தொடரும் தோழர்கள்

செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

மனிதன் கடித்து இறந்த பாம்பு!


எது செய்தியாகிறது?

நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தியாகாது.

மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி!

அது போலவே,பாம்பு மனிதனைக் கடித்தால் செய்தியாகாது.

மனிதன் பாம்பைக் கடித்தால் அது செய்தி.

அதுவே இன்றைய   சிறப்புச் செய்தி.

நேபாளத்தில் பாம்புகள் அதிகமாம்.

காத்மாண்டு வில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மியா என்ற விவசாயியை நல்ல பாம்பொன்று கடித்து விட்டது.

கடித்து விட்டு ஓடிய பாம்பைப் பிடித்து அவர் கடித்தே கொன்று விட்டார்.

“அது என்னைக் கடித்ததும் எனக்கு அதிகக் கோபம் வந்து விட்டது.அதைத் துரத்திச் சென்று பிடித்துப் பற்களால் கடித்தே கொன்று விட்டேன்.ஒரு தடியால் அடித்துக் கூடக் கொன்றி ருக்கலாம்.ஆனால் அது என்னைக் கடித்ததால், பழிவாங்க நான் அதைக் கடித்தே கொன்றேன்” என்று சொன்னார் அவர்..

மருத்துவ உதவிக்குப் பின் அவர் நலமாக உள்ளார்.

இனி இவரிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்தானே!

......................................................................

பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் பிறன் மனையுடன் தொடர்பு கொண்டி ருந்த ஒருவரை, அப்பெண்ணின் உறவினர்கள் பிடித்து அவரது, மூக்கு, உதடு, நாக்கு ஆகியவற்றை அறுத்து விட்டார்களாம்!

நாட்டாமை!தீர்ப்பை மாத்திச் சொல்லு! 

 ................................................

போலீஸ் கட்டுப்பாட்டு அறை.

ஒரு போன்.

“சார்,ஒரு போன் வந்தது.ராத்திரி ஒரு மணிக்கும்  3 மணிக்கும் நடுவில் தூங்குபவர்கள் எல்லாம் இறந்து விடுவார்களாம்.ஒரு குழந்தை,பிறக்கும்போதே பேச ஆரம்பித்து விட்ட குழந்தை, இந்த செய்தியைச் சொல்லியிருக்கிறது.”

அதன் பின் நூற்றுகணக்கான கால்கள்.

இரவு ஒரு மணிக்குச் சாலைகளில்  மரண பயத்தில்   பதறும் மக்கள் கூட்டம்!

அது நடந்தது ஹைதராபாத்தில்.

இது போன்றே சூரத் அருகில் பல இடங்களிலும் நடந்துள்ளது!

//அஞ்சி யஞ்சிச் சாவார்- இவர்
அஞ்சாதபொருளில்லை அவனியிலே//---(பாரதி)

என்று மாறுவார் இம்மக்கள்?

------------------------------

இவைதாம் செய்திகள்!!

(செய்திகள் :டைம்ஸ் ஆஃப் இந்தியா 24-08-2012)


புதன், ஏப்ரல் 11, 2012

எனவே எனக்கு மணவிலக்கு வேண்டும்!


பெண்:என் கணவர் என்னை எப்போதும் நாட்டுப்புறப்பாணியில் சேலை கட்டிக் கொண்டு, அதே மாதிரிப் பேச வேண்டும் என்கிறார்.எனவே எனக்கு விவாக ரத்து வேண்டும்!

ஆண்:எனக்குக் கருவாடு பிடிக்காது என்று தெரிந்தும் என் மனைவி தினம் கருவாடே சமைக்கிறாள்.எனவே.....................................................

ஆண்:என் மனைவி அடிக்கடி டி.வி மொபைலை ஒளித்து வைத்து விடுகிறாள்;அல்லது,டி.வி.யில் ஏதாவது கோளாறுசெய்து வைத்து விடுகிறாள்!எனவே................................................

பெண்:என் கணவர் என்னுடன் பத்து ஆண்டுகளாகப் பேசுவதே இல்லை.எல்லாமே எழுத்து மூலமாகத்தான்!எனவே...........................

(அது மாதிரியென்றால் என் தாத்தா,பாட்டி-அம்மாவின் பெற்றோர்- எப்போதோ டிவோர்ஸ் செய்திருக்க வேண்டும்!அவர்கள் வாழ்நாள் முழுதும் பேசிக் கொண்டதே கிடையாது;ஆனால்  ஆறேழு குழந்தைகள் பெற்றார்கள்!)

ஆண்:என் மனைவி எல்லா ஆண்களையும் தொட்டுத்தொட்டுப் பேசுகிறாள். தன்னால் அதைத் தவிர்க்க இயலவில்லை என்று சொல்கிறாள். எனவே................

பெண்:அவர் வளர்க்கும் தேரையை ஒரு பெட்டியில் வைத்து எங்கள் படுக்கையிலேயே வைத்துக் கொண்டு  படுக்க வேண்டும் எனச் சொல்கிறார். எனவே...................

பெண்:தொலைகாட்சி பார்க்கும்போது என் கணவர் சேனல்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்!எனவே...............

பெண்:’என் கணவரின் உடல் நாற்றம் தாங்கவில்லை.எனவே........

பெண்/ஆண்: என் கணவன்/மனைவி தினம் அது வேண்டுமென்று கட்டாயப் படுத்துகிறார்/ள்!எனவே.................

இவையெல்லாம் இங்கிலாந்து நீதி மன்றங்களில் தொடரப்படும் மணவிலக்கு வழக்குகளில் சில காரணங்கள்!(கொஞ்சம் மாற்றங்களுடன்)

இந்தியா பரவாயில்லை!இது இங்கு இன்னும் பரவவில்லை!!

நன்றி: இந்தியாவின் நேரங்கள்-11-04-12


திங்கள், நவம்பர் 14, 2011

நெஞ்சை உருக்கும் வழக்கு!

நீதிபதி ,அந்த வழக்கில்,ஜாமின் பற்றிய தன் முடிவைச் சொன்னார்.

”இந்த வழக்கு சட்டத்துக்கும் ,தர்மத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மோதல்.நீதிமன்றம் என்பது சட்டத்தின் வழி நின்று நீதி வழங்க வேண்டும்.ஆனால் அதே நேரத்தில், நீதிமன்றம் அசைவுகளற்ற ஒரு இயந்திரமும் அல்ல.அதற்கும் உள்ளம் உண்டு.மக்களின் நாடித்துடிப்பை அறியும் திறனுண்டு.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரே காவல் துறையிடம் வழக்கு பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லியிருக்கிறார். எனவே சாட்சிகளை அவர் கலைப்பார் எனச் சொல்ல இடம் இல்லை. எனவே ஜாமீன் வழங்கப்படுகிறது”.

இது என்ன வழக்கு?என்ன நடந்தது,நீதித்துறையின் உள்ளத்தைத் தொட?

38 வயதான கணவன்.29 வயது மனைவி.10 வயது மகன்.3 வயது மகள்.பிரச்சினை மகள்தான்.அவளால் நடக்க இயலாது,பேச இயலாது, கேட்க இயலாது.இப்படிப்பட்ட ஒரு பெண் வளர்ந்து பெரியவளாகி  எப்படி வாழ முடியும்?அவர் மனைவியை கலந்தாலோசித்தார்.

ஒருநாள் ஒரு விடுதியல் அறை எடுத்தார்.குடும்பத்துடன் அங்கு சென்றார்.

 குழந்தைகள் இருவருக்கும் தூக்க மாத்திரைகள் கொடுத்தார்,மனைவியும் அவரும் விஷமருந்தினர்.அனைவரும் படுத்தனர்-------

காலை மணி 5.30.பையன் விழித்துக்கொண்டான்.அவனுக்கு மூச்சை யடைத்தது. அப்பா,அம்மா,தங்கை அனைவரையும் எழுப்பிப் பார்த்தான். யாரும் எழுந்திருக்க வில்லை.  பயமாக இருந்தது.தன் மாமாவுக்கு ஃபோன்  செய்து தகவல் சொன்னான். அவர் வந்தார் பார்த்து அதிர்ந்தார்.

அனைவரையும் மருத்துவ மனைக்கு எடுத்துச்  சென்றார். சிறுமி வழியிலேயே இறந்து போனாள்.

அந்தத் தந்தை பின் போலீசில் சரணடைந்து நடந்தது அனைத்தையும் சொன்னார்.

வழக்குப் பதிவு செய்யப் பட்டது.

அதுதான் வழக்கு.

(எந்தப் பிரிவுகளில் வழக்கு எனத் தெரியவில்லை-)

செய்தி:டைம்ஸ் ஆஃப் இந்தியா  13-11-2011.



சனி, நவம்பர் 05, 2011

நிழல் நிஜமாகிறது!

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்த் திரைப்படம் வந்தது அதன் பெயர்- தமிழ் இல்லை, இந்தி—தோஸ்த்.ரகுவரன்,சரத்குமார் நடித்தது.அதில் இன்சூரன்ஸ் பணத்துக்காக ரகுவரன் ,சரத்குமாரால் கொல்லப்பட்டது போல் ஒரு நாடகம் போட சரத்குமாருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது. விடுதலையாகி வரும் சரத்,ரகுவரனைப் பார்த்துவிட்டு  உண்மையைப் புரிந்து கொண்டு கடைசியில் தண்டனை கொடுத்த நீதிபதி முன்பே ரகுவரனைக் கொன்று விடுகிறார்.கேள்வி-ஒரே குற்றத்துக்கு இரண்டு முறை தண்டிக்க முடியுமா?


  ஓரளவுக்கு இது போல் ஒரு நிகழ்ச்சி உ.பி யில் நடந்திருக்கிறது.ஒருவரைக் கொன்றதாக மூன்று பேருக்கு செஷன்ஸ் நீதி மன்றம் ஆயுள் தண்டனை  வழங்க மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதி மன்றம், தண்டனையை  உறுதி செய்தது. அவர்கள் தண்டனை பத்தாண்டுகள் முடிந்து விட்ட நிலையில்,கொலை செய்யப் பட்டதாகக்  கருதப்பட்ட நபர் உயிரோடு திரும்பி வந்து, தான் இத்தனை ஆண்டுகள் இமாசலப் பிரதேசத்தில் வேலை பார்த்து வந்ததாகச் சொல்லியிருக்கிறார்.இப்போது அவர்கள் ஜாமீனில்(!)  விடப்பட்டிருக்கின்றனர்.மூவரும் உச்ச நீதி மன்றத்தில் தலா ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

 கம்பிகளுக்குப் பின் கழித்து விட்ட பத்தாண்டுகளை யாராலாவது திருப்பித்தர இயலுமா? ஆயுள் தண்டனைக்குப் பதிலாக மரண தண்டனை கொடுத்திருந்தால்? போன உயிரைத் திருப்பி வரவழைக்க முடியுமா?மரணதண்டனை என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு இந்த  ஒரு காரணம் போதாதா?

சொல்லுங்கள்!


சனி, அக்டோபர் 08, 2011

வாழ்ந்து முடித்தவர்கள்---(சிறுகதை)

அவர்கள் இருவரும் மிக,மிக மகிழ்ச்சியாக இருந்தனர்.

அந்த மகிழ்ச்சி அவர்கள் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.

“ராணி!மறக்க முடியாத இண்டு மாதங்கள்! இல்லையா?”

”ஆம் ரவி!பூலோக சொர்க்கம்தான்.அந்தக் காட்டேஜும், வசதிகளும்,அபாரம். பணம் கொடுத்தாலும் இப்படி ஒரு வசதி கிடைக்க வேண்டுமே?”

”நீ சொல்வது சரிதான்.அந்தக் காலத்தில் ராஜாக்கள் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள்”

”ரவி!ராஜாக்கள் உல்லாசமாக வாழ்ந்திருந்தாலும்,அவர்களுக்கும் எவ்வளவோ,கவலைகள்,பிரச்சினைகள் இருந்திருக்கும்.நாம் அப்படியல்லவே?எந்த

விதமான கவலைகளும் இல்லாத வாழ்க்கை அல்லவா?”

”ஆம் ராணி!அந்த ரிசார்ட்டில்தான் எத்தனை வசதிகள்?என்ன சுவையான உணவு? எத்தனை பொழுது போக்கு அம்சங்கள்?எதை நாம் விட்டு வைத்தோம்?தினம் நீச்சல் குளத்தில்குளியல்!வாரம் ஒரு முறை மசாஜ்!கோல்ஃப்,பில்லியர்ட்ஸ் என்று பொழுது போக்கு.நல்ல பசி,நல்ல சாப்பாடுஅத்துடன் தினமும்,இரவில்……! என்று கண்களை சிமிட்டினான் ரவி.

ராணி முகம் சிவந்தாள்.”சீ!எப்போதும் அதே நினைவு!இப்போதுதான் கல்யாணம் ஆன மாதிரி.எனக்கு வயது 36,உங்களுக்கு 39.கல்யாணமாகி 10 ஆண்டுகளாகி விட்டன.நினைவிருக்கட்டும்!”

”10 வருடம் போனதே தெரியவில்ல ராணி.ஒரு விநாடி கூட துன்பம் இல்லாத, போரடிக்காத வாழ்க்கையல்லவா,நம்முடையது.விடுமுறையில் எல்லா நாடுகளையும் சுற்றி வந்து விட்டோம்.எல்லா வித உணவுகளையும் ருசி பார்த்து விட்டோம்!எல்லா விதமாகவும்….”

“ அய்யோ!செக்கு மாடு மாதிரி திரும்பவும் அங்கேயே வந்து நிற்கிறீர்களே!”

”நிறைய சம்பாதிதோம்,செலவழித்தோம்,சேமிக்கவும் செய்தோம்.எந்தக் குறையும் இல்லை ரவி” என்று சொல்லி விட்டு மெல்லிய குரலில் “குறை ஒன்றும் இல்லை” என்று பாட ஆரம்பித்தாள்.

ரவி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்பாட்டு முடிந்தது.ரவி ராணியை அணைத்து,நெற்றியில்,கன்னத்தில் ,உதட்டில் முத்தமிட்டான்.அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்திக் கொண்டான்.

“நினைத்துப் பார்க்கையில் எவ்வளவு நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்பது புரிகிறது,ராணி.இது போதும்.”

“ஆம் ரவி பத்தாண்டுகளில்,நூறாண்டு சந்தோசம் அனுபவித்து விட்டோம்.இது போதும்”

இருவரும் ஒருவர் கண்களை ஒருவர் ஆழப் பார்க்கின்றனர்,கண்கள் வழியாக மனதையே படிப்பது போல்.

”அப்படியென்றால்”

“ஆம் ரவி அதேதான்!இனி வாழ என்ன இருக்கிறது.முடித்துக் கொள்வோம்!”

ஒரு பேப்பர் எடுக்கின்றனர்.கடிதம் எழுதிகின்றனர்”எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை.நிறைவாக வாழ்ந்து விட்டோம்.முடித்துக் கொள்கிறோம். உறவினர்களுக்குச் சொல்லி விடுங்கள்.எங்களுக்குச் சொந்தமான இந்த வீடு மற்றும் சில சொத்தெல்லாம் இணைத்திருக்கும் உயிலில் பிரித்துக் கொடுத்திருக்கிறோம்.

எங்கள் உடலை மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டும்.அதற்காக ரூ.10000/- உறையில் போட்டு வைத்திருக்கிறோம்.செல்கிறோம்”

தூக்க மாத்திரைகளை ஒவ்வொன்றாக,ஒருவர் வாயில் மற்றவர் போடுகின்றனர்……………………

டைம்ஸ் ஆஃப் இந்தியா,8-10-2011.

பனாஜி

நிறைவாக வாழ்ந்த தம்பதி தற்கொலை!

.........................................................................................................................

பிற்சேர்க்கை: பின்னூட்டங்களைப் பார்க்கும்போது இந்தப் பிற்சேர்க்கை அவசியமாகப் படுகிறது.இது கதையல்ல நிஜம்.!இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை.கதை முடிவு கற்பனையல்ல!

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

நேதாஜியும் பத்மனாப ஸ்வாமியும்!

நேதாஜி அவர்கள் சிறிது காலம் திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவிலில் மறைந்திருந்தாராம்!இப்படியொரு சந்தேகம் அக்கால ஆங்கிலேய அரசுக்கு எற்பட்டது!

1941 இல் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வெளிநாடு சென்ற நேதாஜி,ரகசியமாகத் திரும்பி வந்து மாறு வேடத்தில் பத்மனாபஸ்வாமி கோவிலில் இருப்பதாக ஒரு அநாமதேயக் கடிதம் அப்போதைய மதராஸ் ராஜதானியின் ஆங்கிலேய நிர்வாகிக்குக் கிடைக்கவும்,லெஃப்ட்.கர்னல் ஜி.பி.மர்ஃபி என்ற அதிகாரி,திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானான சர்.சி.பி.ராமசாமி ஐயரவர்களுக்குக் கடிதம் எழுதிக் கோவிலையும் அதன் சுற்றுப்புரத்தையும் கண்காணிக்கச் சொன்னாராம்.--(அங்கேயும் சிபியா??!!)அவ்வாறே செய்யப்பட்டதாகவும்,ஆனால் தடயமேதும் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.

இத்தனை ஆண்டுகளாக மிகப் பெரிய புதையலைக் காப்பாற்றி வந்த பத்மனாபஸ்வாமி, சில நாட்கள் நேதாஜியைக் காப்பாற்றியிருக்க மாட்டாரா என்ன?!

புர்ஜ் காலிஃபாவில் ரமலான் நோன்பு
---------------------------------

ஒரே கட்டிடத்தில் குடியிருப்பவர்களுக்கு நோன்பு நேரம் வெவ்வேறாக அமைய முடியுமா?துபாய் புர்ஜ் கலிஃபாவில் உள்ளவர்களுக்கு அவ்வாறு நேர்ந்திருக்கிறது!160 ஆவது தளத்தில் வசிப்பவர்களுக்கு சூரியோதயம் முன்பாகவும்,மறைவு சிறிது நேரம் கழித்தும் தெரிவதால் அவர்களுக்கு நோன்பு நேரங்கள் மாற்றப் பட்டிருக்கின்றன.80-150 தளங்களில் வசிப்பவர்கள் தங்கள் மாலை இஃப்தார் உணவை இரண்டு நிமிடம் கழித்தும்,151-160 தளங்களில் வசிப்பவர்கள் ,மூன்று நிமிடம் கழித்தும் உண்ணுமாறுநேர்ந்திருக்கிறது!

(நன்றி:இந்தியாவின் நேரங்கள்;8-8-2011)

செவ்வாய், மார்ச் 29, 2011

காக்கும் இட்லி!(வடையில்லை)

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு.

“நெய்யப்பம் தின்னால்,ரெண்டுண்டு காரியம்” என்று.

அதாவது வயிறும் நிறையும், கையில் இருக்கும் நெய்யைத் தலையிலும் தடவிக் கொள்ளலாம் என்ற பொருள்!

இது போலத் தமிழர்களின் பிரசித்தமான உணவான இட்லிக்கு ஒரு புதிய உபயோகம் தெரிய வந்துள்ளது.

இட்லியால் வயிறு நிறையும் என்பதுடன்,இது’ ரெண்டுண்டு காரியம்’ என்பது போல் மற்றொரு உபயோகம்.

இட்லி உங்கள் பணத்தைக் காக்கும்!


இது எப்படியிருக்கு!

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு!

தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி விரைகிறது அந்த ரயில்.

ஒருபெண்மணி,தன் மகளுடன் பிரயாணம் செய்கிறார்.

அவர் கையில் இண்டெர்னெட் மூலம் பதிவு செய்த ’இ டிக்கட்’ வைத்திருக்கிறார்.

பரிசோதகர் வருகிறார்.

பெண்மணி டிக்கெட்டையும்,தன் ஓட்டுனர் உரிமத்தையும்(அடையாளச் சான்று) எடுத்து
நீட்டுகிறார்.

பரிசோதகர் வாங்கிப் பார்க்கிறார்.

அந்தப் பெண்மணியின் துரதிர்ஷ்டம்—அது உரிமத்தின் வண்ண நகல்,அசல் அல்ல என்பது தெரிகிறது!

பரிசோதகர்,1600 ரூபாய் அபராதம் என்று கூறி ,மீதிப் பரிசோதனை முடித்த பின் வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறிச் செல்கிறார்!

என்ன செய்வார் இவர்?

கைப்பையில் இருக்கும் வங்கிப் பாஸ் புத்தகம் நினைவுக்கு வருகிறது!
எடுக்கிறார்!

ஆனால் அதில் புகைப்படம் இல்லை!

பையைத்துழாவுகிறார்!

புகைப்படம் ஒன்று கிடைக்கிறது!பரிசோதகர் வரும் முன் இதைப் பாஸ் புத்தகத்தில் ஒட்ட வேண்டுமே!

தான் உண்பதற்காகக்கொண்டு வந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரிக்கிறார்;ஒரு விள்ளல் எடுக்கிறார்.புகைப்படத்தில் தடவுகிறார்.புத்தகத்தில் ஒட்டுகிறார் ”இறைவா,நன்றாக ஒட்ட வேண்டுமே “ என்று வேண்டிக் கொண்டே!

அடையாளச் சான்று தயார்!

பரிசோதகர் வருகிறார்!பார்க்கிறார்! எமாற்றத்துடன் அகல்கிறார்.

சாதாரண இட்லி 1600 ரூபாயைக் காப்பாற்றி விட்டது!

நீதி:-ரயில் பயணத்தின் போது அவசியம் இட்லி எடுத்துச் செல்ல வேண்டும்!

(இந்தியாவின் நேரங்களில்(28-03-2011) வெளி வந்த செய்தி!)

திங்கள், மார்ச் 28, 2011

உலகம் அழியப்போகிறது!

உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதாவது இருக்கின்றதா?

இதை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அது முடியாமற் போனவை ஏதாவது உண்டா?

முக்கியமான சில செயல்களைச் செய்யாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறீர்களா?

வாழ்க்கையில் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் எதுவும் செய்யாமல் இருக்கிறீர்களா?

எல்லாவற்றையும் உடனே செய்து முடித்து விடுங்கள்!இனிக் கால தாமதம் வேண்டாம்! ஏனெனில் உங்கள் வசம் இருக்கும் காலம் மிகக் குறைவு!

ஆம்! இந்த உலகம் அழியப்போகிறது!

வரும் மே மாதம்,21ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு உலகம் அழியப் போகிறது!

உலகில் உள்ளவர்களில் 2 விழுக்காடு மக்கள்,அந்த நேரத்தில் சொர்க்கம் சென்றடைவர்!மற்றவர்,மறு உலகம் சேர்வர்!

இது நான் சொல்லவில்லை;ஓக்லேண்ட்,கலிஃபோர்னியாவில் இருக்கும்,89 வயதான ஹரால்ட் கேம்பிங்க் என்ற மதபோதகர் கூறுகிறார்.

ஒரு பொறியாளராக இருந்து,போதகராக மாறிய இவர்,இவரைத்தொடர்பவர்களின் நன்கொடையினால் தொடங்கிய 66 வானொலி நிலையங்கள் மூலமாகப் பிரசாரம் செய்து வருகிறார்.அந்தப் பிரசாரத்தில் அவர் கூறியதே இது!யு.எஸ்.ஸில் 2000 விளம்பர அட்டைகள் மூலமும் இது விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது!

சிலஆறுதல்கள்—

உலககோப்பை கிரிக்கெட் முடிந்து விடும்!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவு தெரிந்து புதிய ஆட்சி மலர்ந்து விடும்!

இப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்!

புதன், பிப்ரவரி 16, 2011

தலை வணங்கிகிறேன் தாயே!

”என்ன பிள்ளைகளா,மதிய உணவு சாப்பிட்டீர்களா?’-டீச்சர்
”டீச்சர்,மழை பெய்யுதில்லையா,கூரை ஓட்டை வழியாத் தண்ணி கொட்டித் தட்டுலே இருந்த சோறெல்லாம் நனஞ்சு போச்சு”-மாணவன்.

இதுதான் இன்று வரை அந்த மதிய உணவுக் கூடத்தின் நிலை.
உடைந்த அஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ்,அந்தக் கட்டிடம்.சமையல் வெட்ட வெளியில் .
இப்படித்தான் இயங்கி வந்தது அந்த மதிய உணவு மையம்!-இத்தனை நாள்.

இனியில்லை!

அழகிய புதிய கட்டிடம்,சமையல் அறை ,ஸ்டோர் ரூம் வசதியுடன் தயாராகி விட்டது!

அரசு புதுக் கட்டிடம் கட்டிக் கொடுத்துவிட்டதா?
அல்லது யாராவது வள்ளல் ஏற்பாடு செய்தாரா?
இல்லை!இல்லை!

கோடிக் கணக்கில் இலவசங்களுக்குச் செலவழிக்கும் அரசுக்கு இந்தச் சிறிய விஷயத்தைக் கண்டு கொள்ள நேரமிருக்குமா என்ன?
அது தவிர இதனால் என்ன பயன்?அந்த மாணவர்கள் ஓட்டுப் போடப் போகிறார்களா என்ன?
பின் எப்படி நடந்தது?

11 ஆண்டுகளுக்கு முன் பள்ளிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற,தற்போது 63 வயதாகும் ஓர் ஆசிரியையின் கருணை உள்ளம்!

29 ஆண்டு சேவைக்குப் பின் ஓய்வு பெற்ற அந்த ஆசிரியை,தனது ஓய்வூதியத்தை இத்தனை நாள் சேமித்து வந்த பணம்-ரூபாய்3.5 லட்சம்.

அதைப் பள்ளி நிர்வாகத்துக்குக் கொடுத்துதான் இந்தச் செயல் நடக்க உதவியிருக்கிறார் அந்த ஆசிரியை

“எனக்குக் குழந்தைகள் இல்லை.பள்ளி மாணவர்களெல்லாம் என்குழந்தைகள்தான்”என்று கூறும் பரந்த மனம் அவருக்கு இருக்கிறது!

”2009ஆம் ஆண்டு பார்கின்சன் வியாதியால் மரணமடைந்த என் கணவரின் நினைவாக இதைச்செய்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார்!

மதிய உணவு மையம் இருக்கும் பள்ளி---பல்லாவரம் கண்டோன்மெண்ட் அரசு உயர்நிலைப் பள்ளி.

அந்த மகத்தான செயல் புரிந்த ஆசிரியை—அந்தப் பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திருமதி.லலிதா.

தாயே!உங்களுக்குத் தலை மண்ணில் பட வணங்குகிறேன்!

இறைவன் அருள் என்றும் உங்களுடன் இருக்கட்டும்!