தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 11, 2011

கண்ணும்,கதையும்.

ஒன்பதாம் தேதியிட்ட ‘என் கண்ணே’ என்ற என் பதிவில் என் கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை பற்றி எழுதியிருந்தேன்.அதன் பின்னணியில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை இங்கே தொகுத்து வழங்குகிறேன்.

நான் ஊரிலிருந்து திரும்பி வந்த அன்று பக்கத்துக் குடியிருப்புக் காரர் என்னைக் காண வந்தார்.

”என்ன சார்,கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?” அவரது கேள்வி.
இருப்பது இரண்டு கண்கள்.அதில் ஒன்றில்தான் உறுத்தல்,கலக்கம் எல்லாம்.இவர் என்னடாவென்றால் நான் என்னவோ இந்திரன் போலக் ’கண்ணெல்லாம்’ என்கிறாரே!

’தெரியலை சார்;ஊருக்குப் போய் ரயிலிலிருந்து இறங்கும்போதே உறுத்தல் ஆரம்பமாகி விட்டது. கண்ணிலிருந்து நீர் வருது”

”அது ஒண்ணுமில்லை சார்! ரொம்ப நாள் கழிச்சு பிரயாணம் போனீங்க இல்லையா? சூடுதான்.எண்ணெய் தேய்த்துக் குளிங்க.சரியாப் போகும்”அவர் சொன்னார்.

நான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டு ரொம்ப நாளாகி விட்டது.இப்போது இவர் சொல்கிறாரென்று குளித்தால் நிச்சயம் காய்ச்சல் வரும்,இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன்,ஒருவர் சொன்னாரென்று ’த்ரிபளாதி தைலம்’(அப்படித்தான் ஞாபகம்) தேய்த்துக் குளித்து ஒரு வாரம் கடுங்காய்ச்சலில் அவதிப் பட்டேன்!

அவர் போன சில மணித்துளிகளில் தொலை பேசி அலறியது.

“ஓம் நமச்சிவாய”(நான் ஃபோனில் ஹலோ சொல்வதில்லை.)

’டேய்,ஊரிலிருந்து வந்தாச்சா” என் எம்.எஸ்சி வகுப்புத்தோழன்.

”காலைல அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாச்சு.போயிட்டு வந்ததில், இடது கண்ணில் உறுத்தல்;லேசாச் சிவந்திருக்கு.”நான்.

“ஒண்ணு சொல்றேன் செய்யிறியா?”

“சொல்லு”

“சாயந்திரம் என்னோடு க்ளப்புக்கு வந்து பனிக் குளிரா ஒரு கிங் ஃபிஷர் பீர் அடி. சூடெல்லாம் பறந்து போய்க் குளு குளுன்னு ஆயிடும்.ஆனால் நீகேட்க மாட்டியே!கூட வருவே;7அப் குடிப்பே;கல்தோசை சாப்பிடுவே;அவ்வளவுதானே”
நண்பன்.

”தெரியுதில்லை! வாயைத் தொறக்காம சும்மா இரு”

இவனும் இவன் யோசனையும்;பீரை’ அடி’க்கணுமாம்!

”கார்த்தாலே வந்தேளா!அக்கா எப்படியிருக்கா?” எதிர் ஃப்ளாட் பாட்டி.

”இதென்ன கண் சிவந்திருக்கே;இதுக்கு நல்ல மருந்து சொல்றேன். விளக்கெண்ணெயை அமிர்தப் பாலில் குழைச்சுக் கண்ணில் போடுங்கோ.சரியாயிடும்”

என்னடா இது சோதனை?அமிர்தப் பாலுக்கு எங்கே போக?(அமிர்தப்பால் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் யாரையாவது கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.)கையில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வீடு வீடாகப் போவதா?!இது சரியா வராது.

சோதிட நண்பர் ஒருவர் சொன்னார்”இடது கண்ணா?ஜாதகத்தில் 12 ஆவது வீடு,சந்திரன்,சுக்கிரன் எல்லாம் தசா புக்தியிலோ,கோசாரத்திலோ கெட்டுப் போயிருக்கான்னு பார்த்துப் பரிகாரம் பண்ணுங்கோ”

இதெல்லாம் செய்யிறதுக்குள்ள தானாவே சரியாகிவிடும்!-என் மனதில் நினைத்தது.

மருத்துவரிடம் சென்றேன்.

” என்ன,அழுதுகொண்டே வருகிறீர்கள்.ஃபீஸ் கொடுத்து விட்டுப் போகும் போதுதானே அழணும்.”

கண்ணைப் பார்க்கிறார்.”இன்ஃபெக்சன் ஒண்ணும் அதிகம் இல்லை.கண்ணை நல்ல நீரில் அடிக்கடி கழுவுங்கள்.கையை சோப் போட்டுக் கழுவாமல் கண்ணைத் தொடாதீர்கள். வெயிலில் எங்கும் போகாதீர்கள்.நாளையும் முன்னேற்றம் இல்லையென்றால் வாருங்கள். ஆயிண்ட்மெண்ட் தருகிறேன்.”

இரண்டு நாட்களில் சரியாகி விட்டது---எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல்,பீர் அடிக்காமல்,அமிர்தப் பால் போடாமல்,ஜாதகம் பார்க்காமல்!!

28 கருத்துகள்:

 1. கண் குணமானது சந்தோஷம்...
  ஆமா உங்க அக்கா எப்பிடி இருக்காங்க இப்போது...?

  பதிலளிநீக்கு
 2. இனி ஃபிரஷா எழுதுங்க....கண் வலி போயிருச்சில்ல...

  பதிலளிநீக்கு
 3. கண்கள் நலமானது அறிந்து மகிழ்ச்சி. நகைச்சுவை பதிவு. நல்லா இருக்கு. கொஞ்சம் இளமை கனவுகள் கலந்தே வந்து விட்டது என்று எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

  //இப்ப பிரச்சனை ஒன்னும் இல்லையே?//
  முழுவதும் சரியாகி விட்டது.
  நன்றி கருன்.

  பதிலளிநீக்கு
 5. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //கண் குணமானது சந்தோஷம்...
  ஆமா உங்க அக்கா எப்பிடி இருக்காங்க இப்போது...?//
  அக்கா உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.
  மிக்க நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 6. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // இனி ஃபிரஷா எழுதுங்க....கண் வலி போயிருச்சில்ல...//
  நிச்சயமாக!ஆரம்பிச்சாச்சு இல்லே!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. FOOD கூறியது...

  //கண்கள் நலமானது அறிந்து மகிழ்ச்சி. நகைச்சுவை பதிவு. நல்லா இருக்கு. கொஞ்சம் இளமை கனவுகள் கலந்தே வந்து விட்டது என்று எண்ணுகிறேன்.//
  இளமைக் கனவுகள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?எதுவாயினும்,சில நேரங்களில் அவை தவிர்க்க முடியாதவை ஆகிவிடுகின்றன!
  அன்புக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. கண்ணைப் பார்க்கிறார்.”இன்ஃபெக்ஷன் ஒண்ணும் அதிகம் இல்லை.கண்ணை நல்ல நீரில் அடிக்கடி கழுவுங்கள்.கையை சோப் போட்டுக் கழுவாமல் கண்ணைத் தொடாதீர்கள். வெயிலில் எங்கும் போகாதீர்கள்.நாளையும் முன்னேற்றம் இல்லையென்றால் வாருங்கள். ஆயிண்ட்மெண்ட் தருகிறேன்.”

  இரண்டு நாட்களில் சரியாகி விட்டது---எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல்,பீர் அடிக்காமல்,அமிர்தப் பால் போடாமல்,ஜாதகம் பார்க்காமல்!!


  ......உங்கள் பதிவில், நக்கல் - நகைச்சுவை எல்லாம் தூள் கிளப்புது.... கண்ணு சரியானது குறித்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 9. அமிர்தப்பால் கேட்டு அடி வாங்காம தப்பிச்சிட்டீங்க .
  சென்னைப்பித்தனுக்கு வந்தது சென்னைக் கண் நோயோ?

  பதிலளிநீக்கு
 10. //இரண்டு நாட்களில் சரியாகி விட்டது---எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல்,பீர் அடிக்காமல்,அமிர்தப் பால் போடாமல்,ஜாதகம் பார்க்காமல்!!//
  உண்மைதான். அதனால் தான் வள்ளுவர் சொல்கிறார்.

  "நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
  வாய்நாடி வாய்ப்பச் செயல்."

  என்று.நல்லபடியாக கண் குணமானது அறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 11. //......உங்கள் பதிவில், நக்கல் - நகைச்சுவை எல்லாம் தூள் கிளப்புது.... கண்ணு சரியானது குறித்து மகிழ்ச்சி.//
  ’இடுக்கண் வருங்கால் நகுக’ என்று வள்ளுவர் சொல்கிறார்.எனக்கு ஒரு சிறு இடுக்’கண்’.எனவே நகும் முயற்சியே இப்பதிவு!
  நன்றி சித்ரா!

  பதிலளிநீக்கு
 12. சிவகுமாரன் கூறியது...

  //அமிர்தப்பால் கேட்டு அடி வாங்காம தப்பிச்சிட்டீங்க .
  சென்னைப்பித்தனுக்கு வந்தது சென்னைக் கண் நோயோ?//
  வயதானவன் கேட்டால் யாரும் தப்பாக நினைக்க மாட்டார்கள், சிவகுமாரன்!
  இரு தினங்களில் சரியாகி விட்டதால் அது சென்னைக் கண் இல்லை!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 13. வே.நடனசபாபதி கூறியது...
  உண்மைதான். அதனால் தான் வள்ளுவர் சொல்கிறார்.
  "நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
  வாய்நாடி வாய்ப்பச் செயல்."
  என்று.நல்லபடியாக கண் குணமானது அறிந்து மகிழ்ச்சி.
  ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட எத்தனை அறிவுரைகள் பாருங்கள்!
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 14. --எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல்,பீர் அடிக்காமல்,அமிர்தப் பால் போடாமல்,ஜாதகம் பார்க்காமல்!! //
  ஆஹா சென்னை பித்தன் சார் எழுத்து ஸ்டைல் மெருகேறிகிட்டே போகுதே

  பதிலளிநீக்கு
 15. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
  //ஆஹா சென்னை பித்தன் சார் எழுத்து ஸ்டைல் மெருகேறிகிட்டே போகுதே//
  :-) மிக்க நன்றி சதீஷ்குமார்!

  பதிலளிநீக்கு
 16. உங்க நல்ல மனசுக்கு, எந்த ஒரு பிரச்சனையும் நிக்காம ஓடி விடும்..

  பதிலளிநீக்கு
 17. பதிவு எழுதும் விதம் சுவாரஸியமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 18. சிவகுமாரன் வலை வழியே இங்கு வந்தேன்.
  கண்கள் கலங்கிய கதை கண்டேன்.
  இது போலத்தான் எனக்கும் ஒரு அனுபவம்.
  ஸ்வைன் ஃப்ளு வாக்சினேஷன் என்று ஒரு நேசல் ட்ராப் எடுத்துக்கொண்டு
  அது படுத்திய அலர்ஜித் தொல்லை இருமல் என்ன என்று புரிபடாமல்,
  ஏகப்பட்ட ஆன்டிபயாடிக், அன்டி ஹிஸ்டமின், இருமல் சிரப், பிறகு ஒன்றும்
  கேட்காமல் போகவே, செஸ்ட் எக்ஸ் ரே, ப்ள்ட ரிபோர்ட், ஈஸ்னோஃபிலியோ
  ஆக இருக்கும் என்று அதற்கு ஒரு பத்து நாள் மருந்து, அதன் பிறகு ஸ்டெராய்ட்ஸ்,
  இதற்கும் நடுவிலே ஆயுர்வேத மருந்துகள், டானிக்குகள், அத்தனைக்கும்
  போகாத வரட்டு இருமல், கடைசியில், மருத்துவர் ( அவர் ஜி.ஹெச்சில் ஹெட் ஆஃப்
  த டிபார்ட்மென்ட்) எல்லா மருந்தையும் விட்டுவிடுங்கள். சும்மா விட்டுவிடுங்கள் என்றார். நான்கு நாளில் நின்று போயிற்று.

  இதை முன்னாடியோ சொல்லக்கூடாதா !!
  என்று தோன்றியது.

  எல்லா நேரம் ஸார் !!

  சுப்பு தாத்தா.

  http://vazhvuneri.blogspot.com

  பதிலளிநீக்கு
 19. பாரத்... பாரதி... கூறியது...
  //உங்க நல்ல மனசுக்கு, எந்த ஒரு பிரச்சனையும் நிக்காம ஓடி விடும்..//
  ஆகா!மிக்க மிக்க..நன்றி பாரதி!

  பதிலளிநீக்கு
 20. பாரத்... பாரதி... கூறியது...
  // பதிவு எழுதும் விதம் சுவாரஸியமாக இருக்கிறது.//
  எல்லாம் உங்களைப் போன்ற பதிவர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்!
  நன்றி பாரதி!

  பதிலளிநீக்கு
 21. sury கூறியது...
  //எல்லா நேரம் ஸார் !!//
  உண்மை!இதைத்தான் என் சோதிட நண்பரும் வேறு வார்த்தைகளில் சொன்னாரோ!
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 22. // ”என்ன சார்,கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?” அவரது கேள்வி.
  இருப்பது இரண்டு கண்கள்.அதில் ஒன்றில்தான் உறுத்தல்,கலக்கம் எல்லாம்.இவர் என்னடாவென்றால் நான் என்னவோ இந்திரன் போலக் ’கண்ணெல்லாம்’ என்கிறாரே!////

  ரொம்பவும் குசும்பானவர்தான் சார் நீங்க!
  இந்த வலைபதிவர்கள் அனைவரிடமும் ஒரு பொது குணம் உண்டு. முதலில் வரும் பொது மெல்ல மெல்ல பதுங்கி சில பதிவுகளை போட்டு நோட்டம் விடுவார்கள். தம்மை போலவே இங்கும் கூடியிருக்கும் கூட்டத்தை கண்டபின் ...அவ்வளவுதான் புலி பாச்சல் தான் பிறகு.

  இவரா??? என்று மூக்கில் விரலை வைத்துகொள்ளும் அளவிற்கு எழுந்து நிற்ப்பார்கள். ...நம்மளும் அப்படித்தானே! வெளுத்து கட்டுங்க சென்னைக்காதலரே!! :))))

  பதிலளிநீக்கு
 23. கண்ணில் வந்த உபாதை காரணம் சில பதிவுகளை இழந்துவிட்டோமே என்றுள்ளது ... இயற்கையாக தந்த ஒய்வு போலும் ! மீண்டும் பல பதிவுகளை எதிர்பார்கிறேன் ... தெளிந்த கண்ணோட்டத்துடன் . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 24. சென்னைக் கண்ணா. அதாவது மெட்ராஸ் ஐயா. பார்த்து பத்திரமாக கவனிச்சிக்கோங்க கண்ணை..

  நல்லதொரு பதிவு..

  பதிலளிநீக்கு
 25. கக்கு - மாணிக்கம் கூறியது...
  //ரொம்பவும் குசும்பானவர்தான் சார் நீங்க!
  இந்த வலைபதிவர்கள் அனைவரிடமும் ஒரு பொது குணம் உண்டு. முதலில் வரும் பொது மெல்ல மெல்ல பதுங்கி சில பதிவுகளை போட்டு நோட்டம் விடுவார்கள். தம்மை போலவே இங்கும் கூடியிருக்கும் கூட்டத்தை கண்டபின் ...அவ்வளவுதான் புலி பாச்சல் தான் பிறகு.

  இவரா??? என்று மூக்கில் விரலை வைத்துகொள்ளும் அளவிற்கு எழுந்து நிற்ப்பார்கள். ...நம்மளும் அப்படித்தானே! வெளுத்து கட்டுங்க சென்னைக்காதலரே!! :))))//
  உங்களைப் போன்ற பதிவர்கள்தான் எனக்கு வாத்தியார்,கக்கு!
  பார்க்கலாம்,எத்தனை நாள் தாக்குப் பிடிக்கிறேனென்று!
  மிக்க நன்றி மாணிக்கம்!

  பதிலளிநீக்கு
 26. Vasu கூறியது...

  //கண்ணில் வந்த உபாதை காரணம் சில பதிவுகளை இழந்துவிட்டோமே என்றுள்ளது ... இயற்கையாக தந்த ஒய்வு போலும் ! மீண்டும் பல பதிவுகளை எதிர்பார்கிறேன் ... தெளிந்த கண்ணோட்டத்துடன் . வாசுதேவன்//
  உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நிச்சயம் முயல்வேன்!
  நன்றி வாசு!

  பதிலளிநீக்கு
 27. அன்புடன் மலிக்கா கூறியது...
  //சென்னைக் கண்ணா. அதாவது மெட்ராஸ் ஐயா. பார்த்து பத்திரமாக கவனிச்சிக்கோங்க கண்ணை..
  நல்லதொரு பதிவு..//
  சென்னைக் கண் இல்லையம்மா! ஏதோ அலர்ஜியாக இருந்திருக்க வேண்டும்;அதுதான் தானாகவே இரு தினங்களில் சரியாகி விட்டது!
  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு