தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 26, 2015

தூங்காவனம்!



வனம் என்றாவது தூங்குமோ?

அங்கு மனிதர் வசிப்பதில்லை

எனவே தூங்கும் தொல்லையில்லை

இரவின் இருளிலிலும்

மரங்களைக் கிழித்துச் செல்லும் காற்றால்

சலசலக்கும் மரங்கள்

அம்மரங்களுக்குத் தூக்கம் என்று ஒன்று உண்டோ?

தூங்காத மரங்கள்

தூங்குமூஞ்சி மரங்களாயினும்

வனத்தில் தூங்குவது சாத்தியமில்லை!

இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்

இரைக்காகக் காத்திருக்கும் மிருகங்கள்

இவை தூங்குவதில்லை

காங்க்ரீட் வனத்தில் தூக்கம் நிச்சயம்

பசித்தால் தூக்கம்,உண்டால் தூக்கம்

சோம்பலில் தூக்கம்,உழைப்பால் தூக்கம்

இரவில் தூக்கம்,பகலில் தூக்கம்

ஆனால் மரங்கள் அடர்ந்த வனம் என்றும்

தூங்காவனம்தான்!

பெண்ணா.பேயா?



தூக்கம் வரவில்லை.

கடிகாரத்தைப் பார்க்கிறேன்.

மணி 3.

சன்னல் வழியாக வெளியே பார்க்கிறேன்.

காலனியைச் சுற்றிய பாதையில் இரவு முழுதும் விளக்குகள் எரியும்.

இன்று என் வீட்டின் பின் இருக்கும் விளக்கு எரியவில்லை.

ஆனால் லேசான நிலவொளி இருக்கிறது.

கதவைத் திறந்து வெளியே வருகிறேன்.

முன்பெல்லாம் வேப்ப மரம்,தென்னை மரம் எனப் பல மரங்கள் இருக்கும்.

இப்போது  நாகலிங்கம் தவிர எதுவும் இல்லை.

கான்க்ரீட் தளம்தான்.

சரி,கொஞ்ச நேரம் நடக்கலாம் என எண்ணி நடக்கத் தொடங்குகிறேன்.

சிறிது தூரம் சென்றதும் பாதை இது புறமாகத் திரும்பும்.அது வரை நடந்து விட்டேன்.

மறு கோடியில் யாரோ நிற்பது போல் தெரிகிறது.

என்னை மாதிரியே தூக்கம் வராத எவரோ என எண்ணுகிறேன்.

மேலே செல்லாமல் அங்கேயே நின்று யார் என உற்றுப் பார்க்கிறேன்.

ஒரு பெண்!

திடீரென்று நாடகத்தில் அடிப்பது போல் அவள் மீது வெளிச்சம் அடிக்கிறது.

வெண்மை நிற உடை.

விரித்துப் போட்ட கூந்தல். 

கைகளில் எதையோ வைத்து உருட்டிக் கொண்டிருக்கிறாள்.

அந்த தூரத்திலும் எனக்குத் தெரிகிறது யாரோ புதியவள்.

எங்கள் காலனிப் பெண்ணல்ல.

இரவுக் காவலாளி யாரையாவது அழைத்து வந்து விட்டானோ?

இதெல்லாம் வேறு நடக்கிறதா?

அருகில் சென்று பார்க்கலாமா?

ஓரடி முன் எடுத்து வைக்கிறேன்.

ஏதோ தடுக்கிறது 

அப்போது அவளே முன்னேறி வருவதைப் பார்க்கிறேன்.

திடீரென்று  ஒரு பயம் என்னை ஆட்கொள்கிறது.

நாலடி பின் நகர்ந்து நாகலிங்க மரத்தடியை அடைகிறேன்.

காலையில் பூக்கத் தயாராக இருக்கும் ஒரு பூவைப்ப் பறிக்கிறேன்.

அவள் வந்து கொண்டிருக்கிறாள்…கைகளை விரித்த படி.ஒரு அணைப்புக்குத் தயராக.

அந்தப் பூவை அவள் மீது தூக்கி எறிகிறேன். 

பூ அவள் மீது விழுந்ததும் ஒரு விகாரமான ஓலி எழும்புகிறது அவளிடம்.

அப்படியே பற்றி எரிகிறாள்.அவ்வளவுதான் அங்கு எதுவும் மிச்சமில்லை.

ஒரு துர்நாற்றம் மட்டும் பரவுகிறது.

“ஓம் நமச்சிவாய” சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

வேர்வை வெள்ளம். 

எங்கோ ஆழ்வது போன்ற உணர்வு.

கண் விழிக்கிறேன்.

உடலெல்லாம் வேர்வை.

கனவுதானா?

மணியைப் பார்க்கிறேன் 

3 மணி.

சன்னல் வழியே வெளியே பார்க்கிறேன்.

மெல்லிய நிலவொளி தவிர வேறு வெளிச்சம் இல்லை.

என்ன பைத்தியக்காரக் கனவு!

வெளியே போகிறேன்

நடக்கத் தொடங்குகிறேன்

சிறிது தூரம் சென்றதும் பாதை இது புறமாகத் திரும்பும்.

அது வரை நடந்து விட்டேன்.

மறு கோடியில் யாரோ நிற்பது போல் தெரிகிறது!
……………............
……………...............
.....................! !






செவ்வாய், மே 12, 2015

அம்மா இங்கே வா வா!

அம்மா இங்கே வா வா

ஆட்சி செய்ய வா வா

இரட்டை விரலைக் காட்டு

ஈசன் அருளைப் போற்று

உலகம் வியந்து பார்க்க
 

ஊரோர் மகிழ்ந்து நோக்க
 

எங்கள் சாமி குமரன்
 

ஏமாற்றாத அமரன்
 

ஐயம் இன்றிச் சொல்வேன்
 

ஒன்றே இன்று லட்சியம்
 

ஓடும் பகைகள் நிச்சயம்
 

ஔடதம் போன்றதுன் ஆட்சி.
 

அஃதே உந்தன் மாட்சி.
******************************
(இது எப்படி இருக்கு?!)

செவ்வாய், ஏப்ரல் 21, 2015

பெண் அழகிய தேவதையா,சூனியக்காரக் கிழவியா?



ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களின்  சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் .நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே

வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விடை சொன்னால்தான் திருமணம் எனச் சொல்லி யிருந்தாள்.கேள்விஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்”.

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை.கடைசியாக  சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்அவள் சொன்னாள்விடை சொல்கிறேன்.  அதனால்அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்”

 அவன் சொன்னான் “என்ன கேட்டாலும் தருகிறேன்”

அவள் சொன்னாள்”தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் மற்ற மன்னனிடம் சொல்லி அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது;இவனுக்கு நாடும் கிடைத்தது.

கிழவியிடம் வந்தான்  வேண்டியதைக்கேள் என்றான்.

அவள் கேட்டாள்”நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்

அவள் சொன்னாள்.”நாம் தனியாக இருக்கும் போது கிழவியாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;தனியே இருக்கும்போது அழகிய பெண்ணாக இருந்தால் வெளியே செல்கையில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன்.எது உன் விருப்பம்?”

அவன் யோசிக்காமல் சொன்னான்”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீதான் எடுக்க வேண்டும்”

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!”

ஆம்!

பெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல் படுங்கள்!

(சுகி சிவம் சொல்லக்கேட்டது)

செவ்வாய், ஏப்ரல் 14, 2015

வா மன்மத,வா!





அழகாய் ஆடி அசைந்து வருகிறது ரதம்
பட பட வெனப் பறக்கிறது மீன் கொடி
அழகான வாலிபன் அவன் ரதத்தினில்
கையிலோர் வில்லுமுண்டு,கரும்பாலே
வரிசையாய் வண்டுகளே நாணாக
அம்புறாத்துணியினில் ஐந்து பாணங்கள்
அத்தனையும் மலர்க்கணைகள்
தாமரை,அசோகம்,மா,முல்லை,நீலோத்பலமென
வந்து விட்டான் அவன்,இது அவன் ஆண்டு
இளைஞர்களே,இளைஞிகளே,தயாராயிருங்கள்
பாணங்கள் உங்கள் நெஞ்சைத்துளைக்கும்
ஏனெனில் இது அவன் ஆண்டு
காதலில் நீர் விழுவது திண்ணம்
விழத்தான் முடியும்,வீழ்த்துபவன் அவன்
எழ முடியுமா மீண்டும்,இறைவனுக்கே முடியவில்லை!
மன்மத வருக!மகிழ்ச்சியைத் தருக!!

அனைவருக்கும் இனிய மன்மத ஆண்டு வாழ்த்துகள்.

காமன் கணையின் தாக்கம் பற்றிய ஒரு சித்தர் பாடல் உங்களுக்காக---

மாமன் மகளோ மச்சினியோ நானறியேன்,
காமன் கணையெனக்கு, கனலாக வேகுதடி,
மாமன் மகளாகி மச்சினியும், நீயானால்
காமன் கணை மூன்றும், கண் விழிக்க வேகாவோ.