தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

என்னதான் முடிவு?


நித்யா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்குக் கோலம் போடுவதில் எப்போதுமே  அதிக ஆர்வம் உண்டு.

அன்று வெள்ளிக் கிழமை வேறு.

எனவே மிகவும் மும்முரமாகக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் அருகில் ஒரு பைக் வந்து நின்றது.

தலையைத் தூக்கிப் பார்த்தாள்.

பைக்கில் அமர்ந்திருந்தவன் தன் கையில் இருந்த காகிதத்தை நீட்டி “இந்த விலாசம் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா” என்றான்

அதை வாங்க அருகில் சென்றாள் நித்யா.

அவள் அவனை நெருங்கியதும்,அவன் அவள் கழுத்தில் இருந்த சங்கிலியை வெடுக்கென்று இழுத்து அறுத்து எடுத்துக்கொண்டு பைக்கை வேகமாகச் செலுத்தியவாறு சென்று விட்டான்.

ஒரு சில விநாடிகளில் எல்லாம் முடிந்து விட்டது.

அவன் சங்கிலியை இழுத்தபோது ஏற்பட்ட காயத்தைக் கையால் அழுத்தியவாறு நித்யா கத்த ஆரம்பித்தாள்.

அவள் கணவன்,மாமியார் உள்ளிருந்து ஓடி வந்தனர்.அண்டை அயலார்களும் வந்து கூடினர்.

அவள் நடந்ததைச் சொன்னாள்.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்பதே பலரின் ஆலோசனையாக இருந்தது.

ஆனால் நித்யா,அவள் கணவன் குமார்,அவள் மாமியார் பங்கஜம் மூவரும் காவல் நிலையம் போனால் தொடர்ந்து ஏதாவது பிரச்சினை வருமோ என்று தயங்கினர்.

அந்த வீதியிலேயே இருந்த ஒருவர்,அந்தப் பகுதி காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தவர் குமாரைப் பார்த்துச் சொன்னார்.”கட்டாயம் புகார் கொடுக்கணும் நான் வீட்டுக்குப் போய் தயாராயிட்டு வரேன் .நீங்களும் தயாராகுங்க.இந்த வீதியிலேயே ரெண்டு சிசிடிவி காமிரா இருக்கு.அதில அவன் மாட்டிக்குவான்.”


அவர் வந்ததும் அவருடன் புறப்பட்டான் குமார்.

புகார் கொடுக்கப்பட்டது........

காவல் நிலையத்தில் காமிரா படத்தை பார்த்ததில் பைக்கில் அவன் வருவதும்,நித்யாவிடம் பேசுவதும் ,சங்கிலியை அறுத்துக் கொண்டு வேகமாகச் செல்வதும் நன்கு பதிவாகியிருந்தது.

உடன் இரு காவலர்கள் அவனைத் தேடும் பணியில் அனுப்பப் பட்டனர்.திருட்டு நகை வாங்குவதில் பெயர் பெற்ற ஒரு கடையைக் கவனிக்கத் தீர்மானித்தனர்.

கடை திறக்கவில்லை

சிறிதுதள்ளி நின்று காத்திருந்தனர் .

கடை திறந்தது.

சிறிது நேரத்தில் பைக்கில் வந்து இறங்கி உள்ளே சென்றான் அவன்.

ஓரிரு நிமிடங்கள் கழித்துக் காவலர் கடைக்குள் சென்றனர்,.

அவன் தப்ப முடியாமல் அமுக்கிப் பிடித்தனர்


கடைக்காரர் சொன்னார்”சார் !இவன் கவரிங் நகையைக் கொண்டு வந்து என்னை ஏமாற்றிக் காசு வாங்கப் பாத்தான்”

போலீசார் திகைத்தனர்..கவரிங் நகையா?

சிறிது நேரம் சென்று காவல் நிலையத்திலிருந்து குமாருக்கு அழைப்பு வந்தது.

ஆய்வாளர் கோபமாக இருப்பது தெரிந்தது.மேசை மீது அந்தச் சங்கிலையத் தூக்கி எறிந்து சத்தம்போட்டார்”ஏய்யா,கவரிங் நகைன்னு முதல்லயே சொல்லித்தொலைக்கறதுதானே? ஜம்பமா தங்கநகைமாதிரி புகார் எல்லாம் கொடுத்துட்டீங்க?எடுத்துட்டுப் போங்க”
குமாருக்கு அவமானமாக இருந்தது.

சங்கிலியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

”என்னங்க?சங்கிலி கிடைச்சுடுச்சா” என்று ஆர்வமாகக் கேட்டாள்  .

”கிடைச்சது நித்யா.ஆனா கவரிங் நகை.போலிஸ் பிடிக்கிறதுக்கு முன்னாலயே அவன் ஏதோ பண்ணிட்டான் போல.போலிஸும் நம்பிட்டாங்க.அவங்க நம்ம மேல தப்பு சொல்றாங்க.இனிமே ஒண்ணும் செய்ய முடியாது”.

நித்யாவும் அவள் மாமியாரும்  ஏமாறத்துக்குள்ளாயினர்.

குமார் மனத்தில் ஓடிய எண்ணங்கள் அவர்களுக்குத் தெரியாது

என்னதான் நடந்திருக்கும்?

(தொடரும்)8 கருத்துகள்:

 1. ஆஹா ஏதோ பெரிய திருப்பம் வரும் போலயே...?

  கவரிங் நகை போட்டு வந்த மனைவியை மாட்டிவிட மனமில்லையோ...

  பதிலளிநீக்கு
 2. ஆஹா... சரியான இடத்தில் தொடரும்! என்ன தான் நடந்திருக்கும்? தெரிந்து கொள்ள நாங்களும் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 3. மனைவியே 'covering'ங்காக இருக்குமோ...? - குமார்...!

  பதிலளிநீக்கு
 4. அது கவரிங் நகையாகஇருக்கட்டும்.  திருடனைப் பிடிக்க உதவியதே...

  பதிலளிநீக்கு
 5. என்னதான் நடந்திருக்கும் என்று கேட்டிருக்கிறீர்கள். இதற்கு இரண்டு விதமான பதிலைத் தரலாம் என எண்ணுகிறேன்.

  1. உண்மையில் அது போலி நகைதான் . அது போலி என்பது நித்யாவிற்கே தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் காவல் நிலையத்தில் புகார் தர சம்மதித்திருக்கமாட்டாள். நித்யாவின் தந்தையே கையில் பணத்தட்டுப்பாடு காரணமாக முதலில் போலி நகையை போட்டுவிட்டு பின்னர் தங்க நகை வாங்கி கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று நினைத்து மகளுக்கு கொடுத்திருக்கலாம். காவல் நிலையத்தில் நகை போலி என அறிந்த குமார் தனது அம்மாவிடம் இருந்து மனைவியை காப்பாற்ற உண்மையை மாற்றி சொல்லியிருக்கலாம்.

  2. அது போலி நகை என்பது நித்யாவின் பெற்றோருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் வாங்க சொல்லும் விளம்பரங்களைப் பார்த்து அந்த கடை ஒன்றில் வாங்கியபோது அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம். உண்மையை அறிந்த குமார் அந்த கடைக்கே சென்று மிரட்டி /வாதாடி கொடுத்த பணத்திற்கு ஈடான தங்க நகையைப் பெற்றிருக்கலாம்.

  நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என அறிய தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. நான் சொல்ல வந்ததில் 2 ஐ இங்கு நடனசபாபதி அவர்கள் சொல்லியிருக்கிரார்...

  மற்றொன்றும் தோன்றியது குமாரும் அதற்கு உடந்தையா இருக்குமோ என்று...கடைசியில் இருந்த அந்த வரிதான் எனக்கு இப்படித் தோன்ற வைத்தது.

  கீதா

  பதிலளிநீக்கு