தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 15, 2008

நினைவில் நிற்கும் சில இரயில் பயணங்கள்

இரயில் பயணங்கள் எப்போதுமே சுவாரசியமானவைதாம்.நான் எனது சிறு வயதிலிருந்தே இரயில் பயணங்களை ரசித்திருக்கிறேன். எனது பயணங்களில் என்னால் மறக்க முடியாத சில பயணங்களைப் பற்றி இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.


எனது முதல் இரயில் பயணமே மறக்க முடியாத ஒன்றுதான். ஆனால் அது மகிழ்வானதல்ல.அப்போது எனக்கு வயது ஐந்து.எனக்கு முன் பிறந்தவர் நால்வர்.அனைவரிலும் மூத்தவர் என் அண்ணன்.அவர் வயது பதினாறு. அவருக்குப்பின், எனக்கு முன் மூன்று சகோதரிகள்.31 வயதே நிரம்பிய என் தாய்.எங்களையெல்லாம் தன் ஊருக்கு அழைத்துச்செல்லும் என் தாத்தா-என் அம்மாவின் தந்தை. சென்னையிலிருந்து பயணப்பட்ட எங்கள் குடும்பம் இதுதான்.இது நாங்கள் புலம் பெயர்ந்த பயணம்.குடும்பத் தலைவனான,45 வயதே நிறைந்த,பேராசிரியராகப் பணி புரிந்து வந்த என் தந்தை அகால மரணமடைந்தபின் நாங்கள் அனைவரும் என் தாத்தாவின் ஊரை நோக்கி மேற்கொண்ட பயணம்.மற்ற அனைவரும் சோகத்தில், அவரவர் வயதுக்கேற்ப எதிர் காலம் பற்றிய கவலையில் ஆழ்ந்திருக்க எதைப் பற்றியும் கவலைப் படாத நான்.அன்று எனக்கிருந்த கவலையெல்லாம் ஒன்றுதான்.ஊருக்குச் சென்றதும் பள்ளிக்கூடம் போக வேண்டுமோ?பயணம் முழுவதும் என் தாத்தா "ஊருக்குப் போனதும் ஒரு பய--" என்று வாக்கியத்தை முடிக்காமல் விட,"ரயிலிலிருந்து குதிச்சுடுவேன்"என்று நான் சொல்ல,இவ்வாறாக அப் பயணம் நிறைவேறியது.




அதன் பின் எத்தனையோ பயணங்கள்.ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும் படியான பயணம் நான் பட்ட மேற்படிப்புப் படிக்கும் போது நடந்தது.இதற்கு ஒரு சிறு முன்னுரை தேவை.என் கல்லூரிப்படிப்பின் போது கோடைவிடுமுறையில் என் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சில நாட்கள் செல்வது வழக்கம்.அவ்வாறு செல்லும்போது ஒரு முறை,என்னைப் போலவே அடுத்தவீட்டுக்கு விடுமுறைக்கு ஒரு பெண் வந்திருந்தாள்.அன்று வெளியில் செல்லும்போது வீட்டு வாசலில் நின்றிருந்த அப் பெண்ணைப் பார்த்து என் அக்கா,"என்ன,கமலி!எப்ப வந்தே" என்று கேட்க "இன்னிக்குக் கார்த்தாலதான் அக்கா"என்று சொல்லியவாறே அந்தப் பெண் என்னைப் பார்த்தாள். பார்த்தேன் ,பார்த்தோம் ----பா-------ர்த்தோம்.ஈர்த்தோம். கலந்தோம். ஜன்ம ஜன்மமாய் வரும் தொடர்பென உணர்ந்தோம்.(அந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படும் உணர்வு!).நான் அங்கிருந்த பத்து நாட்களும் எங்கள் பார்வை விளையாட்டு தொடர்ந்தது .பார்வையால் பேசிக் கொள்வதைத் தவிர அதற்கு அடுத்த நிலைக்கு எங்கள் காதலை எடுத்துச் செல்லும் தைரியம் எங்கள் இருவருக்குமே இருக்கவில்லை.மற்றவர்களுடன் பேசும்போது எங்கள் எண்ணங்களை மறைமுகமாகப் பகிர்ந்து கொண்டோம்.குழந்தைகளைக் கொஞ்சும் சாக்கில் ஒருவரை ஒருவரையொருவர் கொஞ்சிக்கொண்டோம். நான் ஊர் திரும்புவதற்கு முன்தினம் என் பாட்டிக்காக பவழமல்லிப் பூக்கள் கொண்டு வந்த அவள் அதை என்னிடம் கொடுக்கும்போது எங்கள் கைகள் சிறிதே கலந்தன.அப்பப்பா---உடல் சிலிர்த்துப் போனோம்.மறுநாள் நான் ஊர் திரும்பிவிட்டேன்.என் உள்ளம்"கமலி,கமலி" என்று அவள் பெயரை ஜபித்துக் கொண்டே இருந்தது.அடுத்த விடுமுறைக்கு நான் அங்கு சென்றபோது அவள் அங்கு வரவில்லை.அதன் பின் அவளை நான் சந்தித்தது----ரயிலில்தான். (முன்னுரை முடிந்தது!)


பட்டப் படிப்பு முடிந்து பின் மேற்படிப்புக்காகச் சென்னைக் கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன்.ஒரு முறை விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன்---ரயிலில்.என்னுடன் என் வகுப்புத்தோழன் ஒருவனும்(பின்னர் காவல் துறையில் உயர் பதவி வகித்து ஒய்வு பெற்று விட்டார்).திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன் எங்கள் பெட்டியில் ஏறிய கூட்டத்தில், புதிதாக மணம் புரிந்த ஒரு தம்பதியும் இருந்தனர்.அந்தப் பெண்--கமலி!அவளை நான் பார்த்த அதே நேரத்தில் அவளும் என்னைப் பார்த்தாள்.அவள் கண்களில் ஓர் அதிர்ச்சி.கலக்கம். குழப்பம். அவர்கள் இருவரும் எனக்கு முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தனர். அங்கு அமர்ந்தபின் அவள் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.தன் கணவனுடன் தாழ்ந்த குரலில் பேச ஆரம்பித்தாள்.நான் என் நண்பனை அழைத்துக்கொண்டு சிறிது தூரம் சென்று அவனிடம் எங்கள் காதல் மொட்டு பற்றிக் கூறினேன். அவன் இந்த சந்திப்பு எங்களிருவருக்குமே எப்படி தர்ம சங்கடமானது என்பதை எண்ணி,வருந்தினான்.நாங்கள் திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்தோம்.எங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே பயணம் தொடர்ந்தது.




அவள் தன் கணவனிடம் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டே இருந்தாள். எதையோ திரும்பத் திரும்பச் வலியுறுத்திச் சொல்வது போல் தோன்றியது. அவன் சிறிது உரக்கவே அவ்ளிடம் சொன்னான்- எனக்குக் கேட்க வேண்டும் என்ற நோக்கத்துடன்சொல்வது போல-"தப்பா நெனச்சுக்கப் போறான்ன நான் என்ன பண்ணுவது?நானாகப் போய்ப் பேச முடியுமா?"
நான் தீர்மானித்தேன், இனியும் அவளுக்கு ஒரு தர்ம சங்கடம் வேண்டாம் என.அவனிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டுப் பேச ஆரம்பித்தேன். "நீங்கள் கோபாலனுக்கு உறவா?வழியனுப்ப அவர்கள் வீட்டார்கள் சிலர் வந்திருந்ததைப் பார்த்தேன்"(குறிப்பு-வந்தவர்களுடன் எனக்கு பழக்கமில்லை).
"ஆமாம்.நான் அவர்கள் வீட்டு மாப்பிள்ளை.அவர் பேத்திக்கும் எனக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. என் மனைவி கூட சொல்லிக் கொண்டிருந்தாள்,உங்களைப்பற்றி(கடவுளே!என்ன சொன்னாள்,என்ன சொன்னாள்-என் உள்ளத்தின் ஓலம்).விடுமுறைக்கு வந்தபோது உங்களைப் பார்த்திருப்பதாக".நான் மௌனமாகத் தலையாட்டினேன்.அவன் இருக்கும் ஊர் பற்றி,பார்க்கும் வேலை பற்றி எல்லாம் விவரித்தான்.என் படிப்பு பற்றியும் கேட்டு அறிந்து கொண்டான்.நாங்கள் பேசுவதையெல்லாம் அவள் கேட்டுக் கொண்டே மௌனமாக அமர்ந்திருந்தாள்.அவள் முகத்தில் இப்போது சிறிது அமைதி தெரிந்தது.




இரவு படுக்கும் நேரம் வந்தது.நான் நடுப் படுக்கையிலும் என் நண்பன் கீழ்ப் படுக்கையிலும் படுத்துக் கொண்டோம்.எதிர் வரிசையில் அதே போல் இரண்டு படுக்கைகள் அவர்களுக்கு.விளக்குகள் அணைக்கப்பட்டு நெடு நேரம் வரை அவர்கள் கீழ் இருக்கையில் சேர்ந்து இருந்து ரகசியமாகப் பேசிக் கொண்டும்,சிரித்துக் கொண்டும் இருந்தனர்.அந்தச் சிரிப்பும்,பேச்சும், வளைகுலுங்கும் ஒசையும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. எப்படியோ நான் ஒருவாறு தூங்கிப் போனேன்.




மறுநாள் காலை எழுந்தபின் என் நண்பன் சொன்னான்,இரவு நீண்ட நேரம் அவன் தூங்கவில்லை என்றும்,கடைசியாக அவள்தூங்குமுன், ஓய்வறையிலிருந்து திரும்பி வந்து,சிறிது தயங்கி என் படுக்கையைப் பார்த்ததாகவும்,அதன் பின் தன் மாங்கல்யத்தை எடுத்துக் கண்ணில் ஒத்திக் கொண்டு படுக்கப் போனாள் என்றும்.





சென்னை வந்ததும் நான் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு, கமலியையும் பார்த்து ஒரு புன் முறுவல் செய்து விட்டு,நெஞ்சில் சிறிய வலியுடன் இரயிலிலிருந்து இறங்கினேன்.





என் நினைவில் நிற்கும் அடுத்த பயணமும் காதல் பற்றியதுதான். என்னை மிகவும் பாதித்த பயணம்.அதைப் பற்றித் தெரிந்துகொள்ள எனது பழைய இடுகை"எங்கிருந்தாலும் வாழ்க" பார்க்கவும்.



அடுத்து நான் நினைப்பது,முற்றிலும் வித்தியாசமான ஒரு பயண அனுபவம்.அப்போது நான் டில்லியில் பணி புரிந்துவந்தேன்.ஒரு முறை விடுப்பில் சென்னை வந்து கொண்டிருந்தேன்.என்னுடன் என் அம்மாவும். எப்போதும் போல் பயணத்தில் சாப்பிடுவதற்காக வீட்டில் செய்து கொண்டு வந்த சப்பாத்தி,புளி,தயிர்சாதங்கள்.காலை உணவு,பின் மதிய உணவு சாப்பிடும் போது கவனித்தேன்.எங்கள் பெட்டியில் பயணம் செய்த ஒருவர் யாருடனும் பேசாமல் எதுவும் சாப்பிடாமல் வந்ததை.அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.அவர் வேளாங்கண்ணிக்கு வேண்டுதலுக்காகச் செல்வதாகக் கூறினார்.நான் எங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னபோது பணிவாக மறுத்துவிட்டார்.மதிய நேரத்தில் ரயில் நாக்பூரை அடைந்தது.கீழே இறங்கி இரண்டு ஐஸ்கிரீம் வாங்கினேன்.ஒன்றை என் அம்மாவிடம் கொடுத்தேன்.இன்னொன்றைச் சாப்பிடும் முன் அந்த நபரைப் பார்த்தேன்."சாப்பிடுகிறீர்களா " என்று கேட்ட படியே அவரிடம் அதை நீட்டினேன்.அது வரை ஒன்றுமே சாப்பிடாமல் வந்த அவர் அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார்-ஆர்வமாக,அவசரமாக. மீண்டும் ஒர் ஐஸ்கிரீம் வாங்குமுன் ரயில் புறப்பட்டு விட்டது.என் அம்மாவுக்குக் கூட வருத்தம்-அந்த ஐஸ்கிரீமை நான் சாப்பிடவில்லையே என்று.ஆனால்,அந்த ஐஸ்கிரீமைச் சாப்பிட்டிருந்தால்,என் வயிறு மட்டும்தான் குளிர்ந்திருக்கும்;ஆனால் இப்போது என் மனமும் குளிர்ந்து விட்டது.சென்னை வந்து சேர்ந்தபின் என்னருகில் வந்த அவர்"ஐயா,உங்கள் நலனுக்காக நான் மாதாவிடம் பிரார்த்தனை செய்வேன்"எனச் சொல்லிச் சென்றார்.இந்தப் பயணத்தை எப்படி மறக்க முடியும்?



நினைவில் நிற்கும் இன்னொரு பயணமும் இது போல, வித்தியாசமான ஒருவரைப் பற்றியது.இதுவும் விடுப்பில் சென்னை வந்து திரும்பிய ஒரு பயணம்.பூனாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்தேன்.வழக்கம் போல் கட்டுச் சாதம் வகையறாக்கள்.நாங்கள் சாப்பிடும்போது எங்களுடன் பயணம் செய்த ஒரு இளம்பெண் எதுவும் சாப்பிடாமல் வந்தாள்.நாங்கள் அளித்த உணவை மறுத்து,அன்று விரதம் என்றும் பழம் தவிர வேறெதுவும் சாப்பிட மாட்டேன் என்றும் கூறினாள்.அன்று முழுவதும் அப்பெண் சாப்பிட்டது ஒரே ஒரு ஆப்பிள் மட்டுமே.கல்லூரியில் 'மாஸ் கம்யூனிகேஷன்' பட்ட மேற்படிப்புப் படிக்கும் ஒரு பெண் ,அவ்வாறு விரதம் இருந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.ரயில் காலை 4 மணி அளவில் பூனாவை அடைந்தது.அந்த இருட்டில் அந்தப் பெண்ணைத் தனியாக அனுப்புவது சரியாகத் தோன்றவில்லை.அப்பெண் இருந்த ஹாஸ்டல் எங்கள் வீட்டைத்தாண்டிதான் இருந்தது.எங்களுடன் அப்பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்றோம். எங்கள் வீட்டில் விடியும் வரை தங்கி விட்டுப் பின் செல்லலாம் என நான் சொன்னேன்.அந்தப் பெண் எங்களைக் கவலைப்பட வேண்டாமென்றும்,போய்ச் சேர்ந்தவுடன் தொலைபேசுவதாகவும் கூறினாள். சொன்னது போலவே 20 நிமிடங்களில் அவள் ஃபோன் வந்து விட்டது. என்னால் மறக்கமுடியாத பெண் .அதனால் மறக்க முடியாத பயணம்."நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை,நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மை, திமிர்ந்த ஞானச்செருக்கு" மட்டுமன்றி நமது அடிப்படை கலாசாரத்தை, நம்பிக்கைகளையும் பேணிக் காக்கும் ஒரு வித்தியாசமான புதுமைப் பெண்.செய்யும் செயல் எதையும் ஈடுபாட்டுடன் செய்யும் அந்தப் பெண்ணுக்குச் சரியான பெயர்தான்.--"ச்ரத்தா".



என்ன சொல்கிறீர்கள்?மறக்க முடியுமா அப்பயணங்களை?சம்பந்தப்பட்ட அம்மனிதர்களை?

4 கருத்துகள்:

  1. இதை யார் படிக்கப் போறாங்க, பின்னூட்டம் இடப்போறாங்க?அதனாலேதான் இந்தச் சோதனைப் பின்னூட்டம்.இந்த ஒண்ணாவது இருக்கட்டுமே!

    பதிலளிநீக்கு
  2. உங்களது உரைநடை நன்றாக உள்ளது

    பதிலளிநீக்கு
  3. @நிழல்
    ஹையா.ஒரு பின்னூட்டம் வந்தாச்சு. எங்கே எனக்கு நானே முதுகு சொரிஞ்சுக்கணுமோன்னு நெனெச்சேன் . ஒரு பின்னூட்டம் வந்தா நூறு பின்னூட்டம் வந்த மாதிரி.
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. I just came across your blog - your rail journey almost tells your own journey of life. Your narration at times is touching. Yes, we come across some persons like a 'train sneham' but they deeply entrench into our minds. Lovely writing.

    பதிலளிநீக்கு