தொடரும் தோழர்கள்

புதன், ஜூலை 31, 2013

மீண்டும் ஸ்வாமி பித்தானந்தா!



சைத்தான் ஒரு முறை தன் தொழிலை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்கத் தீர்மானித்தான்.

அவனது தொழிற்கருவிகளையெல்லாம் குறைந்த விலைக்கு விற்பதாக அறிவித்தான்.

அனைத்துக் கருவிகளும் பார்வைக்கு வைக்கப்பட்டன

ஆணவம்,காமம்,வெறுப்பு,கோபம்,பொறாமை ,பேராசை,அதிகார வெறி இப்படிப் பலப்பல..

ஒரு கருவிபயன்பாட்டால் தேய்ந்து போன ஒரு கருவிக்கு மட்டும் சைத்தான் மிக அதிக விலை கேட்டான்.

ஒருவர் கேட்டார்”அது என்ன?”

”இதுவா?ஊக்கமின்மை,மனச்சோர்வு ,நம்பிக்கையின்மை!” என்றான் சைத்தான்

“அதற்கு மட்டும் ஏன் அதிக விலை?”

ஏனென்றால் இதுதான் எனக்கு மிக உபயோகமாக இருந்திருக்கிறது,இதன்மூலம் எந்த மனிதனின் இதயத்துக்குள்ளும் புகுந்து அவனை மனச்சோர்வுக்கும் அதைரியத்துக்கும் ஆளாக்க என்னால் முடியும்.அவன் அவ்வாறு ஆகிவிட்டான் என்றால் நான் நினப்பதை யெல்லாம் அவனைச் செய்ய வைக்க என்னால் முடியும்.அநேகமாக இந்தக் கருவியை, மற்றவற்றைக்காட்டிலும், எல்லா மனிதர்கள் மீதும் பயன்படு த்தியிருக்கிறேன்.எனவேதான் இது தேய்ந்து போயிருக்கிறது.”

 ஆம் அன்பர்களே!நம் முயற்சியில் வெற்றி பெறவில்லை,நம் இலக்கை எட்டவில்லை என்றால்,எளிதில் மனச்சோர்வடைகிறோம்.தைரியத்தை இழக்கிறோம்.கடவுள் மீதான நம்பிக்கையை ,நம் தன்னம்பிக்கையுடன் சேர்த்து இழக்கிறோம்.

அந்த  நிலையில் வெற்றி பெற்றவனைப் பார்த்து பொறாமை வருகிறது;வெறுப்பு வருகிறது; பிறர்மீதெல்லாம் கோபம் வருகிறது.நம்பிக்கையற்றுப் போகிறது.நாமும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் தகாத வழியில் கூடச் செல்ல எண்ணுகிறோம்.

இப்படி எல்லா அவலங்களுக்கும் நமது அதைரியமும்,மனச்சோர்வும் வழி வகுத்து விடுகின்றன.  எனவே எப்போது நம்பிக்கை இழக்காதீர்கள்.எதிர் மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.என்னால் முடியும் என்ற உறுதியுடன்    முயற்சியைத் தொடருங்கள்.

வெற்றி நிச்சயம்.

(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)


செவ்வாய், ஜூலை 30, 2013

என் அரசியல் அனுபவம்!


இன்று பல பதிவர்கள் அரசியல் பற்றி,அரசியல்வாதிகள் பற்றியெல்லாம் அருமையாக எழுதுகிறார்கள்;விமர்சிக்கிறார்கள்.

உண்மையில் எனக்கு இன்றைய அரசியல் புரிவதில்லை;அதை அலசும் அறிவும் எனக்கில்லை.

ஆனால் நானும் ஒரு காலத்தில் ஒரு அரசியல் கட்சிக்காகப் பிரசாரம் செய்தேன். தொண்டை கிழியக் கத்தினேன்.அந்தக் கட்சியும் வென்றது.

அந்த அனுபவத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டாமா?

இது நடந்தது 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில்.

அப்போது எனக்கு 7வயது முடிந்து 8ஆம் வயது நடந்துகொண்டிருந்தது.

சாத்தூரில் எங்கள் குடும்பம் வசித்து வந்தது.

அந்த ஆண்டு நடந்த தேர்தலில் சட்டசபைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் திரு.எஸ்.ராமசாமி நாயுடு அவர்களும்,பாராளுமன்றத்துக்குத் திரு. காமராசர் அவர்களும், அபேட்சகர்கள் (அந்நாளில்,சட்டப் பேரவை, நாடாளுமன்றம், வேட்பாளர் என்ற சொல் வழக்குகள் கிடையாது!)

எதிர்க்கட்சி என்று எதுவும் கிடையாது.எதிர்த்து நின்றவர்கள் சுயேட்சை அபேட்சகர்கள்.

என்.ஆர்.கே.கே.ராஜரத்தினம் என்ற தொழிலதிபர்,கூஜா சின்னத்திலும், பா.ராஜாமணி என்பவர் பூ சின்னத்திலும் எதிர்த்துப் போட்டியிட்டனர்.

கான்கிரஸ் கட்சியின் சின்னம்-ரெட்டைக் காளை!

இது எப்படி நடந்ததோ தெரியாது!நாங்கள் வசித்த பகுதியில் இருந்த காங்கிரஸைச்  சேர்ந்த இளைஞர்கள்,என்னைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தினர்.

விளையாட்டாக ஆரம்பித்தார்களோ என்னவோ,தெரியாது.ஆனால் எனது பிரசாரம் மக்களின் ஆதரவைப் பெறவே என்னையே தினமும் முக்கியப் பிரசாரகனாக ஆக்கி விட்டனர்.

கையில் மெகாஃபோனுடன், தினம் தெருத்தெருவாகச் சென்று.”vote for congress, எஸ்.ஆர்.நாயுடுவுக்கு ஓட்டுப் போடுங்கள்,உங்கள் ஓட்டு ரெட்டைக் காளைக்கே  என்ற
 கோஷங்களுடன்  என் பிரசாரம் சூடு பிடித்தது!

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,ராஜரத்தினத்துக்காக, காங்கிரஸை எதிர்த்து,என் அண்ணன்,என்னை விட 11 வயது மூத்தவர், தேர்தல் பணியில் ஈடுபட்டார்.

சாத்தூரின் எல்லா வீதிகளிலும் நான் அறியப்பட்ட ஒரு முகமானேன்!

ஹெட் மாஸ்டர் பேரனைப் பாரு எப்படிப் பேசுதுஎன்று எல்லோரும் வியந்தனர்!

காங்கிரஸ் வென்றது.

திரு எஸ்..ஆர்.நாயுடு அவர்கள் திறந்த காரில் சாத்தூர் வீதிகளில் வெற்றி ஊர்வலம் புறப்பட்டார். அங்கிருந்த தொண்டர்கள் சிலர் அவரிடம் என்னைப் பற்றிச் சொல்ல அவர் என்னையும் காரில் ஏற்றி விடச் சொன்னார்.

காரில் அவர் அருகில் நான் அமர்த்தி வைக்கப் பட்டேன்! வழியில் போடப்பட்ட மாலைகளில் சிலவற்றை அவர் என் கழுத்தில் அணிவித்தார்!

மக்கள் சில இடங்களில் அவருக்குக் குளிர் பானங்கள் வழங்கும்போது எனக்கும் வழங்கினார்கள்!  திருஷ்டி கழித்தார்கள்!

காரில் போகும் போதே எனக்கு உறக்கம் வர ஆரம்பித்தது!

சில தெருக்களைக் கடந்த பின் அவர் தொண்டர்களை அழைத்து ஏதோ சொல்ல,அவர்கள் என்னைக் காரினின்றும் கீழே இறக்கினார்கள்.சில தொண்டர்கள் என்னை மணி சங்கர் பவன் என்ற ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, இனிப்பு(மைசூர்பாகு),மற்றும் தோசையெல்லாம் வாங்கிக் கொடுத்தனர்.

இரவு வைப்பாற்று மணலில் நடந்த விருந்துக்கு நான் செல்ல இயலவில்லை (சிறுவனாயிற்றே, அந்தநேரம் உறங்கும் நேரம் அல்லவா?!!)

அமர்க்களமான அரசியல் ஆரம்பம் அங்கேயே நின்று விட்டது!



(தொடர்ந்திருந்தால்,இன்று குறைந்த பட்சம் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவாவது ஆகியிருக்க மாட்டேனா?!)

திங்கள், ஜூலை 29, 2013

அன்பைக் கொன்ற ஆணவம்!




உணர்ச்சிகள் பலவும்

ஒன்றாய் வாழ்ந்த ஒரு தீவு!

வருத்தம் ,கோபம், வெறுப்பு

வீறு கொண்டெழும் போது

வந்தணைத்து ஆறச் செய்யும் அன்பு!

வசந்தம் நிலவிய அத்தீவுதனில்

வந்ததே ஒரு நாள் பெரும் புயல்!

கடல்கோள் ஒன்று வந்து

காணாது போகும் நிலை தீவுக்கு!

உணர்வுகள் எல்லாம் பயந்தன

உரைத்தது அன்பு உன்னத வழி

ஓடம் ஒன்று செய்து ஓடிப்போகலாம்!

ஓடமும் தயார்,ஓடிச்சென்று ஏறின உணர்வுகள்

ஒன்று மட்டும் ஏறவில்லை!

திமிராய் அமர்ந்திருந்தது தீவிலே

ஆணவம் என் அவ்வுணர்வு

அன்பு சென்று அழைத்தது

அசையவில்லை ஆணவம்!

அனைத்தும் தப்பிச்செல்ல

அவை சொல்லியும் கேட்காமல்

ஆணவத்துன் சேர்ந்து அழிந்து  அன்பும்!

ஆம் அன்பு வாழவேண்டுமெனில்

ஆணவத்தைக் கொல்ல வேண்டும்!

உறவுகளில் புரிதல் வேண்டும் 

உன்னத நிலைக்கு விட்டுக் கொடுத்தல் வேண்டும்.

உணர்ந்து நடந்தால் அன்பு வெல்லும் 

ஆணவம் தோற்கும்,

அன்பே சிவம்!

ஞாயிறு, ஜூலை 28, 2013

ஹாலிடே ஜாலிடே!..சென்னையில் நான் வாங்கிய முதல் பல்ப்!



முன்பே சொல்லியிருக்கிறேன் என் சென்னைக் காதல் 1964 இல் தொடங்கியது என்று.

விவேகானந்தா கல்லூரி விடுதியில் குடி புகுந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன.

விளக்கு விசையைப் போட்டதும்,பல்ப் உயிரை விட்டு விட்டது.

வார்டனிடம் சொன்னேன்.

பல்பெல்லாம் நாங்களேதான் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டார்.

உடனே லஸ் சென்று,மின் சாதனக் கடையைத் தேடி ஒரு பிலிப்ஸ் 
ஆர்ஜெண்டா பல்ப் வாங்கி வந்து மாட்டினேன்.

அதுதான்  சென்னையில் நான் வாங்கிய முதல் பல்ப்!.... 

இது எப்படி இருக்கு?!..ஹி ஹி ஹி!

கோபித்துக் கொள்ளாதீர்கள்,

இதோ நீங்கள் எதிர்பார்த்த செய்தி…….

கிட்டத்தட்ட அதே காலம்தான்.

சென்னை தாம்பரத்தில் புதிதாக மணமாகி வந்த என் அக்கா கணவருடன் வசித்து வந்தாள்

ஒரு விடுமுறை நாளன்று அங்கு செல்ல விரும்பிப் புறப்பட்டேன்.

மயிலையில்;இருந்து தி நகர் சென்று மாம்பலம் ஸ்டேசனில் மின்சார ரயில் பிடித்துச் செல்ல வேண்டும் எனத் தெரிந்து கொண்டேன்.

தி.நகருக்கு 12 ஆம் நம்பர் பஸ்ஸில் செல்ல வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன்..

விடுதியிலிருந்து கென்னடி தெரு வழியாக லஸ் சர்ச் சாலை வந்து நிறுத்தத்தை அடையும்போதே ஒரு 12 ஆம் எண் பஸ் வருவதைப் பார்த்தேன்.

உடனே பஸ் கிடைத்தது என்ற மகிழ்வுடன் ஏறி நடத்துனரிடம்”ஒரு தி.நகர்” என்றேன்.

அவர் என்னைப் பார்க்காமலே சொன்னார்”அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்கிக்க”

நான் விழித்தேன் ஏனென்று தெரியாமல்.

அருகில் இருந்த ஒருவர் சொன்னார்”சார்!இது தி நகர் போகாது.மைலாப்பூர் போகுது.லஸ்ஸில் இறங்கிச் சாலையைக் கடந்து எதிர் ஸ்டாப்பில் நில்லுங்கள்.தி நகர் பஸ் வரும்!”

அவமானமாகப் போய் விட்டது.

லஸ்ஸில் இறங்கிக் கொண்டேன்.

இது பல்ப்!

ஆனால் சென்னையில் நடத்துனரின் அந்த அலட்சியம்,என்ன காரணம் என்றே சொல்லாமல் இறங்கு என மரியாதையின்றிச் சொன்ன விதம் வியப்பளித்தது. ஏனெனில் ,அது வரை நான் இருந்த தென் மாவட்டங்களில் அப்படிப் பழக்கம் கிடையாது.

இதுதான் சென்னை!

(ஆயினும் சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியவில்லை!)