தொடரும் தோழர்கள்

புதன், டிசம்பர் 23, 2015

காலிஃப்ளவர் குருமா,மசாலா கார தோசை மற்றும் பல! //  //காலிஃப்ளவர் குருமா, மசாலா கார தோசை//

அது சரி, உங்களுக்குத்தான் மசாலா வாசனை பிடிக்காதே... ஒருவேளை பூண்டு மட்டும்தான் பிடிக்காதோ!//


நேற்றைய என் பதிவில் எங்கள் பிளாக் ஸ்ரீராமின் பின்னூட்டம் இது .

இது போதாதா நமக்கு ஒரு பதிவு எழுதுவதற்கு?!

நான் என் பட்டப் படிப்பை முடிக்கும் வரை மசாலா வாடையே எனக்குப் பிடிக்காதிருந்தது. ஒரு முறை அண்டை வீட்டார் அவர்கள் வீட்டில் செய்த வெஜிடபிள் பிரியாணியைக் கொடுக்க வர, வேண்டாம் திருப்பிக் கொண்டு போய்விடுங்கள் என்று சொன்னகாலம்.

என் நண்பர் ஒருவர் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி வாங்கித் தரும்போது சப்பாத்தி குருமா வரவழைக்க,குருமாவின் வாடையால் அதைத் தொடாமலே தள்ளியவன்.

பின்னர் பட்ட மேற்படிப்புக்குச் சென்னை வந்து சேர்ந்தேன்.விடுதி வாசம் ஆரம்பம்; அங்கு சைவச் சாப்பாடு மட்டுமே!வழக்கமான சாப்பாடுதான்;பிரச்சினை இல்லை என்றுதான் எண்னினேன்;ஒரு நாள் இரவு சாப்பிட அமர்ந்தேன்;வழக்கம்போல் வாழை இலை; சிறிதுநேரத்தில் மசாலாவின் வாடை வந்தது;இலையில் வந்து விழுந்தது அந்த வாடையுடன் எதோ அரிசிச் சோறு. என்ன வென்று கேட்டேன்;வெஜ்.புலாவ் என்று பதில் வந்தது’வேறு ஒன்றும் கிடையாதா என்றேன் இன்று இதுவும் மோர்சாதமும்தான் என்றனர்;இடி விழுந்த.து போல் ஆயிற்று வாரம் ஒரு முறை இதுதான் மெனு என அறிந்ததும்.கொஞ்சம் சாப்பிட்டேன்; பின்னர் அதிக மோர் சாதம்;வாரங்கள் செல்லச் செல்லக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி விட்டேன்; எங்கள் குழுவுக்காக ரொட்டித் துண்டங்கள் அதிகமாகவே விழும்!சப்பாத்தி குருமாவும் ஒரு நாள் உண்டு! அன்றும் மோர்சாதம் உண்டு.சப்பாத்திக்குப் பின் சாதத்தில் குருமாவைக் கலந்து ஒரு பிடிபிடித்துவிட்டுப் பின்னர் மோர்சாதத்துக்குப் போகும் அளவுக்கு முன்னேறி விட்டேன்!

அதைப் புலாவ் என்றுதான் அழைத்தார்கள்.இன்று வரை புலாவுக்கும் பிரியாணிக்கும் என்ன வேறுபாடு என்று எனக்குத் தெரியாது;சிலர் அதை பிரிஞ்சி என்றும் அழைக்கிறார்கள்.அது வேறு ஏதாவதா?

தேடிப்பார்த்தபோது எனக்குக் கிடைத்த பதில் இதுவே....


அரிசியுடன்,காய்கறிகளையும்,மசாலாவையும் சேர்த்து சமைப்பது புலாவ்

பிரியாணியில் அரிசியும் காய்கறிகளும் தனியாகச் சமைக்கப்பட்டுப்பின் அடுக்கப்பட்டு குறைந்த தீயில் சமைக்கப்படுகின்றன

சில வாரங்களுக்கு முன் என் பெண் வெஜ் பிரியாணியும் வெங்காயப் பச்சடியும் கொண்டு வந்து கொடுத்தாள்.அருமையான பாஸ்மதி அரிசி! சூப்பர்.அந்தக்காலத்தில் கல்லூரி விடுதியில் சாதாரஅரிசிதான்!

இப்போதெல்லாம் திருமண வரவேற்பு விருந்தில் இந்த வெஜ்.சாதமும்( பிரியாணியா, பிரிஞ்சியா, புலாவா,ஃப்ரைட் ரைஸா என்று  நிச்சயம் தெரியாது!) ஒரு ஐட்டம் ஆகி விட்டது 


வெஜ் பிரியாணி /புலாவ் செய்முறையைத்  திங்கக் கிழமையில்’ பார்க்க முடியும் என நம்புகிறேன்!


டிஸ்கி:என் வீட்டுச் சமையலில் பூண்டு கிடையாது என்பதே சாராம்சம்!

நன்றி ஸ்ரீராம்!6 கருத்துகள்:

 1. எனக்கும் இன்றுவரை இந்த வெஜிடபுள் பிரியாணி, வெஜ் புலாவ், சப்பாத்தி குருமா, நாண், சென்னா, காலி ஃப்ளவர், பீட்ரூட் போன்ற சிகப்புக்கலர் கலர் ஐட்டம்ஸ் + பட்டை சோம்பு வாஸனை உள்ள பதார்த்தங்கள் எதுவுமே பிடிக்காது.

  உப்பலான சூடான பூரி + உருளைக்கிழங்கு, வெங்காயம் போட்ட மஞ்சக்கலர் மஸால் என்றால் முடிந்தவரை தம் கட்டிக்கொண்டு உள்ளே இறக்கிவிடுவேன்.

  மற்றபடி ரவா தோசை, மாவு தோசை, ஆனியன் ஊத்தப்பம், கெட்டியான் தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி, தங்காளிச்சட்னி, சாம்பார் என்றால் இஷ்டமாகச் சாப்பிடுவேன். இதனால் நான் பிறர் வீடுகளிலோ, கல்யாணங்களிலோ, வரவேற்பு விருந்துகளிலோ கலந்துகொண்டு சாப்பிட விரும்புவதே இல்லை. முடிந்தவரை இன்றுவரை அவாய்ட் செய்தே வருகிறேன். என் டேஸ்டே தனி. :)

  பதிலளிநீக்கு
 2. ஐயா! பசி நேரத்தில் (நான் சாப்பிடும் நேரம் பகல் 1 மணி) காய்கறி பிரியாணி பற்றி சொல்லி பசியைக் கிளப்பிவிட்டீர்களே! நான் படித்த அண்ணாமலை பல்கலைக் கழக உணவகத்தில் இந்த பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றது. வாரம் ஒரு நாள் உண்டு. அன்று மட்டும் நாங்கள் இரவு 7 மணிக்கே சென்று உணவு மேசையில் அமர்ந்துவிடுவோம். அது செய்யப்படும் முறையை அறிய காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. அடடே ஒரு கேள்வியை வைத்து பதிவா ? ஸூப்பர் ஐயா

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சார்!
  புலாவ் பால் கலந்து வேகவைக்கப்படும். தக்காளி சேர்க்க மாட்டோம். தாளிக்கும்போது லவங்கம்,பட்டை சேர்ப்போம்.

  ஆனால் பிரியாணியில் தண்ணீரில் நெய் கலந்து வேகவைக்கப்படும். தக்காளி சேர்ப்போம். இஞ்சி பூண்டு அரைக்கும்போது பட்டை, லவங்கம் சேர்த்து அரைப்போம். so aroma அதிகமா இருக்கும். சீரகசம்பா அரிசியும் இந்த ரெசிபி செய்ய அட்டகாசமா இருக்கும்...நேத்து புலாவ், sunday பிரியாணி செய்யலாம்னு பார்க்கிறேன். but அது மட்டனா, சிக்கனானு இன்னும் முடிவு பண்ணலை...ஹாஹஹா

  பதிலளிநீக்கு
 5. நன்றி சென்னை பித்தன் ஸார்! என்னை கௌரவப்படுத்தி விட்டீர்கள்.

  திங்கக் கிழமையில் புலவ் பற்றியா? முயற்சி செய்கிறேன்!

  சாதாரணமாக லிங்க் கொடுத்து தொல்லை கொடுக்க மாட்டேன். ஆயினும் உங்கள் பதிவு படித்த சந்தோஷத்தில் ஒரு சின்னப் பகிவு. நேரமிருந்தால் அப்புறம் மெல்லப் படியுங்கள். கட்டாயம் இல்லை! :)))

  இன்றைய கல்யாண மெனுக்கள் பற்றிய பதிவு :

  http://engalblog.blogspot.com/2010/04/blog-post_21.html

  பொதுவான சுவைகள் பற்றிய தொடக்கமாக

  http://engalblog.blogspot.com/2014/04/blog-post_2.html

  தோசையாயணப் பதிவின் முதல் பாகம் (மூன்று பாகம் அது!!)

  http://engalblog.blogspot.com/2014/08/140804-1.html


  பதிலளிநீக்கு
 6. திங்கக் கிழமையில்’ பார்க்க முடியும் என நம்புகிறேன்!
  sekarpon55@yahoo.co.in

  பதிலளிநீக்கு