மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு.
“நெய்யப்பம் தின்னால்,ரெண்டுண்டு காரியம்” என்று.
அதாவது வயிறும் நிறையும், கையில் இருக்கும் நெய்யைத் தலையிலும் தடவிக் கொள்ளலாம் என்ற பொருள்!
இது போலத் தமிழர்களின் பிரசித்தமான உணவான இட்லிக்கு ஒரு புதிய உபயோகம் தெரிய வந்துள்ளது.
இட்லியால் வயிறு நிறையும் என்பதுடன்,இது’ ரெண்டுண்டு காரியம்’ என்பது போல் மற்றொரு உபயோகம்.
இட்லி உங்கள் பணத்தைக் காக்கும்!
இது எப்படியிருக்கு!
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு!
தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி விரைகிறது அந்த ரயில்.
ஒருபெண்மணி,தன் மகளுடன் பிரயாணம் செய்கிறார்.
அவர் கையில் இண்டெர்னெட் மூலம் பதிவு செய்த ’இ டிக்கட்’ வைத்திருக்கிறார்.
பரிசோதகர் வருகிறார்.
பெண்மணி டிக்கெட்டையும்,தன் ஓட்டுனர் உரிமத்தையும்(அடையாளச் சான்று) எடுத்து
நீட்டுகிறார்.
பரிசோதகர் வாங்கிப் பார்க்கிறார்.
அந்தப் பெண்மணியின் துரதிர்ஷ்டம்—அது உரிமத்தின் வண்ண நகல்,அசல் அல்ல என்பது தெரிகிறது!
பரிசோதகர்,1600 ரூபாய் அபராதம் என்று கூறி ,மீதிப் பரிசோதனை முடித்த பின் வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறிச் செல்கிறார்!
என்ன செய்வார் இவர்?
கைப்பையில் இருக்கும் வங்கிப் பாஸ் புத்தகம் நினைவுக்கு வருகிறது!
எடுக்கிறார்!
ஆனால் அதில் புகைப்படம் இல்லை!
பையைத்துழாவுகிறார்!
புகைப்படம் ஒன்று கிடைக்கிறது!பரிசோதகர் வரும் முன் இதைப் பாஸ் புத்தகத்தில் ஒட்ட வேண்டுமே!
தான் உண்பதற்காகக்கொண்டு வந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரிக்கிறார்;ஒரு விள்ளல் எடுக்கிறார்.புகைப்படத்தில் தடவுகிறார்.புத்தகத்தில் ஒட்டுகிறார் ”இறைவா,நன்றாக ஒட்ட வேண்டுமே “ என்று வேண்டிக் கொண்டே!
அடையாளச் சான்று தயார்!
பரிசோதகர் வருகிறார்!பார்க்கிறார்! எமாற்றத்துடன் அகல்கிறார்.
சாதாரண இட்லி 1600 ரூபாயைக் காப்பாற்றி விட்டது!
நீதி:-ரயில் பயணத்தின் போது அவசியம் இட்லி எடுத்துச் செல்ல வேண்டும்!
(இந்தியாவின் நேரங்களில்(28-03-2011) வெளி வந்த செய்தி!)