தொடரும் தோழர்கள்

அறிவுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 18, 2015

எங்கே அந்த ஆடு?




இன்று ஒரு குட்டிக் கதையோடு தொடங்குகிறார் ஸ்வாமி

ஏன் இந்தக் கதை என்பதைக் கடைசியில் விளக்குவார்

ஒரு சிற்றூர்

ஒரு ஞாயிற்றுக் கிழமை.

இரண்டு சிறுவர்களுக்குச் செய்த குறும்பெல்லாம் அலுத்துப் போய்ப் புதிதாக ஏதாவது செய்யும் ஆசை பிறந்தது

அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் அவர்கள் கண்ணில் பட்டன.

உதயமாயிற்று புதிய குறும்பு.

மூன்று ஆடுகளைப் பிடித்து அவற்றின் மேல் 1,2,4 என்று எண்கள் குறிப்பிட்டுப்  பள்ளிக்குள் விட்டுக் கதவை மூடிவிட்டனர்.

திங்கள் காலை பள்ளி திறந்ததும் வந்தவர்கள் அங்கு கிடக்கும் ஆட்டுப் புழுக்கைகளைக் கண்டனர்

ஏதோ ஆடுகள் பள்ளிக்குள் நுழைந்து விட்டன எனத் தெரிந்து கொண்டனர்

தேடுதல் ஆரம்பமாயிற்று

சிரிது நேரத்தில் மூன்று ஆடுகளும் பிடிபட்டன..

பிடிபட்ட ஆடுகளின் மேல் எண்கள் 1,2,4  எழுதப்பட்டிருப்பதைக் கண்டனர்.. 

அப்படியானால் 3வது எண்ணுள்ள ஆடு எங்கே ? 

பள்ளிக்குள் எங்கேயோதான் இருக்க வேண்டும்

அன்று பகல் முழுவதும் பள்ளியின் இண்டு இடுக்கெல்லாம் தேடியும் 3ஆம் எண்ணுள்ள ஆடு கிடைக்கவில்லை. 

அன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

ஆசிரியர்கள்,எழுத்தர்கள் கடைநிலைப் பணியாளர்கள், தலைமை ஆசிரியரும் முழுவதும் தேடும் பணியில் இறங்கி 3ஆம் எண்ணுள்ள ஆடு கிடைக்காமல் வெறுத்துப்போயினர்.

இல்லாத ஒரு ஆடு எப்படிக் கிடைக்கும்?!

ஏன் இந்தக் கதை?

அவர்களைப் போலத்தான் நாமெல்லாம்.

நம்மிடம் இருக்கும் ஆடுகளை விட்டு விட்டு இல்லாத ஆடுகளைத் தேடிக் கொண்டி ருக்கிறோம்

நம்மிடம் இருக்கும் திறமைகள்,வாய்ப்புகள்,வலிமை இவற்றை விட்டு விட்டு இல்லாத வற்றைத் தேடி அலுப்படைகிறோம்.

இருப்பதை விட இல்லாததே எப்போதும் பூதாகரமாகி நம்மை அச்சுறுத்துகிறது.

அந்த நிலையிலிருந்து விடுபடுங்கள்.

முயலுங்கள்

முயன்றால் முடியாததுண்டோ?

(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)

வியாழன், அக்டோபர் 08, 2015

கனிக்காகத் தொங்கியவன்!


நேற்று மாலை ஸ்வாமியை ஒருவர் காண வந்தார்.மிகவும் மன உளைச்சலில் இருப்பதாக அவர் முகமே சொல்லிற்று.அவரது அமைதியின்மைக்குக் காரணம் அவரது அச்சம்.எந்த செயலைச் செய்யும் முன்னும் அவர் இச்செயல் எப்படி முடியுமோ, தவறாகிப்  போனால் நம்மைப் பார்த்து எல்லோரும் நகைப்பார்களோ என்ற அச்சத்தின் காரணமாக அவரால் சரியாகச் செயலாற்ற முடிவதில்லை.


ஸ்வாமி அவரிடம் சொன்னது”உன் அச்சத்தை நீ விடாத வரை உன்னால் எதையும் செய்ய இயலாது.அச்சந்தவிர்.ஸ்வாமி உனக்கு ஒரு கதை சொல்லும் “. 


கதையைக் கேட்ட அவர் சிறிது மனம் தெளிந்தவராகக் காணப்பட்டார்


இதோ அந்தக்கதையை நீங்களும் கேளுங்கள்........


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க்கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள்  இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சிலபழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில்  இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்றபோது அவனது  எடை தாங்காமல் கிளை முறிந்து விட்டது.   விழாமல் அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கலானான்

 
குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே அச்சத்தில் இருந்த அவன் மேலும் அஞ்சி,கண்களை மூடிக் கொண்டு"யாராவது காப்பாற்றுங்கள்' என்றுதிரும்பத் திரும்ப அலற  ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து  வழுக்கத் தொடங்கியது. 

தற்செயலாக  அப்போது அந்தப்பக்கம் ஒரு முதியவர்  வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். 


அவன்மேல் ஒருசிறிய கல்லை விட்டெறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்த வனுக்கு சினம் வந்தது."பெரியவரே, உதவச்சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில் லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறியகல்லை எடுத்து அவன்மேல் எறிந்தார். சினம் அதிகமான இளைஞன் பெரு முயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மை அடித்து நொறுக்கி விடுவேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒருகல்லை அவன்மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறிவிட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரிடம். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்று கேட்டு விட்டு அவரை இழித்துப் பேசினான்.


பெரியவர் அமைதியாகச்  சிரித்துக் கொண்டே"தம்பி..நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் ”உதவியா?கல்லால் அடிப்பது உதவியா?” எனக் கேட்டான். பெரியவர் விளக்கினார்.  "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ அச்சத்தில் உறைந்து போயிருந் தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான்கல்லை எறிந்ததும் அச்சம் மறையத் தொடங்கி என்னைப் பிடித்துத் தண்டனை தர வேண்டும் எனும் எண்ணம் வலுப்பெற்றது


நீ யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் அச்சம் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லிவிட்டுத் தன்வழியே அவர் போய்விட்டார்...


எனவே அச்சத்தை விட்டுத் துணிவுடன் செயலாற்றுங்கள். வெற்றி நிச்சயம்.

(ஸ்வாமி பித்தானந்தா) 



புதன், ஜூலை 01, 2015

என்னைப்பார்,யோகம் வரும்!



இன்று ஸ்வாமி ஒரு கடையில் ஒரு போர்டைப் பார்த்தார்

அதில் எழுதியிருந்த வாசகம்”என்னைப்பார் யோகம் வரும்”

படம் வேறு போட்டிருந்தது.என்ன படம் என்று பார்த்தால் ஒரு கழுதையின் படம்!

அந்தப்பத்தைப் போட்டு, பார்த்தால் யோகம் வரும் என்றால்,யாருக்கு யோகம் வரும்?

போர்டைப் பார்ப்பவருக்கா?

போர்டைத் தொங்க விட்ட கடைக் காரருக்கா?

அல்லது கழுதைக்கா?

புதன், ஜூலை 31, 2013

மீண்டும் ஸ்வாமி பித்தானந்தா!



சைத்தான் ஒரு முறை தன் தொழிலை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்கத் தீர்மானித்தான்.

அவனது தொழிற்கருவிகளையெல்லாம் குறைந்த விலைக்கு விற்பதாக அறிவித்தான்.

அனைத்துக் கருவிகளும் பார்வைக்கு வைக்கப்பட்டன

ஆணவம்,காமம்,வெறுப்பு,கோபம்,பொறாமை ,பேராசை,அதிகார வெறி இப்படிப் பலப்பல..

ஒரு கருவிபயன்பாட்டால் தேய்ந்து போன ஒரு கருவிக்கு மட்டும் சைத்தான் மிக அதிக விலை கேட்டான்.

ஒருவர் கேட்டார்”அது என்ன?”

”இதுவா?ஊக்கமின்மை,மனச்சோர்வு ,நம்பிக்கையின்மை!” என்றான் சைத்தான்

“அதற்கு மட்டும் ஏன் அதிக விலை?”

ஏனென்றால் இதுதான் எனக்கு மிக உபயோகமாக இருந்திருக்கிறது,இதன்மூலம் எந்த மனிதனின் இதயத்துக்குள்ளும் புகுந்து அவனை மனச்சோர்வுக்கும் அதைரியத்துக்கும் ஆளாக்க என்னால் முடியும்.அவன் அவ்வாறு ஆகிவிட்டான் என்றால் நான் நினப்பதை யெல்லாம் அவனைச் செய்ய வைக்க என்னால் முடியும்.அநேகமாக இந்தக் கருவியை, மற்றவற்றைக்காட்டிலும், எல்லா மனிதர்கள் மீதும் பயன்படு த்தியிருக்கிறேன்.எனவேதான் இது தேய்ந்து போயிருக்கிறது.”

 ஆம் அன்பர்களே!நம் முயற்சியில் வெற்றி பெறவில்லை,நம் இலக்கை எட்டவில்லை என்றால்,எளிதில் மனச்சோர்வடைகிறோம்.தைரியத்தை இழக்கிறோம்.கடவுள் மீதான நம்பிக்கையை ,நம் தன்னம்பிக்கையுடன் சேர்த்து இழக்கிறோம்.

அந்த  நிலையில் வெற்றி பெற்றவனைப் பார்த்து பொறாமை வருகிறது;வெறுப்பு வருகிறது; பிறர்மீதெல்லாம் கோபம் வருகிறது.நம்பிக்கையற்றுப் போகிறது.நாமும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் தகாத வழியில் கூடச் செல்ல எண்ணுகிறோம்.

இப்படி எல்லா அவலங்களுக்கும் நமது அதைரியமும்,மனச்சோர்வும் வழி வகுத்து விடுகின்றன.  எனவே எப்போது நம்பிக்கை இழக்காதீர்கள்.எதிர் மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.என்னால் முடியும் என்ற உறுதியுடன்    முயற்சியைத் தொடருங்கள்.

வெற்றி நிச்சயம்.

(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)


செவ்வாய், ஜனவரி 17, 2012

சாணக்கியர் பேசுகிறார்!

1)மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.அந்தத் தவறுகள்  அனைத்தையும் செய்வதற்கு உங்களுக்கு ஒரு வாழ்நாள் போதாது.

2)ஒருவர் மிக நேர்மையானவராக இருக்கக் கூடாது.நேரான மரங்களே    முதலில்  வெட்டப்படுகின்றன. நேர்மையானவரே முதலில் ஏமாற்றப் படுகிறார்கள்.

3)ஒரு பாம்பு விஷமில்லாததாக இருக்கலாம்;ஆனால் அது விஷமுள்ளது    போல் நடிக்க வேண்டும்.

4)ஒவ்வொரு நட்புக்குப் பின்னும் கொஞ்சம் சுயநலம் இருக்கிறது;சுய       நலமற்ற நட்பு     என்பதே கிடையாது.இது கசப்பான உண்மை.

5)எந்த வேலையையும் தொடங்கும் முன் மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.  இதை ஏன் செய்கிறேன்?முடிவு என்னவாக இருக்கும்?    இதில் வெற்றி பெறுவேனா? உங்களுக்குத் திருப்தியான விடைகள் கிடைத்தால் பணியைத் தொடங்குங்கள்.

6)அச்சம் என்பது உங்களை அணுகும்போதே அதைத் தாக்கி அழித்து விடுங்கள்.

7)உலகின் மிகப்பெரிய சக்தி,இளமையும் ஒரு பெண்ணின் அழகுமே.

8)ஒருவன் தன் செயல்களினால் சிறப்படைகிறான்.பிறப்பினால் அல்ல.

9)பார்வை இல்லாதவனுக்கு ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி  எவ்வளவு பயனுள்ளதோ    அது  போன்றதே,ஒரு முட்டாளுக்குப்  புத்தகங்கள்.

10)உங்கள் குழந்தைக்கு முதல் ஐந்து ஆண்டுகள் செல்லம் கொடுங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகள் கண்டிப்புடன் வளருங்கள்.16 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள். அவர்கள்தான் உங்கள் சிறந்த நண்பர்கள்.

சனி, ஜனவரி 07, 2012

புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழ சில எளிய வழிகள்!

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது நம் கையில்தான் இருக்கிறது

எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது?சில எளிய வழி முறைகள்!

1)ஓய்வெடுப்பதற்காகவே வாழுங்கள்!

2)உங்கள் படுக்கையை நேசியுங்கள்;அதுவே உங்கள் ஆலயம்!

3)பகல் நேரத்தில் நன்றாக ஓய்வெடுங்கள்;இரவு நன்கு தூங்க அது உதவும்!

4)பணி என்பது புனிதமானது;அதைத் தொடாதீர்கள்!

5)எந்த வேலையையும் மற்றவர்கள் செய்ய வாய்ப்புக் கொடுங்கள்.அதைக் கண்டு ரசியுங்கள்!

6)எந்த வேலையையும் நாளை செய்யலாம் என எண்ணாதீர்கள்; ஏனெனில் அதை நாளை மறுநாள் கூடச் செய்யலாம்!

7)கவலையே வேண்டாம்.சும்மா இருந்ததால் யாரும் இறப்ப தில்லை. மாறாக,வேலை செய்யும்போது உங்களுக்கு ஏதாவது ஊறு நேரலாம்!  

8)வேலை செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்தால்,சிறிது அமருங்கள்;பொறுத்திருங்கள்.அந்த நினைப்பு அகன்று விடும்!

9)மறவாதீர்கள்.வேலை செய்வது ஆரோக்கியம் தரும்.எனவே அதை உடல் நலமில்லாதவர்கள் செய்யட்டும்.அவர்கள் ஆரோக்கியமடைவார்கள்!

இந்தப் புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழுங்கள்!!

be happy!