தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

சங்கிலி

 

 சில நாட்களுக்கு முன் ஒரு நாள் காலை திடீரென்று தலை சுற்ற ஆரம்பித்தது.(தலைக்கே தலை சுற்றலா என்று பதிவு நண்பர்கள் கேட்பது காதில் விழுகிறது!) அப்படியே நாற்காலியில் அமர்ந்து விட்டேன்.

டாக்டர் வந்து பார்த்தார்.பரிசோதனைகள் செய்தார்.கடைசியில் சொன்னார் “உங்களுக்கு வெர்டிகோ”  என்று!

 

ஏனக்குத் தெரிந்து வெர்டிகோ என்றால் உயரங்களின் பயம் (fear of heights).இங்கு நான் ஒரு ஸ்டூலில் கூட ஏறவில்லையே!இது வேறு வெர்டிகோ போலும்!

 

நான் பல ஆண்டுகளுக்குமுன் ஒரு ஹிட்ச்காக் படம் பார்த்திருக்கிறேன்.

படத்தின் பெயர் வெர்டிகோ.

அதில் நாயகனுக்கு உயரத்தைக் கண்டால் பயம்.

அதைப் பயன்படுத்தி ஒரு கொலை நடக்கிறது

இந்தப் படத்தைத் தழுவித் தமிழில் ஒரு படம் எடுத்தார்கள்.

பெயர்”கலங்கரை விளக்கம்”.

 

கலங்கரை விளக்கம் என்பது கடற்கரையில்,கடலில் செல்லும்

கலங்களுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப் படுவது.

 

சோழர் காலத்திலேயே கடல் வாணிபம்,கடற்படை எல்லாம் இருந்த காரணத்தினால்,கலங்கரை விளக்கமும் இருந்தது.கோடிக்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கமே சாட்சி.

 

புராணகாலத்திலேயே வான் ஊர்தியும்இருந்திருக்கிறது.

இராமாயணத்தில் புஷ்பக விமானம் பற்றிச் சொல்லப்படுகிறது

மகாபாரத காலத்தில் போரில் பயங்கரமான அஸ்திரங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.நாகாஸ்திரம்,அக்னியாஸ்திரம்என்று பலப் பல.அனைத்தையும் விட சக்தி வாய்ந்தது பிரம்மாஸ்திரம்.அதுதான் இன்றைய அணுகுண்டாக இருக்க வேண்டும்.

 

அணுகுண்டு என்றதும் தீபாவளி நினைவு வருகிறது.சிறுவனாக இருந்தகாலத்தில் அணுகுண்டு வெடித்து அந்தப் பேரொலியைக் கேட்பதில் பெருமகிழ்ச்சி.

ஆனால் இப்போதோ,காதைப் பொத்திக் கொண்டு உட்காரத் தோன்றுகிறது.

 

ஒரு குடும்பத்தலைவருக்கு தீபாவளி என்றால் கலக்கம்தான்,செலவுகளை எண்ணி.

அனைவருக்கும் புதுத்துணி,இனிப்பு கார வகைகள் ,பட்டாசு என்று எத்தனை.

தலை சுற்ற ஆரம்பித்து விடும்.

அது நிச்சயம் வெர்டிகோ இல்லை!

திங்கள், ஆகஸ்ட் 22, 2022

கண்ணனின் குடில்

 

கண்ணன் வந்தான்.

வந்தவன் இருந்தானா?

இல்லையேல் சென்று நாம் மீண்டும் அடுத்த ஆண்டு அழைக்கும்போதுதான் வருவானா?

எப்படி அழைத்தோம்…….

வீடு பெருக்கித் துடைத்துச் சுத்தம் செய்தோம்

தோரணம் கட்டினோம்

கோலம் போட்டோம்.

சின்னச் சின்ன கால்கள் வரைந்தோம்.

இவையெல்லாம் வெறும் சடங்குகளாகச் செய்தோம்.

அவன் எங்கு தங்க வேண்டுமோ அந்த இடத்தைச் சுத்தம் செய்தோமா?

அழுக்காறு,அவா,வெகுளி போன்ற எதிர்மறைக் குப்பை எண்ணங்களால் நிரம்பி வழியும் நம் மனத்தைச் சுத்தம் செய்ய வேண்டாமா?

சுத்தமாக இருந்தால்தானே அவன் வந்து அமர முடியும்?

அவன் நிரந்தரமாக இருக்க முடியும்?

செய்வோமா?

அவனிடம் நம்மை ஒப்படைப்போம்.

சமீபத்தில் கேட்ட குட்டிக் கதையொன்று…

கண்ணன் அஸ்தினாபுரத்துக்கு வருகிறான்.

அவன் தேர் நெருங்கியதும் பீஷ்மர் வந்து “கண்ணா!என் வீட்டுக்கு வரவேண்டும்” என் அழைக்கிறார்.

“இதுதான் உங்கள் வீடா?பின்னர் வருகிறேன்.”கண்ணன் அகன்றான்.

சிறிது தூரத்தில் துரோணர் வந்தார்.

“கண்ணா!என் வீட்டுக்கு வர வேண்டும்”

“ஓ! இது உங்கள் வீடா? பின்னர் வருகிறேன்.”

சிறிது தூரத்தில் விதுரர் வந்தார்

“கண்ணா!உன் வீட்டுக்கு வரவேண்டும்”

‘ ஓ!? என் வீடல்லவா?கட்டாயம் வரத்தான் வேண்டும்”

அவன் விதுரர் வீட்டிற்குச் சென்றான்.

இதற்கும் மேல் விளக்கம் தேவையா?!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

 

 

 

சனி, ஆகஸ்ட் 20, 2022

திருச்சிற்றம்பலம்

 தொலைபேசி மணி ஒலித்தது.

எடுத்தேன்

முகமன் கூறினேன்"ஓம் நமச்சிவாய"

ஆம்.நான் போனில் ஹலோ சொல்வதில்லை.ஆனால் இப்போதெல்லாம்  தெரியாத எண்களிலிருந்து போன் வந்தால் ஹலோ சொல்லி விடுகிறேன்.

என் நண்பர் ஒருவர் வீட்டில் என்னை என் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதே இல்லை.ஓம் நமச்சிவாய என்றே குறிப்பிடத் தொடங்கி விட்டனர்.


இன்னொரு நண்பர் இருக்கிறார்.அவர் போனை எடுத்ததும்"திருச்சிற்றம்பலம்" என்று சொல்வார்.


என்ன சொன்னால்தான் என்ன?எல்லாம் என்னப்பன் தென்னாடுடைய சிவன் நாமம்தானே!


திருச்சிற்றம்பலம் என்றதும் நினைவுக்கு வருகிறார் திரு.ஜெகசிற்பியன்.

விகடன் சரித்திர நாவல் போட்டியில் அவரது "திருச்சிற்றம்பலம்" என்னும் நாவல் முதல் பரிசு பெற்றது.

ஆலவாய் அழகன்,நந்திவர்மன் காதலி போன்ற சரித்திரக்கதைகளையும்,பல சமூக நாவல்களையும்,சிறுகதைகளையும் எழுதியவர்.விகடனில் சில முத்திரைக்கதைகளையும் எழுதியவர்.


உங்களில் எத்தனை பேர் திருச்சிற்றம்பலக் கவிராயரைத் தெரியும்?

தொ.மு.சிதம்பர  ரகுநாதன் என்பது அவரது இயற் பெயர்.கம்யூனிச இயக்கத்தில் பற்றுக் கொண்டவர்..

எனக்கு என் கல்லூரி நாட்களில் அவர் கவிதைகள் மிகவும் பிடிக்கும்.

கோழை மனத் தாமசஙகள் ஏதுமின்றி

தாரணியில் சோசலிசம் நாமைமக்க எண்ணுவமின்னாள்.

என்று பாடியவர்.

சீன ஆக்கிரமிப்பின்போது அவஎ எழுதிய கவிதை மறக்க முடியாதது

"பல்லாயிரம் அடி மேல் பனி மலையின் உச்சியிலே

கொல்லாமல் கொல்லுகின்ற கொடுங்குளிரின் மத்தியிலே

பொல்லாத சீனரோடு போர் புரியும் நம் வீரம்

சொல்லால் வசப்படுமோ சொல் பொருளும் ஒத்திடுமோ"

பின்னாளில் என்ன ஆனார் எனத் தெரியவில்லை

ஒரு கேள்வி

"திருச்சிற்றம்பலம்" என்று ஒரு படம் வந்திருக்கிறதாமே?

பக்திப் படமோ?











வெள்ளி, ஆகஸ்ட் 19, 2022

கண்ணன் என்னும் ஆனந்தம்

 

கிருஷ்ணன் என்றாலே ஆனந்தம்தான்.

அது அனுபவித்தால்தான் புரியும்.

கிருஷ்ணா விழிப்புணர்வின்,கிருஷ்ணானுபவத்தின் ஆனந்தமே அலாதி

1993 என நினைவு.

மதுராவில் வங்கி ஆய்வு தொடர்பாக ஒரு மாதம் இருக்க நேர்ந்தது.

சில நாட்களிலேயே நான் என்னுள் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன்.

சாதாரணமாகப் பல நேரங்களில்.தனியாக இருக்கும்போது கூட எதன்/எவர் மீதாவது கோபம்/வெறுப்பு ஆகியவை தோன்றும்.என்ன வாழ்க்கை என்ற சலிப்பு ஏற்படும்.ஆனால் அத்தகைய எதிர்மறை எண்ணங்கள் குறைந்து மனம் ஒரு வித ஆனந்ததில் லயித்தது.இங்கு மகிழ்ச்சி என்று நான் சொல்லவில்லை.அது ஏனோ ஆனந்தம் என்பதே பொருத்தமாக இருக்கிறது.யாரைப் பார்த்தாலும் ஒரு நட்புணர்வு,நல்லெண்ணமே மேலிட்டது.

இதன் விளைவுதான் கிருஷ்ணன் பழகிய பல ஊர்களைப் பார்க்கும் ஆவல் மேலோங்கியது.ஒரு ஞாயிறன்று அதி காலை புறப்பட்டேன்.

 

கோகுல்,கோவர்த்தன், நந்தகாவ், பல்தேவ்,பர்சானா(ராதாவின் பிறப்பிடம்) என்று கண்ணனுடன் தொடர்புடைய பல ஊர்களுக்குச்  சென்று முழுமையான கிருஷ்ணானுபவத்தில் அமிழ்ந்தேன்.

 காலை உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்தாலும்,கண்ணனே என்னை ஆட்கொண்டிருந்ததால் பசியை உணரவில்லை

 

பிற்பகல் 3 மணிக்கு மதுரா திரும்பினேன்.அப்போதுதான் கண்ணன் என்னைப் பசியை உணர வைத்தான்.கோவில் அருகிலேயே ஒரு உணவகம். தரைமீது அமர்ந்து ஒரு பலகை மீது தட்டு வைத்து சுவையான சாப்பாடு.வயிறு புடைக்க உண்டேன்.

கிருஷ்ணானுபவத்தின் மற்றொரு நிகழ்வு எனது “பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்” (http://chennaipithan.blogspot.com/2013/03/blog-post_19.html )என்ற பதிவில்.

 

முடிக்கும்முன்…..

அலமாரியைத் திறந்து சட்டை எடுக்கும்போது,மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சட்டையைப் பார்த்தேன்.எவ்வளவு பிரியமுடன் வாங்கிய சட்டை?எத்தனை முறை விருப்பமாக அணிந்த சட்டை?இப்போது மூலையில்….

 

இதைத்தான் கண்ணன் சொல்கிறான்….

”வாஸாம்ஸீ ஜீர்ணானி யதா விஹாய

          நவாநி கிருஹ்ணாதி நரோபராணி

ததா சரீராணி விஹாய ஜீர்ணானி

           அந்யாநி ஸம்யாதி நவானி தேஹீ”

 

எப்படி மனிதன் நைந்துபோன பழைய உடைகளை நீத்து விட்டு,புதிய உடைகளை அணிகிறானோ,அவ்வாறே ஆத்மா நைந்துபோன பழைய உடல்களை நீத்து விட்டுப் புதிய உடைகளை அணிகிறது

ஆத்மா அழிவற்றது.

கண்ணனை வணங்குகிறேன்.

வியாழன், ஆகஸ்ட் 18, 2022

வாழ்க்கை ஒரு விளையாட்டு..3.---ஹாக்கி

 

நானும் ஹாக்கியும் சம்பந்தப்பட்ட. மற்றுமொரு நிகழ்ச்சி.

கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும்,பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.அதற்காக நான்கைந்து குழுக்கள் அமைக்கப்படும்.அந்த ஆண்டு ஒரு குழுவின் தலைவனாக நான் நியமிக்கப்பட்டேன்.(எனது ஆரஞ்சுக் குழுதான் அந்த ஆண்டு சாம்பியன் குழுவாக வந்தது.)

போட்டிகளில் ஹாக்கியில் என் தலைமையில் என் குழு ஆடியது எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினோம்.மிகவும் கடுமையான போட்டி.ஆட்டத்தில் என் இடம்,வலது கடைசி(right-out,right extreme).நான் பாஸ் செய்த பந்தை வாங்கி,என் அணி ஆட்டக்காரர் ஒரு கோல் போட்டார். எதிர் அணியினரும் ஒரு கோல் போட்டனர்..ஆட்டம் மேலும் கடுமையானது.நான் என் முழுத்திறமையையும் காட்டி ஆடினேன்.நானே பந்தை எடுத்துச் சென்று ஒரு கோல் போட்டேன்.எதிர் அணியினரால் எங்கள் பாதுகாப்பை மீறி கோல் போட முடியவில்லை

 

.ஆட்டத்தில் சிறிது வன்முறை தலையெடுத்தது.அப்போது ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் நடுவிலிருந்து  உரத்த குரல் எழுந்தது” கேப்டனை அடிடா”.என்று(உண்மையில் வந்த வார்த்தைகள் வேறு!)சிறிது நேரத்தில் எதிர் அணி ஆட்டக்காரர் ஒருவர் என்னுடன் மோதும் போது,மட்டையால் என் காலில் அடித்தார். அதைப் பொருட்படுத்தாமல் நான் தொடர்ந்து வேகமாக ஆடினேன். வெளியிலிருந்து என் வகுப்புத்தோழனின் குரல் வந்தது. ”சந்துரு,உன் காலைப் பார்” குனிந்து பார்த்தேன்.குருதி வழிந்து கொண்டிருந்தது.ஆட்டம் முடிய சில மணித்துளிகளே மீதம் இருந்ததால்,கைக்குட்டையால் ஒரு கட்டுப் போட்டு விட்டுத் தொடர்ந்து ஆடினேன்.இறுதியில் எங்கள் அணி வென்றது.

 

எங்கள் ஆட்டம் பலராலும் பாராட்டப் பட்டது

 

முடிவில் வெற்றி பெற்ற ஆரஞ்சுக்குழுவின் தலைவன் என்ற முறையில் குழுவுக்கானபரிசைப் பெற்றுக் கொண்ட நான்.ஹாக்கி வெற்றிக்கான பரிசை நன்கு விளையாடிய வேறொரு  மாணவரைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி அனுப்பி அதிலும் நல்ல பெயர் பெற்றேன்!

 

இந்த விஷயத்தில் தல தோனிக்கெல்லாம் நான் முன்னோடி,தெரியுமா?

 

டிஸ்கி: தம்பட்டம் இதோடு போதும் என நினைக்கிறேன்.அடுத்த பதிவில் வேறு ஏதாவது பேசுவோமா!

புதன், ஆகஸ்ட் 17, 2022

வாழ்க்கை ஒரு விளையாட்டு..2

 

சந்துரு!ஏலேய்”

திரும்பிப் பார்த்தேன்

என் வகுப்புத்தோழன் சிதம்பரம்தான் அழைத்தது

“ஒன்னை ஹாக்கி அகஸ்டின் அண்ணாச்சி கூப்பிடறாரு. மைதானத்துல இருக்காரு”

அகஸ்டின் முன்னாள் மாணவன்.ஹாக்கிவீரன்.இப்போது கோவில்பட்டி’சி’அணிக்காக ஆடுகிறார்.அணித்தலைவர்.கோல் கீப்பர்.

என்னை எதற்குக் கூப்பிடுகிறார்?

யோசித்தபடியே போனேன்.

அவரை நெருங்கி” கூப்பிட்டீங்களாமே?” என்றேன்.

அவர் கேட்டார்”நீ எப்பவும் என்ன பொசிசன்ல ஆடுற?”

“ரைட் அவுட் அண்ணாச்சி”

”உம்.டோர்னமெண்ட்ல ஆடுவயா?”

ஒன்றும் புரியவில்லை.

அவரையே பார்த்தேன்

”வெள்ளிக்கிழமை நம்ம அணிக்கு மேச் இருக்கு.இன்னிக்குத் திங்கள்.ஊருக்குபோன செல்லப்பா இன்னும் வரலை.அவன் ரைட் அவுட்தான்.அவன் வரல்லேனா நீ ஆடணும்.முடியுமா?”

எனக்குஒருஇன்ப அதிர்ச்சி.

‘ஆடுறேன் அண்ணாச்சி”

“லிஸ்ட் எல்லாம் பாத்தயில்ல.யாரோட ஆடறோம் தெரியுமாலே?”

”பாத்தேன்.ஆனா ஞாபகம் இல்ல.”

“கோல்டன் ராக்.தயாரா இரு”.

என் வயிற்றைக் கலக்கியது “கோல்டன் ராக்”

காட்டரை எதிர்த்தா?

வீட்டுக்கு வேகமாகத் திரும்பி நேராக டாய்லெட் போய்விட்டேன்.

அன்று இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை.

மறுநாள் முழுவதும் ஒரு கலக்கம்தான்

மாலை பயிற்சி ஆட்டம்.

பயத்துடன் ஆட ஆரம்பித்தாலும் கொஞ்ச நேரத்தில் ஆட்டத்துடன் ஒன்றி விட்டேன்.

லேசாக பயம் தெளிந்து விட்டது.

இவ்வாறாக மேலும் இரு நாட்கள் சென்றன.

வெள்ளியன்று காலை செல்லப்பா  வந்துவிட்டான் என்ற செய்தி கிடைத்தது.

கொஞ்சம் ஏமாற்றம்; கொஞ்சம் ஆறுதல்!

அன்று….

ஆட்டம் தொடங்கியது.

காட்டர் எப்போதும் எங்கள்D யிலேயே இருப்பது போல் தோன்றியது.

முடிவு பொன்மலை அணி வெற்றி….12-0

ஒரு பெருமூச்சு விட்டேன்.

நல்லவேளை நான் ஆடவில்லை

ஆனால் நான் ஆடியிருந்தால் முடிவு 12-0 என்று இருந்திருக்காது

……..

……….

……….

15-0 ஆகக் கூட இருந்திருக்கலாம்!

 

 

 

 

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2022

வாழ்க்கை ஒரு விளையாட்டு

                                                                              

அந்த வேதனை மறைவதற்கு இரண்டு நாட்களாயிற்று.

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம்தான்.

ஆனால் இப்படி ஒரு தோல்வியை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்ன ஆயிற்று.

ஒரு இறுதி ஆட்டத்தில் இப்படி ஒரு தோல்வி அடைவது ,அதுவும் ஒரு காலத்தில் அந்த விளையாட்டில் கொடிகட்டிப் பறந்த ஒரு நாடு,பல மறக்க முடியாத வீரர்களைத் தந்த நாடு, வெட்கப்பட வேண்டிய செய்தியே

பொதுநலவாய ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 7-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது 

கோவில்பட்டியில் ஹாக்கி பயின்றவன்,தயான்சந்தை நேரில் பார்த்தவன்,ஓரிரு வார்த்தை பேசியவன்,அவரது மட்டை மாயததைக் கண்டவன்  என்ற முறையில் எனது வலி மிக அதிகம்.

நான் சிறுவனாக இருந்தபோது வானொலியில் கேட்ட ஒரு ஆட்டத்தின் நேர்முக வர்ணனையின் ஒரு பகுதி இன்னும் மறக்க முடியவில்லை.இந்தியா ,ஜப்பான் நடுகளுக்கிடையேயான போட்டி.இதோ அந்தப் பகுதி...ஆங்கிலத்தில்

“Gurudev to Deshmuk,Deshmuk to Gurudev,Gurudev to Dedhmuk,Deshmuk to Gurudev,Gurudev to Deshmuk,Deshmuk to Gurudev.........A Goal !

இந்தியா அன்று 11 கோல்கள் அடித்தது.

ஆனால் இன்றோ ,இந்தியா ஜப்பானிடத்தில் இருப்பது போல் தோன்றியது

கோவில்பட்டி குப்புசாமி நாயுடு நினைவு ஹாக்கிபோட்டியில் பல முறை. ஒரு அணியிடம் எதிர் அணி வாங்கிய பலத்த அடிகளைப் பார்த்திருக்கிறேன்.

கோவில்பட்டியிலேயே மூன்று அணிகள்--A,B,C  என்று. அதில் ஏஅணி சிறந்த அணி.மற்றும் லக்ஷ்மி மில்,பெரம்பூர் ரெயில்வேஸ், கோல்டன்ராக் ஆகிய சிறந்த அணிகள்.அப்போதெல்லாம் ரெயில்வே அணிகளில் பெரும்பாலும் சிறந்த ஆட்டககாரர்களாக விளங்கியவர்கள் ஆங்கிலோ இந்தியர்களே.

பெரம்பூரின் கார்,பொன்மலையின் காட்டர் நினைவில் நிற்பவர்கள்.

ஒரு முறை கோவில்பட்டி C  அணியில் ஆடுவதற்குக் கிடைத்த வாய்ப்பு பற்றி  அடுத்த  பதிவில்எழுதுகிறேன்.

..(இன்னும் வரும்)



வெள்ளி, செப்டம்பர் 06, 2019

என்னதான் முடிவு?


நித்யா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்குக் கோலம் போடுவதில் எப்போதுமே  அதிக ஆர்வம் உண்டு.

அன்று வெள்ளிக் கிழமை வேறு.

எனவே மிகவும் மும்முரமாகக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் அருகில் ஒரு பைக் வந்து நின்றது.

தலையைத் தூக்கிப் பார்த்தாள்.

பைக்கில் அமர்ந்திருந்தவன் தன் கையில் இருந்த காகிதத்தை நீட்டி “இந்த விலாசம் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா” என்றான்

அதை வாங்க அருகில் சென்றாள் நித்யா.

அவள் அவனை நெருங்கியதும்,அவன் அவள் கழுத்தில் இருந்த சங்கிலியை வெடுக்கென்று இழுத்து அறுத்து எடுத்துக்கொண்டு பைக்கை வேகமாகச் செலுத்தியவாறு சென்று விட்டான்.

ஒரு சில விநாடிகளில் எல்லாம் முடிந்து விட்டது.

அவன் சங்கிலியை இழுத்தபோது ஏற்பட்ட காயத்தைக் கையால் அழுத்தியவாறு நித்யா கத்த ஆரம்பித்தாள்.

அவள் கணவன்,மாமியார் உள்ளிருந்து ஓடி வந்தனர்.அண்டை அயலார்களும் வந்து கூடினர்.

அவள் நடந்ததைச் சொன்னாள்.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்பதே பலரின் ஆலோசனையாக இருந்தது.

ஆனால் நித்யா,அவள் கணவன் குமார்,அவள் மாமியார் பங்கஜம் மூவரும் காவல் நிலையம் போனால் தொடர்ந்து ஏதாவது பிரச்சினை வருமோ என்று தயங்கினர்.

அந்த வீதியிலேயே இருந்த ஒருவர்,அந்தப் பகுதி காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தவர் குமாரைப் பார்த்துச் சொன்னார்.”கட்டாயம் புகார் கொடுக்கணும் நான் வீட்டுக்குப் போய் தயாராயிட்டு வரேன் .நீங்களும் தயாராகுங்க.இந்த வீதியிலேயே ரெண்டு சிசிடிவி காமிரா இருக்கு.அதில அவன் மாட்டிக்குவான்.”


அவர் வந்ததும் அவருடன் புறப்பட்டான் குமார்.

புகார் கொடுக்கப்பட்டது........

காவல் நிலையத்தில் காமிரா படத்தை பார்த்ததில் பைக்கில் அவன் வருவதும்,நித்யாவிடம் பேசுவதும் ,சங்கிலியை அறுத்துக் கொண்டு வேகமாகச் செல்வதும் நன்கு பதிவாகியிருந்தது.

உடன் இரு காவலர்கள் அவனைத் தேடும் பணியில் அனுப்பப் பட்டனர்.திருட்டு நகை வாங்குவதில் பெயர் பெற்ற ஒரு கடையைக் கவனிக்கத் தீர்மானித்தனர்.

கடை திறக்கவில்லை

சிறிதுதள்ளி நின்று காத்திருந்தனர் .

கடை திறந்தது.

சிறிது நேரத்தில் பைக்கில் வந்து இறங்கி உள்ளே சென்றான் அவன்.

ஓரிரு நிமிடங்கள் கழித்துக் காவலர் கடைக்குள் சென்றனர்,.

அவன் தப்ப முடியாமல் அமுக்கிப் பிடித்தனர்


கடைக்காரர் சொன்னார்”சார் !இவன் கவரிங் நகையைக் கொண்டு வந்து என்னை ஏமாற்றிக் காசு வாங்கப் பாத்தான்”

போலீசார் திகைத்தனர்..கவரிங் நகையா?

சிறிது நேரம் சென்று காவல் நிலையத்திலிருந்து குமாருக்கு அழைப்பு வந்தது.

ஆய்வாளர் கோபமாக இருப்பது தெரிந்தது.மேசை மீது அந்தச் சங்கிலையத் தூக்கி எறிந்து சத்தம்போட்டார்”ஏய்யா,கவரிங் நகைன்னு முதல்லயே சொல்லித்தொலைக்கறதுதானே? ஜம்பமா தங்கநகைமாதிரி புகார் எல்லாம் கொடுத்துட்டீங்க?எடுத்துட்டுப் போங்க”
குமாருக்கு அவமானமாக இருந்தது.

சங்கிலியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

”என்னங்க?சங்கிலி கிடைச்சுடுச்சா” என்று ஆர்வமாகக் கேட்டாள்  .

”கிடைச்சது நித்யா.ஆனா கவரிங் நகை.போலிஸ் பிடிக்கிறதுக்கு முன்னாலயே அவன் ஏதோ பண்ணிட்டான் போல.போலிஸும் நம்பிட்டாங்க.அவங்க நம்ம மேல தப்பு சொல்றாங்க.இனிமே ஒண்ணும் செய்ய முடியாது”.

நித்யாவும் அவள் மாமியாரும்  ஏமாறத்துக்குள்ளாயினர்.

குமார் மனத்தில் ஓடிய எண்ணங்கள் அவர்களுக்குத் தெரியாது

என்னதான் நடந்திருக்கும்?

(தொடரும்)







செவ்வாய், செப்டம்பர் 03, 2019

தேங்காய்னா சும்மாவா?!


இப்போதெல்லாம் எத்தனையோ தினங்கள் கொண்டாடப் படுகின்றன.....அன்னையர் தினம்,தந்தையர் தினம்,பெண்கள் தினம்,குழந்தைகள் தினம் என்றெல்லாம்.இவற்றுக்கிடையே நேற்று ஆரவாரமில்லாமல் ஒரு தினம் கடந்து சென்றிருக்கிறது.நமது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு பொருளின் தினம்

ஆம்.

அகில உலக தேங்காய் தினம்.

தேங்காயின் முக்கியத்துவம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சில சமையல் வகைகளுக்குத் தேங்காய் இருந்தால்தான் சுவை.

என்றுமே மற்ற முடித் தைலங்களை விடத் தேங்காய் எண்ணெய்தான் தலைக்குத் தடவச் சிறந்தது.

கேரளாவில் சமையலுக்கு முழுவதும் பயன்படும் எண்ணெய்,தேங்காய் எண்ணெய்தான்.

இந்தத் தேங்காயைத்தரும் தென்னை மரம் ,கவிஞர்களின் வாக்கிலும் இடம் பெறுகிறது.

மூதுரையில் அவ்வையார் சொன்னார்

’நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.’’

எனவேதான் ஒரு திரைக்கவிஞன் சொன்னான்

தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு

என்று.

நன்றிக்கு எடுத்துக்காட்டாகப் புகழப் படுவது தென்னைதான்.

காணி நிலம் கேட்ட பாரதி கூட,வேறெந்த மரத்தையும் கேட்காமல்,”பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேண்டும்” என்றுதான் கேட்கிறான்.

நேற்று விநாயகர் சதுர்த்தி.

வேண்டுதல் நிறைவேற,விநாயகருக்குச் சிதறுகாய்(தேங்காய்) உடைப்பது வழக்கம்.

சதுர்த்திப் பிரசாதங்களில் மிக முக்கியமானது,தேங்காய்ப் பூரணத்தில் செய்த கொழுக்கட்டைதான்


தேங்காய் தினம் நேற்று அமைந்தது மிகப் பொருத்தம்தான்.

திங்கள், செப்டம்பர் 02, 2019

போவோமா,புதுக்கோட்டைக்கு.......


நான் புதுக்கோட்டைக்கு இன்று வரை போனதில்லை.

போக வேண்டும் என்றொரு ஆசை ,பலமான ஆசை சில முறை எழுந்ததுண்டு.

 1967

ஒரு பகலில் ஓடும் ரயிலில்  சந்தித்த நட்பை மாலை பிரிகையில் அந்நட்பு புதுக்கோட்டையைச்  சேர்ந்தது என்பது தவிர வேறெதுவும் அறியாமல்  திரும்பிய காலம்.

சில நாட்கள்சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்ததுண்டு. போய்த் தேடிப்
பார்க்கலாமா என.னாலும் ஓர் அச்சம்.   ஊரில் எங்கென்று தேடுவது.அங்கும் இங்கும் அலைந்து யாருக்காவது ஐயம் ஏற்பட்டால்?எனவே போகாமலே இருந்து விட்டேன்.இன்றும் புதுக்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது அந்த அழகிய நட்பே!

மற்றொரு தொடர்பு சாந்தானந்த சுவாமிகள்.என் உறவினர் ஒருவர் என்னை அவரது புவனேச்வரி அதிஷ்டானத்தில்  ஆயுட்கால உறுப்பினர் ஆக்கி விட்டார்.பணம் நான்தான் கட்டினேன்!முன்பெல்லாம் என் பிறந்தநாளன்று குங்குமப் பிரசாதம் வந்து கொண்டிருந்தது;சுவாமிகளையும் நான் புதுக்கோட்டையில் பார்க்கவில்லை,சேலத்தில்தான் பார்த்தேன்.


என் அம்மாவின் சித்தி,புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள்,கல்யாண சமையலைக் கூடக் கவனிக்கும் சாமர்த்தியம் பெற்றவர்கள்.புதுக்கோட்டைக் காரர்கள் எல்லாருமே சமையலில் விற்பன்னர்களோ என நினைக்கிறேன்


புதுக்கோட்டைப் பிரபலம் என்றால் என் நினைவுக்கு வருபவர் ஜெமினி கணேசன் அவர்கள்.

இப்போது போகலாமா என ஒரு ஆசை!

ஆனால் கொல்லன் உலையில் ஈக்கென்ன வேலை என்று என் மனம் என்னையே கேட்கிறது!
நானும் ஒரு காலத்தில் தீவிரமாக  தமிழில் வலைப்பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தவன்தானே....இது நான்.
ஆனால் இப்போது நடக்கப் போவது பதிவர் சந்திப்பு இல்லையே,இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்தானே என்கிறது மனம்.
அதனால் என்ன?..நான்
அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்,கொ உ.ஈ எ வே என்று.
உனக்குத் தமிழில் எழுதுவதைத் தவிர  வேறு எந்தத் தொழில் நுட்பமும் தெரியாது.அந்தக்காலத்திலேயே உன் வலைப்பூவில் பிரச்சினை என்றால் உடனே   திண்டுக்கல்லுக்குத் தொலை பேசி உதவி கேட்பாய்.
திண்டுக்கல்லா?  நான்.
ஆம்.திண்டுக்கல் என்றால் போதும்.அவரைத்தான் குறிக்கும்.
ஓ!
ஆம்.அதனால்தான் சொன்னேன் நீ புதுக்கோட்டைக்குப்போய் உருப்படியாக என்ன செய்யப் போகிறாய் என்று.....
எழுத்தில் மட்டுமே பார்த்த நண்பர்களை நேரில் சந்திப்பேன்.நானும் ஏதாவது கற்றுக் கொள்வேன்.கல்லாதது உலகளவு அல்லவா?
என்னவோ செய்.

பேச்சு முடிந்தது
என்ன செய்யப் போகிறேன்?

கீழே............


 கணினித் தமிழ்ச் சங்கம்புதுக்கோட்டை

இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - 4 


இடம் – ஜெஜெ.கல்லூரி சிவபுரம், (மதுரைச்சாலை) புதுக்கோட்டை
நாள்- அக்டோபர்-12,13 சனி,ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி
(அழைப்பிதழ் விரைவில், இது ஒரு முன்தெரிவிப்பே)

 பங்கேற்பாளர்கள் இணைய இணைப்புடன் கூடிய செல்பேசி / மடிக்கணினிகொண்டுவருதல் நல்லது. 
மற்றவர்க்கு செய்துதர முயற்சி செய்வோம்
இரண்டுநாள் மதியஉணவு, கையேடு, தேநீர்ச் செலவுக்காக 
ரூ.200 (மாணவர்க்கு ரூ.100) நன்கொடை வரவேற்கப்படுகிறது.

பங்கேற்பாளர் விவரம் தந்து முன்பதிவு செய்தல் அவசியம்

தலைமை
முனைவர் நா.அருள் முருகன் அவர்கள்
கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர்
(இணைஇயக்குநர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை)

தொடக்கவுரை
முனைவர் .இராசேந்திரன் அவர்கள்
ஆசிரியர் - கணையாழி – இலக்கிய இதழ்
(மேனாள் துணை வேந்தர் –தமிழ்ப்பல்கலைக் கழகம்) 

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்
திருமிகு நா.சுப்பிரமணியன் அவர்கள்,
செயலர் ஜெ.ஜெ.கல்விக் குழுமம், புதுக்கோட்டை
முனைவர் ஜ.பரசுராமன் அவர்கள் 
      முதல்வர்ஜெ.ஜெ.கலைஅறிவியல் கல்லூரி       
முனைவர் கு.தயாநிதி அவர்கள்
       தமிழ்த்துறைத் தலைவர்

---------- பயிற்சியளிக்கும் கணித்தமிழ் வல்லுநர்கள் --------
முனைவர் மு.பழனியப்பன் காரைக்குடி,  திண்டுக்கல் தனபாலன்சிவ.தினகரன் காஞ்சி, தி.ந.முரளிதரன் சென்னை பிரின்சு என்னாரெசுப் பெரியார் சென்னை, நீச்சல்காரன்சென்னை, எஸ்.பி.செந்தில்குமார் மதுரை,  முனைவர் பா.ஜம்புலிங்கம் தஞ்சாவூர், கரந்தை ஜெயக்குமார், மற்றும் 
புதுக்கோட்டை நண்பர்கள் - 
யு.கே.கார்த்திகஸ்தூரிரெங்கன்எஸ்.இளங்கோ, புதுகை செல்வா,  த.ரேவதி,ஸ்ரீமலையப்பன்காயத்ரிஉதயகுமார், திவ்யபாரதி

-------------------ஒருங்கிணைப்பாளர்கள்-------------------
நா.முத்துநிலவன்ராசி.பன்னீர்செல்வன்மு.கீதா, இரா.ஜெயலட்சுமிகு.ம.திருப்பதி,எஸ்.டி.பஷீர்அலிமகா.சுந்தர்.மாலதி, கே.ஸ்டாலின் சரவணன்சு.மதியழகன்மைதிலி,தென்றல்பொன்.கருப்பையா மீரா.செல்வக்குமார், சோலச்சி. என்.கே.சூரியா
----------------------------------------------
ஒருங்கிணைப்பில் இணைந்து பணியாற்ற விரும்பும் புதுகை நண்பர்களோ, பயிற்சிமுகாமில் பயிற்சி தர விரும்பும் வல்லுநர்களோ விவரம்தெரிவித்தால் அவசியம் பயன்படுத்திக் கொள்வோம். 
வருக வருக!

பயிற்சிக் கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்காக உதவிசெய்ய, பங்களிக்க விரும்பி நன்கொடை தர விரும்புவோர் நமது ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா அவர்களை தொடர்பு கொண்டு நன்கொடை தந்தால் மிகவும் மகிழ்வோம். வழக்கம் போல முகாம் முடிந்து, வரவு செலவு விவரம் இங்குத்தரப்படும்

இணையத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் விவரம்
(1)  கணினியில் தமிழ் எளிய அறிமுகம் –
(2)  இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் வாய்ப்பும் – உரை –
(3)  வலைத்தளங்களில் செய்யவேண்டியதும், செய்யக் கூடாததும்
(4)  தமிழில் வலைப்பக்கம் (Blog) உருவாக்கம் விரிவாக்கம் –
(5)  தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல்
(6)  தமிழில் புலனம் (whatsaap) செயல்பாட்டுப் பயிற்சி -
(7)  தமிழில் முகநூல் (FaceBook) செயல்பாட்டுப் பயிற்சி –
(8)  தமிழில் இன்ஸ்டாகிராம் செயல்பாட்டுப் பயிற்சி –
(9)  தமிழில் சுட்டுரை(Twitter)செயல்பாட்டுப் பயிற்சி –
(10)          ,இணைய (Online) வணிக வாய்ப்புகளும் ஏய்ப்புகளும் –
(11)          தட்டச்சு செய்யாமலே குரல்வழிப் பதிவேற்றுதல் -
(12)          மின்னூல் (E.Book) / இலவசப் பதிவிறக்கம் பற்றிய தகவல்கள் 
(13)          கிண்டில் (Kindle) படித்தல்பதிவிறக்கிச் சேமித்தல்
(14)          படைப்புகளை You-Tubeஇல் ஏற்றுதல் செயல்பாட்டுப் பயிற்சி-
(15)          மின்-சுவரொட்டி (Flex) தயாரித்தல்செயல்பாட்டுப் பயிற்சி -  
(16)          பார்க்க வேண்டிய குறும்படங்கள் (மாலை,இரவு) 

இவைபற்றிய கையேடுகள்  இலவசமாக வழங்கப்படும்
(இந்த முயற்சியை நமது வலைச்சித்தர்
திண்டுக்கல் தனபாலன் மேற்கொண்டு வருகிறார்.)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவு பார்த்து, புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த ”எம்.எஸ்.ஸ்க்ரீன்ஸ்” ஆசிரியர் எம்.எஸ்.ரவி அவர்கள் தொடர்பு கொண்டு, “நான் ஃபோட்டோ ஷாப் வழியாக எப்படி போஸ்டர்கள் வடிவமைப்பது என்பது பற்றிச் சொல்கிறேன்” என்று சொன்னார். நமது அமைப்புகளில் எப்படியும் மாதம் 4,5கூட்டங்கள் நடக்கின்றன. அவற்றுக்கு அழைப்பிதழ், போஸ்டர்கள் வடிவமைக்க நாமே தெரிந்து கொண்டால் எவ்வளவு நல்லது என்று தோன்றியது! எனவே அவரது யோசனையைப் 
பயிற்சி முகாமில் செயல்படுத்தலாம் என்பதுஎன்கருத்து 
– நா.மு., 01-09-2019 இரவு 10.20

--------------------------------------------------------------------------------------------------------------

ஒரு வேண்டுகோள்...
இதைப் படிக்கும் நண்பர்கள். 
தமக்குத் தொடர்புள்ள சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து
இணையத்தமிழ் வளர்ச்சிக்கு
 உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்!
---------------------------------------
மேற்காணும் தலைப்புகளே அன்றி வேறு தலைப்புகளும் அவசியம் கற்பிக்கப்படவேண்டும் என்று கருதுவோர், அதுபற்றிய தகவல்களோடு, வணிகநோக்கிலன்றி வந்து கற்பிக்கத் தக்க வல்லுநர் விவரங்களையும் தந்துதவ அன்புடன் வேண்டுகிறேன், வணக்கம்.
----------------------------------------------------------
நமது முந்திய பயிற்சி முகாம்களைப் பற்றி அறிய -
--------------------------------- 
பயிற்சி முகாம் தொடர்பான மேல்விவரம் அறிய 

        மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com,
        செல்பேசி எண்கள்-
நா.முத்துநிலவன் 9443193293,    கவிஞர் மு.கீதா-9659247363