தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூலை 26, 2013

ஒரு பகல் பொழுது அனுபவம்!



அனுபவங்கள் அவரவர் வயதுக்கேற்ற மாதிரியே அமைகின்றன;

அல்லது,வயதுக்கேற்ற மாதிரி அமையும் அனுபவங்களே நினைவில் நிற்கின்றன.

இரவு ,மாலை  அனுபவங்கள்  சொல்லி முடிந்தது.

இப்போது ஒரு பகல் பொழுது அனுபவம்.

இந்த அனுபவத்தை இப்போது சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!

நிச்சயம் வயதுக்கேற்ற அனுபவம்தான்.

அப்போது என் வயது 22-23.

எனில் அனுபவம் எப்படியிருக்கும்?!

திருச்சியில் இருந்த நாட்கள் அவை.

டி டி ஸி ஹாஸ்டலில் தனி அறை(வார்டன்!)

மாயவரம் லாட்ஜில் அருமையான சாப்பாடு;

வேலை இல்லாத நேரங்களில்  புலவர் கீரனுடன் உரையாடல்;

வாரம் ஐந்து திரைப்படம்;

படிப்பதற்கு இயான் ஃப்ளெமிங்

கவலையற்றுக் கழித்த  நாட்கள்.

ஒரு நேர்முகத் தேர்வுக்காக மெட்ராஸ் செல்ல வேண்டியிருந்தது

அப்போதெல்லாம் திருவனந்தபுரம்-சென்னை சூப்பர் எக்ஸ்பிரஸ் என்று ஒரு ரயில் உண்டு, காலை9-10 மணி அளவில் திருச்சியில் ஏறினால் மாலை சென்னை அடைந்து விடலாம்.

முன் பதிவு தேவையில்ல.

ஆனால் நான் சென்ற அன்று ரயிலில் கூட்டம் அதிகம்.

ஒரு பெட்டியில் ஏறிவிட்டேன்.

ட்கார இடம் இல்லை

என் பார்வையை மெதுவாக பெட்டி முழுவதும் செலுத்தினேன்.சுழன்று வந்த என் பார்வை அவளிடத்தில் வந்ததும் நிலை குத்தி நின்றது.அந்தக் கூட்டத்தில் அவள்  பளிச்என்று தனித்துத் தெரிந்தாள்-எனக்கு.

சராசரி உயரம்,ஆண்களைச்சுண்டி இழுக்கும் கவர்ச்சி ஏதுமில்லாத தோற்றம் பகட்டில்லாத புடவை,குறைவான அணிகலன்கள் ,மாநிறம்.ஆனால் என்னை ஈர்த்தது எது தெரியுமா?அவள் முகம்.சாந்தம் தவழும் அந்தத் தெய்வீக அழகு.மற்ற நாகரிக மங்கையர் போலன்றி மூக்கின் இரு புறமும் அவள் அணிந்திருந்த மூக்குத்திகள் .லட்சுமிகரமான தோற்றம்.எனக்கு ரவி வர்மாவின் லட்சுமியைப் பார்ப்பது போலிருந்தது.அந்த வினாடியிலேயே நான் வீழ்ந்து விட்டேன்.

நான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவளும் என்னைப் பார்த்தாள். கண்கள் கலந்த அந்த நொடியில் என் நாடி நரம்புகளில் எல்லாம் ஒரு மின் அதிர்ச்சி ஏற்பட்டது.விவரிக்க இயலாத ஒரு உணர்வு.நெஞ்சு பட,படஎன வேகமாக அடிக்கத் துவங்கிய்து.அவள் கண்கள் என்னும் கடலில் முழ்கி மூச்சுத் திணற ஆரம்பித்தேன். பலவந்தமாக என் கண்களை அவள் மீதிருந்து பிடுங்கி வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்தேன். யோசித்தேன்என்ன ஆயிற்று எனக்கு?இது வரை எந்தப்பெண்ணும் பாதிக்காத அளவு இந்தப்பெண் ஏன் என்னைப் பாதிக்கிறாள்”.

மீண்டும் என் பார்வை பெட்டியைச் சுற்றி வந்தது.எங்கும் இருக்கை இல்லாத நிலையில் சாமான்கள் வைக்கும் மேல் பலகை மேல் உட்கார முடிவு செய்தேன்.ஒரு துள்ளலில் மேலே ஏறி அமர்ந்தேன்.இளமையின் வேகம்.அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் தந்த எழுச்சி.மேலேறி அமர்ந்த பின் அவளைப் பார்த்தேன்.அவள் அவசரமாகத் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள்.நான் தெரிந்துகொண்டேன்-அவளும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் என்று.புரிந்துகொண்டேன்-அவளுக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் உணர்வுகளை        

மேலேறி அமர்ந்த பின் கையில் வைத்திருந்தஇந்துபத்திரிகையைப் பிரித்தேன்.படிப்பது போன்ற பாவனையில் அடிக்கடி அவளைப் பார்க்க ஆரம்பித்தேன். அவள் பார்வையும் அவ்வப்போது என் மீது விழுந்தது.நான் அவளைப்பார்க்கும் போதெல்லாம். அவசரமாத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் .(”யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்”). சிறிது நேரம் சென்று அவளுடன் வந்த சிறுமியிடம்  சொன்னாள் இன்னைக்கு பேப்பர் படிக்கவேயில்லை”

நான் என் கையில் இருந்த பத்திரிக்கையை மடித்து அதன் மேல் பகுதியில் என் பெயரை எழுதி அந்தச்சிறுமியிடம் கொடுத்தேன்படிச்சிட்டுக் கொடுக்கலாம்என்றவாறே .அவள் அதை வாங்கிப் பிரிக்காமலே மேலே எழுதியிருந்த என் பெயரைப் படித்தாள் .அவள் செவ்வாய் அசைவையே நான் கவனித்தேன்******** எம்.எஸ்ஸி.”கொஞ்ச நேரம் பேப்பரைப் புரட்டி விட்டு அந்த சிறுமியிடம் அவள் என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னாய் மெட்ராசில் பெரியம்மா இப்ப சொல்லிட்டிருப்பா-**** ரயில்ல வந்திட்டிருப்பாஎன்று”.அவள் பெயரை மிக நாகரிகமாக எனக்குத் தெரிவித்து விட்டாள். என்னில் பாதி அவள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.இது இருவர் வாழ்வின் முக்கியமான நாள் என உணர்ந்தேன்.எங்கள் பார்வைகள் மீண்டும் கலந்தன, பிரிந்தன,மீண்டும் கலந்தன.

இன்பமான ஒரு விளையாட்டு...

ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்ற போது பசியால் அழுத ஒரு குழந்தைக்குப் பால் வாங்கித் தர நான் சென்று திரும்புவதற்குள் வண்டி புறப்பட்டு விட ,நான் ஓடி வந்து ஏறும்போது சன்னல் வழியே தெரிந்த அவள் முகத்தில் எத்தனை கவலை;உள்ளே வந்த என்னைப் பார்த்தபின் எத்தனை நிம்மதி;என்ன கனிவு; என்ன பாராட்டு .இது போதுமே ஒருவாலிபனுக்கு, சாதனைகள் படைக்க.

சென்னை நெருங்கிக்கொண்டிருந்தது. பிரிய வேண்டிய நேரமும்தான்.இருவருமே அமைதி இழந்திருந்தோம்.பார்வைகள் பிரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம் .

சென்னை வந்து விட்டது.எல்லோரும் பரபரப்பாக இறங்க ஆரம்பித்தனர்.அந்த நெரிசலில் இற்ங்கும் வழியில் அருகருகே நின்றிருந்தோம் .மெல்லக் கேட்டேன்
மெட்ராஸில் எங்க?”  அவள் மெல்லிய குரலில் அவளின் பெரியப்பா பற்றிய விவரங்களைக் கூறும்போது பிளாட்பாரத்திலிருந்து எப்படியோ அவளைப் பார்த்து விட்ட அவள் உறவினர் பெயர் சொல்லி அழைக்க எங்கள் பேச்சு நின்றது.இறங்கிய பின் என்னை ஒரு முறை பார்த்துவிட்டு அவள் சென்று விட்டாள்,என் மனத்தையும் எடுத்துக்கொண்டு...........

(அவள் சொன்ன தகவலில் சைதாப்பேட்டை என்பது தவிர ஏதும் காதில் விழாத நான் மறு நாள் சைதாப்பேட்டை முழுவதும் தேடி அலைந்து சோர்ந்து போனேன்.அவளைப் பார்க்க முடியாமலே ஊர் திரும்பினேன்.).

டிஸ்கி:இது உங்க தங்கமணிக்குத் தெரியுமா என்ற வழக்கமான கேள்வியெல்லாம் பின்னூட்டத்தில் அனுமதி இல்லை!

34 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா.. எப்படி இருக்கிங்க. அம்மா நலமா இருக்காங்களா ?
    ரயில் சிநேகம் நினைவுகளை பிரியாமல் வைத்திருக்கிறது போலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே!
      சில ஆழப்பதிந்த நினைவுகள் அழிவதேஇல்லை சசிகலா!
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. ஒரு சினிமாவே எடுக்கலாம் போல இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையிலிருந்துதானே சினிமாக்கதையே எடுக்கிறார்கள் ராஜி!
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. இது கதையல்ல என நினைக்கிறேன். இப்போது போல் அப்போது கைப்பேசி இருந்திருந்தால் தொடர்பு கொண்டிருப்பீர்கள். ம்.ம். ‘இன்னார்க்கு இன்னாரென்று எழுதிவைத்தானே இறைவன் அன்று.’ என்று கவியரசு சொன்னது சரிதான்! அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. ரயில் சிநேகம் இணயாமல் இணைகோடுகளாய்...

    பதிலளிநீக்கு
  5. அப்போது குறள் எல்லாம் ஞாபகம் வந்திருக்காதே... ஹிஹி...

    இனிய ஞாபகம் என்றும் மறக்காது... வாழ்த்துக்கள் ஐயா...

    எங்கிருந்தாலும் வாழ்க...!
    உன் இதயம் அமைதியில் வாழ்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவளே ஒரு குறள்தானே!(கொஞ்சம் உயரம் கம்மி!) :)
      நன்றி தனபாலன்

      நீக்கு
  6. சுவையான பதிவு.

    படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

    இதுபோல நம் வாழ்க்கையோடு, ஏதோ ஒரு நாள், ஒருசில நிமிடங்களாவது சம்பந்தப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க! என வாழ்த்தி மகிழ்வோம்.

    ‘மறக்க மனம் கூடுதில்லையே’ http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html

    பதிலளிநீக்கு
  7. உங்களின் இந்த பதிவைப் படித்துவிட்டு, நான் தானய்யா அந்த ஒருநாள் ரயில் சிநேகம் என்று ஒருவர் வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப்பேட்டை கொக்கு என்ற மனோரமாவின் பாடல்வரிகள் காதில் ஒலிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேறயா?
      (இதையே ஒரு கதையா எழுதலாம் போலிருக்கிறதே?!)
      நன்றி தமிழ் இளங்கோ

      நீக்கு
  8. சுவாரஸ்யமான அனுபவம்தான்! சுவையாக பகிர்ந்தமை சிறப்பு!

    பதிலளிநீக்கு
  9. ரவி வர்மாவின்
    லட்சுமியைப் பார்ப்பது போலிருந்தது..
    அந்த வினாடியிலேயே
    நான் வீழ்ந்து விட்டேன்
    அவள் கண்கள் என்னும்
    கடலில் முழ்கி
    மூச்சுத் திணற ஆரம்பித்தேன்.
    இளமையின் வேகம்.
    இன்பமான ஒரு விளையாட்டு...


    அடடே..ஒரு புதுக்கவிதை கிடைச்சிடுச்சே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மரபுக் கவிதையை கண்டேன்;புதுக்கவிதை பிறந்ததோ!
      நன்றி மதுமதி

      நீக்கு
  10. //மறு நாள் சைதாப்பேட்டை முழுவதும் தேடி அலைந்து சோர்ந்து போனேன்.//

    அதானே பார்த்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் செய்யவில்லையெனில் அது இயற்கைக்கு விரோதம் அல்லவா?

      நீக்கு
  11. இளம் வயதின் மன உனர்வுகளை பாசாங்கின்றி வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் சுவாரசியமாகவும் உள்ளது..

    பதிலளிநீக்கு
  12. //அவளே ஒரு குறள்தானே!//

    ஐயா.. பின்னூட்டத்திலேயே பின்றீங்க போங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவள் நினைவே இவ்வளவு உற்சாகம் தருகிறது எனில்.....?

      நீக்கு
  13. //அவள் முகம்.சாந்தம் தவழும் அந்தத் தெய்வீக அழகு.மற்ற நாகரிக மங்கையர் போலன்றி மூக்கின் இரு புறமும் அவள் அணிந்திருந்த மூக்குத்திகள் .//

    அந்தக்காலக்கட்டத்தில், மூக்கின் இருபுறமும் ஒருத்தி மூக்குத்தி அணிந்திருந்தாள் என்றாள், நிச்சயமாக அவள் புதுசாக் கல்யாணம் ஆன பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.

    எங்கேயோ ஏதோ இடிக்குது, ஐயா. இருந்தாலும் பரவாயில்லை. யாருடைய தெய்வீக அழகையும் யாரும் ரஸிக்கலாம் தான். தவறொன்றும் இல்லை. ;)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஐயா!அவள் மணமாகாதவள்தான்;அறிந்துகொண்டேன்!
      நன்றி

      நீக்கு
  14. ரயில்ல நேரம் போனதே தெரிஞ்சிருக்காதே தல.....!

    பாரதிராஜா இதை படிச்சாருன்னா "சிக்குபுக்கு மயிலு"ன்னு படமே எடுத்துருவார் போங்க.

    பதிலளிநீக்கு
  15. "ரவி வர்மாவின் லட்சுமியைப் பார்ப்பது போலிருந்தது."

    "நான் இங்கு சுகமே நீஅங்கு நலமா............." உங்கள் இனிய நினைவை பகிர்ந்துள்ளீர்கள். :))

    பதிலளிநீக்கு
  16. சில ஓவியர்கள் தூரிகை படாமல் வண்ணத்தை சும்மா தெளித்தாலே சித்திரங்கள் தோன்றுவதை கவனித்திருக்கிறேன். நீங்கள் அப்படித் தெளித்த புள்ளிகளில் ஒரு அருமையான சித்திரத்தைப் பார்த்தேன். beautifully poignant.

    பதிலளிநீக்கு
  17. இந்த ட்ரையின் இன்னும் கொஞ்சம் மெதுவா போனா என்னவாம் என அப்போது தோன்றியிருக்கும் உங்களுக்கு..... எங்களுக்கும் தான்....

    இனிய நினைவுகள் என்றும் அகல்வதில்லை!

    பதிலளிநீக்கு
  18. இத்தகைய நிகழ்வுகள் பலருக்கும் அந்த வயதில் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் சிலரால் மட்டுமே அதை அப்படியே நினைவில் இருத்தி அதை அழகு மாறாமல் எழுத்தில் வடித்தெடுக்க முடியும். அதை மிகவும் அழகாக செய்திருக்கிறீர்கள். நேர்த்தியான எங்கும் பிசிறடிக்காத நடை. ஒரு தெளிந்த நீரோடையப் போல. பலருக்கும் வாய்க்காத ஒரு திறன் இது. இதுதான் என்னுடைய முதல் வருகை. இனியும் வருவேன். சுவைப்பேன்.

    பதிலளிநீக்கு