தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 11, 2011

நடிகை(சிறுகதை-நிறைவுப்பகுதி)

காட்சி முடிந்ததும் அவளைக் கை குலுக்கிப் பாராட்டினேன்!என்ன மென்மையான தொடுகை!

அவள் கேட்டாள்” சார் எப்படி இவ்வளவு பிரமாதமாக நடிக்கிறீர்கள்”

ரகு சொன்னான்”அவன் ஒரு நாடகக் குழு வைத்திருந்தான்,மிக அருமையான ஒரு நாடகம் தயார் செய்து மேடையேற்றினான்.மூன்று நாள் மட்டுமே நடந்தது. சென்னை சபாக்களின் ”உயர்தரத்துக்கு” அந்த நாடகம் ஒத்து வரவில்லை. அதோடு நாடகத்துக்கும் நடிப்புக்கும் தலை முழுகி விட்டான்”

பின் மற்ற நடிகர்களும் வந்துசேர,ஓரிரு காட்சிகள் சுடப்பட்டன!உணவு இடை வேளையின் போது சுமதி உணவுக்குப் பின் ஒரு நாற்காலியில் தனியே அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தாள்.அவளை நெருங்கினேன்.அவள் எழுந்தாள். அவளை அமரச் சொல்லி விட்டு,நானும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தேன்!

”என்ன படிக்கிறீர்கள்?”

புத்தகத்தைக் காட்டினாள்.’கோபல்ல கிராமம்’

ஆச்சரியப்பட்டேன்.அவளுக்கு,கி.ரா., தி.ஜானகிராமன்,சுந்தரராமசாமி போன்றோர் படிக்கப் பிடிக்கும் என்று சொன்னாள்.

என்னிடம் பல புத்தகங்கள் இருக்கின்றன;படிக்கத்தருகிறேன் என்று சொன்னேன். அவளைப் பற்றி விசாரித்தேன்.

அவளது சிறு வயதிலேயே தந்தை அவர்களை விட்டு எங்கோ போய்விட்டார்; அவள் தாய், தான் கற்றுக்கொண்ட இசையைச் சிறுவர் ,சிறுமிகளுக்குச் சொல்லிக் கொடுத்து அந்த வருமானத்தில் குடும்பம் நடந்தது.அவள் +2 வரை படித்துப் பின் ஓரிரு கடைகளில் வேலை பார்த்தாள்.பின்னர் சில தொலைக்காட்சித்தொடர்களில் சிறிய வேடங்கள்,சொற்ப வருமானம்.ரகு அவளைக் கண்டு அவளால்முடியும் என்று நம்பி இந்த ரோலைக் கொடுத்திருக்கிறான்.ஆனால் அது மெகா சீரியல் இல்லை.எனவே அதிக வருமானம் இல்லை.இதுவே அவள் நிலை.


மாலை புறப்படும்போது அவள் வசிக்குமிடத்தைத் தாண்டியே நான் போக வேண்டியதால் அவளை வண்டியில் ஏற்றிச் சென்று வீட்டில் விட்டேன்.உள்ளே வரச் சொன்னாள்.மறுநாள் புத்தகங்களோடு வருகிறேன் என்று சொல்லிப் புறப்பட்டேன்.அன்று தூங்கும் வரை அவள் நினைவாகவே இருந்தது.

மறு நாள் காலை உணவுக்குப் பின் அவள் வீட்டுக்குச் சென்றேன். எளிமையான சுரிதாரில் அழகாக இருந்தாள்! சிறிய வீடு;ஆனால் தூய்மையாக இருந்தது.அவள் அம்மாவை அறிமுகப் படுத்தி வைத்தாள்.புத்தகத்துக்கு நன்றி சொன்னாள்.தேநீர் கொடுத்தாள்.பேசிக்கொண்டிருந்தோம்.

வாசலில் அழைப்பு மணி ஓசை.போய்த்திறந்தாள்.மூன்று பேர் ,முரட்டுத்தோற்றம் உள்ளவர்கள் உள்ளே வந்தனர்.அவர்களைப் பார்த்ததும்,அம்மா,மகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.முகம் வெளிறியது.

”என்னாம்மா?பணத்தக் குடுக்காம டபாய்ச்சுக்கிட்டே இருக்கீங்க.இன்னிக்கு பணத்த வாங்காமப் போக மாட்டோம்.”பயமுறுத்தும் குரல்.

”சார்,நேற்றுத்தான் புதுப் படப்பிடிப்பு ஆரம்பம் .இன்னும் கொஞ்ச நாளில் கொடுத்து விடுகிறேன்.” மெல்லிய குரலில் அவள்

”என்னாம்மா பெரிய படப் பிடிப்பு?நீ நெனச்சா ஒரே ராத்திரியில சம்பாதிச்சுட முடியாதா?”

அதைக் கேட்டு அவள் அவமானத்தால் கூனிக் குறுகிப் போனாள்.முகம் சுருங்கி,விழிகளில் நீர் திரண்டது.முகத்தில் அப்படி ஒரு வேதனை!

என்னால் பொறுக்க முடியவில்லை”என்னப்பா இப்படி அசிங்கமாப் பேசுறீங்க”கேட்டேன்.

”சார் கஷ்டமா இருந்தா நீங்க பணத்தைக் குடுங்க.நாங்க போயிடறோம்!”

”எவ்வளவு?”

“முப்பதாயிரம்.மூணுமாச வட்டி ஒன்பதாயிரம்.மொத்தம் முப்பத்தொன்பதாயிரம்.”

யோசித்தேன்.பின் சொன்னேன்.”பணமாக இல்லை.காசோலை தருகிறேன். சரியா?”

”உங்களை நம்புறோம்.குடுங்க”

கைப்பையிலிருந்து செக் புத்தகம் எடுத்தேன்.அவளது மறுப்பைப் பொருட் படுத்தாமல், செக் எழுதி அவனிடம் நீட்டினேன்.வாங்கிக் கொண்டு “தேங்க்ஸ் சார்.அம்மா, சார் நல்லவரா இருக்கார்.நல்லாப் பாத்துக்குங்க”என்று கிண்டலாகச் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள்.

அவர்கள் சென்ற பின் என் அருகில் வந்த அவள்,என் கைகளைப் பிடித்துத் தன் கண்களில் ஒத்திக்கொண்டாள் .அவளது கண்ணீரால் என் கைகள் நனைந்தன.

சிறிது நேரம் கழித்து நான் புறப்பட்டேன்.கண்ணீர் மல்க விடை கொடுத்தாள். சென்று கொண்டிருக்கும்போது நினைவு வந்தது,என் பேனாவை அங்கேயே விட்டு விட்டேன் என்பது.என் யு.எஸ் நண்பன் அளித்த பரிசு.

திரும்பப் போனேன்.கதவருகில் செல்லும்போது,கவனித்தேன்,கதவு லேசாகத் திறந்திருந்தது.உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது.அவள் குரல்,மற்றும் ஒரு ஆண்குரல். கொஞ்ச நேரத்துக்கு முன் கேட்ட அதே குரல்!அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்” முப்பதாயிரம் என்று சொன்னதற்குப் பதில் ஐம்பதாயிரம் என்று சொல்லியிருக்கலாம்”பின் உரத்த சிரிப்பு!

புரிந்தது,நான் ஏமாற்றப்பட்டேன் என்பது. உடனே உள்ளே போய் அவர்கள் நாடகம் முடிந்து விட்டது என்பதை உணர்த்தலாமா?வேண்டாம்,என்ன பயன்?

இப்போது கூட வங்கிக்குக் கொடுப்பனவு நிறுத்தக் கட்டளை கொடுத்துக், காசோலையை நிறுத்தி விடலாம்.

வேண்டாம்.

அவள் ஒரு சிறந்த நடிகை.

அது அவள் நடிப்புக்கு நான் கொடுத்த பரிசாக இருக்கட்டும்!

வீடு நோக்கி வண்டியைச் செலுத்தினேன்!

35 கருத்துகள்:

 1. ஆகா! முடிவு எதிர்பாராதது. மிக அருமையாக கதையை நகர்த்தி இருக்கிறீர்கள். மேலும் இதுபோல் கதைகளை எதிர் பார்க்கலாமா? வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. விறுவிறுப்பான நடையில் வித்தியாசமான முடிவு.

  பதிலளிநீக்கு
 3. விறுவிறுப்பாய் சென்ற உங்கள் கதையில் எதிர்பாராததோர் முடிவு... நிறைய பேர் இப்படித்தான் வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்..... :)

  பதிலளிநீக்கு
 4. நடிப்புக்குக் கொடுத்த பரிசு அதிகம்தான். எதிர்பாராத முடிவு.

  பதிலளிநீக்கு
 5. விறுவிறுப்பான கதையோட்டம்.எதிர்பாரா முடிவு.

  பதிலளிநீக்கு
 6. வே.நடனசபாபதி கூறியது...

  //ஆகா! முடிவு எதிர்பாராதது. மிக அருமையாக கதையை நகர்த்தி இருக்கிறீர்கள். மேலும் இதுபோல் கதைகளை எதிர் பார்க்கலாமா? வாழ்த்துக்கள்.//
  முயற்சி செய்வேன்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 7. ரியாஸ் அஹமது கூறியது...

  // aiyaa sabash sabaash oho....39k pochu he he//
  நன்றி ரியாஸ்!

  பதிலளிநீக்கு
 8. ரியாஸ் அஹமது கூறியது...

  // romba super aiyaa ....ella votum alli thanthen//
  மீண்டும் நன்றி ரியாஸ்!

  பதிலளிநீக்கு
 9. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // Thanks for sharing..//
  thank u karun!

  பதிலளிநீக்கு
 10. செங்கோவி கூறியது...

  //விறுவிறுப்பான நடையில் வித்தியாசமான முடிவு.//
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 11. வெங்கட் நாகராஜ் கூறியது...

  // விறுவிறுப்பாய் சென்ற உங்கள் கதையில் எதிர்பாராததோர் முடிவு... நிறைய பேர் இப்படித்தான் வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்..... :)//
  உண்மை!நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 12. இராஜராஜேஸ்வரி கூறியது...

  // நடிப்புக்குக் கொடுத்த பரிசு அதிகம்தான். எதிர்பாராத முடிவு.//
  நன்றி இராஜராஜேஸ்வரி!

  பதிலளிநீக்கு
 13. FOOD கூறியது...

  // விறுவிறுப்பான கதையோட்டம்.எதிர்பாரா முடிவு//
  நன்றி !

  பதிலளிநீக்கு
 14. ///”என்னாம்மா பெரிய படப் பிடிப்பு?நீ நெனச்சா ஒரே ராத்திரியில சம்பாதிச்சுட முடியாதா?”

  அதைக் கேட்டு அவள் அவமானத்தால் கூனிக் குறுகிப் போனாள்.முகம் சுருங்கி,விழிகளில் நீர் திரண்டது.முகத்தில் அப்படி ஒரு வேதனை!//வேதனை தான் ((

  பதிலளிநீக்கு
 15. அமர்க்களம்
  மற்றவர்களுக்காக இரக்கப்படும் போது, சில வேளைகளில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளை நிதர்சனமாக சொல்லியவிதம் அருமை ஐயா

  பதிலளிநீக்கு
 16. கந்தசாமி. கூறியது...

  ///”என்னாம்மா பெரிய படப் பிடிப்பு?நீ நெனச்சா ஒரே ராத்திரியில சம்பாதிச்சுட முடியாதா?”

  அதைக் கேட்டு அவள் அவமானத்தால் கூனிக் குறுகிப் போனாள்.முகம் சுருங்கி,விழிகளில் நீர் திரண்டது.முகத்தில் அப்படி ஒரு வேதனை!////வேதனை தான் ((//

  எனவேதான் அவள் ஒரு சிறந்த நடிகை!
  நன்றி கந்தசாமி!

  பதிலளிநீக்கு
 17. A.R.ராஜகோபாலன் கூறியது...

  //அமர்க்களம்
  மற்றவர்களுக்காக இரக்கப்படும் போது, சில வேளைகளில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளை நிதர்சனமாக சொல்லியவிதம் அருமை ஐயா//
  நன்றி ராஜகோபாலன்!

  பதிலளிநீக்கு
 18. உண்மையிலேயே சூப்பர் கதை. விக்ரமன் கதை மாதிரி செண்டிமெண்டா முடிச்சிருக்கீங்க...

  பதிலளிநீக்கு
 19. பாலா கூறியது...

  //உண்மையிலேயே சூப்பர் கதை. விக்ரமன் கதை மாதிரி செண்டிமெண்டா முடிச்சிருக்கீங்க...//
  நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 20. முடிவில அசத்திட்டீங்க பாஸ்!!!கலக்கல்!!

  பதிலளிநீக்கு
 21. மைந்தன் சிவா கூறியது...

  //முடிவில அசத்திட்டீங்க பாஸ்!!!கலக்கல்!!//
  நன்றி சிவா!

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ஐயா, நான் எதிர்பார்த்த முடிவு என்னவோ, ஆனால் கதாசிரியர் நீங்கள் கதையின் போக்கில் திருப்பு முனை வைத்து தந்த முடிவு என்னவோ.

  ஏமாற்றம், எதிர்பார்ப்பு, பொய் பேசி நடித்தல் முதலிய அம்சங்களை உள்ளடக்க்கி, கதையின் முடிவில் ஒரு பஞ்ச் வசனம் வைத்து கதையினை முடித்திருக்கிறிங்க.

  கலக்கல் கதை ஐயா.

  பதிலளிநீக்கு
 23. >>அது அவள் நடிப்புக்கு நான் கொடுத்த பரிசாக இருக்கட்டும்!

  ஆஹா.. அண்ணன் கதைலயே கவிதை படைச்சிட்டாரே?

  பதிலளிநீக்கு
 24. ஐயா பிரமாதம் கதை...
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 25. கதையின் வாசிப்புதளம் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 26. நிரூபன் கூறியது...

  //வணக்கம் ஐயா, நான் எதிர்பார்த்த முடிவு என்னவோ, ஆனால் கதாசிரியர் நீங்கள் கதையின் போக்கில் திருப்பு முனை வைத்து தந்த முடிவு என்னவோ.

  ஏமாற்றம், எதிர்பார்ப்பு, பொய் பேசி நடித்தல் முதலிய அம்சங்களை உள்ளடக்க்கி, கதையின் முடிவில் ஒரு பஞ்ச் வசனம் வைத்து கதையினை முடித்திருக்கிறிங்க.

  கலக்கல் கதை ஐயா.//

  நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 27. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  >>அது அவள் நடிப்புக்கு நான் கொடுத்த பரிசாக இருக்கட்டும்!

  //ஆஹா.. அண்ணன் கதைலயே கவிதை படைச்சிட்டாரே?//
  நன்றி சிபி!

  பதிலளிநீக்கு
 28. vidivelli கூறியது...

  // ஐயா பிரமாதம் கதை...
  வாழ்த்துக்கள்...//
  நன்றி!

  பதிலளிநீக்கு
 29. விமலன் கூறியது...

  //கதையின் வாசிப்புதளம் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.//
  நன்றி விமலன்!

  பதிலளிநீக்கு
 30. கதை நன்றாக இருந்தது. அந்த காலத்தில் வந்த பாக்யராஜ் படம் ஒன்றின் கரு இதே போல் தான் இருந்தது. நீங்கள் திரை கதை வசனம் எழுதலாம் போல! வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 31. எப்படியாவது அந்த பேயை கண்டுபிடிங்க, முடியலைன நண்பனையாவது கண்டுபிடிங்க ஒரு ரகசியம் கேக்கணும்,,,,,,,,,,,
  தப்பா நினைக்க வேண்டாம் அந்த மல்லிகை பூ சென்ட் எங்க வாங்குனதுன்னு தான்

  பதிலளிநீக்கு
 32. ! ஸ்பார்க் கார்த்தி @ கூறியது...

  //எப்படியாவது அந்த பேயை கண்டுபிடிங்க, முடியலைன நண்பனையாவது கண்டுபிடிங்க ஒரு ரகசியம் கேக்கணும்,,,,,,,,,,,
  தப்பா நினைக்க வேண்டாம் அந்த மல்லிகை பூ சென்ட் எங்க வாங்குனதுன்னு தான்//

  கருத்துரை பதிவு மாறி வந்து விட்டது!

  பதிலளிநீக்கு