தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 31, 2011

ராமனின் தம்பிகள்!

இங்கு ஒரு சிறு முன்னுரை தேவைப்படுகிறது.

கம்பராமாயணப் பட்டி மன்றங்களில்,”சிறந்தவன் இராமனா,பரதனா” என்றோ,”வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் செய்தது சரியா” என்றோ வாதிடுவார்கள்.அவர்கள் வாதத்தில் முன்னிறுத்தப்படும் இராமன் ஒரு இலக்கியப் பாத்திரம் மட்டுமே.இந்துக்களின் கடவுள் என்ற நிலையிலிருந்து வேறு பட்ட ஒரு பார்வையே அது.அவர்கள் நோக்கம் இழிவு படுத்துவதல்ல.ஒரு இலக்கியப் பார்வை மட்டுமே.

அது போலத்தான் இதுவும்.

ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ராம தத்துல்யம் ராமநாம வரானனே---(விஷ்ணு ஸஹஸ்ரநாமம்)

ஸ்ரீ ராம ராம என்று மனத்துக்கு இனியவனான ராமனிடத்தில் நான் ரமிக்கின்றேன்.அந்த ராம நாமம் ஸஹஸ்ரநாமத்துக்குச் ச்மம்.
....................
பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது.

என் நண்பன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

பேச்சு இராமாயணத்தைப் பற்றிக் குறிப்பாகக் கம்ப ராமாயணத்தை பற்றியது.

ராமனின் பெருமைகளைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
கம்ப ராமாயணத்தில் வரும் ஒரு பாடலைப் பற்றிச் சொன்னேன்

”குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்; எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல் அரும் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை''.”

வேடனான குகனையும்,வானரமான சுக்கிரீவனையும்,அரக்கனான வீடணனையும்
தன் உடன் பிறப்புகளாக ஏற்றுக் கொண்ட அரசனான ராமனின் பெருந்தன்மை பற்றி,சமத்துவ மனப்பான்மை பற்றி உயர்வாக நான் சொல்லிக் கொண்டிருந்தேன். அரசர் குலத்தோன்றலாக இருந்தும்,தன்னை விடக் கீழான வேடனை, வானரனை, அரக்கனைத் தன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதன் மூலம் மனித வாழ்வில் உயர்வு தாழ்வில்லை என்பதை உணர்த்தியவன் ராமன் என்பதே என் கூற்று.

நண்பன் சிரித்தான்.

நான் கேட்டேன்”ஏன் சிரிக்கிறாய்.?”

அவன்கேட்டான்”குகன் யார்?”

“ஒரு வேடன்” நான்

”வேடர் கூட்டத்தைச் சேர்ந்த சாதாரண வேடனா?”

“இல்லை வேடர்களின் தலைவன்”

“அதாவது வேடர் குல அரசன்.சரி.சுக்கிரீவன் யார்?”

”ஒரு வானரம்”

“சாதாரண வானரமா?”

"இல்லை.வானரங்களின் அரசன்”

”சரி வீடணன் வெறும் சாதாரண அரக்கனா?”

“இல்லை. அரக்கர் வேந்தன் ராவணனின் தம்பி”

“அடுத்து அரசனாகப் போகிறவன்,அல்லவா?”

”ஆம்”

”ஆக,ராமன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதெல்லாம், அரசர்களைத்தான். சாதாரணமானவர்களை அல்ல. சொல்லின் செல்வன் எனப் பாராட்டிய அனுமனையும் ஒரு தொண்டனாகத்தான் ஏற்றுக் கொண்டான்.உடன் பிறப்பாக அல்ல.இதில் எங்கிருந்து வந்தது சமத்துவம்?”

எனக்குப் பதில் சொல்லத்தெரியவில்லை.

உங்களுக்குத் தெரியுமா?

நண்பனின் கருத்து சரியா,தவறா?

விவாத மேடை திறந்திருக்கிறது—கண்ணியமான.ஆரோக்கியமான விவாதத்துக்காக!

ராமாயணத்தை கரைத்துக் குடித்தவர்களும்,கம்பனில் ஊறித்திளைத்தவர்களும், மற்ற அனைவரும் வாருங்கள்.வெட்டியும் ஒட்டியும் கருத்துச் சொல்லுங்கள்!

வாங்கய்யா!உங்க கருத்தைச் சொல்லுங்க,இதோ வாராறு நம்ம முனைவரு,வாங்க.வந்து கலக்குங்க!

தமிழ் மணம் குறிப்பிட்டுள்ள அணுகு முறைகளில் ஒன்று--//மற்ற வலைப்பதிவர்கள் விவாதிக்க ஒரு மேடை அமைத்துக்கொடுக்கவும் முயலலாம்.//

இதோ மேடை!


செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

எழுத்தறிவித்தவன் ---சிறுகதை--

ராமசாமி இறந்து போய் விட்டார்!

பெரிய செல்வந்தர்.எனவே வீட்டின் உள்ளும்,வெளியிலும் நல்ல கூட்டம்-உறவினர்கள், குடும்ப நண்பர்கள்,தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் என்று.

அவருக்கு ஒரே மகன்.அவன் அவர் பேச்சைக் கேட்காமல் வேறு மதப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவன் உறவையே வெட்டி விட்டார்.

எனவே அவரது தம்பியே ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கப் பட்டது.

வந்திருந்தவர்கள் சின்னச்சின்னக் குழுக்களாகக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் யாருக்கும் தெரியாது.ராமசாமியின் ஆத்மா அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்பது.

(ஒரு சிறு பிறிது மொழிதல்(digression).சமீபத்தில் கேட்டது.ஒருவர் இறந்தவுடன் ஆன்மா நேரடியாக எமலோகம் செல்கிறதாம்.அங்கே எமதர்மன் தன் தண்டத்தை அதன் தலையில் வைக்கிறான்.உடனே அது பிறந்தது முதல் மரணம் வரை தான் வாழ்வில் செய்த புண்ணிய பாவங்களைச் சொல்லி விடுகிறது.அந்த ஆன்மாவுக்கு உலக ஆசை இன்னும் நீங்கவில்ல. எனவே எமன்அதை,ஆசை அகன்ற பின் வரச் சொல்லித் திருப்பி அனுப்பி விடுகிறான். ஆன்மா திரும்பி வருகிறது.உடலுக்குள் நுழைய முடியாது எனவே அங்கேயே அழுது கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது..நம்புகிறவர்கள் நம்பலாம்!)

அப்படி ஒரு குழுவில் இருந்த கணேசன் தாழ்ந்த குரலில் சொன்னார்”என்னத்தைத் தலயில் கட்டிக் கொண்டு போனார்?அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கொடுக்காத மனிதன். எத்தனை முறை அநாதை ஆசிரமத்துக்கு நன்கொடை கேட்டிருப்பேன்! ஒரே ஒரு முறை பிச்சைக்காசு 100 ரூபாய் கொடுத்தான்!”

அந்த ஆன்மா கத்தியது”பாவி !நீ ஒரு திருடன் என்பது எனக்குத் தெரியாதா? நன்கொடை வாங்கி அதை முழுவதும் ஆசிரமத்துக்கா உபயோகித்தாய்?உன் பங்களா எப்படிக் கட்டினாய்? உனக்கு ஏனடா நான் கொடுக்க வேண்டும்?”

வேலாயுதம் சொன்னார்”ஆமாங்க!நானும் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பணம் கேட்டேன்.ஒரு பைசா தரவில்லையே.பெரிய பணக்காரர்,பக்தர்.தினமும் கோவிலுக்குப் போகிறவர் .ஆனால் கும்பாபிஷேகத்துக்குக் கொடுக்க மனமில்லை.பிரபுதான்;கஞ்சப்பிரபு!”

ஆன்மா அலறியது”டேய்,பொம்பளைப் பொறுக்கி!நீ வசூல் பண்ணின பணத்திலிருந்து உன் ஆசை நாயகிக்கு நகை வாங்கியது எனக்குத் தெரியும் .அதுக்காகப் பொய்க்கணக்கு எழுதியவன்தானேடா நீ!”

பொதுவான அனைவரின் கருத்தும் அவர் தருமம் செய்யாத கஞ்சர் என்பதாகவே இருந்தது!

உடலை எடுக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அவன் வந்தான்.வயது 18 இருக்கும்.சோகம் தோய்ந்த முகம். வெளியில் இருந்தவர்களைத் தாண்டி உள்ளே போனான்.பிணத்தின் முன் வணங்கினான்.கால்களைத் தொட்டுத் தன் கண்களிலொற்றிக் கொண்டான்.கண்ணீர் வடித்தான்.

அங்கிருந்த பெரிய மனிதர்களுகுச் சந்தேகம்”யார் இவன்? ராமசாமிக்கு வேறு பெண்ணிடம் தொடர்பு இருந்ததோ? அவள் மகனோ?”

அவன் வெளியேறும் போது அவனை நிறுத்திக் கேட்டனர்”.யாரப்பா நீ?” அவன் சொன்னான்.

“ஐயா!நான் ஓர் ஏழை.பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கையில் பணம் இன்றிக் கஷ்டப் பட்டேன். ஒரு நாள் கோவிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது இவர் அங்கு வந்து என்னை விசாரித்தார்.பின் எனக்குப் பண உதவி செய்தது மட்டுமின்றி என் மேற்படிப்புக்கு உதவித்தொகை கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.இன்று நான் படிப்பது அவர் தயவில்தான்.”

அனைவரும் திகைத்து நின்றனர்.

அவன் சொன்னதைக் கேட்க அந்த ஆன்மா அங்கில்லை.

அவன் அவர்பாதங்களை த்தொட்டுக் கண்ணீர் விட்ட போதே ,அந்த ஆன்மாவின் பாதங்கள் சுவர்க்கம் செல்லும் வலிமை பெற்றன.வழி திறந்தது!

”அன்ன சத்திர மாயிரம் வைத்தல்
ஆல யம்பதி நாயிர நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் ”—பாரதி!




திங்கள், ஆகஸ்ட் 29, 2011

கடவுள் கேட்கும் வரம்!....கவிதை

இந்த வார நட்சத்திரமாக விளங்க அழைத்து எனக்கும் ஒரு அங்கீகாரமும் , கௌரவமும் அளித்த தமிழ்மணத்துக்கு முதற்கண் என் நன்றி!
.............................
எதையுமே கடவுள் வாழ்த்துடன் தொடங்குவதுதானே மரபு!இதோ--

”பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா !”

நான் கேட்டுவிட்டேன்,கடவுள் என்ன சொல்கிறார்?!-----இதோ

உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா?

பண்டிகைகள் கொண்டாடி படையல் படைக்கின்றாய்
உண்பதற்கு விதவிதமாய் செய்து மகிழ்கின்றாய்

பிள்ளையாராய்க் கும்பிட்டுக் கொழுக்கட்டை படைக்கின்றாய்
பிரப்பம் பழம் விளாம்பழமெனப் பலபழமும் கொடுக்கின்றாய்

கண்ணனாய் வணங்கி வெண்ணைய் வைக்கின்றாய்
எண்ணெய்ப் பலகாரம் பலவும் படைக்கின்றாய்.

கோவில்களில் எனக்கு பால் தயிர் பன்னீர் என்று
ஓய்வில்லாமல் அபிஷேகம் பலவும் செய்கின்றாய்.

உண்டியல் தேடிப் போய் பணம் நகை எனப் பலவும்
கொண்டு போய் நீ தவறாமல் கொட்டுகின்றாய்.

திருக் கல்யாணம் என்று சொல்லி யெனக்குத்
தினம் தினம் திருமணம் செய்விக் கின்றாய்

பட்டு வேட்டிப் புடவை கழுத்தில் தாலியெனப்
பலவும் வாங்கி யெனக்கு நீ அணிவிக்கின்றாய்


நான் உன்னை என்றுமே கேட்டதில்லை
எனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று

இன்று நான் சொல்கின்றேன் கேள் மனிதா
என் விருப்பம் என்னவென்று நீ அறிய.

நான் என்றுமே கொடுப்பவன்தான்,கேட்பவன் அல்ல!

படைக்கின்ற பழங்களெல்லாம் பசித்தவர்க்குக் கொடு
உடைக்கின்ற தேங்காயெல்லாம் நலிந்தவர்க்கு உண்ணக் கொடு.

குடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்
குடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.

எனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்
கனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.

கட்டுக்கட்டாய் உண்டியலில் கொட்டுகின்ற பணத்தில் நீ
கட்டித்தா இலவச கல்விச்சாலை,மருத்துவமனை இவையெல்லாம்.

திருக் கல்யாணம் செய்விக்கும் செலவினிலே
திக்கற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வை!

என்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா!


டிஸ்கி--(இந்தக் கவிதைக்கான விதை பல ஆண்டுகளுக்கு முன் விழுந்தது.அப்போது கரூரில் இருந்தோம்.ஒரு நாள் அம்மன் கோவில் சென்று திரும்பியவுடன் என் தாயார்(தற்போது வயது 93) சொன்னார்கள்.”குடம் குடமாப் பாலபிஷேகம் பண்ணினா.அப்ப எனக்குத் தோணித்து இப்படிப் பாலெல்லாம் வீணாப்போறதே.இதுக்குப் பதிலா யாராவது பசித்த ஏழைக் குழந்தைகளுக்குக் குடுக்கக் கூடாதான்னு.உடனே சந்நிதியில் நின்னு இப்படி யோசிக்கறது தப்புன்னு அம்மன் கிட்ட மன்னிப்பும் கேட்டுண்டேன்”

நான் சொன்னேன் ”தவறில்லை.உன்னை அப்படி யோசிக்க வைத்ததே அந்த அம்மன்தானே!”)

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

உடன் பிறப்பே!உனக்கொரு சோதனை!

உடன் பிறப்பே!

உனக்காக நான் வருந்திடுகிறேன்.

எத்தகைய சோதனையை நீ எதிர்கொள்ளப்போகிறாய் என்பதை அறிந்திடுவாயா?

திருடனுக்குத் தேள் கொட்டியது போல் என்பார்கள்!அவனால் கத்திட முடிந்திடுமா?கதறிட முடிந்திடுமா?அழுதிடத்தான் முடிந்திடுமா?

பொறுத்துக் கொண்டிடத்தான் வேண்டும்.

அது போல்தான் உன் நிலை!

நாளை முதல் ஒரு வாரம் தினம் ஒரு பதிவென்று உன்னை நான் தாக்கினால்,என்ன செய்திட முடியும்?

படித்திடுவாய்!

பொறுத்துக் கொள்வாய்.

வாக்களிப்பாய்!

கருத்துச் சொல்வாய்!

ஆம். ஏனென்றால்,

நீ என் உடன் பிறப்பாயிற்றே!

விட்டுக் கொடுத்திடுவாயா? அதுதானே நம் பண்பு,பாடம் ,பகுத்தறிவு!

வா உடன் பிறப்பே!பள்ளத்தில் பாய்ந்து வரும் வெள்ளம் போல் வா!

நன்றி!


வியாழன், ஆகஸ்ட் 25, 2011

சாம்பார் பற்றிய தகவல்!

சாம்பார் என்றதும் நம் நினைவுக்கு வருவது,இரண்டு செய்திகள்.

ஒன்று தமிழ்நாட்டின் முக்கிய உணவான சாம்பார்.

மற்றொன்று ஜெமினி கணேசன்!

அவர் ஏன் சாம்பார் என்றழைக்கப்பட்டார் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது.

இப்பதிவு ஜெமினி கணேசன் பற்றியதல்ல.
உண்மையான அசல் சாம்பார் பற்றியது.

நானூறு ஆண்டுகளுக்கு முன்தான் மிளகாய் என்பது இந்தியாவுக்கு அறிமுகமாயிற்று. தக்காளி,உருளைக் கிழங்கு,வெங்காயம் ஆகியவையும், வெள்ளையர்களால் இங்கு கொண்டு வரப் பட்டவையே!

எனவே நியாயமாக நமக்கு உடன் எழும் சந்தேகம்”அதற்கு முன் தமிழ்நாட்டில் சாம்பார் எப்படித்தயாரிக்கப் பட்டது?வடநாட்டில்,தக்காளியும்,வெங்காயமும் இல்லாமல் சப்பாத்திக்குப் பக்க வாத்தியமான சப்ஜிகள் எப்படிச் செய்தார்கள்?”

ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன்பே,தென்னாட்டில் புளி பயன்படுத்தப்பட்டது. அப்போதும் அவர்கள் குழம்பு செய்திருக்க வேண்டும்.ஆனால் மிளகாய் இல்லாததால் மிளகு உபயோகப் படுத்தப் பட்டிருக்க வேண்டும்.கேரளாவின் மிளகூட்டலும், தமிழகத்தின் பொரித்த குழம்பும், புளி,மிளகாய் இல்லாமல்,மிளகு,சீரகம் மட்டும் கொண்டு தயாரிக்கப் படுபவையே.


இந்த சாம்பார் என்பது எப்போது எப்படி வந்தது?

இது பற்றிய ஒரு தகவல்--
“தஞ்சை மண் முன்பு மராத்தியர்களால் ஆளப்பட்டது.அவர்களில் ஒரு அரசனான, சம்போஜி சமையலில் வித்தகர்(பீமன்,நளன் போல்!)

ஒரு நாள் அவர் தனது பிரிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.ஆம்தி என்று அழைக்கப்படும் குழம்பு போன்ற ஒரு பதார்த்தம்.புளிக்குப் பதிலாக ’கொகும் ’ என ஒரு பொருளை-மராத்தா பகுதியில் கிடைப்பது- உபயோகிப்பார்கள்.ஆனால் அன்று மராத்தாவிலிருந்து கொகும் வந்து சேரவில்லை .அதை எப்படி ராஜாவிடம் சொல்வது என எல்லோரும் பயந்து கொண்டிருந்தனர்.ராஜாவின் விதூஷகர் அவரிடம் அங்கு புளி என்று ஒன்று கிடைக்கும் அதை உபயோகிக்கலாம் என்று சொல்ல,அன்று சம்போஜி, துவரம் பருப்பு,காய்கள்,மிளகாய் ,புளி உபயோகித்துச் செய்த குழம்பு எல்லோருக்கும் மிகவும் பிடித்து விட்டது.சம்போஜி செய்த அந்த உணவுதான் சாம்பார் எனப் பின்னாளில் வழங்கப்பட்டது!

வெங்காய சாம்பார் என்றாலே நாக்கில் நீர் ஊறும்!

அதைச் சுவையாகச் செய்வதெப்படி?

இதோ திருமதி ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் செய்முறை---

தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம் – 25
புளி – சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி – 2
துவரம் பருப்பு – 1/2 கப்
சாம்பார்ப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் – 6
தனியா – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
தாளிக்க:
எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை
செய்முறை:
• துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ள்வும்.
• புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
• மசாலா சாமான்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
• வாணலியில் எண்ணையச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அத்துடன் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை வதக்கிக் கொள்ள வேண்டும்.
• வெங்காயம் வதங்கியதும், தக்காளித் துண்டுகள், புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
• கொதிக்கத் தொடங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும்.
• இறுதியில் வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
• இந்தச் சாம்பாருக்கு மணத்தையும் சுவையையும் தருவதில் மசாலாவில் அரைத்துவிடும் சின்னவெங்காயம், கொத்தமல்லித் தழையின் பங்குதான் மிக முக்கியமானது. ஹோட்டல் சாம்பாரின் சுவையை அதுவே தருகிறது. எனவே சாம்பாருக்கு சின்ன வெங்காயம் உரிக்க நேரமில்லாவிட்டாலும், அதற்குப் பதில் பெரிய வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில அரிந்துபோட்டு, மசாலாவிற்கு மட்டும் 4,5 சின்ன வெங்காயம் உபயோகித்தாலே ஓரளவு சுவையைக் கொண்டுவந்து விடலாம்.

நன்றி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்!

சாம்பார் மணக்கிறதா?!


திங்கள், ஆகஸ்ட் 22, 2011

சென்னை அடையாரில் நடக்கும் போராட்டம்






இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்,சென்னையின் சார்பில் சென்னை, அடையாறு, எல்.பி.ரோடில் ஊழல் எதிர்ப்புப் போட்டமும்,உண்ணாவிரதமும் நடைபெற்று வருகின்றன. சனியன்றுதான் என்னால் அங்கு செல்ல முடிந்தது.உண்ணாவிரதம் என்பது எனக்கு இயலாத ஒன்று.எனவே அங்கு இரண்டு மணிநேரம் அமர்ந்தும்,என் பெயரைப் பதிவு செய்தும்,என்னால் இயன்ற ஒரு சிறு தொகையை நன்கொடையாகக் கொடுத்தும் என் ஆதரவைத் தெரிவித்தேன்.
அங்கு வந்த மக்களில் எல்லா வயதினரும் காணப்பட்டனர்.எல்லோரது முகங்களிலும் ஒரு தீவிரம் தெரிந்தது.எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்த விஷயம்,பங்கு கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை;அவர்கள் அங்கு செயல்படும் விதம்;அவர்கள் முகத்தில் தெரிந்த செயல் திண்ணம்.எதிர்கால இந்தியாவை சிறப்பான நிலைகளுக்கு அவர்கள் எடுத்துச் செல்வது உறுதி.
ஊழல் பெருச்சாளிகளே!எம் நாட்டின் இளைஞர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்! இனி அவர்களை ஏமாற்ற முடியாது!
இளைய பாரத்தினாய் வா,வா,வா!

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

அந்தப் பலகைகளை அகற்றி விடலாம்!

பெட்டிக் கடைகளில் காணப்படும் ஒரு அறிவிப்புப் பலகை--”இது புகை பிடிக்கத்தடை செய்யப்பட்ட பகுதி.இங்கே புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றம்”

சிகரெட்டை முற்றாக ஒழிக்க முடியாத நிலையில், பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதைத் தடுப்பது நல்ல யோசனைதான்.ஆனால்,அமல்படுத்த முடியாத இடத்தில் தடை உத்தரவு போடுவது ஒரு கேலிக்கூத்துதான்.

புகை பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என அரசு நினைத்தால்-அது தேவையா இல்லையா என்பதல்ல இங்கு விவாதம்-சிகரெட் உற்பத்தியை,விற்பனையைத் தடை செய்ய வேண்டும்.

பெட்டிக்கடையில் சிகரெட் வாங்குபவர்கள் அதை எங்கே சென்று பிடிப்பார்கள்?ஒவ்வொரு தெருவிலும் சிகரெட் பிடிப்பதற்கென்று தனி இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதா?பெட்டிக் கடைகளில் வாங்கும்பொருள்களில் சிலவற்றை அங்கேயே பயன் படுத்த முடியும்.சிலவற்றை அப்படிப் பயன் படுத்த முடியாது.சிகரெட் என்பது பிஸ்கட்,சாக்லெட்டைப் போலக் கடை வாசலிலேயே நுகரக்கூடிய ஒன்று.அப்படி நுகர்வது பொதுச் சூழலுக்கும் சிகரெட் பிடிக்காத வர்களுக்கும் எதிரான செயல் என்பதில் ஐயமில்லை.இதைத்தடுக்க வேண்டும் என்ற அக்கறையோடு அரசு இந்தத் தடையைக் கொண்டு வந்திருக்கிறது என்றால் அது செய்ய வேண்டிய காரியங்கள்,தடையைக் கறாராக அமல் படுத்துதல்,ஒவ்வொரு தெருவிலும் புகை பிடிக்க இடம் ஒதுக்குதல் ஆகியவைதான்.

சாலைகளில் செல்பவர்கள் அவசரத்துக்குச் சிறுநீர் கழிக்கக்கூட ஏற்பாடு செய்ய இயலாத நிர்வாகத்திடம் புதிதாக எந்த வசதியையும் எதிர்பார்க்க முடியாது.தன் மக்கள் புகை பிடிப்பது குறித்து அவர்கள் உடல் நலம் சார்ந்த அக்கறை அரசுக்கு இருக்கும் என்றால்,சிகரெட் மூலம் வரும் கோடிக் கணக்கான வருமானத்தை இழக்க அது தயாராக இருக்க வேண்டும்.கள்ளச் சந்தையில் சிகரெட் விற்பனை நடப்பதைத் தடுக்கும் திறமை வேண்டும்.

இவற்றில் எதுவுமே சாத்தியமில்லை என்பதால்,சாத்தியமான ஒரே விஷயத்தைச் செய்யலாம்--

அந்த அறிவிப்புப் பலகைகளை எடுத்துவிடலாம்!

நன்றி:நம்ம chennai

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

என்னதான் சொன்னான்?!

குப்பு என்கிற குப்புசாமிக்கும்,சுப்பு என்கிற சுப்புலக்ஷ்மிக்கும் வயது 12.
இருவரும் நண்பர்கள் என்பதையும் தாண்டிக் காதலர்கள் என உணர்ந்தார்கள்!
(எல்லாம் சினிமாவும் டி.வி.யும் செய்கின்ற கோலம்)

குப்பு, சுப்புவின் அப்பாவிடம் சென்றான்.சொன்னான் –
”மாமா!நானும் சுப்புவும் காதலிக்கிறோம்.கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறோம்.எஙளுக்குக் கல்யாணம் செய்து வையுங்கள்!”

அவருக்குச் சிரிப்பு வந்தது.கேட்டார்”உங்கள் இருவருக்கும் வயது 12தான் ஆகிறது.எங்கு வசிப்பீர்கள்?”

”உங்கள் வீடுதான் பெரியது,மாமா.இதுதான் சுப்புவுக்கு சௌகர்யம்.எனவே இங்குதான் வசிப்போம்”.

அவர் சிரித்துக் கொண்டே கேட்டார்”அது சரி.செலவுக்கு என்ன செய்வீர்கள்?வேலைக்குப் போகும் வயதாகவில்லையே?”

குப்பு சொன்னான்”எனக்குப் பாக்கெட் பணம் அப்பா தருகிறார் .சுப்புவுக்கு நீங்கள் தருகிறீர்கள்.இங்கேயே சாப்பிட்டுக் கொள்வோம்.இது போதாதா?”

அவன் பதில்களைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவர் கேட்டார்.”எல்லாவற்றையும் யோசித்து விட்டீர்கள்.உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் என்ன செய்வீர்கள்?”

அவன் பதில் சொன்னான் ………

.......................

அதைக்கேட்ட அவர் அதிர்ந்து போனார்!

அந்தப் பதிலை அடிக்க என் கணினி மறுத்து விட்டது.

மடிக்கணினி இல்லைதான்.ஆனாலும் மடியான கணினி!

சரி வேறு முடிவு சொல்லலாம் என யோசித்தேன் ...
...........................


அதையும் ஏற்றுக் கொள்ளக் கணினி மறுத்துவிட்டது.

என் செய்வேன்?!
மன்னியுங்கள்!
நீங்களே உங்களுக்குத் தோன்றிய முடிவை எடுத்துக் கொள்ளுங்கள்!
அதை தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லாதீர்கள்!!
சென்சார் செய்து விடுவேன்!!!

புதன், ஆகஸ்ட் 10, 2011

ஆபீசருக்கு சல்யூட்!

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு குளிர்பானக் கடை அதிபருக்கு, கலப்பட பனிப்பாகு விற்றதற்காக ஆறுமாத சிறை தண்டனையும் 5000 ருபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது நீதி மன்றம்.(பனிப்பாகு-icecream)

இரு மாதங்களுக்கு முன் உணவு ஆய்வாளர் ஒருவர்(நம்ம ஆபீசரின் பாணியில்) திடீர் சோதன நடத்தி இக்கலப்படத்தைக் கண்டு பிடித்தார்.சட்டப்படி,பனிப்பாகில்,பால் கொழுப்பு 10%க்குக் குறையாமலும்,பால் புரதம்3.5%க்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.அக்கடையில் விற்கப்பட்ட பனிப்பாகில் பால் கொழுப்பு 4%க்கும் குறைவாக இருந்தது.ஒரு வியாபாரி கலப்படத்துக்காகத் தண்டனை பெறுவது இது நான்காவது முறையாம்!

மக்கள்நல்வாழ்வுத்துறை இயக்குனர் அவர்கள் கலப்படம் பற்றிக் கூறுகையில்”நகரில் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் பால்பொருட்களில் குறைந்த பட்சம் 80% கலப்படம் செய்யப்பட்டவையாகவே இருக்கலாம்.மக்களுக்கு அதிகம் விழிப்புணர்வு தேவை.சந்தேகம் ஏற்படும்போது உணவு ஆய்வாளர்களிடம் சோதனை நடத்தச்சொல்லலாம்.தாங்களே கூட மாதிரியை அரசு சோதனைச் சாலைக்கு அனுப்பிச் சோதனை செய்யச் சொல்லலாம்.”என்று சொல்லியிருக்கிறார்.

நம்ம ஆபீசர் வழியில்,நடவடிக்கைகள் வேகம் பிடித்து விட்டன.

வாங்க!பதிவர்கள் அனைவரும் சேர்ந்து செய்வோம் நம்ம ’உணவு உலகம்’ஆபீசருக்கு

சல்யூட்!

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

நேதாஜியும் பத்மனாப ஸ்வாமியும்!

நேதாஜி அவர்கள் சிறிது காலம் திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவிலில் மறைந்திருந்தாராம்!இப்படியொரு சந்தேகம் அக்கால ஆங்கிலேய அரசுக்கு எற்பட்டது!

1941 இல் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வெளிநாடு சென்ற நேதாஜி,ரகசியமாகத் திரும்பி வந்து மாறு வேடத்தில் பத்மனாபஸ்வாமி கோவிலில் இருப்பதாக ஒரு அநாமதேயக் கடிதம் அப்போதைய மதராஸ் ராஜதானியின் ஆங்கிலேய நிர்வாகிக்குக் கிடைக்கவும்,லெஃப்ட்.கர்னல் ஜி.பி.மர்ஃபி என்ற அதிகாரி,திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானான சர்.சி.பி.ராமசாமி ஐயரவர்களுக்குக் கடிதம் எழுதிக் கோவிலையும் அதன் சுற்றுப்புரத்தையும் கண்காணிக்கச் சொன்னாராம்.--(அங்கேயும் சிபியா??!!)அவ்வாறே செய்யப்பட்டதாகவும்,ஆனால் தடயமேதும் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.

இத்தனை ஆண்டுகளாக மிகப் பெரிய புதையலைக் காப்பாற்றி வந்த பத்மனாபஸ்வாமி, சில நாட்கள் நேதாஜியைக் காப்பாற்றியிருக்க மாட்டாரா என்ன?!

புர்ஜ் காலிஃபாவில் ரமலான் நோன்பு
---------------------------------

ஒரே கட்டிடத்தில் குடியிருப்பவர்களுக்கு நோன்பு நேரம் வெவ்வேறாக அமைய முடியுமா?துபாய் புர்ஜ் கலிஃபாவில் உள்ளவர்களுக்கு அவ்வாறு நேர்ந்திருக்கிறது!160 ஆவது தளத்தில் வசிப்பவர்களுக்கு சூரியோதயம் முன்பாகவும்,மறைவு சிறிது நேரம் கழித்தும் தெரிவதால் அவர்களுக்கு நோன்பு நேரங்கள் மாற்றப் பட்டிருக்கின்றன.80-150 தளங்களில் வசிப்பவர்கள் தங்கள் மாலை இஃப்தார் உணவை இரண்டு நிமிடம் கழித்தும்,151-160 தளங்களில் வசிப்பவர்கள் ,மூன்று நிமிடம் கழித்தும் உண்ணுமாறுநேர்ந்திருக்கிறது!

(நன்றி:இந்தியாவின் நேரங்கள்;8-8-2011)

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

ஊழிக்கூத்து!

இது எனக்குப் பிடித்த எனது பதிவுகளில் ஒன்று!ஒரு நாள் குளிக்கும்போது மனதில் வெடித்துச் சிதறிய வார்த்தைகள்!இன்று ஒரு மீள் பதிவாக்க மனம் விழைகிறது-----
---------------------
பிரம்மாண்டப் பிரபஞ்ச மௌனத்தின் பேரொலி

அண்ட பேரண்ட ஆதாரப் பெருஞ்சூட்டின் நடுக்கும் குளிர்

விரிந்து நிற்கும் மயானப் பிண வாடையின் சுகந்தம்

எல்லையற்ற ஆகாசக் கும்மிருட்டின் கூசும் ஒளி

நடக்கட்டும் நாடகம்

அடிக்கட்டும் தாரை தப்பட்டை

வெடிக்கட்டும் தரை பிளந்து

துடிக்கட்டும் பிறவா உயிர்

தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!

அமைதி!அமைதி!அமைதி!


ஒற்றைக் குருசைக் கையில் ஏந்திவா!

நெற்றி நிறையத் திருநீறு பூசி வா!

திருக் கபால மேட்டிலே திருமண் இட்டு வா!

தொப்பி அணிந்து திசை நோக்கித் தொழுது வா!

மனித நேயம் தொலை!

மதம் பிடித்து அலை!

துணிந்து செய் கொலை!

இதுவே இன்றுன் நிலை!

தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!

அமைதி!அமைதி!அமைதி!



நாடகமே உலகம்

நாமெல்லாம் நடிகர்கள்

எழுதியவன் யார்?

இயக்குபவன் யார்?

யாருக்கும் விடை தெரியாக் கேள்விகள்

நாடகமே கொஞ்ச நேரம்

வேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ

பிரிவினையின் உஷ்ணத்தில்

குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்

இல்லாமல் போகட்டும்.


தொடங்கட்டும் ஊழிக் கூத்து!

தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

ஒன்றிலிருந்து ஒன்று!

என் நண்பர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன் விழித்திரையில் பிரச்சினை எற்பட்டு லேசர் சிகிச்சை செய்து கொண்டு ஒரு மாதம் படுக்கை ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டார்.அவர் ஒரு நீரிழிவு நோயாளி.இருபது நாட்களுக்குப் பின் இன்று ரத்தத்தில் சர்க்கரை அளவை வீட்டிலேயே சோதித்துப் பார்த்தபோது 350 இருப்பதாக எனக்கு தொலைபேசி மூலம் கவலையுடன் சொன்னார்.காரணம் என்னவாக இருக்கும் என் நான் வினவ அவர் 20 நாட்களாக நடைப் பயிற்சி செய்யாததுதான் காரணமாக இருக்கும் என்றார். மருத்துவர்கள் எல்லாம் 'வாக்' போவதை வலியுறுத்துவது எவ்வளவு சரி என்பது புரிகிறது. நானும் வழக்கமாக நடைப் பயிற்சி செய்கிறேன்.

ஒரு மனிதன் முகம் போல் மற்றவர் முகம் இருப்பதில்லை.அது போலவே நடைகளும் வித்தியாசப் படுகின்றன.எத்தனை விதமான நடைகள்!குறுகலான அடிகள்,நீண்ட அடிகள்; கைகளை நன்கு வீசி,கைகளை அதிகம் வீசாமல்;நன்கு நிமிர்ந்து,சற்றே கூனியவாறு; முழங்கால்களை நன்கு மடக்கி,அதிகம் மடக்காமல்;யானை போல் ஆடி ஆடி,ஒரே சீராக என்று எத்தனை விதமான நடைகள்!நடக்கும் விதமே ஒருவரின் குணத்தை அடிப்படை யாகக் கொண்டது என் நான் எண்ணுகிறேன்.

மனிதர்களின் நடை பற்றிப் பேசும் போது,நடிகர் திலகத்தின் நடை பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.பொதுவாக நடிகர்கள் ஏற்ற பாத்திரத்துக்கேற்ப ஒப்பனை,உடை,முக பாவங்களை மாற்றுவார்கள்.ஆனால் பாத்திரத்துக்கேற்ப நடையையும் மாற்றியவர் சிவாஜி. காவல் துறை அதிகாரி-நிமிர்ந்த கம்பீரமான நடை;பணக்கார,ஊதாரி இளைஞன்-சற்றே இடுப்பை வளைத்த நடை;வயதானவர்-தளர்ந்த நடை; புத்திக்கூர்மை இல்லாதவன்-தடுமாறும்,தன்னம்பிக்கையில்லா நடை.அவர் நடிக்கத் தெரிந்தவர் மட்டுமல்ல;நடக்கவும் தெரிந்தவர்.A great actor.

ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன்(நடிகை)இருக்கிறான்(இருக்கிறாள்).வாழ்க்கையில் பல நேரங்களில் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.நமது காரியம் ஆக வேண்டும் என்பதற்காகத் தகுதியில்லாதவர்க ளிடத்துக் கூட நாம் காட்டும் பணிவு!ஒரு நடிப்புத்தானே?முன்பெல்லாம் இழவு வீட்டுக்குச் செல்லும் பெண்கள் சத்தம் போட்டு ஒப்பாரி வைப்பார்கள்-எந்த சோகமும் இல்லாமல். -"சாந்திடும் நெற்றில சகதி அடிச்சாச்சே,பொட்டிடும் நெற்றிலே புழுதி அடிச்சாச்சே" என்பது போல.என் பாட்டி ஒருவர் இதில் கை தேர்ந்தவர்.ஒருமுறை ஒரு இழவு வீட்டுக்குச் செல்லும்போது என்னவெல்லாம் பாட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு போய் அங்கு போய் அனைத்தையும் மறந்து 'பக்' எனச் சிரித்துவிட்டாராம்.காமிரா முன் வந்து வசனத்தை மறந்த நடிகன் போல்.

ஒப்பாரி என்றவுடன் ஒரு நினைவு.தமிழில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்த என் சித்தி ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட தலைப்பு"தமிழர் வாழ்வில் தாலாட்டும், ஒப்பாரியும்"!இதற்காகக் கிராமம்,கிராமமாய்ச் சென்று அங்குள்ள பெண்களை சந்தித்து,'டேப் ரிகார்டரில் 'அவர்கள் பாடும் தாலாட்டு/ஒப்பாரியைப் பதிவு செய்து தமிழர் வாழ்வோடு இணைந்த அந்தக் கலையை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

சித்தி என்றால் என் தாயாரின் தங்கை.அப்பாவின் தம்பியின் மனைவியும் சித்திதான்.இன்னொரு விதமான சித்தியும் உண்டு.பொதுவாகவே இந்த சித்தி கதைகளிலும், நாடகங்களிலும் கொடுமைக்காரியாகவே சித்திரிக்கப் படுகிறார்.ஒரு குழந்தையின் தாய் இறந்தபின் அத்தந்தை மறுமணம் செய்துகொண்டால் வரும் புதிய உறவே இந்த சித்தி.ஆனால் ஒரு தமிழ்ப் படத்தில் சித்தி மிக நல்லவராகக் காட்டப்பட்டார்.அதுதான் கே.எஸ்.ஜி.அவர்களின் 'சித்தி' திரைப்படம்.நிறைய பாராட்டு பெற்ற திரைப் படம்.தமிழ்ப் படங்கள் பற்றிய தன் கட்டுரையில்,ஜெயகாந்தன் அவர்கள் முன்பு குறிப்பிட்டார்"என்னதான் முடிவு பார்த்தபோது ஏது இவர் கூட(கே.எஸ்.ஜி) உருப்பட்டு விடுவார் போலிருக்கிறதே என்று நினைத்தேன்.ஆனால் அந்த நம்பிக்கை சித்தி வந்தபின் தகர்ந்து விட்டது"என்று.

ஜெயகாந்தன் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பீரங்கிப் பேச்சாளர் என்று அழைக்கப்பட்டார்.'ஜெய பேரிகை' என்ற பத்திரிகையின் ஆசிரியராக அவர் இருந்தபோது ஒரு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஒருவர் தாக்கப் பட்டபோது அவர் எழுதிய வரிகள்- "நாப்பறை கொட்டி நாடாள வந்தபின் பேய்ப்பறை தட்டி பிணம் தின்னும் கழுகுக் கூட்டமே"இது அன்றைய தி.மு.க.அரசு பற்றி அவர் எழுதியது.இன்று அந்த ஜெயகாந்தன் எங்கே ?! எல்லாம் காலத்தின் கட்டாயம்..

ஆம்.காலம் செல்லச் செல்ல எத்தனையோ விஷயங்கள் மாறி விடுகின்றன.வயது ஏற ஏறப் புதுப் புது நோய்கள் வந்து விடுகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை நிறைய இனிப்புகள் சாப்பிட்டு வந்தேன்.ஆனால் இப்போதோ? ஆரம்ப சர்க்கரை நோயாளியாகி விட்டேன்.இனிப்புகளை மறக்க வேண்டியதாகி விட்டது.(அதுக்காக முழுசா விட்டுவிட முடியுமா?)மருத்துவர் அறிவுரைப் படி தினமும் நடைப் பயிற்சி செய்கிறேன்.அப்படிப் போகும்போது நடை பயிலும் மற்றவர்களைப் பார்க்கிறேன்.சிவாஜி-நடிப்பு-ஒப்பாரி-சித்தி-ஜெயகாந்தன்-காலம்-இனிப்பு-சர்க்கரை நோய்-நடைப் பயிற்சி-மற்றவர் நடை-சிவாஜி-நடிப்பு......................

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

சிரிக்கலாம் வாங்க!

இரண்டு நாட்களாக வலைப்பதிவுகள் பக்கமே வர முடியவில்லை.சொல்லப் போனால் கணினிப் பக்கமே. என் மகளும், மருமகனும்,பேத்தியும் துபாயிலிருந்து வந்திருக்கிறார்கள்.எனவே கொஞ்சம் நேரமின்மை. நண்பர்களின் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமிடக் கூட இயலவில்லை.அதனால் கோபமடைந்திருக்ககூடிய பதிவுலக நண்பர்களே!உங்களைச் சிரிக்கச் செய்ய ஒரு பதிவு.சிரியுங்களேன்!
------------------------

ஒரு இளம் மருத்துவர் ஒரு சிறிய கிராமத்து மருத்துவ மனையின் பொறுப்பேற்கச் சென்றார்.அங்கு அது வரை பணி புரிந்து வந்த வயதான மருத்துவர்,தான் அன்று சில நோயாளிகளைப் பார்க்கப் போகும்போது,புதிய மருத்துவரும் உடன் வந்தால் அறிமுக மாகிவிடும் என்று கூறி அவரையும் உடன் அழைத்துச் சென்றார்.

முதல் வீட்டில் இருந்த பெண், தனக்குக் காலை முதல் வயிற்றை வலிக்கிறது என்று கூற, பழைய மருத்துவர்,அவள் பழம் அளவுக்கு மீறிச் சாப்பிட்டதால் இருக்கும், எனவே பழைத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

அவரது நோய் அறுதியீட்டைக் கண்டு வியந்த புதியவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அப்பெண்ணைப் பரிசோதிக்காமலே எவ்வாறு முடிவு செய்தார் என வினவினார்.

பழையவர் சொன்னார்”அவசியமேயில்லை.நான் அங்கு என் இதயத்துடிப்பு மானியைக் கிழே போட்டேன் அல்லவா.அதை எடுக்கக் குனிந்தபோது கட்டிலுக்கடியில் ஏழெட்டு வாழைப்பழத் தோல்களைக் கண்டேன். எனவே அந்த முடிவுக்கு வந்தேன்.”

புதியவர் சொன்னார்”மிக அருமை.அடுத்த வீட்டில் நான் இந்த முறையைக் கடைப் பிடித்துப் பார்க்கிறேன்”

அடுத்த வீட்டுக்குச் சென்றனர்.அங்கிருந்த சிறிது இளம் பெண் அவளுக்கு மிகச் சோர்வாக இருப்பதாகக் கூறினாள்.

புதியவர் சொன்னார்”நீங்கள் கோவிலுக்காக மிக உழைக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.சரியாகி விடும் “என்று.

வெளியே வந்த பின் பழையவர் சொன்னார்”அந்தப் பெண்ணுக்குக் கோவில் வேலைகளில் மிக ஈடுபாடு உண்டு.நீங்கள் சொன்னது சரியே.ஆனால் எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?”

புதியவர் பதிலுரைத்தார்”உங்களைப் போலவே நானும் இதய ஒலி மானியைக் கீழே போட்டேன் . அதை எடுக்கக் குனியும்போது கட்டிலுக்கடியில் கோவில் பூசாரி இருப்பதைப் பார்த்தேன்!!”

----------------------

கேள்வியும் பதிலும்
-------------------------
1) கேள்வி:ஒரு பச்சை முட்டையை கான்க்ரீட் தரை மீது உடையாமல் போடுவது எப்படி?
பதில்: கான்க்ரீட் தரை எளிதில் உடையாது!

2) கேள்வி:ஒரு சுவரைக் கட்டுவதற்கு எட்டு ஆட்களுக்குப் பத்து மணி நேரம் ஆனதென்றால், நான்கு ஆட்களுக்கு அதைக் கட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
பதில்: கொஞ்ச நேரம் கூட இல்லை.சுவர் ஏற்கனவே கட்டப்பட்டு விட்டது!

3) கேள்வி: உன் ஒரு கையில் மூன்று ஆப்பிள்களும்,நான்கு ஆரஞ்சுகளும்,மறு கையில் நான்கு ஆப்பிள்களும்,மூன்று ஆரஞ்சுகளும் இருந்தால் உன்னிடம் என்ன இருக்கும்?
பதில்; மிகப் பெரிய கைகள்!

4)கேள்வி: ஒரு பாதி ஆப்பிள் மாதிரி இருப்பது எது?
பதில்: மற்றொரு பாதி!