தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 05, 2015

மாடத்திலா,மண்டபத்திலா?

எல்லார் கிட்டயும் முதல்ல ஒரு கேள்வி.

வரும்போது வாசல்ல பொங்கல் பிரசாதம் கொடுத்தாங்களா.சாப்பிட்டதுக்கப்புறம் அந்தத் தொன்னையை எத்தனை பேர் குப்பைத்தொட்டில போட்டீங்க? பெரும்பாலோர் அப்படிச்  செய்யாம ரோடு ஓரத்தில போட்டுட்டு வந்திருப்பீங்க.அங்க ஒருத்தர் சொல்றார் சாமி மண்டபத்து உள்ள கொண்டு வந்து போடலையேன்னு சந்தோஷப்படுங்கன்னு!.(சிரிப்பு)
 நம்ம சுற்றுப்புறததைச் சுத்தமா வச்சுக்கணும்கற   உணர்வு நம்மகிட்ட இல்லை

இது போலததான் நம்ம மனத்தையும் குப்பையா வச்சிட்டிருக்கோம். 

நேற்றுக் காலையில சத்சங்கத்துக்கு வந்த ஒரு கிரகஸ்தர்,நிறைய பழங்கள் எல்லாம் கொண்டு வந்து சாமிகிட்ட குடுத்தார்.

சாமி கேட்டார் என்னப்பா விசேஷம்னு.

அவர் சொன்னார்”சாமி!எங்க வீட்டுல மாடத்தில பரம்பரையா அம்மன் இருக்கான்னு நாங்க வெள்ளிக்கிழமை தவறாம பூசை பண்ணிப் பிரசாதமெல்லாம் படைச்சுக் கும்பிடறோம்.அந்தப் பிரசாதம்தான் இது”

சாமிகேட்டார்”ரொம்ப சந்தோஷம்பா.அம்மன் கிட்ட நீ ஏதாவது வேண்டியிருப்பியே? என்ன கேட்டே?”

நல்லாருக்கணும்னு வேண்டினேன் சாமி.

உலகமே நல்லாருக்கணும்னு வேண்டினியா.இல்ல உன் குடும்பம் மட்டும் நல்லாருக்க ணுன்ம்னு வேண்டினையா?

அவர்கிட்டிருந்து பதில் இல்லை.

தலையக் குனிஞ்சிட்டு நிக்கறார்.அவர்னு இல்ல .எல்லாருமே இப்படித்தான்.எனக்கு அதைக் கொடு இதைக்கொடுன்னு ஆண்டவனை வேண்டறோம்.அவனுக்குத் தெரியாதா,உனக்கு என்ன வேணும்னு.நமக்கு எது தகுதியோ,நமக்கு எது நல்லதோ அதை அவன் தருவாங்கிற நம்பிக்கை நம்ம கிட்ட இருக்கா?

ஒருத்தர் கேட்டார்.

அவர் வீட்டு மாடத்தில அம்மன் இருக்கான்னு சொன்னாரே;உண்மையா கடவுள் எங்கே இருக்கார்னு

சாமி பிரகலாதன் மாதிரி தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்னு சொல்வார்னு எதிர்பார்த்தாரோ என்னவோ(சிரிப்பு)

சாமி  சொன்னார்” இறைவன் உன் வீட்டு மாடத்திலும் மண்டபத்திலும்கூடத்திலும் கோவிலிலும்,வேடம் அணிந்த ஆஷாடபூதிகளிடமும் இருக்கான்னா நினைக்கிறாய். இல்ல.அவன் இதயத்தில இருக்கான்.யார் இதயத்திலன்னு கேள்வி வருதா.யார் ஆசையை விட்டாங்களோ அவங்க இதயத்தில.நெஞ்சம் அளவில்லா அதீத ஆசைகளால நிரம்பியிருந்தா அதனாலே அந்த ஆசையின் காரணமா இன்னும் பல இதயத்தில குடியேறிடும் ....கோபம்,பொறாமை,வெறுப்பு இப்படி.இதெல்லாம் குப்பைகள்.ஒரு இடம் காலியாக சுத்தமாக இருந்தால்,அங்கு குடியேறலாம்.அங்கு குப்பைகள் நிரம்பியிருந்தால்? அது போல குப்பைகள் நிரம்பிய இதயத்தில் கடவுள் எப்படி குடியேறுவார்,அதனால் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், 

திருமூலர் சொல்றார்...
        ”மாடத்  துளானலன்  மண்டபத்  துளானலன்
         கூடத்  துளானலன்    கோயி லுளானலன்
         வேடத் துளானலன்  வேட்கைவிட்  டார்நெஞ்சில்
         மூடத் துளேநின்று  முத்திதந் தானே”--   

அதாவது கடவுள் வீட்டு மாடத்திலோ,மண்டபத்திலோ,கூடத்திலோ,கோவிலிலோ,திரு வேடத்திலோ இருப்பவன் இல்லை.ஆசையை விட்டவர் நெஞ்சில் மறைந்திருந்து முக்தி அளிக்கிறான்.

இதெல்லாம் ஒரு ராத்திரில நடக்கிற காரியமில்ல.ஆனா முயற்சி செய்யணும்.இங்க பொழுது போக்கறத்துக்கு வந்துட்டு,வீட்டுக்குப்போனது எல்லாத்தையும் மறந்திட க்கூடாது.முயற்சி திருவினையாக்கும்,

ஒரு அன்பர் மரக்கன்னெல்லாம் கொண்டு வந்திருக்கார்.போகும்போது ஆளுக்கொண்ணு வாங்கிட்டுப் போங்க.. வீட்டுக்குப் போய் தூக்கிப் போட்டுடாம  அதை நட்டு வளர்த்துப் பராமரிங்க.

உங்க வீட்டை யும் சுற்றுப்புறதையும் சுத்தமா வச்சுக்குங்க,

உங்க மனதையும்தான்

ஆசீர்வாதம்

(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)




வியாழன், ஜூன் 04, 2015

ஒரு மத போதகருடன் சந்திப்பு.



 சின்னச்சின்ன சாயிஅனுபவங்கள்  இன்னும் சில.ஆனால் ஒரேமாதியாகப் போய்க் கொண்டிருந்தால் போரடித்து விடும்.

எனவே வேறு திசையில் பயணிக்கலாம்.
 
ஒரு நாற்பது ஆண்டுக் காலம் பின்னோக்கிப் போகலாமா?

நான் பேசுவது எழுபதுகளைப் பற்றி.

அந்தக் காலத்தில் வீட்டில் அமர்ந்தபடி நாடகங்களோ,திரைப்படங்களோ பார்க்க முடியாது.

ஏனெனில் முட்டாள் பெட்டி அன்றில்லை.

சினிமா பார்க்க அரங்குக்குச் செல்ல வேண்டும்.

வீட்டில் ஒரே பொழுது போக்கு என்றால் வானொலிதான்

பாட்டுக் கேட்கலாம்..நாடகங்கள் கேட்கலாம்.திரைப்பட ஒலிச்சித்திரங்கள் கேட்கலாம்

எல்லாம் ’கேட்கலாம்’தான்!

முக்கியமாகப் பலர் கேட்டு வந்தது ரேடியோ சிலோனும்,விவித்பாரதியும் .

அவ்வாறு  சில சமயங்கள்கேட்டு வந்த பல நிகழ்ச்சிகளில் ஒரு நிகழ்ச்சி ஒரு கிறித்தவ மத போதகரின் நிகழ்ச்சி.

அவரைப்போலவே பாடி நான் கலாட்டா கூட செய்வேன்.

ஆனாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது

நிகழ்ச்சி முடிவில் இப்போது பிரார்த்தனை செய்வோமா என்று கேட்டு விட்டு எல்லோரும் ”உங்கள் கைகளை வானொலிப்பெட்டி மீது வைத்துக் கொள்ளுங்கள்”என்று சொல்லி எல்லாருக்காகவும் பிரார்த்தனை செய்வார்.

பலர் அவ்வாறு செய்திருக்கவும் கூடும்.

அவரைப் பல ஆண்டுகள் கழித்து  1994-98 இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று முறை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது,அலுவலக நிமித்தமாக.

ஒரு முறை சென்றபோது  அவருக்குச் சால்வை அணிவித்து பூச்செண்டு அளித்து மரியாதை செய்தபின் பேசிக்கொண்டிருந்தோம்.

புறப்படும்போது இப்போது பிரார்த்தனை செய்வோம் என்று சொல்லி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.

பிரார்த்தனை முடித்து அவரது கையை ஆசிர்வதிப்பதாக என் தலை மீது வைத்தார்.

அந்த நொடியில் என் தலை  முதல் கால் வரை மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தேன்

ஏதோ ஒரு பரவச நிலை,ஓரிரு நொடிகள்தான்.

ஒரு தொடுகைக்கு இவ்வளவு சக்தியா?

கோடிக்கணக்கான பிரார்த்தனைகள் செய்திருப்பார் அவர்.

அந்த சக்திதான் இவ்வாறு வெளிப்பட்டிருக்க வேண்டும்,

ஓர் இந்துவான நான் என் அனுபவத்தை வெளிப்படையாகக் கூறுகிறேன் எனில் என் அனுபவத்தின் தாக்கத்தை நீங்கள் அறியக்கூடும்.

அவர்….சகோ.டி.ஜி.எஸ்.தினகரன்(இயேசு அழைக்கிறார்)

புதன், ஜூன் 03, 2015

சத்திய சாயி பாபாவும் நானும்,



இது ஒரு சத்தியசோதனை போல்தான்.

எழுதுவது என்று வந்து விட்டால் எல்லாம் எழுத வேண்டியதுதான்.

சாமியார்கள் பற்றிய என் அனுபவங்களை எழுதிய பின் என் மீதான உங்கள் பார்வை  இதைப் படித்த பின் மாறலாம்.ஆனால் உண்மையான அனுபவங்களைப் பகிர்வது என்று வந்தபின்   சிலவற்றை மறைக்க முடியுமா?

அனுபவங்கள் மாறுபட்டவை.

மனிதர்க்கு மனிதர் மாறக்கூடியவை.

இங்கு எனது இரு வித்தியாசமான அனுபவங்களைப் பகிர்கிறேன்.

செவ்வாய், ஜூன் 02, 2015

மயான மனிதர்கள்



”அப்பா என்ன குளிர்.எலும்பையும் ஊடுருவிக்கொண்டு உள்ளே போகிறதே”.
யூசுபுக்குக் குளிர் தாங்க முடியவில்லை.ஜமீலாவைப் பார்த்தான்.அவளும் குளிரில் நடுங்கிக் கொண்டுதான் இருந்தாள்.அவள் மட்டும் என்ன தெய்வப் பிறவியா,குளிர் தாக்காமல் இருக்க.படுப்பதற்கு படுக்கையில்லை.போர்த்திக்கொள்ள ஒரு துணியில்லை.சற்று தூரத்தில் எரியும் நெருப்பின் ஒளி தவிர வேறு வெளிச்சம் இல்லாத காரிருள்.அந்த நெருப்பின் அருகில் சென்று குளிர்காயலாம்தான் .

ஆனால் பயமாக இருக்கிறது,எரியும் பிணத்தின் அருகே போய் எப்படி அமர்வது,அதுவும் ஒரு பெண்ணுடன்,ஏற்கனவே இந்த இருட்டும்,மரங்களும் விளையாடும் நிழல்களும் அச்சமூட் டுகின்றன.இந்த 75 வயதில் இப்படி ஒரு அவல நிலையா என மனம் அழுதது.தனக்கு மட்டுமா? 65 வயது ஜமீலாவுக்கும்தானே.?அங்கு வந்து இரண்டு நாட்களாகி விட்டன. சரியான உணவில்லை. நல்ல தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை.இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும் இந்த வயோதிகர்களால்? 

ஜமிலாவின் மகள் சமீபத்தில்  இறந்தபோது,ஆதரவற்ற ஜமீலாவுக்கு யூசுப்தான் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி ஆதரவாக இருந்தான்.அவள் உடைந்து கதறுகையில் அவளை லேசாக அணைத்து தேற்றினான்.அங்குதான் ஆரம்பமானது பிரச்சனையே,

அவர்களை அந்நிலையில் பார்த்த சிலர்.நிகழ்ச்சிக்குக் கண் காது மூக்கு எல்லாம் வைத்து, யூசுபுக்கும் ஜமீலாவுக்கும் தகாத உறவு இருப்பதாகவும் அதை எதிர்த்த அவள் மகளை அவர்கள் கொன்று விட்டதாகவும் கதை பரப்பி,  வதந்தி பஞ்சாயத்துக்கும் கொண்டு போகப்பட்டது.

அன்று….யூசுப் தன் குடிசையில் அமர்ந்திருந்தபோது ஒரு ஆள் வந்து அவனைப் பஞ்சாயத்தில் அழைப்பதாகக் கூறினான்.யூசுப் போகும்போது பஞ்சாயத்துக் கூடியிருந்தது.கிராமத்தவர் அனைவரும் கூடியிருந்தனர்.ஜமீலாவும் நின்றிருந்தாள்.பஞ்சாயத்து தன் தீர்ப்பைக் கூறியது…. யூசுப்பும் ஜமீலாவும் பஞ்சாயத்து முன் மணக்க வேண்டும்.அதன் பின் அவர்கள் கிராமத் திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.மயானத்தில்தான் வாழ வேண்டும்.ஊருக்குள் வரக் கூடாது.

அவர்கள் சுடுகாட்டுக்கு விரட்டப்பட்டனர்.

இப்போது இங்கே தவித்துக் கொண்டிருக்கிறார்கள்

எத்தனை நாள் இப்படி வாழ முடியும்.?

அவர்கள்முடிவு சாவைத் தவிர வேறில்லை.

இப்படியே பசி தாகம்,குளிர் இவற்றால் வாடி மெலிந்து ஒரு நாள் சாகலாம்.

அல்லது அதோ எரியும் நெருப்பில் விழுந்து மாய்த்துக் கொள்ளலாம்.......
சாவுக்கே பயமில்லை என்றானபின் பிணத்துக்கென்ன பயம்?! 

என்ன செய்யப் போகிறார்கள்?



(இன்றைய  டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியின் அடிப்படையில் புனையப்பட்டது)


திங்கள், ஜூன் 01, 2015

’காப்பர்’ காத்ததோ?




ஆண்டு 1983.

அப்போது எங்கள் வங்கி வசந்தவிஹார்,தில்லி கிளையில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றி வந்தேன்

பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் மேட்டுக்குடியினர்தான்.-அரசு உயர் அதிகாரிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் என..

அதிலும் மேலாளரின் அறையில் வந்து அமர்ந்து தங்கள் பணிகளை இருந்த இடத்தில் இருந்தே முடித்துக்கொண்டு செல்பவர்கள் என்றால் நிச்சயம் உயர்பதவிக்காரர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர்தான்.

சேவையில் எந்தவிதக் குறைபாடும் நேராதபடி பார்த்துக்கொள்வது என் முக்கியக் கடமையாக இருந்தது. 

ஒரு நாள்

வழக்கம்போல் வந்து அமர்ந்தார் அந்த அம்மையார்.

அவர்கணவர் இரானுவத்தில் லெஃப்டினண்ட் ஜெனரல் ஆக இருந்தவர்.

எப்போது வந்தாலும் என் அறையில் அமர்ந்து சிறிது நேரம் உரையாடி விட்டுத்தான் செல்வார்.

அன்று சற்றே வாட்டமாகக் காணப்பட்டார்.

ஏன் என நான் விசாரித்தேன்.

இன்னும் சிறிது நாட்களிள் ஓர் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாகவும் சிறிய சிகிச்சைதான் என்றாலும் ஏனோ அச்சமாக இருப்பதாகவும் கூறினார்.

நன் அவருக்குத் தைரியமூட்டினேன்.எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புங்கள் எனச் சொன்னேன்.

அவர் திடீரெனக்கேட்டார்”உங்கள் கையில் நீங்கள் அணிந்திருக்கும் செப்பு வளையத்தை எனக்குத்தருவீர்களா,அறுவைச்சிகிச்சை முடியும் வரை”

நான் அப்போது ஒரு தடித்த செப்பு வளையமும்,அமிர்தசரஸ் பொற்கோவிலிலிருந்த வந்த கடா ஒன்றும் அணிந்திருந்தேன்.

அவருக்கு என்ன தோன்றியதோ அந்தச் செப்பு வளையும் தன்னைக் காக்கும் என்ற நம்பிக்கை
ஏற்பட்டிருக்கிறது.

அந்த வளையத்தைக் கழட்டினேன்.அவரிடம் நீட்டினேன்.

“நீங்களே என் கையில் அணிவித்து விடுங்கள்” என்றார்.

 அவ்வாறே செய்தேன்

அவர் விடை பெற்றுச் சென்றார்.

மீண்டும் ஒரு மாதம் கழித்துதான் அவரைப் பார்த்தேன்.

ஒரு வாடிக்கையாளரைச் சந்திக்க வெளியே சென்று திரும்பியபோது என் அறையில் அவர் அமர்ந்திருந்தார்.

என்னைக் கண்டதும் எழுந்து நின்று என் கையைப் பற்றிக் குலுக்கினார்.
இருவரும் இருக்கையில் அமர்ந்தோம்.

”உங்கள் கை வளையம் என்னைக் காத்தது.மிக்க நன்றி இந்தாருங்கள் உங்கள் வளையம்”
என்று வளையத்தைத் தன் கையிலிருந்து கழட்ட முற்பட்டார்.

நான் அவரைத் தடுத்துக் கூறினேன்”அது உங்களிடமே இருக்கட்டும்,உங்களுக்குத் துணையாக எப்போதும்”

அவர் மீண்டும் என் கையைப் பற்றிக் குலுக்கி நன்றி தெரிவித்தார்.கண்கள் லேசாகப் பனித்திருந்தனவோ!

ஒரு விலை குறைந்த,சாதாரண வளையத்தைக் கொடுத்ததற்கு இவ்வளவு நன்றியா என வியந்தேன்.

உபரித்தகவல்: அவர் கணவர் பெயர்  லெஃப்டினண்ட் ஜெனரல் பி.எம் கௌல்.1962 சீனப் போரின் போது “பேர்” பெற்றவர்.தனது பேரைக் காக்க  பின்னர்அவர் எழுதிய புத்தகம்”untold story”