தொடரும் தோழர்கள்

திங்கள், மார்ச் 11, 2013

சென்னையில் ஒரு காதலன்!

இன்று சில கவிதைகளின் மீள் பதிவு.
அனைத்தும் காதல் சொல்லும் கவிதைகள்.
தனித் தனிப் பதிவாக வந்தவற்றை ஒரே பதிவாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
பிடித்திருந்தால் சொல்லுங்கள்.....பிடிக்கா விட்டாலும் சொல்லுங்கள்!
இதோ.........



வியாழன், ஜனவரி 27, 2011
சாந்தோம் கடற்கரையின்
சாயங்கால நெருக்கங்கள்
இன்னும் மறக்கவில்லை!

கபாலி கோவில் பிரகாரத்தின்
கண்பேசும் பாஷைகள்
இன்னும் மறக்கவில்லை!

புளூ டயமண்ட் குளிர் இருட்டின்
உன் உஷ்ண ஸ்பரிசங்கள்
இன்னும் மறக்கவில்லை!

எல்பின்ஸ்டன் ஜஃபார்கோவின்
உன் எச்சில் பீச்மெல்பா
இன்னும் மறக்கவில்லை!

ஆனால்,

நிச்சயமாய் மறந்தது ஒன்று உண்டு

இரக்கமே இல்லாமல் நீ எறிந்த வார்த்தைகள்
என்னை மறந்து விடுங்கள்

அதை மறந்ததனால்தான் உன்னை
இன்னும் மறக்கவில்லை,இன்னும் மறக்கவில்லை!

இன்று--
சாந்தோம் கடற்கரை மறைந்து விட்டது;
புளூ டயமண்ட் தியேட்டர் தொலைந்து விட்டது;
எல்பின்ஸ்டன் டாக்கீஸ் இடிந்து விட்டது!.
ஆனால்?
அவற்றுடன் கலந்த உன் நினைவுகள்?..

சிறு குறிப்பு:-1)சாந்தோம் கடற்கரை-சிறிய,கூட்டமில்லாத இனிய கடற்கரை.படகு மறைவுகளும் உண்டு.இன்று அங்கு ஏதோ குப்பம் வந்து விட்டது.
2)புளூ டயமண்ட் தியேட்டர்-சஃபைர்,எமரால்டுடன் சேர்ந்த மூன்றாவது தியேட்டர்.நாள் முழுவதும் படம் ஓடும்.எப்போது வேண்டுமானாலும் உள்ளே போகலாம்;எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்.இதை விட வேறென்ன வேண்டும்!
3)நியூ எல்ஃபின்ஸ்டன்- அண்ணா சாலையில் இருந்தது;ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும்.இங்கிருந்த ஜஃபார்கோ ஐஸ்க்ரீம் பார்லரில் பீச் மெல்பா அலாதி சுவை!அதுவும், ”பணிமொழிவாலெயிறு ஊறிய நீருடன்சேர்ந்தால்?!

(பி.கு.நண்பர் கக்கு மாணிக்கம் அவர்கள் சென்னை பித்தனை மாற்றி சென்னை காதலனாக்கி விட்டார்.சென்னையின் காதலனாக மட்டும் இல்லாமல் அக்காலச் சென்னையில் ஒரு காதலனாகவும் இருதிருந்தால்?இன்றில்லாமல் போய்விட்ட சில இடங்களையும் என்றுமே இல்லாத காதலியையும் இணைத்துப் பார்க்கிறது இக்கவிதை.)

வெள்ளி, பிப்ரவரி 25, 2011
காத்திருந்து காத்திருந்து உள்ளம் வாடுதடி-வழி
பார்த்திருந்து பார்த்திருந்து கன்களும் நோகுதடி.
எத்தனை நேரம்தான் நீர் அலைகளை எண்ணுவது?
எத்தனை தடவைதான் கடல் மணலைக் கிளறுவது?
சுண்டல்காரச் சிறுவனும் சுற்றிச் சுற்றி வருகின்றான்;
கிண்டலாய்க் கேட்பானோஅக்கா வரல்லையா?”
நேற்றும் நீ வரவில்லை இன்றும் வரவில்லை இன்னும்;
தேற்றுவாரின்றித் தேம்பியழுகிறதென் உள்ளம்.
அம்மா,தங்கையு டன் அனுமார் கோவில் போனாயோ?
(தண்ணித்துறை ஆஞ்சநேயர் மிகப் பிரசித்தம்-என் விளக்கம்)
சிநேகிதிகள் பலர் சூழ சினிமாவுக்குப் போனாயோ?
மாமிகள் பட்டாளத்துடன் மாம்பலம் போனாயோ ?
என்ன செய்தாயோ,என்னை மறந்து போனாய்.
உனக்காகத் தவிக்கும் உள்ளத்தை மறந்து போனாய்.
அடியே!
நாளையேனும் வந்தென்னைப்பார்-இல்லையேல் எனக்கு
நாளைகளே இல்லாமல் போய்விடும் போ!

திங்கள், பிப்ரவரி 28, 2011
இன்று நீ வந்தாய்! கண்களில் கண்ணீரோடு,

ஏன் வந்தாய் என்னை உயிரோடு கொல்வதற்கா?

நின்றாய்,தள்ளி அமர்ந்தாய்,தரை நோக்கித் தலை கவிழ்ந்தாய்,

மெல்ல வாய் திறந்தாய் இரண்டு நாட்களாய்

என்னென்னவோ நடந்துபோச்சு;பெண்பார்த்தார்கள்,

பிடிக்குதென்று சொன்னார்கள்;நிச்சயம் செய்தார்கள்.

என் மனம் யார் பார்த்தார்கள்?என் குரல் யார் கேட்டார்கள் ?

அப்பா சொல்லி விட்டார்;ஆவணியில் கல்யாணம்.

என்ன நான் செய்வேன்,அழுவதற்கும் உரிமையில்லை.

உங்கள் மடியில் முகம் புதைத்து அழுவதென்றால்

என்னுயிரே இன்றெனக்கு அதற்கும் துணிவில்லை.

ஐ ஏ எஸ் மாப்பிள்ளை அனைவருக்கும் சந்தோஷம்.

என்னைத் தவிர எல்லோரும் சிரிக்கின்றார்,

எதிர்க்கவும் வழியில்லை காதல் உரைக்கவும் துணிவில்லை,

ஒன்றும் புரியவில்லை,ஒரு வழியும் தெரியவில்லை,

ஓடிப்போய் மணந்திடவும் உள்ளம் ஒப்பவில்லை,

மன்னியுங்கள் என்னை மகாபாவியாகிவிட்டேன்,

உங்களைப் பிரிந்து உயிரின்றிப் போகின்றேன்,

என்னை மறந்து விடுங்கள்என்றுரைத்துப் போய்விட்டாய்.

உனக்குரிமையில்லாத ஒரு விஷயம் சொல்லிச்சென்றாய்

"உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி?"

என் நெஞ்சில் ,நெஞ்சத்துடிப்பில்,உயிர் மூச்சில் கலந்ததனால்
இன்னுயிரே உன்னை நான் இன்னும் மறக்கவில்லை!

சந்தனக்காடுகள் பற்றியெரிகையில் சந்தனமே மணக்கும்
என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்(……)என்றே ஒலிக்கும்
(கடைசி இரண்டு வரிகள் நன்றி சேவற்கொடியோன்)

(காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களே! (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்!)


வெள்ளி, பிப்ரவரி 17, 2012
காதலி விட்டுச் சென்ற செல்வங்கள்!
என்னிடம் இருக்கும் செல்வங்கள் ஏராளம்
அடைந்தவை சில,அபகரித்தவை சில
அனைத்துமே விலை மதிப்பற்றவை
பார்த்தால் நீங்கள் சிரிப்பீர்கள்
அதன் மதிப்புத் தெரியாத காரணத்தால்
பார்க்கலாம் வாருங்கள்.

இதோ இப்பெட்டியில் பட்டுத்துணியில்
படுத்திருக்கும் இந்த ஸ்பூன்.
ஐஸ்க்ரீம் பார்லரில் ஆட்டையைப் போட்டது.
ஐஸ்க்ரீமைத் துளிதுளியாய் அவளெடுத்து
செம்பவள இதழ் திறந்து உண்ணும்போது
அவள் உதட்டில் உரசும் பாக்கியம் பெற்றது.
இன்றைக்கும் அவள் இதழின் இனிமை
இதை விட்டு நீங்கவில்லை!

இந்த டம்ப்ளரில் எழுதியிருக்கிறது
சாந்தி விஹாரில்  திருடப்பட்டதென்று
சாயம் பூசாமலே சிவந்திருக்கும்
அவள் உதடுகள் தழுவிய சுகம் கண்டவை.
வேறு யார் உதடும் இதில் படக்கூடாது.
எனவே நான் எடுத்து வந்து விட்டேன்.

அந்தக் கசங்கிய டிஷ்யூக் காகிதம்!
சாப்பிட்ட பின் நளினமாய் அவள்
இதழொற்றிக்  கசக்கியெறிந்த  காகிதம்
சட்டைப் பையில் வைத்து எடுத்து வரும்போது
அவள் இதழ் என் மார்பில் பதிவதாய் உணர்ந்த நாள்.

சாந்தோம் சந்திப்பில் ஒரு நாள்
கன்னத்தில் ஏதோ கறையென்று நான் சொல்ல
அவள் துடைத்தும் போகாத காரணத்தால்
நான் துடைக்க உதவிய  இக்கைக்குட்டை!
பட்டுக் கன்னத்தின் ஸ்பரிச சுகம் பெற்றதன்றோ!

அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்த மலர்
அவள் கைகள் அளைந்த கடல் மணல்
அவள் பொறுக்கிப் போட்ட சிப்பி
அவள் பல் பதிந்த என் பேனா

பிரியும் முன் ஒரு நிமிடம் என் நெஞ்சில் சாய்ந்து
கண்ணீர் உதிர்த்தபோது கரைந்த மையால்
கறையான என் சட்டை 
இவையெல்லாமே என் சொத்துக்கள்!

என்னுடன் அவள் இல்லை இன்று
ஆனால் அவள் நினைவுகளும்
அவள் காதலின் குறியீடாய் இவையும்
என்றுமே இருக்கும் என்னுடன்!


வியாழன், ஜூன் 21, 2012

இதயத்தின் ரணம்!


                                           
என்னவென்று தெரியவில்லை சகி
என் மனத்தின் ரணம்  திறந்துகொண்டது
இன்று.

உன் மடியில் சிறிது தலை வைத்துப் படுக்க
உன் விழிக்கடலில் மூழ்கி என்னை இழக்க
என் தோளில்  உன்னைச் சாய்த்தணைத்து
உன் கூந்தல்  தடவி ,உச்சி முகர்ந்து முத்தமிட
என்ன இந்த ஆசைகள்
இத்தனை ஆண்டுக்குப் பின்?

காதலுக்குச் சாட்சியான இடங்கள் பல இன்றில்லை
காதல் மட்டும் சாகாமல் கனன்று எரிகிறதே.

நீயின்றி நானில்லை என்றே நாமுரைத்தோம்
பொய்யாக்கி விட்டு இருவரும் இன்னும் இருக்கிறோம்!
அங்கும் இங்குமாய்!

உன் காதல் தோற்றதா என நண்பன் கேட்டான்
உண்மைக் காதலுக்குத் தோல்வியும் உண்டோ?
காதலித்துப் பிரிந்த பின் காலம் பல கடந்த பின்னும் ,
காதலின் நினைவிலேயே வாழ்கின்ற நம்
காதல் வென்றதன்றோ!

என் நாடி நரம்புகளில் ரத்த நாளங்களில்
என் உயிரோடு உயிராய்க் கலந்தவளே
என்னை நீ விட்டு விட்டுப் போனாலும்
என் நெஞ்சை விட்டுப் போகவில்லையே
உன் நினைவு?

 இக்கவிதைகளின் தொடர்ச்சியாகத் தொடர்புடைய ஒரு சிறுகதைஅடுத்த பதிவாக!


சனி, மார்ச் 09, 2013

நான்தான் சமையக்காரி அலமேலு!

நான்தான் அலமேலு.வெறும் அலமேலுன்னு சொல்றதை விட சமையக்காரி அலமேலுன்னு  சொன்னா எல்லாருக்கும் நன்னாத் தெரியும்.இப்பக் கூட ஆடிட்டர் ஆத்துக்கு,தல தீபாவ ளிக்கு ஸ்வீட் பண்ணத்தான் போயிண்டிருக்கேன்.    

பொறக்கும் போதே நான் சமையக்காரியாப் பொறக்கலே!காலக் கோளாறு, சமையக்காரி ஆயிட்டேன்.வயத்துப்பொழப்புக்காகக் கரண்டியைக் கையிலெ எடுத்தேன்.முதல்ல ஆத்தில இருந்தவாளுக்குச் சமைச்சுப் போட்டுண்டி ருந்தேன். அப்பறமா ஊருக்கே சமைக்க ஆரம்பிச் சுட்டேன்.


நான்  பொறந்து  வளந்த கதையெல்லாம் இப்ப வேண்டாம்.எங்க அப்பா எனக்கு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணி வச்சார்.ரொம்பப் பெரிய வேலையில இல்லாட்டாலும் ஏதோ சாப்பாட்டுக்கும் கட்டிக்கத் துணிக்கும் கஷ்டப்படாத வாழ்க்கை. ஆனா திடீர்னு ஒரு நாள் அவர் என்னையும் எங்க பிள்ளை நந்துவையும் நிர்க்கதியா விட்டுட்டுக்  கண்ணை மூடிட்டார்.


நந்து அப்போ எட்டாங்கிளாஸ் படிச்சிண்டிருந்தான்.அவர் இருக்கும்போது சொல்வார்,”நீ ரொம்ப நன்னாச் சமைக்கறேடீன்னு. அந்தச் சமையல்தான் கைகுடுத்துது.எல்லாராத்து விசேஷத்துக்கும் சமைக்க ஆரம்பிச்சேன். எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. அலமேலுவை நம்பி ஒரு கல்யாணச் சமையலையே குடுக்கலாம்னு சொல்ல ஆரம்பிச்சா!கூடவே அப்பளாம்,  வடாம் எல்லாம் பண்ணி விக்க ஆரம்பிச்சேன்.ஒரு மாதிரி கஷ்டப்பட்டு நந்துவை பி.காம் படிக்க வச்சேன்.


அவனும் கெட்டிக்காரன்.கஷ்டம் தெரிஞ்சவன். நன்னாப் படிச்சு ஃபர்ஸ்ட் கிளாஸில பாஸ் பண்ணினான்.ஏதோ பரிட்சை எழுதி தில்லி செகரடேரியட்ல வேலையும் கெடச்சது.நான் அவன்கிட்ட சொல்லிட்டேன் நான் தில்லிக்கெல்லாம் வரமாட்டேன்னு.பாவம் கொழந்த. தனியாய தானே பொங்கிச் சாப்பிட்டிண்டு 5 வருஷம் ஓட்டினான்.எனக்கும் மாசா மாசம் பணம் அனுப்பிசிண்டிருந்தான்.

அப்பறம்தான் எழுதினான் அவன்கூட வேலை பாக்கிற மாலதியை லவ் பண்றதா. நல்ல வேளை,அவா பிராமணாதான்னும் எழுதியிருந்தான்.


எதுக்குக் கதையப் பெரிசா வளக்கணும்? கல்யாணம் பண்ணிண்டான்.

கல்யாணத்துக்கப்புறமும் நான் இங்க,அவா டில்லியிலதான். கொஞ்ச நாள் போச்சு.நந்து என்னைக் கட்டாயப் படுத்திக் கூப்பிட ஆரம்பிச்சான்,அம்மா இங்கயே வந்து இரும்மான்னு. சரி,அவன் இவ்வளவு கூப்பிட்றானே, போய்ப் பாக்கலாமேன்னு போனேன்.


போய் ரெண்டுநாள் கழிச்சு நந்து சொன்னான் அம்மா இவளுக்கு உன் சமையல் எல்லாம் நன்னாச் சொல்லிக் கொடுன்னு.நானும் அவ சமைக்கும்போது கூடவே இருந்து பாத்துச் சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சேன்.ஒரு வாரம் கழிச்சுப்பாத்தா,சமையல் பூரா நாந்தான் செய்யறேன்;அவ சமையலறைப் பக்கம் வரதையே விட்டுட்டா! ரெண்டு பேரும் கார்த்தால 8 மணிக்குப் புறப்பட்டுடுவா.அதுக்குள்ள டிஃபன் பண்ணிகுடுத்துச் சமையல் பண்ணி பாக்சில போட்டு, மத்தியானம் இட்லிக்கு அரைச்சு வச்சு,ராத்திரிக்கு டிஃபன் பண்ணி வக்கணும் ,அவா ராத்திரி வந்தா டி.வி முன்னால ஒக்காந்துடுவா!


மத்தியானம் அக்கம் பக்கத்தில நம்ம பாஷைல பேசவும் ஆளில்ல. எங்கேயும் வெளிலயும் போக முடியல.ஒரே ஜெயில்தான்.


ஒரு மாசம் ஆச்சு.ஒரு நாள் அவ சொன்னா,இந்த மாசம் எண்ணெய், பருப்பெல்லாம் நிறைய ஆயிருக்கே.ஏன் இப்படி.இனிமே  கொஞ்சம் பாத்துச் செலவழியுங்கோன்னு. அவன் அதைக் கேட்டுண்டு இடிச்ச புளியாட்டம் நிக்கறான்.



இன்னொரு நாள்,கை தவறிப் பாலைக் கொட்டிட்டேன்.அதுக்குக் கன்னா பின்னான்னு ராட்சசி மாதிரி சத்தம்போட்டா.எனக்குப் பொறுப்பே இல்லையாம்.அப்பவும் அவன் மலங்க மலங்க முழிச்சிண்டு நிக்கறான்.ஒரு வார்த்தை பேசலை.


அப்பத்தான் முடிவு பண்னினேன்.ஊருக்குப் போயிட வேண்டியது தான்னு.நல்ல வேளையா  குளிர் ஆரம்பிக்கவே அதைச் சாக்கா வச்சு ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிப் புறப்பட்டுட்டேன்.


ஊருக்கு வந்து சேர்ந்ததுமே வக்கீலாத்து மாமி சொல்றா,என் வயத்தில பாலை வார்த்தேடி, பெண்ணு பிரசவத்துக்கு வரா, ஒண்டியா என்ன பண்றதுன்னு தவிச்சுண்டிருந்தேன்னு. அவ்வளோ சந்தோஷம் அவாளுக்கு!

ஆச்சு.இப்பத்தீபாவளி வந்துடுத்து ,வேலை சரியா இருக்கு,ஆனா சந்தோஷமா இருக்கு.


எங்கயோ பாஷை தெரியாத ஊர்ல,யாரிட்டயும் பேச முடியாம, வெளில வாசல்ல போக முடியாம வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடந்து  சம்பளம் இல்லாத  சமையக்காரியா
இருக்கறதை விட,மனுஷாளோட பேசிண்டு, கோவில் குளம்னு போயிண்டு, நாலு பேருக்கு ஒத்தாசையா இருந்து நாலு காசு சம்பாதிச்சுண்டு சமையக்காரியா  இருக்கறது
மேல்தானே!

என்ன சொல்றேள்?

ு ஒரு மீள் ிவ,மிர் ினத்ுக்காக!

வெள்ளி, மார்ச் 08, 2013

என் மனைவிதான் வேலை பார்க்கவில்லையே!



 மகளிர் தின சிறப்புப் பதிவு!
.....................................................

ஒரு கணவன் தான் ஒருவனே வேலை சென்று சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றுவதால் மிகவும் சோர்வடைந்திருப்பதாக எண்ணினான்.

தன் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் அமர்ந்து சுகமாகச் சாப்பிட்டுக் காலம் கழிப்பதாகவும் எண்ணினான்;இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக ஒரு மன நல மருத்துவரைப் பார்க்கப் போனான்.

அங்கு நடந்த உரையாடல்.....

மருத்துவர்:நீங்கள் என்ன செய்கிறீர்கள்,குமார்?

குமார்:ஒரு வங்கியில் அதிகாரி.

ம:உங்கள் மனைவி?

கு:அவள் வேலை பார்க்கவில்லை

ம:காலை உணவை உங்கள் வீட்டில் யார் தயார் செய்கிறார்கள்?

கு:என் மனைவிதான்;அவள்தான் வேலை பார்க்கவில்லையே!

ம:காலை எத்தனை மணிக்கு உங்கள் மனைவி எழுந்திருக்கிறாள் என்பது 
உங்களுக்குத் தெரியுமா?

கு:5 மணிக்கே எழுந்து விடுகிறாள் என நினைக்கிறேன்.ஏனென்றால் வீடு சுத்தம் செய்து குளித்து காலைப் பலகாரம் செய்து,பின் எல்லோருக்கும் கையில் கொடுப்பதற்கு மதிய உணவும் தயார் செய்ய வேண்டுமே!

ம:குழந்தைகள் பள்ளிக்கு எப்படிப் போகிறார்கள்?

கு:பள்ளி அருகில்தான் ;மனைவியே அழைத்துச் செல்வாள்;அவள்தான்  வேலை பார்ப்பதில் லையே!

ம:அதன் பின் உங்கள் மனைவி என்ன செய்வார்கள்?

கு:கடைக்குப் போவாள் திரும்பி வந்து துணி துவைப்பாள்;துவைத்த துணிகளை இஸ்திரி போட்டு வைப்பாள்.அவள்தான் வேலை பார்க்கவில்லையே!

ம:மாலை வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

கு:நாள் முழுவதும் உழைத்தது களைப்பாக இருக்காதா?ஓய்வெடுப்பேன் ; தொலைக்காட்சி பார்ப்பேன்.

ம:உங்கள் மனைவி என்ன செய்வாள்?

கு:குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள்.இரவு உணவு செய்வாள் குழந்தைகளுக்கு உணவு கொடுத்துத் தூங்கச் செய்வாள்.பின் நான் சாப்பிடுவேன்.பின்னர் அவள் பாத்திரங்கள், சமையல் அறை சுத்தம் செய்து தூங்கப் போவாள்.

ம:இதிலிருந்து என்ன தெரிகிறது?

அதிகாலை முதல் இரவு வரை உழைக்கும் ஒரு பெண்ணை ”வேலை பார்க்க வில்லை” என்று சொல்கிறீர்கள்.அவர்கள் செய்யும் வேலையை நீங்கள் மதிக்கவில்லை!

ஒரு வீட்டை நிர்வகிப்பது என்பது கடினமான பணி;அதைச் செய்கிறாள் அவள்.வாழ்க்கை யென்னும் நாடகத்தில் மிக முக்கியமான பாத்திரம் மனைவி!
மனைவியைப் புரிந்து கொள்ளுங்கள்;பாராட்டுங்கள்.அவள் செய்யும் தியாகங்கள் கணக்கற்றவை!

பரஸ்பரப் புரிதல் இருந்தால் வாழ்க்கை இன்ப மயமாக இருக்கும்!