தொடரும் தோழர்கள்

கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 05, 2015

மாடத்திலா,மண்டபத்திலா?

எல்லார் கிட்டயும் முதல்ல ஒரு கேள்வி.

வரும்போது வாசல்ல பொங்கல் பிரசாதம் கொடுத்தாங்களா.சாப்பிட்டதுக்கப்புறம் அந்தத் தொன்னையை எத்தனை பேர் குப்பைத்தொட்டில போட்டீங்க? பெரும்பாலோர் அப்படிச்  செய்யாம ரோடு ஓரத்தில போட்டுட்டு வந்திருப்பீங்க.அங்க ஒருத்தர் சொல்றார் சாமி மண்டபத்து உள்ள கொண்டு வந்து போடலையேன்னு சந்தோஷப்படுங்கன்னு!.(சிரிப்பு)
 நம்ம சுற்றுப்புறததைச் சுத்தமா வச்சுக்கணும்கற   உணர்வு நம்மகிட்ட இல்லை

இது போலததான் நம்ம மனத்தையும் குப்பையா வச்சிட்டிருக்கோம். 

நேற்றுக் காலையில சத்சங்கத்துக்கு வந்த ஒரு கிரகஸ்தர்,நிறைய பழங்கள் எல்லாம் கொண்டு வந்து சாமிகிட்ட குடுத்தார்.

சாமி கேட்டார் என்னப்பா விசேஷம்னு.

அவர் சொன்னார்”சாமி!எங்க வீட்டுல மாடத்தில பரம்பரையா அம்மன் இருக்கான்னு நாங்க வெள்ளிக்கிழமை தவறாம பூசை பண்ணிப் பிரசாதமெல்லாம் படைச்சுக் கும்பிடறோம்.அந்தப் பிரசாதம்தான் இது”

சாமிகேட்டார்”ரொம்ப சந்தோஷம்பா.அம்மன் கிட்ட நீ ஏதாவது வேண்டியிருப்பியே? என்ன கேட்டே?”

நல்லாருக்கணும்னு வேண்டினேன் சாமி.

உலகமே நல்லாருக்கணும்னு வேண்டினியா.இல்ல உன் குடும்பம் மட்டும் நல்லாருக்க ணுன்ம்னு வேண்டினையா?

அவர்கிட்டிருந்து பதில் இல்லை.

தலையக் குனிஞ்சிட்டு நிக்கறார்.அவர்னு இல்ல .எல்லாருமே இப்படித்தான்.எனக்கு அதைக் கொடு இதைக்கொடுன்னு ஆண்டவனை வேண்டறோம்.அவனுக்குத் தெரியாதா,உனக்கு என்ன வேணும்னு.நமக்கு எது தகுதியோ,நமக்கு எது நல்லதோ அதை அவன் தருவாங்கிற நம்பிக்கை நம்ம கிட்ட இருக்கா?

ஒருத்தர் கேட்டார்.

அவர் வீட்டு மாடத்தில அம்மன் இருக்கான்னு சொன்னாரே;உண்மையா கடவுள் எங்கே இருக்கார்னு

சாமி பிரகலாதன் மாதிரி தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்னு சொல்வார்னு எதிர்பார்த்தாரோ என்னவோ(சிரிப்பு)

சாமி  சொன்னார்” இறைவன் உன் வீட்டு மாடத்திலும் மண்டபத்திலும்கூடத்திலும் கோவிலிலும்,வேடம் அணிந்த ஆஷாடபூதிகளிடமும் இருக்கான்னா நினைக்கிறாய். இல்ல.அவன் இதயத்தில இருக்கான்.யார் இதயத்திலன்னு கேள்வி வருதா.யார் ஆசையை விட்டாங்களோ அவங்க இதயத்தில.நெஞ்சம் அளவில்லா அதீத ஆசைகளால நிரம்பியிருந்தா அதனாலே அந்த ஆசையின் காரணமா இன்னும் பல இதயத்தில குடியேறிடும் ....கோபம்,பொறாமை,வெறுப்பு இப்படி.இதெல்லாம் குப்பைகள்.ஒரு இடம் காலியாக சுத்தமாக இருந்தால்,அங்கு குடியேறலாம்.அங்கு குப்பைகள் நிரம்பியிருந்தால்? அது போல குப்பைகள் நிரம்பிய இதயத்தில் கடவுள் எப்படி குடியேறுவார்,அதனால் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், 

திருமூலர் சொல்றார்...
        ”மாடத்  துளானலன்  மண்டபத்  துளானலன்
         கூடத்  துளானலன்    கோயி லுளானலன்
         வேடத் துளானலன்  வேட்கைவிட்  டார்நெஞ்சில்
         மூடத் துளேநின்று  முத்திதந் தானே”--   

அதாவது கடவுள் வீட்டு மாடத்திலோ,மண்டபத்திலோ,கூடத்திலோ,கோவிலிலோ,திரு வேடத்திலோ இருப்பவன் இல்லை.ஆசையை விட்டவர் நெஞ்சில் மறைந்திருந்து முக்தி அளிக்கிறான்.

இதெல்லாம் ஒரு ராத்திரில நடக்கிற காரியமில்ல.ஆனா முயற்சி செய்யணும்.இங்க பொழுது போக்கறத்துக்கு வந்துட்டு,வீட்டுக்குப்போனது எல்லாத்தையும் மறந்திட க்கூடாது.முயற்சி திருவினையாக்கும்,

ஒரு அன்பர் மரக்கன்னெல்லாம் கொண்டு வந்திருக்கார்.போகும்போது ஆளுக்கொண்ணு வாங்கிட்டுப் போங்க.. வீட்டுக்குப் போய் தூக்கிப் போட்டுடாம  அதை நட்டு வளர்த்துப் பராமரிங்க.

உங்க வீட்டை யும் சுற்றுப்புறதையும் சுத்தமா வச்சுக்குங்க,

உங்க மனதையும்தான்

ஆசீர்வாதம்

(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)




புதன், டிசம்பர் 25, 2013

நல்ல மேய்ப்பர்



ஆடுகள்!

மந்தை மந்தையாய்

ஒன்றோடொன்று நெருக்கியடித்து

ஒன்று போல் சென்றாலும்

எல்லாம் ஒன்றல்ல!

குறும்புக்கார ஆடுகள்

வேலி தாண்டிச் சென்று

மேயத் துடிப்பவை

முட்டி விரட்டுபவை

முன்கோபம் கொண்டவை

சாதுவாய்ச் செல்பவை

சண்டைக்கு நிற்பவை

ஆடுகள் பலவிதம்

எல்லாவற்றையும்

மேய்ப்பன் அறிவான்

அவை அவன் சொல்வதைக்

கேட்பினும்,கேளாதிருப்பினும்

 அவனை நம்பினும்,நம்பாவிடினும்

அவை பத்திரமாயிருக்கும்

மேய்ப்பன் இருக்கிறான்

ஏனெனில்

காப்ப்பது அவன் தொழில்

ஆடுகள் மட்டுமல்ல

மாடுகளும்தான்

இடையனின் குரலுக்கும்

குழலுக்கும் மயங்குபவை

அவன் பார்வையில்

பயமற்றுத் திரிபவை

காப்பவர்

எவராயினும்

காப்பது அவர்  தொழில்

எனவே ஆடுகளும் மாடுகளும்

பாதுகாப்பாய்,பயமற்று!


என் மனங்கனிந்த இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

திங்கள், ஏப்ரல் 15, 2013

ஈஸ்வர்,அல்லா,ஏசு!



ஒரு மரணம்.

ஒருவர் தன் இரு மகள்களைத் தனியே விட்டு மறைந்து விடுகிறார்.

இருவரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

உறவினர்களும் நண்பர்களும் துக்கம் விசாரித்துச் செல்கின்றனர்.

ஒரு பெரியவர்,அக்குடும்பத்துக்கு நீண்ட நாள் நண்பர் செல்லுமுன் சொல்கிறார்” எதற்கென் றாலும் என்னை அழையுங்கள்.நான் உடனே வந்து விடுகிறேன்”

இறைவனும் இதைத்தானே சொல்கிறான்!

நம் புராணக்கதைகள் இதை அழகாக விளக்கி விடுகின்றனவே!

முதலை வாயில் மாட்டிக் கொண்ட யானையின் கதறலைக் கேட்ட கடவுள்,உடன் வந்து துயர் தீர்க்கிறான்.

கௌரவர் சபையில் மானபங்கப் படுத்தப்படும் பாஞ்சாலி  கதறும்போது எங்கிருந்தோ ஆடை அனுப்பிக் காக்கிறான்!

ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகிறது.

தெருவில் ஒருவன் பாடியவாறு செல்கிறான்---

”ஓட்டைகைக்கும் அத்தினத்துக்கும் ஓராயிரம் காதம்
 ஆனாலும் நடக்குதய்யா சேலை வியாபாரம்”

மன்னன் அவனை அழைத்துப் பொருள் கேட்கிறான்.

அவன் சொல்கிறான்” துவாரகைக்கும்(ஓட்டை கை),அத்தினாபுரத்துக்கும் இடையே ஓராயிரரம் காத தூரம்;ஆனாலும் பாஞ்சாலி அழைத்ததும் கண்ணன்,அங்கிருந்து சேலை அனுப்பி விட்டான்”

இவை வெறும் கதையென்றேகொண்டாலும் உள்ளிருக்கும் தத்துவம் ஒன்றுதான்!

அழைத்தால் வருபவன் அவன்.

நாம் உணர வேண்டும்-அவன் எப்போதும் நம் அருகில்தான் உள்ளான் என்பதை.

ஊரை விட்டுச் செல்கிறோம்.

நம் கையில் கைபேசி இருக்கிறது;நாம் குடும்பத்த்யுடன் எப்போது வேண்டுமென்றாலும் பேச முடிகிறது.

குடும்பம் அருகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

அது போலத்தான்,அவனும் கூப்பிடு தூரத்தில் இருக்கிறான்.

யானையோ பாஞ்சாலியோ வேறு யாரோ அழைத்தாலும் அவனுக்குக் கேட்கிறது.

அழைப்பில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

மாணிக்கவாசகர் சொல்வது போல் ’சிக்கெனப்’ பிடிக்க வேண்டும்.

அவன் நம்முடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையே நமக்கு ஒரு பெரும் சக்தியாக இருக்கிறது.

இது மதங்கள் கடந்த ஒரு நம்பிக்கை.

எவரேனும் என்னைப்பற்றிக்கேட்டால் சொல்லுங்கள்,நான் அருகில்தான் இருக்கிறேன். அழைத்தால் உடன் வருவேன் என்று”-------(குரான் 2:186)

if god be for us,who can be against us”-(bible romans 8:31)

இதைத்தான் தமது “Power of positive thinking” என்ற நூலில் வலியுறுத்துகிறார் டா.நார்மன் வின்சென்ட்  பீல் அவர்கள்.

என்ன பிரச்சினை வந்தாலும் இந்த வாக்கியத்தை மனதில் கொண்டு நம்பிக்கையுடன் செயல் பட்டால்,பிரச்சினையைத் தீர்க்கலாம் என்கிறார்.

ஆம்!

அவன் அருகில்தான் இருக்கிறான்.

நமக்காகத்தான் இருக்கிறான்.

கூப்பீட்டவுடன் வருபவன்தான்.

நம்பிக்கை நமக்கு வேண்டும்!

அதுவே முக்கியம்.


வியாழன், நவம்பர் 10, 2011

மலையில் ஓர் இளம் பெண்!



                                                            
 
”கடவுளே! என்னை ஏன் இச்சுமையைச்  சுமக்கச் செய்தாய்?இது நான் சாப்பிடும் பொருளல்ல.மிகக் கனமாகவும் இருக்கிறது.ஆனால் இதுதான் நீ விரும்புவது என்றால்,உனக்காக நான் இதை நிச்சயம்  செய்வேன். ”


படத்தில் ஒரு எறும்பு கனமான ஒரு பொருளைத் தூக்கிச் செல்கிறது.அது ஒரு விழி வில்லையைச்(contact lens) சுமந்து செல்கிறது.மேலே உள்ள வாக்கியம் அது சொல்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது.




இது என்ன?

இதன் பின்னே ஒரு சம்பவம் இருக்கிறது.
  
அந்தப்  பெண் சிரமப்பட்டு மலையேறிக் கொண்டிருந்தாள்.பாதிக்கு  மேல் கடந்த பின் ஒரு  பாறையில் நின்று  இளைப்பாறினாள்.அவளுக்கு மூச்சு வாங்கியது.

 அப்போது அவள் பாதுகாப்புக் கயிறு கண்ணில் பட்டு விழி வில்லை கீழே விழுந்து விட்டது.அவள் பயந்தாள்.ஏனெனில் அதுவின்றி அவள் பார்வை தெளிவாக இருக்காது.பாறை மேல் விழுந்திருக்குமா என்று பார்த்தாள்.தெரியவில்லை. 

 அவள் பிரர்த்தனை செய்துகொண்டே ஒருவாறாக உச்சியை அடைந்தாள். அங்கு சென்றபின் அவள் உடையில் எங்காவது  ஒட்டியிருக்கிறதா எனப் பார்த்தாள்.இல்ல,அவளுக்கு மிக வருத்தமாக இருந்தது.மலை உச்சியிலிருந்து அழகிய இயற்கையை நன்கு அனுபவித்துப் பார்க்க முடியவில்லையே என்று.
  

 பின் நண்பர்களுடன் கீழே இறங்க ஆரம்பித்தாள்,”கடவுளே!இந்த மலையின் இண்டு இடுக்குகளைக் கூட நீ அறிவாய்.என் விழி வில்லை எங்கே இருக்கிறது என்றும் நீ அறிவாய்.அது கிடைக்க அருள் செய்”எனப் பிரார்த்தித்தவாறே .

 அவர்கள் பாதிதூரம் இறங்கியதும்,எதிரே ஒரு குழு வரக் கண்டார்கள். அக்குழுவில் ஒருவன் இவர்களைப் பார்த்து உங்களில் யாராவது விழி வில்லையைத் தவற விட்டு விட்டீர்களா எனக்கேட்டான்.பெண்ணுக்கு மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அதை விட அதிசயம் அவன் சொன்ன செய்தி.

 அவன் சொன்னான்”ஒரு பாறை மீதிருந்த குச்சியின் மேல் ஒரு கட்டெறும்பு இதைச் சுமந்தபடி ஊர்ந்து கொண்டிருந்தது!”

இந்த நிகழ்ச்சியை அப்பெண் சித்திரக்காரரான் தன் தந்தையிடம் சொல்ல அவர் வரைந்த சித்திரம்தான் இது.

இந்நிகழ்விலிருந்து வாழ்க்கையின் தத்துவம் ஏதாவது புரிபடுகிறதா?  




         

      

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

கடவுள் கேட்கும் வரம்!....கவிதை

இந்த வார நட்சத்திரமாக விளங்க அழைத்து எனக்கும் ஒரு அங்கீகாரமும் , கௌரவமும் அளித்த தமிழ்மணத்துக்கு முதற்கண் என் நன்றி!
.............................
எதையுமே கடவுள் வாழ்த்துடன் தொடங்குவதுதானே மரபு!இதோ--

”பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா !”

நான் கேட்டுவிட்டேன்,கடவுள் என்ன சொல்கிறார்?!-----இதோ

உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா?

பண்டிகைகள் கொண்டாடி படையல் படைக்கின்றாய்
உண்பதற்கு விதவிதமாய் செய்து மகிழ்கின்றாய்

பிள்ளையாராய்க் கும்பிட்டுக் கொழுக்கட்டை படைக்கின்றாய்
பிரப்பம் பழம் விளாம்பழமெனப் பலபழமும் கொடுக்கின்றாய்

கண்ணனாய் வணங்கி வெண்ணைய் வைக்கின்றாய்
எண்ணெய்ப் பலகாரம் பலவும் படைக்கின்றாய்.

கோவில்களில் எனக்கு பால் தயிர் பன்னீர் என்று
ஓய்வில்லாமல் அபிஷேகம் பலவும் செய்கின்றாய்.

உண்டியல் தேடிப் போய் பணம் நகை எனப் பலவும்
கொண்டு போய் நீ தவறாமல் கொட்டுகின்றாய்.

திருக் கல்யாணம் என்று சொல்லி யெனக்குத்
தினம் தினம் திருமணம் செய்விக் கின்றாய்

பட்டு வேட்டிப் புடவை கழுத்தில் தாலியெனப்
பலவும் வாங்கி யெனக்கு நீ அணிவிக்கின்றாய்


நான் உன்னை என்றுமே கேட்டதில்லை
எனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று

இன்று நான் சொல்கின்றேன் கேள் மனிதா
என் விருப்பம் என்னவென்று நீ அறிய.

நான் என்றுமே கொடுப்பவன்தான்,கேட்பவன் அல்ல!

படைக்கின்ற பழங்களெல்லாம் பசித்தவர்க்குக் கொடு
உடைக்கின்ற தேங்காயெல்லாம் நலிந்தவர்க்கு உண்ணக் கொடு.

குடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்
குடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.

எனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்
கனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.

கட்டுக்கட்டாய் உண்டியலில் கொட்டுகின்ற பணத்தில் நீ
கட்டித்தா இலவச கல்விச்சாலை,மருத்துவமனை இவையெல்லாம்.

திருக் கல்யாணம் செய்விக்கும் செலவினிலே
திக்கற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வை!

என்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா!


டிஸ்கி--(இந்தக் கவிதைக்கான விதை பல ஆண்டுகளுக்கு முன் விழுந்தது.அப்போது கரூரில் இருந்தோம்.ஒரு நாள் அம்மன் கோவில் சென்று திரும்பியவுடன் என் தாயார்(தற்போது வயது 93) சொன்னார்கள்.”குடம் குடமாப் பாலபிஷேகம் பண்ணினா.அப்ப எனக்குத் தோணித்து இப்படிப் பாலெல்லாம் வீணாப்போறதே.இதுக்குப் பதிலா யாராவது பசித்த ஏழைக் குழந்தைகளுக்குக் குடுக்கக் கூடாதான்னு.உடனே சந்நிதியில் நின்னு இப்படி யோசிக்கறது தப்புன்னு அம்மன் கிட்ட மன்னிப்பும் கேட்டுண்டேன்”

நான் சொன்னேன் ”தவறில்லை.உன்னை அப்படி யோசிக்க வைத்ததே அந்த அம்மன்தானே!”)