தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 14, 2015

வீடு -காட்சி-1தமிழ் மூன்று.

இயல்,இசை,நாடகம்.

பதிவுலகம் இயற்றமிழால் நிரம்பியுள்ளது.

அவ்வப்போது சுப்புத் தாத்தா மனது வைத்தால் இசைத் தமிழ் வந்து போகிறது

ஆனால் நாடகத் தமிழைப் பதிவுலகம் புறக்கணித்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

இது எங்களால் முடிந்த ஒரு தொடக்கம்.

இது எழுதப்பட்ட ஆண்டு  1985-86.

அப்போது நானும் நண்பர் பார்த்தசாரதியும் சென்னையில் ஒரே அலுவகத்தில் பணியில் இருந்தோம்.

அலுவலகத்தில்  எங்கள் ஓய்வு நேரங்கள், இலக்கியம்,சினிமா,இது போன்ற விவாதங்களில் கழியும்.

எங்கள் இருவர் ரசனையும் அநேகமாக ஒரே மாதிரியானது.

நாங்கள் பார்த்த படங்கள் வித்தியாசமானவை—(உ-ம் ) அரவிந்தனின் சிதம்பரம்.

அந்தக்கால கட்டத்தில் எழுதப்பட்ட நாடகம் இது.

உருவாகும்போதே விவாதங்கள்,ஆலோசனைகள் எல்லாம் இருந்தன.

நினைத்து நினைத்து மெருகேற்றிய நாடகம்.இப்போது உங்கள் பார்வைக்கு.

இது பற்றிய பல தகவல்களை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்வேன்

திரை விலகட்டும்

-------------------
1980-ம்  ஆண்டு  அக்டோபர்  மாதம்  விஜயதசமிக்குப்  பிறகு ஒரு மிக மிக விசேஷமான நாள்.

திரையின் முன்பு  பழைய வீடு ஒன்று ஃபோகஸ் செய்யப்படுகிறது.  சுமார் 60  வருடங்களுக்கு  முன்பு கட்டப்பட்ட மாடி வீடு. பிறகு காமிரா வீட்டிற்குள்  செல்கிறது.

நடுத்தர வயதுள்ள இரு நபர்கள்  வீட்டை சுற்றிப் பார்த்துக்  கொண்டிருக்கிறார்கள்.   ஒருவர் காட்ட  ஒருவர்  பார்க்க வெகு வேகமாக அவ்வீட்டின் எல்லாப் பாகங்களும்  காட்டப்  படுகின்றன.

நபர்  1  (சற்று  அதிக வயதானவர்)

என்ன சார்!  அந்த காலத்திலேயே எவ்வளவு  பிரமாதமான கட்டிருக்காங்க  பார்த்தீங்  கள்ளே?

நபர்   2

அது சரிங்க !  இதை அப்படியே  புதுப்பிச்சு குடிவரப்  போற மாதிரி இல்லே நீங்க  பேசறிங்க.   இதை  இடிச்சு ஃப்ளாட்டா இல்லே  கட்டப்  போறோம்.    கன்ஸ்ட்ரக்ஷன் ஸ்ட்ராங்கா இருக்கேன்னு எனக்கு  கவலயாத்தான் இருக்கு.  அத்த  இடிக்கறதுக்கு வேறே  எம்மாம் பணம் செலவாகப்  போகுதோ?ம்..ம்   ஏரியா நல்லா இருக்கு.  இங்கே ஃப்ளாட்  போட்டா ஜனங்க அல்வாத்துண்டு  மாதிரி   அள்ளிகிட்டுப்  போய்டுவாங்க.   இந்த ஒரு வீடு  இருக்கற  இடத்திலே  குறைஞ்ச பட்சம்   30  ஃப்ளாட்டாவது  தேறும்.

நபர்  1

அண்ணன்  தம்பிங்கெல்லாம்    நாளைக்கு வந்து   கையெழுத்து  போட்டுறுவானுகோ.  முன்ன சொன்னாப்புலே  நீங்க ஐந்து லட்சத்த சட்டுபுட்டுன்னு  ரெடி   பண்ணுங்கோ.  ரிஜிஸ்ரேஷன் செய்யறுத்துக்கான  அதிகாரத்த கூட பவர் ஆஃப் அட்டார்னி மூலம்  எனக்கே    தர்றதா  ரெண்டாவது  பையன் கிருஷ்ண்சாமி சொல்லிட்டு  இருந்தார்.

நபர்  2

நீங்க முன்னே   சொன்னதே எனக்கு  நல்லா கவனம்  இருக்கிறதுங்க. இந்த வீடு விலைக்கு  வருதுன்னு  சொன்ன உடனேயே எங்க  பெரிய  ஐயா என்ன  விலேன்னாலும் வாங்கிட னும்னு தீர்மானிச்சட்டாரு.  அவர் விரல்  சொடக்கினா பணம்  ரெடியாயிடும். 

அப்பொழுது  உள்ளே  இருந்து சுமார் 75  வயது ஆன மூதாட்டி,  நபர்  1  - ஐ   “கோபால்” என்று  அழைத்து “காபி  போட்டிருக்கேன்   எடுத்துக்கோ”  என்கிறார்.
வயதானாலும் நல்ல திடகாத்திரமான உடம்பு.  எவ்வித சலனமும் இல்லாத முகம்.  

நபர்  -2   அந்த அம்மாவிடம் பேச எத்தனித்தபோது, “எல்லாம் கோபால்  பாடு  என்  பிள்ளங்க பாடு.  எங்கிட்ட அத பத்தி ஒன்னும்  பேச வேண்டாம்என்று  கறாரக  கூறிவிட்டு உள்ளே மறைகிறார்.

நபர் -2 சற்று  பயத்துடன்  கோபாலைப் பார்க்க,  கோபால் நான் தான் உங்கிட்ட முதல்லயே சொன்னேனே.  எதுக்காக அனாவசியமா அவங்க கிட்ட வாய்  கொடுத்தேஎன்று  கடிந்து கொண்டார். பிறகு  கொல்லைப்புரத்தில்  உள்ள வெற்று இடத்திற்கு  வருகிறார்கள்.

அப்பொழுது  கோபால் நபர் -2  விடம்அந்த அம்மாவிற்கு  நான்கு  பசங்க.  பெரியவன் 
பட்டாபிராமன்.  மத்திய  அரசாங்கத்துலே டெல்லிலே  கூடுதல்  செக்ரடரியாக இருக்கிறார்.  இன்னும் ஐந்து வருஷத்திலே  ரிடையர் ஆகப் போகிறார்.   ரொம்ப  நல்ல சுபாவம்.  ரெண்டாம்  பிள்ளை  கிருஷ்ணசாமி சார்ட்டர்ட்  அகௌண்டெண்ட்.  திருச்சியிலே  ப்ராக்டிஸ்.  ரொம்ப  புத்திசாலி.  ஆனா கறார் பேர்வழி.  மூன்றாவது  பிள்ளை  பெரிய  நரம்பியல் டாக்டர்.  அவர் யு.ஸ்-லெ இருக்கார்.  இந்த வீட்டை  விக்கறதுபத்தி எந்த விதமான அபிப்பிராயமும்  இல்லை.  எல்லோரும்  எப்படி சொல்கிறார்களோ அப்படியே நடக்கட்டும்  என்கிற சுபாவம்.

நபர் – 2

நாலாவது  பையன்  என்ன  பண்றான்.

கோபால்

அவனத்தான்  என்னால  புரிஞ்சிக்கவே முடியல.  என்னமோ  கதை  கவிதை  ஓவியம்னு  ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கான்.   எப்பவாவது  இங்கே வந்து ஒரு  அரை நாள்  அம்மா வோட இருந்துவிட்டு ஊர் சுத்தப்  போயிடுவான். ரொம்ப  தன்னிச்சையான பேர்வழி.  
பட்டாபி,   கிச்சாமி  இவங்களோடதான்   எனக்கு  பழக்கம்  ஜாஸ்தி.  இந்த காலத்து  சிறுசுகளை  எங்கே  புரிஞ்சிக்க முடிகிறது. 

நபர்  - 2

இந்த அம்மா  ஏன்  இந்த வயசுலே இம்மாம் பெரிய  வீட்லே ஒண்டியாக  கிடக்குது. 

கோபால்

அந்தம்மாவ பத்தி  பேசறதுன்னா  நாள் முழுக்க பேசிக்கிட்டே  இருக்கலாம்.  அவங்க எதிர்பாக்கற டிசிப்ளீன்  எதார்த்தம்  எல்லாம் அந்த  அம்மாவோட புருஷன் ஒத்தராலத்தான்  கடைபிடிக்க  முடியுன்னு  நினைக்கிறேன்.   அவர்  போயி  ஒரு  மூணு வருஷம் ஆயிருக்கும். அதுக்கு  அப்புறம்  அந்த அம்மா யாரோடயும்  சரியா பேசறது கூட இல்லை.    அதுக்காக  ஒரு  விரக்தியோ  கவலையோ அவங்க  முகத்திலே  தெரியற்தில்ல.   அவங்க  மெய்யா லுமே  எப்படி  இருக்காங்களோ  என்னமோ?   எனக்கு  என்னமோ அந்த ஐயாவையே  நினச்சு  காலம்  தள்ளறா மாதிரி படறது.   பசங்க  வீட்டுலே  எல்லாம் ஒரு  வாரத்துக்கு  மேலே  தங்க மாட்டாங்க.   மரியாதைய  காப்பாத்திக்க  ஒண்டியாகவே காலம்  தள்ளறாங்க. சரி சரி  நேரம்  ஆயிடுத்து. நாள மறு  நாள்  என்னை வந்து  பாரு.

நபர் -  2 போக  கோபால் உள்ளே சென்று மாமி, போய்ட்டு வரேன்  என்று சொல்லமாமி  நாளக்கி  எல்லாரும் வராங்களா.

கோபால்  உங்களுக்கு  தெரியாத மாதிரி  கேக்கறீங்களே”. 

மாமி  எனக்கென்னவோ  அவர்  பொழங்கிண்டிருந்த  இந்த வீட்டை  விலை பேசறது  அடியோட பிடிக்கல.

கோபால்  கட்ட போற ஃப்ளாட்லேதான்  உங்களுக்கு  ஒண்ணு கொடுக்கப்  போறாங்களே

மாமி  அத தூக்கி  உடப்புலே போடு

கோபால்   நல்ல  விலைக்கி இந்த இடத்த வாங்க முன்  வந்திருக்கும்போது அத விடறது  அவ்வளவு  உசிதம்  இல்ல

மாமி  பிள்ளையாண்டானுங்க   என்ன முடிவு  செய்யறாங்கன்னு  பாக்கலாம்

கோபால்  சின்னவருக்கு இவங்க எல்லாம்  வரப் போறது  தெரியுமா

மாமி அவன்  நண்பர்கள்  மூலமா  சொல்லி  அனுப்பிச்சேன்.   நாளக்கி  எப்படியும்  வந்துவான்னு நினைக்கிறேன்.

கோபால்  நாளைக்கு  மாமிக்கு   கொண்டாட்டம்  தான்.   பசங்க  வராங்கன்னா சும்மாவா

மாமி  நாளைக்கு  கொண்டாடிண்டா,  நாளன்னிக்கி ஒண்டியா  திண்டாட வேண்டியது தான் .

(காட்சி-2...நாளை)

25 கருத்துகள்:

 1. முதல் காட்சியே விறு விறு விறுனு இருக்குங்கய்யா!!! என் தந்தையும் ஒரு நாடக நடிகர்தான்!!!! நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் தந்தை நாடக் நடிகரா?உங்களுக்கும் அத்திறமை இருக்க வேண்டுமே?
   நன்றி பூபகீதன்

   நீக்கு
 2. அப்ப நாளைக்குத் தான் எனக்கு அந்த
  சின்னவர் ரோல் கொடுத்து இருக்கீங்களா?

  பரவாயில்ல... எதுனாச்சும் எங்கனாச்சும் ஒரு
  சினிமாவிலே இல்ல ஒரு சீரியல் னாச்சும்
  நடிக்கணும் அப்படின்னு ஒரு ஆசை மனசுலே எங்கயோ
  ஓட்டிகிட்டு இருக்குதுல்லையா...

  வசனத்த ஒரு பாட்டா எழுதி வச்சுடுங்க...

  பாடி முடிச்சப்பறம் ஒரு ஸ்ட்ராங்கா காபி ...
  கேட்கவேண்டாம் கொடுக்காமலா இருப்பீங்க?

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு வேற ரோல் ஃப்ளாஷ் பேக்கில் வருகிறது!
   காப்பியென்ன காப்பி?டிஃபன்,சாப்பாடு,மாலை கொறிக்க எல்லாம் உண்டு!
   நன்றி ஐயா

   நீக்கு
 3. அந்நாளைய நினைவுகளை நினைவுகூர்ந்து, பகிரத் தொடங்கியதறிந்து மகிழ்ச்சி. நன்றி.

  பதிலளிநீக்கு
 4. மாமியிடம் எல்லாப் பதில்களும் உள்ளன...

  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 5. நாடகத்தை தொடர்கிறேன் ஸூப்பர் தொடக்கம்

  பதிலளிநீக்கு
 6. நிச்சயம் அந்த வீட்டை பிள்ளைகள் விற்கமாட்டார்கள் என நினைக்கிறேன். பார்ப்போம் நாடகம் அப்படி போகிறது என்று. தாங்கள் ஒரு சிறந்த நடிகர் எனத் தெரியும். தங்களுக்கு இதில் எந்த பாத்திரமோ?

  பதிலளிநீக்கு
 7. உடைப்பிலே போடு ...ஒரு வார்த்தையில் உள்ளக் குமுறல் வெளிப்பட்டு விட்டது !

  பதிலளிநீக்கு
 8. நாடகத்தின் தொடக்கமே அருமை!
  த ம 7

  பதிலளிநீக்கு
 9. கண்முன் காட்சிகள் விரிகிறது. பாவம் மாமி இருக்கும்வரை வீடு இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. நாங்க இருவருமே கல்லூரி காலத்துல நாடகம் எழுதி, இயக்கி நடித்து என்று ...இப்போது கூட ப்ளாக் ஆரம்பித்த பொழுதில் ஒரு நாடகம் எழுதியது பதிவாகப் போடாமல் தயக்கம் தான் காரணம்...

  நீங்க அருமையா எழுதி போட்டுட்டீங்க.....முன்னோடியாக ...

  அந்த வயதான அம்மா இருக்கும் வரை வீடுவிற்கப்படாமல் இருந்தால் நல்லது...தொடர்கின்றோம்...

  பதிலளிநீக்கு
 11. விறுவிறுப்பான தொடக்கம். நாளைக்கான காத்திருப்பில் இப்போதிலிருந்தே.......

  பதிலளிநீக்கு
 12. நாடகத்தமிழை ரசித்தேன்! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு