தொடரும் தோழர்கள்

சனி, செப்டம்பர் 27, 2008

இது நட்பா?காதலா?(இறுதிப் பகுதி)

மாலை 6 மணி அளவில் மேரியிடமிருந்து ஃபோன் வந்தது.இன்னும் அரை மணி நேரத்தில் புறப்படப்போவதாகத் தெரிவித்தாள்.நான் அங்கு சென்று அவளைஅழைத்து வருவதாகக் கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்றேன்.அரங்கின் வாசலிலே மேரி நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி ஐந்தாறு பேர் நின்று அவளுடன் பேசிக் கொண்டிருந்தனர்.என்னைக் கண்டதும் மேரி அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.அவர்கள் மறுநாள் அவளது உரைக்காக ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினர்.நான் மேரியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.காஃபி அருந்தி விட்டுப் பல விஷயங்கள் பற்றிப்பேசிக் கொண்டிருந்தோம். இரவு உணவுக்காக வெளியே சென்றோம்.அவள் விருப்பப்படி சுவையான தென்னிந்திய உணவு கிடைக்கும் உணவகத்துக்குச் சென்றோம். மேரிக்கு அந்த உணவு மிகவும் பிடித்திருந்தது.
வீடு திரும்பிய பின் சிறிது நேரம் வரவேற்பறையில் சோஃபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.அவளிடம் நான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்கத் தயங்கிக்கொண்டே இருந்தேன்.திடீரென்று மேரி கூறினாள்”பால்கனியில் அமர்ந்து பேசுவோமே,கிருஷ்”பால்கனிக்கு வந்தோம்.அவள் விருப்பப் படித் தரையில் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்துகொண்டோம். அவள் கண்கள் எங்கோ தொலைவானத்தில் லயித்திருந்தன . ”இப்படித்தான் நாங்கள் குடும்பமாக பால்கனியில் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம்.அது ஒரு காலம்,கிருஷ்”-அவள் சொன்னாள் நான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவள் கடந்தகால நினைவுகளில் சஞ்சரிப்பதைப் புரிந்து கொண்டேன் . இதுதான் சரியான நேரம்;கேட்டு விடலாம்

“மேரி,உன்னிடம் ஒன்றுகேட்கவேண்டும். கேட்கலாமா?”
”உம்”எங்கோ லயித்தபடி மேரி.
“திடீரென்று என் தொடர்பை ஏன் துண்டித்தாய் மேரி.?”
அவள் நிகழ் காலத்துக்கு வந்தாள்.என்னையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.கண்கள் சிறிது கலங்கியிருப்பது போல் தோன்றியது.பின் சொன்னாள்”மன்னித்துவிடு,கிருஷ்.இதை நீ கேட்டு விடுவாயோ எனப் பயந்திருந்தேன்.கட்டாயம் கேட்க வேண்டுமே எனத் தவித்திருந்தேன். கேட்டால் எப்படிப் பதில் சொல்வது எனத் திகைத்திருந்தேன்.அந்த நேரத்தில், ஒரு அதீத சோகத்தில் ஆழ்ந்திருந்தபோது அதற்கு மாற்றாக எனக்கு ஒரு துணை தேவைப்பட்டிருக்கிறது-காற்றில் ஆடும் கொடிக்கு ஒரு கொம்பு தேவைப் படுவது போல்.உன்னிடம் நான் எதிர் பார்த்திருந்தது அதுவாகத்தான் இருக்க வேண்டும்.நமது நட்பு வேறு விதமாக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்.அந்த நிலையில் உன் கடிதம் எனக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.அது கோபமாக மாறி உன் தொடர்பைத் துண்டிக்கக் காரணமாகி விட்டது.காலம் செல்லச் செல்ல என் கோபம் அர்த்தமற்றது என்பதை உணர்ந்தேன்.நீ எப்போதுமே ஒரு மிக நல்ல நண்பனாகத்தான் இருந்திருக்கிறாய்.தவறு என்னுடையதுதான்.”
நான் அவளை இடை மறித்தேன்.”போதும் மேரி.நடந்ததைப் பற்றி இனிப் பேச வேண்டாம். இந்தக் கணம் நம் நட்பின் கணம்.அதற்காக வாழ்வோம்”
” நன்றி கிருஷ்.மனம் லேசாகி விட்டது.இந்தக் கணத்துக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.” பின் கேட்டாள் ”உன் மடியில் தலை வைத்துச் சிறிது நேரம் படுத்துக் கொள்ளட்டுமா,கிருஷ்?”.ஒரு குழந்தை போலக் கெஞ்சலாக அவ்ள் கேட்டது என்னை நெகிழ வைத்தது.”செய் ,மேரி”
அவள் என் மடியில் தலை வைத்து உடலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.ஒரு தாயின் மடியில் படுத்துறங்கும் குழந்தை போல உறங்கும் அவள் முகத்தையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தால் ஒரு பெண்ணால்,எத்தனைவயதானவளாக இருந்தாலும்,ஒரு ஆணின் மடியில் தலை வைத்துச் சலனமின்றி உறங்க முடியும்?இது நட்பின் மிக உன்னத நிலை.
அரை மணி நேரம் சென்று அவள் கண் விழித்தாள்.பரபரப்புடன் கேட்டாள்”நீண்ட நேரம் தூங்கி விட்டேனா?என்னை எழுப்பியிருக்கலாமே கிருஷ்?”
” எழுப்ப மனம் வரவில்லை மேரி”
“சரி,நான் என் அறைக்குப் போகிறேன்.நாளைய உரையை சிறிது மெருகேற்ற வேண்டும்.நீ போய் உறங்கு”மேரி தன் அறைக்குச் சென்றாள்.நானும் உறங்கச் சென்றேன்.
மறு நாள் காலையில் அவளை பல்கலைக் கழகத்தில் விட்டு வந்தேன்.மதியம் இரண்டு மணிக்கு,முன்பே பேசிவைத்தபடித் தயாராக இருந்த அவளது பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.காத்துக் கொண்டிருந்த மேரியை அழைத்துக் கொண்டு விமானநிலையம் சென்றேன்.அவள் உள்ளே செல்லும் முன் அவளிடம் சொன்னேன்”அடிக்கடி தொடர்பு கொள்,மேரி.நானும் உன்னிடம் தொலை பேசுகிறேன். ”
அவள் முகத்தில் சிறிது சோகம் தெரிந்தது.”கிருஷ், கடைசி நேரத்தில் சொல்லலாம் என்றுதான் இது வரை சொல்லவில்லை.அடுத்த வாரம் நான் அமெரிக்கா செல்கிறேன்.என் துறையில் பிரபலமான இரு பேராசிரியர்கள் ஒரு ஆராய்ச்சியில் அவர்களுடன் இணைந்து பணி புரிய என்னை அழைத்திருக்கின்றனர்.இது மிகப் பெரிய கவுரவம்.இதற்குத் தகுதி உள்ளவளாக நான் செயல்பட வேண்டும்.அங்கு சென்ற பின் என் முழுக் கவனமும் ஆராய்ச்சியில்தான் இருக்க வேண்டும்.உண்ணவும்,உறங்கவும் கூட மிகக் குறைந்த நேரமே எடுத்துக்கொள்ள வேண்டும்,அந்நிலையில் அடிக்கடி தொலை பேசுவதோ,மின்னஞ்சல் அனுப்புவதோ இயலாமல் போகும்.ஆனால் எப்போதும் என் நினைவில் நீ இருப்பாய்.என் வாழ்க்கையில் கடைசி வரை ஒரே நட்பு,உறவு எல்லாமே நீதான்,கிருஷ்”
நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.சமாளித்துக் கொண்டுசொன்னேன்”வாழ்த்துகள்,மேரி.நீ உன் பணியில் வெற்றி பெற்றுப் பேரும் புகழுடன் தாயகம் திரும்ப நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்.நாம் மீண்டும் சந்திக்கும் அந்த நன்னாளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பேன்.”
மேரி என்னை லேசாக அணைத்துப் பின் என் கையைக் குலுக்கி விட்டு உள்ளே சென்று மறைந்தாள்.
நான் கனத்த மனத்துடன் என் காரை நோக்கி நடந்தேன்.
–x–x–x–x-x–x
ஒரு மாதத்துக்குப் பின் அமெரிக்காவின் டல்லஸ் நகர உள்ளூர் பத்திரிகையில் வந்த ஒரு செய்தி-”நேற்று நடந்த சாலை விபத்து ஒன்றில் ஒரு கார் ஒட்டுநரும் காரில் பயணம் செய்த பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.அந்தப் பெண் ஒரு இந்தியர்.பெயர் மேரி தாமஸ்”
இது ராதாகிருஷ்ணனுக்குத் தெரியாது. அவன் மேரியின் வெற்றிக்காகப் பிரார்த்தித்துக்கொண்டே இருப்பான்.அவள் வருகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டே இருப்பான்.அவன் அப்படியே இருக்கட்டும்.

(பழைய வீட்டிலிருந்து)

2 கருத்துகள்:

 1. நல்ல கதை. இயல்பான நடை!

  முடிவு கொஞ்சம் சோகம்தான்!

  /இது ராதாகிருஷ்ணனுக்குத் தெரியாது//

  எங்களுக்கும் தெரியாம இருந்திருக்கலாம்!
  :(

  பதிலளிநீக்கு
 2. @நாமக்கல் சிபி,
  உங்களுக்குத் தெரிந்தது ராதாகிருஷ்ணனுக்குத் தெரியாது போயிற்று பாருங்கள்,அதுதான் சோகத்தை அதிகமாக்குகிறது.சோகமான முடிவுகள்தாமே மனதில் நிற்கின்றன?

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு