தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 09, 2012

நாயுள்ளம் --2 --நிறைவுப்பகுதி


20  நாய்கள்  மறைவாக  இருந்த   காலி  கிரௌண்டில்  கூடி இருந்தன.   ராஜாவும்  இதில்  அடக்கம்.   பாபுவின்   மறைவுக்காக ஒரு  நிமிடம்  மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்  பட்டது.   பெரிய   சாலைகளை  கவனமாக  கடக்க வேண்டும்  என்று  உறுப்பினர்கள்  அறிவுறுத்தப்பட்டன.

சாலையில்  வரிக்குதிரைகள்  கடக்க வழி  செய்யப்பட்டது போல்     நாய்கள்  கடக்க  தனி  வழி  செய்யப்படவேண்டும்  என மூத்த  நாய்  முன்  வைத்த  தீர்மானம்  நிறைவேறியது.

அடுத்தது   "நாய்  உள்ளம்பற்றி  விவாதம்  நடந்தது.   நாய்களிடையே  கதைக்கு பலவகைப் பட்ட கருத்துகள்.  ஜெகந்நாதன்  நல்லவரா  கெட்டவரா என்ற  கேள்வி  யாவரையும்  குழப்பியது. நாய்களுக்கு  இலவசமாகக்  கிடைக்கும்  டீ, பொறைகளைப்  பற்றி விமர்சிப்பது சில  நாய்களுக்குப்  பிடிக்கவில்லை. செக்யூரிடி  காவலர்களுக்கு  ரூபாய்  7000  சம்பளம கொடுக்கும்போது நாய்களுக்கு மட்டும் டி,  பொறைதானா.  ஒரு  சில்லி  சிக்கன் பிரியாணியாவது  வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று   பெரும்பான்மையான நாய்கள்  சீறின.   நாய்க்  கடியால் பரவும்  ராபிஸை எப்படித்தடுப்பது என்ற  கேள்விக்கு சரியான  பதில்  கிடைக்க வில்லை.  நம்முள் எத்தனை  நாய்களிடம் ராபிஸ் கிருமிகள்  முடங்கிக்  கிடைகிறதோ என்று மூத்த  நாய்  கூறிய போது,  மற்ற நாய்கள்  பயந்தன.  மனிதர்களை கூடுமானவரை  கடிக்காதீர்கள் என்ற  தீர்மானம்  உடனே  நிறைவேற்றப்பட்டது.

வீட்டில்  வளர்க்கப் படும்  நாய்கள்   சிறந்தவையா ,  தெரு நாய்கள் சிறந்தவையா என்ற கேள்வி  எழுந்த போது  ஆயுத  பூசை அன்று  பட்டி மன்றம்  நடத்தலாம்  என்று  முடிவு  செய்யப்பட்டது.

அப்பொழுது  சுறுசுறுப்பான வேகமுள்ள  அதிகம்  சிந்திக்கக் கூடிய  நாய்  ஒன்று  ஏன்  வெளி நாட்டு  நாய்கள்  தான்  வீடுகளில்  வளர்க்கப்  படுகின்றன.  நாம்  எந்த  வகையில் அவைகளுக்கு  குறைச்சல்  என்று  கர்ஜனை  செய்தது.
அரசாங்கத்திடம்  பேசி இட ஒதுக்கீடு சட்டம்  கொண்டுவர முயற்சிப்பதாக  மூத்த நாய் அறிவித்தது.   ஒரு வட்டாரத்தில் ஒரு வெளி நாட்டு நாய்க்கு  இருபது  நம் நாட்டு  நாய்களை வளர்க்க சட்டம்  இயற்றப் படவேண்டும்  என முழக்கம்  எழுந்தது. 

மற்ற பகுதிகளுக்கு சென்று வேவு பார்க்கும்  நாய் ஒன்று   முதலமைச்சர் “அம்மா” அவர்களுக்கு நாய்கள் என்றால்  உயிர் எனச் சொல்ல.  அவர்கள் வீட்டில்  உள்ள  நாய்களுடன்  பேசி நாய்களுக்கு  தடுப்பு  ஊசி,  இலவச உணவு  வழங்கும்  திட்டம்,  வீட்டுக்கு ஒரு   நாய்  வளர்க்கும்  திட்டம் போன்றவைகளை நிறைவேற்ற முயற்சிக்க  வேண்டும்  என  முடிவு செய்தன.

வரும்  தீபாவளியை நினைத்து வருந்தின.  வெடிகளின் தொல்லையிலிருந்து தப்புவது எப்படி என்று  ஆலோசனை  நட்த்தின.  சென்னை  மாநகராட்சி பெண்  நாய்களுக்கு  ஊசி போட்டு நாய்  இனத்தையே  அழித்துவிடும் ஒரு  திட்டம்  உள்ளது என்று  ஒரு  பெண் நாய்  புலம்பியது. 

அதற்கு  மூத்த நாய் இப்போதே நமக்கு  அரை வயிறு சாப்பாடு  கிடைப்பதே சிரமமாக இருக்கிறது.   ஒரு  பிரசவத்திற்கு நாலைந்து  குட்டி  பெத்து தள்ளறாங்க.   ஜனத்தொகை  கட்டுப்பாடு  அவசியம் தான்  என்ற உடன் எல்லா நாய்களும்  உடனே ஏற்றுக்  கொண்டன.

“இந்து”  பத்திரிகை,  “ஃப்ளுகிராஸ்”  நிறுவனம் ஆகியோர்  நாய்  குலத்திற்கு  ஆற்றும் பணிகளை  பாராட்டி  தீர்மானம் நிறைவேற்றப்  பட்டது.

ராஜா , “நடராஜன்,  ஜெகந்நாதன்  இருவருமே  நல்லவர்கள்  தான்.  டாக்டர் “டு லிட்டில்”  இந்தியா வரும் போது இவர்களை வைத்து  பேச்சு  வார்த்தை  நடத்தி பெரிய  அளவில்  சாதிக்கலாம்”  என்றது.  அவர்கள்  இருவருமே  நாய்  குலத்தின் ஆதரவாளர்கள் தான்.  ஆனால்  அகில இந்திய  அளவில்  ஏதாவது  சாதிக்கணும்னா இந்திரா காந்தி மாதிரி  ஆளுங்கதான் சாதிக்கமுடியும்  என்றது  ஒரு  நாய். 

“என்ன  நீ  “மொழி”  பட்த்தில்  வர மொட்டைத் தலையன்  எம்.எஸ்.பாஸ்கர்  மாதிரி  பேசறே.  பாபு  செத்துப் போன  உடனே பல வருஷ நினைவுகள் அழிஞ்சு போச்சா”  என்று  பிருதிவி ராஜ்  மாதிரி கூச்சலிட்டவுடன் “எனக்கு  இப்ப  நிகழ்  கால நினைவு  வந்திடுச்சு.  இப்ப சோனியா  காந்தியை  புடிச்சாதான் அகில இந்திய  அளவுலே ஏதாவது  சாதிக்கலாம்.”  என்று  புலம்பியது.உடனே மூத்தநாய்“ அவரோட ஓரகத்தி மேனகாவுக்கு மிருகங்கள்னா உசிரு”என்றது.

“யார்  சஞ்சய் காந்தி   மனைவியா”  என்றது  ஒரு  வெள்ளை   நாய்.

அப்போது   சங்கீதா ஒட்டலின்  குப்பை வண்டி பக்கத்தில்  உள்ள  பெரிய  குப்பை தொட்டியில் எச்சில்  இலைகளை  கொட்டவே எல்லா  நாய்களும் லஞ்ச்  தின்ன குப்பைதொட்டியை  நோக்கித் தலை தெரிக்கப் பறந்தன.

ராஜாவிற்கு  தன்  இனத்தைப்  பார்த்து  கோபம்  பொத்துக் கொண்டு  வந்தது.  பசி  என்றால்  பத்தும் பறக்கத்தானே  செய்யும்.

அடுத்த  நாள்  மாலை  3.45 மணிக்கு ராஜா போர்டிகோவில்  இருந்த டாமியைத் தேடி  வாயில்  ஒரு  பிளாஸ்டிக் பையை  கவ்விச்சென்றது.   ஆஞ்சனேயர்  கோவில்  பிரசாதம்  சகிதம்   டாமியை  சந்தித்தது.  

பொங்கல்  புளியோதரையை  ரசித்து  உண்டது   டாமி

“உங்க  சங்கத்தோட கூட்டம்  எப்படி  இருந்தது”

“எல்லாக் கூட்ட்த்திலேயும் இத்தையே  பேசறோம். எங்க  வாழ்விலெ  எப்ப தான்  விடிவெள்ளி  முளைக்குமோ”

“நீ என்ன  சொல்லறேன்னு புரியல.  நேத்து  நடராஜன்  சார்  வெங்கிக்கு  போன் செய்தார் போல  இருந்தது.  நான்  நல்லா  இருக்கேன்.  கொஞ்சம்,  இளச்சிப்  போய்ட்டேன்னு  வெங்கி  சொன்னான்”

“நாயுள்ளம்  கதையிலே உன்ன மாதிரி  ஒரு  நாயோட  ஒரு பையன்  விளயாடற  மாதிரி   நடராஜனும்  அவர்  மனைவியும்  பார்த்ததா   ஒரு வரி வர்றதே”

“அப்படியா  அது  நானாத்தான்  இருக்கும். ராமுவோட பல்லாவரம்  வரை ஒரு நாள்  சுத்திட்டு வந்தேன்.  வெங்கி  அண்ணா ராமுவை  செமத்தியா டோஸ் விட்டான்.”

“போற போக்கப்  பாத்தா சீக்கிரமே நீ    நடராஜா அய்யா  வீட்டுக்கு போயிடுவே போல”

“திடீர்ன்னு  வந்து  கூப்பிட்டுக்கிட்டு  போய்ட்டா?

சிறிது  யோசனைக்குப்  பிறகு  ராஜா

“நான்  உனக்கு  ஒரு  பாட்டு  சொல்லித்தரேன்.  அத பாடு  உடனே வந்துடறேன்.”

“ பாட்டு   எல்லாம்  எனக்கு  வராதே. 

“தினமும்  சாதகம்  பண்ணு  வந்திரும்”

‘ஹும்ன்னு...............
ளொள்,   ளொள்    ளொள்.  மச்சான்  உன்னைப் பார்த்து மயங்கிப்போனேன்  நேத்து”

“நல்லாவே  இல்லையே”

நீ எதிர்  நீச்சல்  மாது  விசிறி  ஆச்சே. தமிழுக்கும்  அமுதென்று  பேர்”

நாய்  மொழியில்  டாமி  எளிதாக  பிடித்துக் கொண்டது.  ராஜா
“என்னோட   ஆளை வேற போய்  பார்க்கணும்.  கோவிலுக்கும்  போகணும்.   வர்ரேன்”

டாமி  ‘தமிழிக்கும்  அமுதென்று  பேர்’ என்று  பாடிய உடன் ராஜா திரும்பிப்  பார்த்து ‘டாடா’ சொல்லிவிட்டு பறந்தது.

“என்ன  ஜெகந்நாதன்  எப்படி  இருக்கே”  போனில்  நடராஜன்.
முக்திநாத்திலிருந்தா பேசறே. 

“தினமும்  ட்ரை  பண்ணுவேன்.  இன்னிக்கு தான் லைன்  கிடைச்சது.”

“தரிசனம்  எல்லாம்  நல்லா ஆச்சா”

“பிரமாதம்  நீயும்  வந்திருக்கலாம்.   நான்  டாமியை  பெருங்குடிக்கே கூட்டிட்டு வந்திடலாம்ன்னு நினைக்கிறேன்.”

இணைப்பு துண்டித்துவிட்டது.

ஜெகந்நாதன்  மனதில்  சிறு  மகிழ்ச்சி அரும்பியது.

சில நாட்களுக்குப்  பிறகு அதே  பல்லாவரம் – பம்மல்  ரோடு  சிக்னலில் ஐ-10 நின்றது. நடராஜன்  தம்பதிகளுடன்  டாமி  இருந்ததால் கார்  கண்ணாடி  இறக்கி விடப்பட்டிருந்தது.   புறபட்ட  அவரசத்தில் டாமி  பாட மறந்து விட்டது.
ஜன்னலுக்கு  வெளியே ராஜா இன்னொரு  கார்  டையரை  நனைத்துக்கொண்டிருந்தது.   டாமி  உற்சாகத்துடன் ‘தமிழுக்கும்  அமுதென்று  பேர்’  என்று  பாட ராஜா  டாமியை  கவனித்துவிட்டது.  ராஜாவுக்கு  சந்தோஷம்  கலந்த துக்கம்.  நல்லா இரு மச்சி  என்று  கூவியது.

“இரண்டு  மனம்  வேண்டும்
இறைவனிடம்  கேட்டேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து  வாழ  ஒன்று”
என  ராஜா பாடிக்கொண்டே  ஹனுமார்  கோவில்  நோக்கி நன்றி  சொல்ல  ஓடியது.  அன்று தான்  ஒரு  மண்டலம்  முடிகிறது.  டாமியின்  கண்களில் கண்ணீர்  பனித்தது.

(  ஆக்கம்-பார்த்தசாரதி- )









7 கருத்துகள்:

  1. சூப்பர் சார்! நாய் பேச நினைப்பதெல்லாம் நீங்கள் அருமையாக சொல்லி விட்டீர்கள். இப்படி ஒரு வித்தியாசமான பதிவை படித்தது இல்லை.

    பதிலளிநீக்கு
  2. கற்பனை என்றாலும் நாய்கள் பேசமுடிந்தால் என்ன பேசும் என்பதை அழகாக எழுதியுள்ளார் திரு பார்த்தசாரதி அவர்கள். அவருக்கும், அவரது படைப்பை வெளியிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான பகிர்வு! வித்தியாசமாக இருந்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான படைப்பு... சுவாரஸ்யமாக இருந்தது...

    நன்றி...
    tm5

    பதிலளிநீக்கு
  5. ஊமையாய் நிற்கும் வார்த்தைகள் பேசத் தொடங்கிவிட்டால்
    வார்த்தைகளுக்கு பஞ்சமிருக்காது அன்பதை அழகாய் உணர்த்தும்...
    சிறந்த ஒரு படைப்பினை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல அய்யா...

    பதிலளிநீக்கு
  6. ரசனையான பதிவு. விறு விறு... என்று சென்றது.

    தங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் ஐயா!

    பதிலளிநீக்கு