தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 13, 2015

சுமந்தது போதும்!



வழக்கம்போல் ஸ்வாமி ஒருவனை அழைத்தார்

சாப்பிட்டாச்சா?

ஆச்சு ஸ்வாமி.

என்ன சாப்பிட்டாய்?

முருங்கைக்காய் சாம்பார்,பீன்ஸ் கறி.

நேற்று என்ன சமையல்.

நேற்று பூசனிக்காய் சாம்பார்,வாழைக்காய்க் கறி

போன வெள்ளிக்கிழமை என்ன சாப்பிட்டாய்

போன வாரம்…..ம்,ம்நினைவுக்கு வரவில்லை ஸ்வாமி

சாப்பாடில்லாமல் உயிர் வாழ முடியாது இல்லையா?

நிச்சயமாக.

மிக முக்கியமானது சாப்பாடு;நீ விரும்பி உண்பது.ஆனால் அதுவே இரண்டு நாள் ஆனால் என்ன சாப்பிட்டோம் என்று நினைவில் நிற்காது,சரிதானே?

ஆம் ஸ்வாமி

சந்தோஷம்.உனக்கு நண்பர்களாக இருந்து இப்போது அவ்வாறு இல்லாதவர்கள் இருக்கிறார்களா?

இருக்கிறான் ஸவாமி ஒருவன்.ஒரு காலத்தில் நெருங்கிய நண்பன்;ஆனால் இன்று பேச்சு வார்த்தையே கிடையாது

ஏன்?

ஒரு முறை ஒரு விஷயத்தில் எங்களுக்குள் வாக்குவாதம் வந்து என்னைக் கேவலமாகப் பேசி விட்டான்

என்ன சொன்னான்

நீ ஒரு முட்டாள்.சுயமாகவும் சிந்திக்கத் தெரியாது,மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கும் இல்லை;தன்முனைப்பின் உச்சம்என்றான்

இதே வார்த்தைகளா?

ஆமாம்;அப்படியே இன்னும் காதுகளில் ஒலிக்கின்றனவே?

அவன் நண்பனாக இருந்த காலத்தில் உன்னை எதற்காகவும் புகழ்ந்து பேசியதில்லையா?

சொல்வான்;என் இரக்க சுபாவம் பற்றி.பிறர்க்கு உதவும் பண்பு பற்றியெல்லாம் பாராட்டுவான்.

என்ன சொல்லிப் பாராட்டினான்;நினைவு இருக்கிறதா?

அப்படியே சொல்ல இயலாது.பொதுவாக நினைவு இருக்கிறது.

உம்!இரண்டு நாள் முன் என்ன சாப்பிட்டாய் என்பது நினைவில்லை;ஏனெனில் அது தேவையில்லை.நண்பனின் புகழ்ச் சொற்கள் நினைவில்லை.அதெல்லாம் உனக்கு உரியவைதான் என்ற எண்ணம்!ஆனால் அவன் கடிந்து சொன்னது மறக்கவில்லை;அது நினவில் நிற்பது அவ்வளவு அவசியமா?

…………!

இது போல்தான்.நாம் தேவையற்றவையை எல்லாம் சுமந்து கொண்டு திரிகின்றோம். உடனே இறக்கி வைத்து விட்டுக் கனமின்றி இருக்காமல் வருடக்கணக்காகத் தேவை யற்ற சுமைகளோடு அலைகிறோம்!

முன்பே பல முறை சொன்ன கதைதான்.ஒருவன் ரயிலில் செல்லும்போது 20 கிலோ எடை,10 கிலோ எடையுள்ள இரு பொருட்களைத் தூக்கி வந்தான்.20 கிலோதான் அனுமதிக்கப்படும்      என்று  யாரோ சொன்னதால் 20 கிலோ பெட்டியைக் கீழே வைத்து விட்டு,10 கிலோ மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டான்.கீழே வைத்தாலும் தலையில் வைத்தாலும் ரயில்தான் தாங்கப்போகிறது என்பதை மறந்து.
அது போல் வேண்டாத சுமைகளைச் சுமந்து கொண்டு அலைந்து வருத்திக் கொள்ளாதீர்கள். சுமையை உடனுக்குடன் இறக்கி வைத்து விட்டு நிம்மதியாக இருங்கள்

ஓம் நமச்சிவாய

(……ஸ்வாமி பித்தானந்தாவின் சத்சங்கத்திலிருந்து)


40 கருத்துகள்:

  1. ஸ்வாமி பித்தானந்தா!
    ரொம்ப FIT ANANDHA வாக!
    இருக்கிறாரே அவரின் APPOINMENT
    கிடைக்குமா!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பே சிவம்..ஆகா!சொல்லச் சொல்ல இனிக்குதய்யா!
      அப்பாயின்ட்மெண்ட் பற்றி சாமியிடம் கேட்டேன்.அவர் சொன்னார்"இவன் அவ்வளவு பெரிய ஆளல்ல.இவனைப்பார்க்க
      அதெல்லாம் தேவையில்லை!"(சாமி நான் என்று சொல்வதில்லை)
      நன்றி

      நீக்கு
  2. வணக்கம் ஐயா !

    யதார்த்தமான வரிகள் எல்லோரும் சிந்திக்க வேண்டிய விடயம் அருமை ஐயா ஆமா யார் அந்தப் பித்தானந்தா நான் இதுவரை கேள்விப்படவில்லையே ! ஹா ஹா ஹா

    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தமிழ்மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது கேள்விப்பட்டாயிற்று அல்லவா!
      நன்றி சீராளன்.

      நீக்கு
  3. எனக்கும் இறக்கி வைக்கத்தான் ஆசை ,எப்படி இறக்கி வைப்பது என்பதையும் பித்தானந்தா தெளிவு படுத்துவாரா :)

    பதிலளிநீக்கு
  4. தேவையற்ற சுமைகளை பற்றிய சுவாமிஜியின் உரை சிறப்பு! அருமை!

    பதிலளிநீக்கு
  5. 'நமசிவாய' என்ற
    ஐந்தெழுத்தை ஓதினால்
    அமைதி என்றுமே!

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான். நினைவில் இருத்திவைக்க வேண்டியவை இருக்காது. ஆனால் தேவையில்லாதவை எப்போது நினைவில் இருக்கும். ஸ்வாமி பித்தானந்தாவின் அறிவுரையைக் கேட்டபின்னும் வேண்டாத சுமைகளைச் சுமந்து கொண்டு அலைந்து வருத்திக் கொள்கிறோமே என்பதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. பதிவை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. இறக்கும் போதுமென்ற சிலதை இறக்கி வைக்க முடியும்.

    அருமை 'தல'

    பதிலளிநீக்கு
  8. அருமையான பகிர்வு ஐயா...
    தேவையானதை சுமந்தால் எல்லாம் நலமே.

    பதிலளிநீக்கு
  9. பித்தானந்தாவின் தத்துவம் அருமை

    பதிலளிநீக்கு
  10. உண்மையா சொல்லனும்னா இதை படித்தவுடன் வெட்கமாக இருக்கிறது சார். நானும் சென்ற இரண்டு வருடமாக இதுபோல் சில வார்த்தைகளை சுமந்துகொண்டே அழைந்தேன். தோழி அவளாகவே வந்து மன்னிப்புக் கேட்டு, இப்போது பேசிகொண்டிருக்கிறாள். நீ சொன்ன அந்த அட்வைஸ் எனக்கு உதவியது என நான் சொன்னதாக பல விஷயங்களை சொல்கிறாள். அவள் சொன்னவுடன் தான் இதெல்லாம் கூட நாங்கள் பேசிகொண்டோம் என்ற நினைவே வந்ததது. என் வகுப்பறைக்கு பயன்படக்கூடிய மற்றொரு அருமையான கதை. மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  11. சிந்திக்க வைத்த விடயம் ஐயா உண்மை.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    ஐயா

    அறிவுக்கு விருந்தாகும் கதை நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. வழக்கம் போல உங்கள் பாணி! சிந்திக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  14. ஸ்வாமி பித்தானந்தாவின் இன்றைய சத்சங்க உரை அருமை! கேட்டதுதான் என்றாலும் ஸ்வாமி எத்தனைமுறை சொன்னாலும் இவை எல்லாம் அவ்வப்போது மனதில் பதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. நல்லதொரு விஷயம் சொல்லும் பதிவு. பலரும் இப்படித்தான் தேவையில்லாத விஷயங்களை சுமந்து திரிகிறோம்.

    பதிலளிநீக்கு