தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 10, 2015

சோம்பேறித் தீபாவளி!



இன்றுகாலை,வழக்கம்போல் ஐந்து மணிக்கு எழுந்து,சிறு தூறலைப் பொருட் படுத்தாமல்,சிறிது நேரம் நடைப் பயிற்சியை முடித்து,பால் வாங்கி வந்து,காபி தயார் செய்து குடித்து விட்டு, அம்மாவுக்கும் கொடுத்து விட்டு ,மற்ற காலைக்கடன்களை முடித்து விட்டு,வாசலில் வந்து பார்க்கும்போது ,எங்கள் காலனியில் இருக்கும் 37 குடியிருப்புகளில்,காலியாக உள்ள இரண்டு, இஸ்லாமியர் இருக்கும் ஒன்று தவிர மீதி அனைத்திலும் தீபாவளி கொண்டாடுபவர்கள் இருக்கையில் எநத வீடுமே திறக்கப்படாத நிலையில்,இருட்டிலேயே இருப்பதுஎனக்கு அதிர்ச்சியைத் தர,என் மனம் பழைய காலத்தை நாடியது

அந்தக் காலத்தில் என் அம்மா காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து .முதல்நாளே பள பளக்கத் தேய்த்து வைத்த தவலையில்,விறகு அடுப்பில். வெந்நீர் போட்டு அதன் பின் புதுத் துணிகளை எடுத்து வைத்து ஏற்பாடுகள் செய்யும் போது   யாரும் எழுப்பாமலே நாங்கள் எழுந்திருக்க (தூங்கினால்தானே,எழுந்திருக்கும் பேச்சு;நாளை வெடிக்கும் பட்டாசுகளைப் பற்றிய சிந்தனையில் முதல்நாள் உறக்கம் ஏது?) , எழுந்தவுடன் முதலில் ஒரு அணுகுண்டோ,லட்சுமி வெடியோ வெடித்து விட்டு வந்து,தலையில் அம்மா எண்ணை வைக்க,ஸ்நானம் செய்து விட்டு வந்து .அம்மாவி டமிருந்து புதுத் துணியை வாங்கி அணிந்து கொண்டு, ஆண்டவனையும், அம்மாவையும் வணங்கி, கொஞ்சம் இனிப்பும் ,லேகியமும் சாப்பிட்டு விட்டு ,அவசரமாக வெடி வெடிக்க ஆரம்பித்து நடு நடுவே உள்ளே வந்து அம்மா தயார் செய்து கொண்டிருக்கும் சூடான பஜ்ஜிகளைத் தின்று கொண்டு,அந்த எண்ணையையைப் புதுச் சட்டையிலேயே துடைத்து,எல்லா வெடியும் வெடித்து முடித்துக் கையில் ஒட்டியிருக்கும் வெடி மருந்துடன் உள்ளே வந்து,ஒரு சுற்று பலகாரங்களையும்,லேகியத்தையும் சாப்பிட்டு விட்டு ரேடியோவில் மங்களமாக நாமகிரிப் பேட்டையோ,காருகுறிச்சியோ நாகஸ்வரம் வாசித்துக் கொண்டி ருக்க, அடுத்த வீட்டு ராமுவோ,எதிர்த்தவீட்டு சோமுவோ நம்மை விட அதிக பட்டாஸ் வெடித்தானோ என கவலைப்பட்டு,அடுத்த தீபாவளிக்கான திட்டங்களை அப்போதே தீட்ட ஆரம்பித்த-”அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!”....(ஹப்பா!கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்!)

ஆனால் இன்றோ,  தீபாவளி அன்றும் காலை 6.30-பல்தேய்க்கும் பெண்கள்,தூக்கக் கலக்கத் துடன்  பெரியவர்கள்,இன்னும் உறங்கும் சிறுவர்கள்……எல்லோருமே சோம்பேறிகளாகி விட்டார்கள்.தீபாவளியின் அந்தத் திரில்,உற்சாகம்,எவரிடமும் இல்லை.எட்டு மணிக்கு நான்  என் பூஜையெல்லாம் முடித்து,எங்கள் காலனிப் பிள்ளையாரைக் கும்பிட்டு வரும்போது ஒரு பெண்மணியைக் கேட்டேன்புதுத் துணி அணியவில்லையா?

சிரித்தவாறு சொன்னாள்இன்னும் குளிக்கவே இல்லையே

இதுதான் இன்றைய தீபாவளி!

நண்பர்கள் அனைவருக்கும்,அவர்கள் குடும்பத்தினருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துகள்.

21 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. எத்தனை சுவாரஸ்யங்களை இழக்கிறார்கள் இவர்கள்?
      நன்றி ஐயா

      நீக்கு
  2. உண்மைதான்.

    கீதா: 6 வருடங்கள் முன் வரை மாமியார் வீட்டில்தான் தீபாவளி. பட்டாசு எதுவும் வெடிப்பதில்லை என்றாலும் எல்லோரும் அங்கு கூடிவிடுவோம். மாமியார் நலுங்கிட்டு எண்ணை வைக்க, குளித்துவிட்டு, லேகியம் எல்லாம் மாமியார் தர, மாமியாரையும் மாமனாரையும் புதுத் துணி உடுத்து விழுந்து கும்பிட்டுவிட்டு, மத்தாப்பு மட்டும் கொளுத்திவிட்டு அதுவும் ஒன்றுதான்..எல்லோரும் கூடிப் பேசி, சமைத்து, அருகில் இருக்கும் உறவினர் வீடு சென்று பண்டம் மாற்றும் முறை போல இங்கிருந்து அங்கு பலகாரம் அங்கிருந்து பலகாரம் ...என்றிருந்த வீடு இப்போது வெறிச். அவரவர் அவரவர் வீட்டில்...அதனால் நீங்கள் கொண்டாட்டங்கள் இல்லை. ஆனால் சீக்கிரம் எழுந்து இறைவனுடன் தினமும் பேசுவதுண்டே அதெல்லாம் முடித்தாயிற்று..

    ரொம்ப தாமதமான தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்ல மறந்த ஒன்றை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.-பலகாரப் பரிமாற்றம்; இன்று இது முழுவதும் நின்று போய்விட்டது;ஒவ்வொரு வீடும் ஒரு தீவாகி விட்டது;வருத்தப்படும் நிலை!(இன்று ஒருவர் மட்டும் இந்த இரு முதியவர்கள் மீது இரக்கப்பட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்கள்!)

      மிக்க நன்றிம்மா!

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான்! கிராமங்களில் விடிய விடிய பட்டாசு வெடிப்பார்கள்! இன்றோ விடிந்தும் வெறிச்சோடிக் கிடக்கிறது. பத்துமணிக்கு மேலதான குளியலே நடக்கிறது! பலகார பரிமாற்றம் சுத்தமாய் கிடையாது. டீவியெ கதி என்றிருக்கிறார்கள். எங்கள் ஊரில் மழையின் காரணமாக இரண்டு நாளாய் சரிவர மின்சாரம் இல்லை! இந்த பின்னூட்டம் கூட பேட்டரி கரண்டில் எழுதுகிறேன்! அதனால் இந்த தீபாவளி சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட்டது!

    பதிலளிநீக்கு
  5. நிஜம்தான் ஐயா! நானும் 6 மணிக்குதான் எழுந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  7. தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    ஆம் ..ஊரே தூக்கத்தை விட மனமின்றி ......
    நாங்கள் இருவர் மட்டுமே என்றாலும் நான் எப்பவும் போலே சீக்கிரம் எழுந்து ....தூக்கம் வருவதில்லை ...குழந்தைகளுக்கும் மருமகளுக்கும் வாழ்த்து அனுப்பிவிட்டு ....பூஜை செய்து ... தீபாவளி ஆச்சு

    பதிலளிநீக்கு

  8. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? இன்றைக்கு இருக்கும், இனி வரப்போகும் இயந்திர உலகில் தீபாவளியை கொண்டாட நேரம் இருக்குமோ என்னவோ. இது காலத்தின் கோலமே நாம் பழைய நினைவுகளை அசை போடவேண்டியதுதான். இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. உண்மை தான் ஐயா...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  10. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  11. 100க்கு100 உண்மைதான் ஐயா தாங்கள் சொல்வது இது எதிர் காலத்தில் இன்னும் இதைவிட மோசமான நிலைக்குப் போகும் என்பதும் உண்மையே.

    18 வருடங்களுக்குப் பிறகு கடந்த வருடத் தீபாவளிக்கு ஊருக்கு வரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது அதிக எதிர் பார்ப்புகளுடன் ஆசையாக வந்தேன் காரணம் 18 வருடமாகி விட்டதே... குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் தேவகோட்டையில் ஒன்றிணைத்தேன் மணி 10.00 ஆகியும் பிள்ளைகள் குளிக்க வேண்டுமே என்ற சிந்தனையில்லாமல் உறங்குகின்றன.. எனது அம்மா மட்டும் கத்திக்கொண்டே இருக்கின்றார்கள் வழக்கம் போல 03.00 மணியிலிருந்து நானும் எவ்வளவோ சொல்லியும் கத்தியும் பிரயோசனம் இல்லை நல்லநாளும் அதுவுமாய் குழந்தைகளுடன் சண்டை வேண்டாமே என்று ஒதுங்கி விட்டேன்

    மனது வெறுத்து விட்டது தீபாவளிக்கு வராமலேயே அபுதாபில் இருந்து கொண்டு பழைய நினைவுகளுடன் சந்தோஷப்பட்டு இருக்கலாமோ என்று தோன்றியது.
    வெடி போடுவது எனக்கு சிறிய வயதிலிருந்தே பிடித்தமானது விதவிதமான கோணத்தில் வெடிப்போடுவேன் சகதிக்குள் சொருகி வைத்து, மரக்கிளைகளில் கட்டி வைத்து, அடுத்த வீட்டு மண்பானையில் கவிழ்த்து வைத்து... அது ஒரு கனாக்காலம்.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  12. இன்றைய நிலைமை இப்படித்தான் இருக்கு சார். சரியாக சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  13. அறியாத வயசுலே அதெல்லாம் சரி ,இப்போ தீபாவளி வந்த கதையைக் கேட்டா ,கொண்டாடவே மனசு வரலே :)

    பதிலளிநீக்கு
  14. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. அம்மா நலமா தல! இன்று தீபாவளி சோம்போறியாகிவிட்டது காலச்சூழ்நிலை என்றும் கொள்ளமுடியும் ஆனாலும் பட்டாசு போட்ட காலம் போல இன்று இங்கும் இல்லை. ஐயாவுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. இனிய நினைவுகள். அப்போதெல்லாம் அப்பா மூன்று மணிக்கே எழுப்பி விடுவார். அம்மா தலையில் எண்ணை வைத்து விட அதிகாலையிலேயே குளித்து புத்தாடை உடுத்தி தீபாவளி.

    தலை நகர் வந்த பிறகு இங்கே மாலையில் தான் தீபாவளி. காலையில் எழுந்திருக்க வேண்டியதில்லை. எழுந்தால் ஊரே குளிரில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும். வெடி வைத்தால் என்னாவது!

    சென்ற வருடமும் தீபாவளிக்கு ஊருக்கு வர இயலவில்லை. அடுத்த வருடம் தான் தீபாவளி அங்கே தான்..... :)

    உங்களுக்கும் அம்மாவிற்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. வெளிநாட்டில் வசிக்கும் நாங்கள் எல்லாம் Frozen In Time. இன்னும் அப்படியே தான் இருக்கும் என்று நினைக்கும் ஒவ்வொரு நினைப்பும் பொய்யாகும்போது, எப்படி இதையெல்லாம் இழக்கத் துணிந்தார்கள் என்றே தோன்றும்! மறைந்த பல நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று!

    பதிலளிநீக்கு