தொடரும் தோழர்கள்

சனி, செப்டம்பர் 27, 2008

வாழ்க்கையின் முடிவு

வியாழனன்று(25-9-08) மதியம் ஒரு மணி அளவில் கணினி முன் அமர்ந்து பதிவில் ஏதாவது தட்டலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது,தொலை பேசி அழைத்தது.வந்த செய்தி நல்ல செய்தி அல்ல-திருவண்ணாமலையில் இருந்த என் தமக்கையின் கணவர் காலமானர்.எண்பது வயதைத் தொட்டுக் கொண்டிருந்தவர்.விமானப் படையில் பணி புரிந்தவர்.வாழ்க்கையில் தன் எல்லாக் கடைமைகளையும் குறைவரச்செய்து முடித்தவர்.ஆனாலும் அச்செய்தி அதிர்ச்சியை அளிக்கத்தான் செய்தது.கண்களில் கண்ணீர் வரவழைக்கத்தான் செய்தது.இனி என் தமக்கை முழுவதும் தன் மகனைச் சார்ந்தே வாழவேண்டுமே,அவள் நன்கு நடத்தப் படுவாளா என்ற கவலை எழுந்தது.சில முக்கிய வேலைகளை முடித்துவிட்டு 3மணிக்குப் பேருந்தைப் பிடித்து 7 மணி அளவில் திருவண்ணாமலை சென்றடைந்தேன்.

வீட்டின் ஹாலில் குளிர்பதனப் பெட்டியில் உடல் வைக்கப் பட்டிருந்தது(அன்று மதியம் வரை அவ்ர் அவரது பெயரால் அழைக்கப் பட்டிருந்தார். இப்போது வெறும் உடல்.)வீட்டில் அனைவரும் சோகத்தில் மூழ்கியிருந்தனர்.சொந்தக்காரர்கள்,தெரிந்தவர்கள் வரும்போதெல்லாம், எப்படி நடந்தது என்று ஒவ்வொருவருக்கும் விவரமாகச் சொல்லப்பட்டது. யாராவது வரும்போது அழுகுரல்கள் ஓங்கி ஒலித்தன.மறுநாள் மதியம் 12 மணிஅளவில் உடலுக்கு எரியூட்டப்ப்பட்டது.காட்டிலிருந்து வீடு திரும்பிக்,குளித்துச் சாப்பாடு முடிந்தது.நான் மாலை 3 மணிக்குத் திரும்ப முடிவு செய்தேன்.ஹாலில் அனைவரும் அமர்ந்து பேசிகொண்டிருந்தோம். குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பித்தனர்.பெரியவர்கள் எதைப் பற்றியெல்லொமோ பேசத் தொடங்கினர்.கலகலப்பும் சிரிப்பும் திரும்பி வந்தன.இதே ஹாலில்தான் இன்று காலை வரை என் அத்தானின் உடல் குளிர் பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.இப்போதோ,எல்லோரும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கிறோம்.

எனக்குத் திருமந்திரப் பாடலொன்று நினைவுக்கு வந்தது.

"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூறையங்காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே."

இதுதான் வாழ்க்கை.

6 கருத்துகள்:

 1. நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
  பெருமை உடைத்துஇவ் வுலகு

  நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

  பதிலளிநீக்கு
 2. முதலில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஜனனம் என்று ஒன்று எடுத்து விட்டால் அதற்கான முடிவு என்றும் ஒன்று உள்ளது அல்லவா? மாற்றத்தை மனது எளிதில் ஏற்றுக்கொள்ளாமல் எல்லாமே நிரந்தரம் என்று எண்ணுவதால் தான் மனது இவ்வளவு பாடுபடுகிறது. மாலை வரை நன்றாக பேசிக்கொண்டு இரவு உணவையும் சாப்பிட்டு விட்டு உறங்கிய எனது தந்தை திடீரென்று காலமான போது எனக்கும் இதே போன்ற உணர்வு தான் ஏற்பட்டது. 'நான் ஒருவன் இருக்கிறேன்' என்று இறைவன் நமக்கு நினைவூட்டுவதுதான் மரணமோ?

  இந்த துயரத்தை தாங்கும் சக்தியை உங்களுக்கும் உங்களது தமக்கைக்கும் இறைவன் அருள வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. @வடகரை வேலன்,
  தமிழ் மறையிலிருந்து பொருத்தமான மேற்கோள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. @expatguru,
  நான் இழப்பின் சோகத்தை நன்கு உணர்ந்தவன்.ஐந்து வயதில் தந்தையை இழந்தவன்.வாழ்க்கை அனுபவங்களால் ஓரளவு பண்பட்டவன்.இருந்தாலும், என்னதான் கீதையும்,உபநிடதங்களும் படித்திருந்தாலும்,இம்மாதிரி நேரங்களில் மனம் சிறிது குலுங்கத்தான் செய்கிறது.
  உங்கள் அனுதாபங்களுக்கும்,ஆறுதல் செய்திக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 5. //இதுதான் வாழ்க்கை//

  உண்மை,உண்மை.

  பதிலளிநீக்கு