தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 17, 2011

மார்கழிப் பொங்கல்-2-(பிள்ளையார்)

இன்று மார்கழி முதல் நாள்.எங்கள் பிள்ளையாருக்கு வழக்கம் போல் காலை சிறப்புப் பூசை.இன்று பிரசாதம்-நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல்!

இப்போது நேற்று விட்ட இடத்தில் ஆரம்பிக்கலாம்.

”ஐந்து கரத்தனை”-ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.

அவையாவன-படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல்.

கும்பம்  ஏந்திய கரம்-நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும் 

மோதகம் ஏந்திய கரம் காத்தலையும்,

அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும்,

பாசம் ஏந்திய கரம் மறைத்தலையும்,

அபயகரம் அருளலையும் குறிக்கும்.

சிலர் பாசம் ஏந்திய கரம் படைத்தலையும்,மோதக கரம் மறைத்தலையும் உணர்த்தும் என்றும் கூறுவர்.

’யானை முகத்தனை’-விநாயகருக்கு,மனித உடல்,யானைத்தலை. பரமசிவன் கணபதியின் தலையைக் கொய்த பின்,பார்வதியின் வேண்டுகோளுக் கிணங்கி,பூத கணங்களை அனுப்பி,வடக்கே தலை வைத்து உறங்கும் உயிரின் தலையைக் கொய்து வரச் சொல்ல,அது ஒரு யானையின் தலையாக முடிந்தது என்பது ஒரு கதை.”யானை நாதத்திற்தோன்றியதாதல் போலப் பிள்ளையாரும் பர நாதத்திற்தோன்றிப் பிரணவ வடிவினராதலின் கூறினார்” என்பது ஓர் உரை.

காளமேகப் புலவரின் பாட்டொன்றில் இத்தலை பற்றி அவர் எழுதுவதாவது-

“ சங்கரர்க்கு மாறு தலை சண்முகற்கு மாறு தலை
  ஐங்கரர்க்கு மாறு தலை யானதே-சங்கைப்
  பிடித்தோர்க்கு மாறு தலை பித்தா நின் பாதம்
  படித்தோர்க்கு மாறு தலைப் பார்.”

சிவனுக்குத் தலயில் கங்கை ஆறு; முருகனுக்குத் தலைகள் ஆறு.;பிள்ளையார்க்கு மாறிய தலை;.ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதருக்கு,தலைப் பக்கம் ஆறு.;பித்தன் ஆகிய சிவனின் பாதத்தை நினைத்துப் போற்றுபவர்களுக்கு,நிச்சயம் ஆறுதல் கிடைக்கும். இதுவே பாடலின் பொருள்.

’இந்து இளம் பிறை போலும் எயிற்றனை’-பரஞானம்,அபர ஞானம் இரண்டுமே கணபதிக்குத் தந்தங்கள்;ஒரு தந்தம் ஒடித்து எழுதியதால் மற்ற முழு தந்தம் பார்ப்பதற்கு,இளம் பிறை நிலாவைப் போல்,வளைந்து,வெண்மையாய்,ஒளி விடுகிறது.

’நந்தி மகன்றனை’-இங்கு நந்தி என்றது சிவ பெருமானை.பிள்ளையார் சிவனின் முதற் பிள்ளை.

‘ஞானக் கொழுந்தினை’-ஞானத்தின் உச்சம்.தீ எரியும்போது,கொழுந்து விட்டெரியும் தீ என்று சொல்வோம்.அதே போல் விநாயகர் ஞானக் கொழுந்து.சிவன் ஞானமே வடிவானவன் ;அவ்ன் பிள்ளை ஞானக் கொழுந்து என்றுரைப்போரும் உளர்.

‘புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே’- புந்தி என்றது புத்தி.பிள்ளையாரை சிந்தையில் இருத்திப் போற்றுகின்றேன் என்பதாகும்.

வாருங்கள்,நாமும்,விநாயகப்பெருமானைப், ’புந்தியில் வைத்தடி போற்றுவோம்’

(மார்கழி மீள்பதிவு-2)

4 கருத்துகள்:

  1. வணக்கம்,ஐயா!அருமையாக தெளிந்த நடையில்,இரத்தினச் சுருக்கமாக வினை தீர்ப்போன் விநாயகன் தோற்றம் விளக்கியிருக்கிறீர்கள்.நன்று, நன்றி!!!!!

    பதிலளிநீக்கு
  2. முதற் கடவுளுளின் ஆசிகள் கிட்டட்டும் அனைவருக்கும்

    பதிலளிநீக்கு
  3. அன்பு விநாயகர் பற்றிய தகவலுக்கு நன்றி ஐயா

    த.ம 4

    பதிலளிநீக்கு
  4. மீள் பதிவாயினும் என்னைப் போல் இதற்கு முன்பு
    படிக்காதோருக்கு தூள் பதிவு
    வி நாயகர் துதியுடன் துவங்கியுள்ளதால்
    நிச்சயம் நீண்டு சிறப்பாகத் தொடரும்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம5

    பதிலளிநீக்கு