் பிடித்து,ஆயிரம் விளக்கு நிறுத்தத்தில் இறங்கி,சிறிது நடைக்குப் பின்,நூலகத்தை அடைந்தேன்.விழா முதல் மாடியில் என்றறிந்து அங்கு சென்றேன்.அரங்கிற்கு வெளியிலேயே நின்று கொண்டி ருந்த ஒரு பெண்மணி மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். அருகில் புலவர் ஐயா நின்று கொண்டிருந்தார்.அவரிடம் கை குலுக்கி நான் யார் எனத் தெரிகிறதா எனக் கேட்டேன்.அவர் பார்த்தது போல் தோன்றுகிறது என்று சொன்னதும்,வரவேற்ற பெண்மணி ”சென்னைபித்தன்’என்று சொல்லி விட்டு,உங்கள் வலைப்பூவில் உள்ள புகைப்படத்தில் இது போலவே கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறீர்களே”என்றும் சொன்னார் (தமிழ்வாணன் போல் எனக்கும் இந்தக்கண்ணாடி ஒரு அடையாளம் ஆகி விடும் போலிருக்கிறது!)
அங்கு ஒரு மேசைமீது காகிதத்தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டி ஒரு தட்டு வழங்கப்பட்டது!(இனிப்பு,சமோசா). பின்னர் தேநீர்.
புலவர் ஐயா “கணேஷ் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.
அரங்கினுள் நுழைந்தேன்.இதமான குளுமை.வசதியான இருக்கைகள்.பதிவர் கணேஷைத் தேடிக்கண்டு பிடித்தேன். அவர் அருகில் அமர்ந்தேன். பேசிக்கொண்டிருந்தோம்.பதிவர் ஸ்ரவாணி அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்.சிறிது நேரத்தில் அவரும் கணவருடன் வந்து சேர்ந்தார்.
பதிவர் ஸ்ரவாணி,அவர் கணவர்,’ மின்னல் வரிகள்’ கணேஷ்.
விழா தொடங்கியது.பலர் புலவர் ஐயாவுக்குப் பொன்னா டைகள் அணிவித்தனர்.ஆனால் ஒரு சொல்லாணா மகிழ்ச்சி அளித்த நெகிழ்வான தருணம் பதிவர்கள் மூவரையும் பெயர் சொல்லி மேடைக்கு அழைத்து புலவர் ஐயா அவர்கள் எங்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமை அளித்ததுதான்.ஐயா,உங்கள் அளவற்ற அன்பில் நெகிழ்ந்து. போனோம்.தமிழ் அறிஞர்கள் நிறைந்த அரங்கில் ஒரு அங்கீகாரம்!ஐயா எனக்கு இது பற்றிச் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை!
மேடையில் புலவர் ஐயாவுடன் மற்றத் தமிழ் அறிஞர்கள்
புத்த்க வெளியீட்டுக்குப் பின் சிலர் பாராட்டிப் ,பேசத் தொடங்கினர்.ஆனால்,எங்கள் மூவருக்கும் தவிர்க்க இயலாத வேலைகள் இருந்த காரணத்தால் விழா முடியுமுன்பே ஒவ்வொருவராய் விடை பெற்றோம்.
ஐயா கேட்டுக்கொண்டபடி சில வார்த்தைகள் வாழ்த்திப் பேசாமல் வந்தது எனக்கு வருத்தமே.ஆனால் என் நிலைமை அப்படி..என்ன செய்ய?
பதிவர்கள் பலர் வருவர் என எதிர்பார்த்தேன்,ஆனால் நாங்கள் மூவர் மட்டுமே.புலவர் ஐயாவும் எதிர்பார்த்திருந்தார்.
புத்தகம் மிக நேர்த்தியாக அச்சிடப் பட்டிருக்கிறது.கவர்ச்சியான அட்டை.வலையில் வந்த 102 கவிதைகள்,7 தலைப்புகளில். ரூ.60 விலையுள்ள புத்தகம் அரங்கில் ரூ.50 க்குத் தரப்பட்டது.
நிதானமாக அமர்ந்து எல்லாக் கவிதைகளையும் படிக்க வேண்டும்.
புலவர் ஐயாவுக்கு வயது 80 க்கு மேல் என அறிகிறேன். இப்போதும் சலிப்பின்றித் தமிழ்த் தொண்டு செய்து வரும் அவர்கள்,பல்லாண்டு உடல் நலத்துடன் சிறப்பாக வாழ்ந்து, மேலும்பல நூல்கள் வெளியிட இறைவன் அருள் புரியட்டும்.
டிஸ்கி:இன்று தெரிந்து கொண்டது-கவிதை என்பது தமிழல்ல-’பா ’என்பதே சரியான சொல்லாகும்(மேடையில் கேட்டது)


