தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 28, 2012

அவள் என்ன செய்யப் போகிறாள்?!


ஃபாதர் ஜெபராஜ் பாவ மன்னிப்புக் கூண்டுக்குள் வந்து அமர்ந்தார். 

பாவமன்னிப்புக் கேட்க வந்த பெண் பேச ஆரம்பித்தாள்.

“ஃபாதர்!நான் உயிர்களைக் காக்கும் புனிதமான மருத்துவத் தொழிலில் இருப்பவள்.ஆனால் உயிரை எடுப்பவளாக ஆகி விட்டேன்.எனக்கு மன்னிப்பு உண்டா?”

“மகளே!உன் மனப் பாரத்தை இங்கு இறக்கி வைத்து விடு.நீ மன்னிக்கப் படுவாய்.”என்றார் ஃபாதர்

”நான் படிப்பை முடித்துஎன் பணியைத் தொடங்கியபோது எண்ணற்ற கனவுகள் ஃபாதர். மிகப்பெரிய மருத்துவராக வேண்டும்.தேவைப்படுவோருக்கு இலவச சேவை செய்ய வேண்டும் என்றெல்லாம் மனக்கோட்டைகள்.  ஆனால் தொடக்கத்தில் நான் கவனித்த சில நோயாளிகள் உடல் நலம் பெறாத காரணத்தால் கைராசி இல்லாத டாக்டர் என்ற பெயர் வந்து விட்டது. நோயாளிகள்  வருகையே குறைந்து விட்டது.”

“அந்நிலையில்தான் எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்மணி,பெரிய இடத்தைச் சேர்ந்தவள்,தன் மகளுடன் வந்தாள்.மகள் யாரையோ நம்பி ஏமாந்து விட்டதாகவும்,அதனால்  கர்ப்பமாகி விட்டதாகவும்,யாருக்கும் தெரியாமல் அதைக் கலைக்க வேண்டும் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டாள். கொஞ்சம் யோசித்தேன்.இதுவும் ஒரு வகை உதவிதானோ,நமக்கோ வேறு நோயாளிகள் அதிகம் வரவில்லையே என்பதால் ஒப்புக் கொண்டேன். கொஞ்சம் நாள் கூட ஆகி விட்ட சிக்கலான் கேஸ்தான்.ஆனால் அதை வெற்றிகரமாக முடித்தேன்.நிறையப்பணமும் கிடைத்தது.”

“அதுதான் ஃபாதர்,தொடக்கம்.அதில் என் கைராசி மிகவும் பிரசித்தமாகி விட்டது.பிறந்து வாழும் உயிர்களைக் காக்க வேண்டிய நான்,பிறவா உயிர்களைச் சிதைக்கும் பணியை மேற்கொண்டுவிட்டேன்.நல்ல வருமானம்,வசதிகள் பெருகி விட்டன.இப்போது சில நாட்களாக என் மனம் உறுத்துகிறது.இந்தப் பாவத்தொழிலைத் தொடர்வதா என்ற கேள்வி எழுகிறது. என்னைக் கர்த்தர் மன்னிப்பாரா என்ற பயம் ஏற்படுகிறது.எனவேதான் இங்கு இருக்கிறேன். எனக்குப் பாவ மன்னிப்புக் கிடைக்குமா?”அவள்


ஃபாதர் சொன்னார்”எப்போது உன் பாவங்களுக்காக நீ வருந்தினாயோ அப்போதே நீ மன்னிக்கப் பட்டாய்.இனி அப்பாவத்தைத் தொடராமல் கவனமாக இரு.பாவம் செய்யத்தூண்டும் சந்தர்ப்பங்களைச்  சாத்தான் உருவாக்குவான்.கவனமாக இரு.கர்த்தர் துணையிருப்பார்”


அவள் போய் விட்டாள்.அன்று முதல் அத் தொழில் செய்வதை நிறுத்தி விட்டாள். ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் செய்ய ஆரம்பித்தாள். அவர்களிடத்தில் அவளுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இப்படி ஒரு ஆண்டு கடந்த பின் ஒரு நாள்---

இரவு மணி 9 இருக்கும்.அவள் வீட்டில் படித்துக் கொண்டிருந்தாள்.அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தாள்.ஃபாதர்  ஜெபராஜ் நின்று கொண்டிருந்தார். அவள் பரபரப்பாக, “வாங்க, ஃபாதர்,உள்ள வாங்க.சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே,நீங்க இந்த நேரத்தில் வந்திருக்க வேண்டாமே” என்றாள்.

ஃபாதரின் முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்தது”உன்னிடம் ஒரு உதவிக்காக வந்திருக்கிறேன். செய்வாயா?”

“என்ன ஃபாதர் இப்படிக் கேட்கிறீர்கள்.செய் என்று சொல்லுங்கள். செய்கிறேன்.”

ஃபாதர்  கதவுப்பக்கம் பார்த்தழைத்தார்”ராணி ,உள்ளே வா”

உள்ளே வந்த அப்பெண்ணை அவள் சர்ச்சில் பார்த்திருக்கிறாள்,

“இவள் சர்ச்சில் பணி புரிபவள் அல்லவா/”

“ஆம்.இவள் விஷயத்தில்தான் உன் உதவிதேவை.நான் உன்னைத்தேடி ஏன் வந்தேனென்றால், இதில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன்.ஒரு பலவீனமான நேரத்தில் தவறு நடந்து விட்டதுஅதன் பலனை இவள் சுமக்கிறாள்.இது எவ்வளவு தீவிரமான ஒரு சிக்கல் என்பது உனக்குத் தெரியும். இவள் தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்கிறாள்.இவள் உயிரையும் இருவர் மானத்தையும் காப்பாற்ற, பிறவா உயிரைப் பலியிடத்தான் வேண்டும். எனவேதான்……..”

அவள் ஓராண்டாக நிறுத்தி விட்ட ஒரு பாவத்தை,நிறுத்தச் சொன்னவருக் காகவே மீண்டும் செய்ய வேண்டும்!

அழுவதா அல்லது சிரிப்பதா என்றே அவளுக்குத் தெரியவில்லை.

என்ன செய்யப் போகிறாள் அவள்?

37 கருத்துகள்:

  1. யதார்த்தமான நாட்டு நடப்புகளை அப்படியே அழகாக புட்டுப்புட்டு வைத்து எழுதியுள்ளீர்கள்.

    என்ன செய்யப் போகிறாள் அவள்?
    நல்ல தலைப்பு.

    என்ன செய்யப் போகிறாள் அவள்?
    என்பதே எங்கள் கேள்வியும்.

    பதிலளிநீக்கு
  2. இறைவனின் (அல்லது சத்தியத்தின்) சோதனை வெல்வதும் வீழ்வதும் நம் கையில் தான் உள்ளது. அவர் வெல்வார் என்றே நம்புவோமாக!

    பதிலளிநீக்கு
  3. இத்தகைய சோதனைகளில் பொதுவாக மனித பிறவி வீழ்தப்பட்டே விடுகிறது!

    பதிலளிநீக்கு
  4. பாதிரியார் செய்யச் சொல்லும் இந்தப் பாவத்துக்கும் அதற்குக் காரணமான அவர் செய்த பாவத்துக்கும் யார்தான் பாவமன்னிப்பு வழங்கிட முடியும்? அவள் என்ன செய்யப் போகிறாள்?

    பதிலளிநீக்கு
  5. தான் சம்பந்தப் படாமல் ஃபாதர்
    வந்திருந்தால் கொஞ்சம் நன்றாய்
    இருந்திருக்குமோ என எண்ணினேன்
    விதிவிலக்குகளை விலக்கியே வைக்கலாம் இல்லையா
    திகைக்கவைத்த முடிவு
    அவள் என்ன செய்வாள் ?

    பதிலளிநீக்கு
  6. பாவமென்பது மனிதனுக்கு பொதுவான ஒன்று அதனை யார் வேனுமானாலும் செய்யாலாம்...அதில் ஃபாதருக்கு என்ன விதிவிலக்கு...

    இங்கு கவனிக்க வேணிடியது பாவமீட்சியைதான்...பாவமீட்சிக்கு ஃபாதரைப்போல் இடைத்தரகர்களை நாம் ஏன் நியமிக்க வேண்டும். நேரடியாகவே இறைவனிடம் முறையிடுவதன் மூலம் பெறும் திருப்தியே போதுமானது...

    நம்பிக்கைதான் வாழ்க்கை

    பதிலளிநீக்கு
  7. மற்றவருக்குத்தான் எல்லாம் என்பது இக்கதையின் மூலம் உணர முடிகிறது..பாவம் செய்த பாதிரியாருக்கு அவள் பாவ மன்னிப்பு வழங்கக் கூடாது என்பது என கருத்து..நடைமுறையில் இப்படியான பாதிரியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  8. என்ன செய்யப் போகிறார் அந்த மருத்துவர்? இதே கேள்வி எனக்குள்ளும்.....

    பதிலளிநீக்கு
  9. என்ன செய்வது ... செய்து விட்டு மீண்டும் ஒரு முறை பாவ மன்னிப்பு கோர வேண்டியது தான் . ( பாதிரியார்களின் லீலைகள் குறித்து அடிக்கடி செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது !) வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  10. ஹா....ஹா.... ஹா.... முடிச்சு பலமாகத்தான் இருக்கிறது! பாவமன்னிப்புக் கேட்கப் போகாமலேயே இருந்திருக்கலாம்!!

    பதிலளிநீக்கு
  11. இதில் இருந்து நான் புரிந்து கொண்டது போலிகள் என் மதத்தில் மட்டும் இல்லை எம் மதத்திலும் இருகிறார்கள் என்பதை... சிந்திக்க வைக்கும் கதை நன்று

    பதிலளிநீக்கு
  12. உயிரைக் கொள்வது பாவமே எதுவும் அவள் செய்யாமல் இருக்கட்டும் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அவள் என்னச் செய்யப்போகிறாள்?
    செய்துவிட்டு மீண்டும் பாவமன்னிப்புப் பெறுவாளா?

    பதிலளிநீக்கு
  14. யதார்த்தம்...

    பதிலளிநீக்கு
  15. யதார்த்தம்.. அருமை நண்பரே..

    பதிலளிநீக்கு
  16. அவள் அந்த பாவத்தை மீண்டும் செய்யக்கூடாது என்பதே என் கருத்து.

    பதிலளிநீக்கு
  17. பலவீனமான மனிதர்களின் பலவீனமான நேரங்கள்.

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல். - திருக்குறள்

    பதிலளிநீக்கு
  18. அவள் என்ன செய்யப் போகிறாள்... அருமை...
    தலைப்பு கதையின் முடிவாய்... நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  19. நடைமுறை என்றாலும் எழுத்தில் அருமை அங்கிள்.....

    பதிலளிநீக்கு
  20. சிந்திப்பவன்6 ஜூலை, 2012 அன்று AM 7:55

    இதோ என்னுடைய "Secular" பதில்:

    அவள் பாதிரியை இஸ்லாமிற்கு மதம் மாறி அந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளவும் மற்றும்,மீண்டும் இவ்வகையான தவறுகள் நடக்காமல் இருக்க அவரை குருக்கள் தேவநாதனிடம் பயிற்சி எடுத்துக்கொள்ளவும் சொல்வாள்.
    எப்பூடி??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாத்தான் இருக்கு உங்கபேரு!பிரச்சினையில்லாத முடிவே!!

      நீக்கு