தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 24, 2008

இது நட்பா?காதலா?(இரண்டாம் பகுதி)

சில மாதங்களுக்குப்பின் ஒரு பயிற்சிக்காகத் தலைமை அலுவலகம் சென்ற போது பெங்களூரிலிருந்து வந்த சில நண்பர்கள்,மேரி பணியிலிருந்து விலகி வேறு பணிக்காக டில்லி சென்று விட்டதாகத் தெரிவித்தனர். அவ்வப்போது மேரியின் நினைவு வரும்.ஒரு பெண்ணால் நல்லதொரு நட்பை இவ்வாறு திடீரென்று வெட்ட முடியுமா என்று யோசிக்கும் அதே நேரத்தில் நான்தான் அந்நட்பை/உறவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கொச்சைப் படுத்தி விட்டேனோ என்ற எண்ணமும் வரும்.

அந்த மேரிதான் நாளை வருகிறாள்.இத்தனை நாட்களுக்குப்பின் சென்னைக்கு வரும் வாய்ப்பு வந்ததும் என் நினைவு அவளுக்கு வந்திருக்கிறது. சென்னை மண்டல அலுவலகத்திலிருந்து என் விலாசத்தை,தொலைபேசி எண்ணை அறிந்து கொண்டிருப்பாள்.

அன்றிரவு எனக்குச் சரியான உறக்கமில்லை.இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மேரியைச் சந்திக்கப் போகிறேன்.எப்படியிருப்பாள்?எப்படிப் பழகுவாள்?இப்படிப் பல எண்ணங்கள் என்னெஞ்சில் அலை மோதி உறக்கம் வராமல் செய்தன.காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு வெகு நேரம் முன்பாகவே விமான நிலையம் சென்று தவிப்புடன் காத்திருந்தேன்.விமானம் தரையிறங்கிய அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் வெளி வரும் மனிதர்களைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அதோ,அவள் வந்துவிட்டாள்.அவள்தான். இடைப்பட்ட காலம் அவள் உடலைச் சிறிது சதைப் பிடிப்பாக்கியிருந்தது. அதனால் அவள் அழகு கூடியிருந்ததே தவிரக் குறையவில்லை. அவள் நடையில் நளினமும், கம்பீரமும் கலந்து இருந்தது.எவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு நளினம்,எவரையும் மரியாதையுடன் நோக்கவைக்கும் ஒரு கம்பீரம்.அவளும் என்னைப் பார்த்து விட்டாள்.அங்கிருந்தே என்னைப் பார்த்துக் கையசைத்தாள்.”ஹாய்,கிருஷ்” என்றபடியே என்னை நெருங்கி என் கையைப் பிடித்தாள்.எனக்கு அவளது முதல் தொடுகை நினைவுக்கு வந்தது.”ஹலோ,மேரி” என்றபடியே அவள் கையில் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டேன்.இருவரும் என் மகிழ்வூர்தியை!(கார்) நோக்கி நடந்தோம்.கார் புறப்பட்டதும் அவள் கேட்டாள்”இப்போது எங்கே போகிறோம்,கிருஷ்?”

“என் வீட்டுக்கு.ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருப்பதை விட அதிக வசதியை உனக்கு நான் செய்து தருகிறேன்”சிரித்துக் கொண்டே சொன்னேன்.”உன் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் ஒரு இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை.”-மேரி

” யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை.வந்து பார்.”என் பதில்.காரில் சென்று கொண்டிருக்கும்போதே நான் கேட்டேன்”மேரி,மிஸ்டர்.மேரி என்ன செய்கிறார்?”

அவள் சிரித்தாள்”நான் இன்னும் மிஸ்தான்”

” ஏன் மேரி?”-அவள் பதிலளித்தாள்”சில கேள்விகளுக்குப் பதில் கிடையாது அன்பு நண்பரே.அது சரி, உங்கள் மறுபாதி என்ன செய்கிறார்?குழந்தைகள்?”

“பொறு,பொறு.வீட்டுக்குப் போனதும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.”

வீட்டை அடையும் வரை என் குடும்பம் பற்றிய அவளது கேள்விகளுக்குப்பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினேன்.அவள் ஜெ.என்.யு.டில்லியில் பணி புரிவதையும் ஒரு கருத்தரங்குக்காக சென்னை வந்திருப்பதையும் அறிந்து கொண்டேன்.நான் வங்கிப்பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று தற்போது ஒரு”தொழில்துறை-வங்கிக்கடன்” ஆலோசகனாக இருப்பதையும் பற்றிக் கூறினேன்.

என் குடியிருப்பை அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு என் “ஃப்ளாட்”டை அடைந்து பூட்டிய கதவைத் திறக்க சாவியை எடுத்தபோது அவள் கேட்டாள்”என்ன, கிருஷ்,வீட்டில் யாரும் இல்லையா?”

உள்ளே நுழைந்துகொண்டே சொன்னேன்”இல்லை மேரி.இப்போது நான் மட்டும்தான்”

“அப்படியென்றால்–?”

” இல்லை,மேரி.நீ நினைப்பது போலில்லை.அவள் இப்போது இல்லை பத்தாண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டாள்.என் இரு பையன்களும் பிலானியில் படிக்கிறார்கள்.எனவே இப்போது நான் தனி.”

அவள் என் தோளில் கை வைத்து ஆறுதலாக அழுத்தினாள்,”வருந்துகிறேன், கிருஷ்.”"விடு மேரி .எல்லாம் பழைய கதை.”

அவளை அவளுக்கென்று ஒதுக்கிய அறைக்கு அழைத்துச்சென்றேன்.”இது உன் அறை.எல்லா வசதிகளும் உள்ளது”.

“சரி கிருஷ்.நான் என்னைச் சிறிது புதிப்பித்துக் கொண்டு புறப்படுகிறேன்.”

” நான் உன்னை அங்கு கொண்டு சேர்க்கிறேன். நீ இங்கு இருக்கும் வரை நான்தான் உனக்கு வாகன ஓட்டுனர்.”

சிறிது நேரத்தில் அவள் புறப்பட்டாள். பல்கலைக்கழக வளாகத்தில் அவளை இறக்கி விட்டேன்.”கிருஷ்,மாலை சந்திப்போம்.நிறையப் பேசலாம் ”

வீட்டுக்குத் திரும்பினேன்.எந்த வேலை யிலும் கவனம் செல்லவில்லை.மாலையின் வருகைக்காகக் காத்திருந்தேன்.

(பழைய வீட்டிலிருந்து)

2 கருத்துகள்: