தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 25, 2015

தனி ஒருவன் -பகுதி 2

இவரது வங்கியின் சார்பாக அன்னியச் செலாவணி கம்பெனிகள் சிலவற்றை நியூயார்க், சவுதி அரேபியா, ஹாங்காங் போன்ற சில இடங்களில் நிறுவுவதென மூன்று மாதங்களுக்கு முன் தீர்மானிக்கப்பட்டது.  இந்தப் பணிக்காக அந்த வங்கியில் பணிபுரியும் 20 ஊழியர் களைத் தேர்ந்தெடுத்து வெளி நாட்டுக்கு அனுப்புவது என்பதும்  ஏற்கனவே தீர்மானிக் கப்பட்ட விஷயம்.  இதற்கான விதிமுறைகளெல்லாம் விவரமாக வகுக்கப்பட்டு நேர்முகத் தேர்வும் நடந்தாகிவிட்டது. நிரப்பப்படவேண்டிய  20 இடங்களுக்கு 500 ஊழியர்கள் போட்டி. 

                 கிருஷ்ணசாமி விட்டுச்செல்லும் இடத்திற்கு அடுத்தபடியாக சேர்மனை அரசாங்கம் நியமிக்கும் வரை தற்காலிமாக சேர்மனாக பணி புரிய இருக்கும் தற்போது வங்கியின் இரண்டாவது இடத்தை வகிக்கும் அதிகாரியின் தம்பி மகனும், வங்கியின் அன்னியச் செலாவணி பிரிவினது ஜெனரல் மேனேஜரின் அண்ணன் மகள் இந்த நேர்முகத் தேர்வினை மேற்கொண்டுள்ள 500 ஊழியர்களில் அடக்கம்.



                கிருஷ்ணசாமியின் பதவி விலகலுக்குப் பிற்கு அடுத்த சேர்மன் நியமிக்கப் படுவதற்கு இருக்கப் போகும் இடைவெளியில் தங்கள் இஷ்டம் போல இந்த 20 இடங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று மேற்கண்ட இரு அதிகாரிகள் சதி செய்வதாக ஒரு நம்பகமான வதந்தி ஏற்கனவே பரவ ஆரம்பித்து விட்டது.            



  இது இப்படி இருக்கையில் சென்ற வாரம் கிருஷ்ணசாமிக்கு ஒரு முக்கியமான போன்கால் வந்தது. அகில இந்திய வங்கி ஊழியர்களது வேலை முறைகளைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அதில் தற்போது நிலவி வரும் சீர்கேடுகளைக் களைய யோசனைகளை பரிந்துரைக்கும் பொருட்டு, அரசாங்கம் கமிட்டி ஒன்றினை ஒரு வருட கால வரம்புடன் நிறுவப் போவதா கவும், கிருஷ்ணசாமியின் திறமை மிக்க தொழிலாளர் நிர்வாக அனுபவம் காரணமாக, அந்த கமிட்டியின் சேர்மனாகப் பணியாற்ற அவரது சம்மதத்தை அறிந்து கொள்ளும்  பொருட்டு அவரை அரசாங்க அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலம் அணுகினார்.  கிருஷ்ணசாமி தன் சம்மதத்தைத் தெரிவிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார்.



                 வங்கி ஊழிய நிர்வாக விஷயங்களை கரைத்துக் குடித்தவர் கிருஷ்ணசாமி.  ஊழியர் நிர்வாகத் துறையில் உள்ள முறைகேடுகள் சரிசெய்ய வெகுவாக பாடுபடுபவர்.   அதைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அளிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப் போகிறதே என்று அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் ஓய்வு காலத்தின் முதலாண்டில் கூட தனது வங்கிப் பணியினைத் தொடரலாமே என்று நினைத்து சந்தோஷப் பட்டார்.


              இரண்டு நாட்களுக்குப் பிறகு, தன் பரிபூரண சம்மதத்தை தொலைபேசி மூலம் அறிவித்தார்.  2 மணி நேரங்களுக்குப் பிறகு, அந்த விஷயம் பற்றி கடைசியாக தீர்மானிக்க வேண்டிய டெல்லி உயர் அதிகாரியின் அந்தரங்கச் செயலரிடமிருந்து கிருஷ்ணசாமிக்கு வந்த தொலைபேசி செய்தி அவரை திகைப்பில் ஆழ்த்தியது.


             கமிட்டியின் சேர்மன் இடத்திற்கு இரண்டு மூன்று பேர் போட்டியிடுவதாகவும், கிருஷ்ணசாமிக்கு அந்த பதவி கிடைக்க வேண்டுமெனில், அவர் டெல்லி அதிகாரிக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும் என்றும் அந்த செய்தி அறிவித்ததது.டெல்லி உயர் அதிகாரி யின் உறவினர் ஒருவர் கிருஷ்ணசாமியின் வங்கியில் பணி புரிவதாகவும், அவர் வெளி நாட்டுக்கு அனுப்புவதற்கான நேர்முகத் தேர்வை மேற்கொண்டுள்ள 500 பேர்களில் ஒருவர் எனவும், கிருஷ்ணசாமி எப்படியாவது இந்த ஊழியரை தேர்வு செய்யப் போகிற 20 நபர்கள் அடங்கிய லிஸ்டில் சேர்ப்பாரேயானால், கமிட்டியின் சேர்மன் பதவி கிருஷ்ண சாமிக்குத் தான் நிச்சயம் என அறுதியிட்டது அந்தரங்கக் காரியதரிசியின் குரல்.  இந்தச் செய்தியை தெரிவித்த பிறகு கிருஷ்ணசாமியின் பதிலுக்குக் கூட காத்திராமல் அந்தக் குரல் ரிஸீவரை வைத்து விட்டது.  மறுபடியும் அதே குரல் போன் செய்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய நபரின் முழு விவரங்களைக் கொடுத்தது.  இந்த விஷயத்தைப் பற்றி முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தான் கிருஷ்ணசாமியின் சேர்மன் பதவி பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று கறாராக அந்தக் குரல் அறிவித்தது. 

       

  இந்த விஷயம் கிருஷ்ணசாமியை தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளியது.  இப்போதே கிருஷ்ணசாமி மனது வைத்தால் தனது உடனடி கீழ் அதிகாரியை அழைத்து இதற்கான ஆணையினை பிற்ப்பிக்கலாம்.  கீழ் அதிகாரியையும், அன்னியச் செலாவணி ஜெனரல் மேனேஜரையும் திருப்திப் படுத்துவது மிக எளிது.  அவர்களிருவரும் ஏற்கனவே தங்கள் உற்வினர்களை லிஸ்டில் சேர்க்க திட்டமிட்டிருப்பது கிருஷ்ணசாமி அறிந்ததே.


           அன்று காலை ஆபிஸ் வரும்போது இந்த விஷயம் பற்றிய சிந்தனை தலை தூக்கியது.  அந்த சிந்தனையை மனத்திலிருந்து அகற்றிக் கொண்டு வேறு பல நல்ல விஷயங்களைப் பற்றி வலுக்கட்டாயமாக யோசித்து நினைவை திசை திருப்பினார்.


           கிருஷ்ணசாமியைச் சந்திப்பதற்காகவும், அன்று மாலையில் நடைபெறும் பிரிவு உபசாரக் கூட்டத்தில் பங்கேற்கவும் பல ஊர்களிலிருந்து ஊழியர்கள் திரள் திரளாக வந்திருந்தினர். அவர்கள் எல்லோரையும் தன் அறையிலேயே சந்தித்து அளவளாவினார்.  அன்று முழுவதும் அதற்கே சரியாக இருந்தது.  ஏற்கனவே திட்டமிட்டு எல்லா முக்கியப்  பணிகளையும் முடித்து விட்டபடியால் அலுவல் தொந்தரவு அதிகம் இல்லாமல் ஊழியர் களிடம் பேசிக்கொண்டிருப்பதிலேயே எல்லா நேரத்தையும் கழித்தார்.


         அன்று மாலை 6 மணிக்கு விழா.  விழாவிற்கு மனைவியையும் அழைத்துக் கொண்டு வர வேண்டும் என விழாக் குழுவின் உறுப்பினர்கள் கிருஷ்ணசாமியை கேட்டுக் கொண்டனர்.  அவரும் சம்மதித்தார்.  ஊழியர்களிடம் பேசும்போது நிதி திரட்டும் விஷயம் எதேச்சையாக கிருஷ்ணசாமிக்குத் தெரிய வந்தது.  ஆனால் விழாக்குழுவின் உறுப்பினர் களிடத்தில் அதைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை.


         சுமார் 6 மணி அளவில் விழா நடைபெறும் இடம் காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரத்தில் கரைந்து கொண்டிருந்தது.  கிருஷ்ணசாமி கர்நாடக சங்கீதப் பிரியர் என்பதை எல்லா ஊழியர்களும் அறிந்திருந்த படியால் அன்று அந்த ஒலிபெருக்கி இசையை அவர்கள் வெகுவாக ரசித்தனர்.  விழா மேடை எளியமுறையில் அழகாக அலங்கரிக் கப்பட்டிருந்தது.   சுமார் 5000 பேர் கொண்ட பெரும் கூட்டம் கண்டு அங்கு எல்லோரும் வியந்தனர்.


        சரியாக 6 மணிக்கு கிருஷ்ணசாமி தன் மனைவியுடன் காரில் வந்து இறங்கினார்.  கரகோஷம் வானைப் பிளந்தது.  விழாக் கமிட்டியின் செயலர் அவரை மேடைக்கு அழைத்துச் சென்றார்.  மேடையில் 7 இருக்கைகள் போடப்பட்டிருந்தன.  கிருஷ்ணசாமியும் அவர் மனைவியும் நடு இடங்களை அலங்கரித்தனர்.  மற்ற ஐந்து இருக்கைகளை வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் விழா கமிட்டியின் செயலர் நிரப்பினர்.

               
வாடிக்கையாளர்களில் சிலர், ஊழியர்களில் பலர், கிருஷ்ணசாமி அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆற்றிய பணியினை ஓங்கி உலகளந்தனர்.


                 கிருஷ்ணசாமிக்குப் பிறகு தற்காலிமாக சேர்மன் பதவி ஏற்கும் உயர் அதிகாரி தான் அன்று சிறப்பும் பேச்சாளர்.  அவர் உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து போய், வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறி, கிருஷ்ணசாமியின் அரும் பணிக்கு அஞ்சலி செய்தார். அடுத்தது கிருஷ்ணசாமியின் பிரிவு உபசார உரை.  அதற்கு முன் விழாக் கமிட்டியின் செயலர் ஓடி வந்து ஒரு லட்சத்திற்கான செக்கை வங்கியின் இரண்டாவது உயர் அதிகாரி மூலம் கிருஷ்ணசாமியிடம் சேர்ப்பித்தார். 


என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ என்று திகிலுடன் எல்லோரும் ஆவலான எதிர்பார்ப் புடன் காத்துக் கொண்டிருந்தனர்!

--தொடரும்
            

15 கருத்துகள்:

  1. நானும் காத்துக் கொண்டிருக்கின்றேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா! ஆவலான எதிர்பார்ப்புடன் நானும் காத்துக் கொண்டிருக்கின்றேன்! நன்றி

    பதிலளிநீக்கு
  3. நிச்சயம் திரு கிருஷ்ணசாமி அந்த காசோலையை பெற்றுக்கொண்டிருக்கமாட்டார். இல்லையேல் அதை நன்கொடையாக ஏதேனும் ஒரு சேவை நிறுவனத்திற்கு திருப்பி கொடுத்திருப்பார் என நினைக்கிறேன். காத்திருக்கிறேன். நடந்ததை அறிய.

    பதிலளிநீக்கு
  4. பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரண்டு பகுதிகளையும் ஒரு சேரப் படித்து விட்டேன். அடுத்த பகுதிக்கான காத்திருப்பில் நானும்.

    பதிலளிநீக்கு
  5. பரப்பரப்பு கூடுகின்றது அடுத்த பகிர்வு எப்போது ஐயா.

    பதிலளிநீக்கு
  6. முந்தைய பதிவுகளையும் படித்து வருகிறேன் ஐயா.

    த ம 8

    பதிலளிநீக்கு
  7. கி சா வின் மனச்சாட்சி இதற்கு இடம் கொடுக்காது !

    பதிலளிநீக்கு