தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 20, 2012

கற்பனைப் பாம்புகளும் கடிக்குமோ?!



ஒரு மனிதன் மூடியிலும்,ஓரங்களிலும் துளையிடப்பட்ட ஒரு பெட்டியைத் தன் கையில் வைத்துக் கொண்டு தெருவில் மெதுவாக நடந்து கொண்டிருந்தான். 

பார்த்தால் ஏதோ உயிருள்ள விலங்கைப் பெட்டியில் வைத்து எடுத்துச் செல்வது போல் தோன்றியது.

எதிரில் வந்த ஒருவர் அவனைப் பார்த்து ”பெட்டியில் என்ன கொண்டு போகிறாய்?”  எனக் கேட்டார்.”

அவன் சொன்னான்”கீரிப்பிள்ளை!”

அவர் கேட்டார் “எதற்கு?”

அவன் சொன்னான்”நான் இப்போது கள்ளுக்கடைக்குச் சென்று குடிக்கப் போகிறேன்.நன்கு குடித்த பின் என்னைச் சுற்றிப் பாம்புகளைப் பார்ப்பேன்! எனக்குப்பயமாக இருக்கும்.அதனால் இந்தக் கீரிப்பிள்ளை என்னுடன் இருந்தால் எனக்குப் பயம் ஏற்படாது!”

அவர் சிரித்தார்”என்ன பைத்தியக்காரத்தனம்!அவையெல்லாம் கற்பனைப் பாம்புகள்தாமே!”

அவன் பெட்டியைக்காட்டிச் சொன்னான் “இதுவும் கற்பனைக் கீரிப்பிள்ளை தானே!”

ஒரு கற்பனையைச் சரி செய்ய மற்றொரு கற்பனை.

நம்மில் பலர் இது போல் தேவையற்ற கற்பனைகளை வளர்த்துக் கொண்டி ருக்கிறோம்

சில கற்பனைகளில் மகிழ்ச்சியடைகிறோம்.

சில கற்பனைகளால் கவலைப்படுகிறோம்.

பிரியமானவர்கள் வீடு திரும்ப நேரமானால் ஏதாவது நடந்திருக்குமோ என்ற கவலை.

முக்கியமான நிகழ்வு ஏதாவது நடக்குமுன்,ஏதாவது தவறாக நடந்து விடுமோ என்ற  கவலை

பழைய திரைப்படம் ஒன்றில் –சின்னஞ்சிறு உலகம் என எண்ணுகிறேன் – நாகேஷ் ஏற்ற பாத்திரம் எல்லாவற்றையும் கற்பனை செய்து வருத்தப்படுவார்.
திருமண வீட்டில் விளக்கையும் மணப்பெண்ணின் சேலைத் தலைப்பையும் பார்த்து தீப்பிடிப்பதாகக் கற்பனை செய்து அழ ஆரம்பித்து விடுவார்!

இது   போன்ற கற்பனைகளால் என்ன பயன்,வேண்டாத மனக்குழப்பத்தைத் தவிர?

இதைத்தவிர்த்து மனத்தைக் கட்டுப்படுத்த வழி என்ன?

ஒரே வழிதான்!

இறைவனைப் பற்றிய சிந்தனைதான்.

எவ்வளவுக்கெவ்வளவு கடவுளைப் பற்றிய எண்ணத்தில் ஒன்றிப் போகி றோமோ  அவ்வளவுக்கவ்வளவு வேண்டாத எண்ணங்கள்,கற்பனைகள் அகலும்.

மனம் நமக்கு வசப்படும்!

திங்கள், நவம்பர் 19, 2012

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!



உலகம் சுற்றப் புறப்பட்ட இரு தேவதைகள் ஓரிரவு ஒரு பணக்காரன் வீட்டில்  தங்க எண்ணினர்.அந்த வீட்டில் இருந்தவர்கள் வேண்டா வெறுப்பாக  தேவதைகள்  ஓட்டை உடைசல் போட்டு வைத்திருந்த ஒரு சிறு அறையில் தங்க இடம் தந்தனர்.கரடு முரடான தரையில் படுக்க வேண்டி இருந்தது. படுக்குமுன் அந்த அறையின் சுவரில் ஒரு ஓட்டை இருந்ததை அவர்கள் கண்டனர்.பெரிய தேவதை அந்த ஓட்டையை மூடிச் சரி செய்தது.சின்ன தேவதை ஏன் அப்படிச் செய்தாய் எனக் கேட்டது.பெரிய தேவதை எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எனக் கூறியது.

மறுநாள் இரவு தேவதைகள் ஒரு ஏழை விவசாயியின் வீட்டில் தங்கினர். விவசாயியும் அவர் மனைவியும் இருந்த கொஞ்சம் உணவைப் பகிர்ந்து கொண்டனர்.தங்கள் படுக்கையை தேவதைகளுக்குக் கொடுத்தனர்.

மறுநாள் காலை விவசாயியும் அவன் மனைவியும் அழுது கொண்டி ருந்தனர்.ஏன் எனத் தேவதைகள் கேட்க அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பசு இறந்து விட்டது எனக் கூறினர்.

குட்டிதேவதை கோபமாகக் கேட்டது”பணக்காரனிடம் நிறைய செல்வம் இருக்கிறது .ஆனல் கருமியாக இருக்கிறான்;அவனுக்கு உதவி செய்தாய்; ஆனால்  இவன் மிக நல்லவன்.பாவம் இவனிடம் இருந்த ஒரே சொத்து அவனது பசு.அதை இறக்க எப்படி அனுமதித்தாய்?”

பெரிய தேவதை சொன்னது”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
”பணக்காரன் வீட்டில் ஓட்டைக்குள் பெரிய புதையல் இருந்தது.அது அவன் கண்ணில் படாமல் நான் மறைத்து விட்டேன்.நேற்று இரவு எமன் விவசாயியின் மனைவியைக் கொண்டு போக வந்தான்.நான் பதிலாக பசுவைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து விட்டேன்”

வாழ்க்கையில் இப்படித்தான்;நாம் எதிர்பார்த்தபடி நிகழ்வுகள் நிகழாதபோது, நாம் நம்பிக்கையுடன் எண்ண வேண்டும் இவ்வாறு நடந்தது நம் நன்மைக்கே என.

எண்ணிப்பாருங்கள்:

இன்றிரவு உறக்கம் வராதபோது.வானமே கூரையாக வாழும் மனிதனை எண்ணிப் பாருங்கள்.

மகிழ்வுந்தில் செல்லும்போது நெரிசலில் சிக்கிக்கொண்டால் பொறுமை இழக்காமல்,  பேருந்தில் செல்லக் கூட வசதியில்லாத பலரை எண்ணிப் பாருங்கள்.

பணியிடத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால்,வேலையின்றித் தவிக்கும் இளைஞர்களை எண்ணிப் பாருங்கள்.

அன்புக்குரியவர்களுடன் உறவில் விரிசல் என்றால்,அன்பு செலுத்த ஆளில்லாத அபாக்கியவான்களை எண்ணிப்பாருங்கள்.

வார இறுதி மகிழ்ச்சியாகக்கழியவில்லையே என வருந்தும்போது,வாரத்தில் ஏழுநாட்களும்,ஒருநாளில் 12 மணிநேரம் சொற்ப ஊதியத்தில் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் நபரை எண்ணிப்பாருங்கள்.

காதோரம் நரைத்த முடி கவலைப் படுத்தும்போது,முடியில்லாமல் போன புற்று நோய்க்காரரை எண்ணிப் பாருங்கள் .

மற்றவர்களின் வெறுப்பால்,அறியாமையால்,சிறுமதியால்,பயத்தால் நீங்கள் பாதிக்கப்படும்போது,எண்ணிப்பாருங்கள்,நிகழ்வு இன்னும் மோசமாக்கூட இருக்கலாம்;அவர்கள் இடத்தில் நீங்களாக!


(மின்னஞ்சல் செய்தியின் தமிழாக்கம்)

வெள்ளி, நவம்பர் 16, 2012

தீபாவளி,பலகாரம்,சபரிமலை



தீபாவளியும் அதுவுமா கணினி படுத்து(தி) விட்டது! தாய் பலகை ஃபணால். கணினிப் பொறியாளர்  எடுத்துப்போய் எனக்கு 3200 ரூபாய் செலவு வைத்து இன்றுதான் கணினியைத் திரும்பக் கொண்டு வந்து வைத்தார்.தீபாவளிக்கான மற்றச் செலவுகளோடு இதுவும் சேர்ந்து கொண்டது. சொல்லப் போனால் இதுதான் அதிகச் செலவு.இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒழுங்காக வேலை செய்கிறதோ பார்க்கலாம்.

தீபாவளிச் செலவு என்று சொன்னேன் இல்லையா?எனது உடைக்கு நான் எதுவும் செலவழிக்க வில்லை.பீரோவில் எப்போதெல்லாமோ கிடைத்த ஏழு வேட்டிகள் ஏழு துண்டுகள் இருந்தன! நண்பர்கள்,உறவினர்கள் கொடுத்த சில சட்டைகள்,டீ சட்டைகள் இருந்தன.அவற்றோடு என் மகள் ,’ராசி’யிலிருந்து இரண்டு அரைக்கை குர்தாக்கள் வாங்கிக் கொடுத்தாள்.மாலாடும் மிக்சரும் வாங்கினேன்.பெண்ணிடமிருந்து.மைசூர்பா ,பாதாம் கேக்,மிக்சர்,லேகியம் வந்தது.என் அண்ணா, அவர் மகள்,அண்டை வீட்டுக்காரர்கள் என்று பலரிடமிருந்து,ரவாலட்டு,பர்ஃபி,முறுக்கு,ரிப்பன் பக்கோடா எனப் பல வந்தன. ஏவ்வ்!

ரிப்பன் பக்கோடா என்றதும் என் திருப்பூர் நண்பர் இராமதாஸ் நினைவுதான் வருகிறது.அவர்கள் வீட்டில் அதை ஓட்டு பக்கோடா என்று சொல்வார்கள்.மிகச் சுவையாக செய்வார்கள்.நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் போது எங்களுடன் ஒரு எவர்சில்வர் பாத்திரம் நிறைய ஓட்டுப் பக்கோடா அவர்கள் வீட்டிலிருந்து வரும்.தின்று கொண்டே போவோம்.

எங்கள் சபரிமலைப் பயணமே ஒரு பிக்னிக் மாதிரிதான்.நான் முதல் முறை -கன்னிச்சாமி- சென்றதே ஒரு எதிர்பாராத நிகழ்வுதான்.தில்லியில் பணி புரிந்து வந்தபோது விடுப்பில்  , நெல்லையில் இருந்த என் அண்ணா வீட்டுக்கு வந்திருந்தேன்.நான் முன் பணி புரிந்த திருப்பூர் சென்று நண்பர்களைச் சந்திக்க எண்ணினேன்.நான் அங்கு சென்றபோது இரு நாட்களில் அவர்கள் சபரிமலை செல்லத் தயாராக இருந்தனர்.நண்பர் ராமதாஸ் என்னைப் பார்த்ததும் “சார்,நீங்களும் எங்களுடன் மலைக்கு வருகிறீர்கள்.நாளைக்காலை மாலை போட்டுக் கொள்ளுங்கள்.மறுநாள் புறப்படுகிறோம்.உங்களைப் பொறுத்த வரை எப்போதுமே விரதம்தானே!” என்று சொல்லி விட்டார்.அவ்வாறு அமைந்தது என் முதல் ஐயப்ப தரிசனம்.



எப்போது எங்கள் பயணத்தில் முக்கியமாக அமைவது தீனிதான். போகும் போதே திருப்பூர் அருகில் ஒரு முருகன் கோவிலில் நிறுத்தி இனிப்பு ,இட்லி வகையறாவை ஒரு கை பார்ப்போம்.வேனில் செல்லும்போது ஏதாவது கொறித்துக் கொண்டேதான் செல்வோம்.ஜாலியாகப் பேசியபடியேதான் செல்வோம்.அப்போது நான் சொல்வேன்,
”மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற”
என்று!

முக்கியமான சில நிகழ்வுகள்,திரும்பும்போது இரவில் குற்றாலம் சேர்ந்து, அருவியில் குளித்து,இட்லிக்கடையில் இட்லி ,தோசை என்று எண்ணிக்கை யில்லாமல் உள்ளே தள்ளுவது,ஜாதிக்காய் ஊறுகாய் வாங்குவது, தாராபுரத்தில் தவறாமல் ரவா தோசை சாப்பிடுவது ஆகியவை.

எட்டு ஆண்டுகள் தொடர்ந்து மலைக்கு அதே திருப்பூர் நண்பர் குழுவுடன் சென்றேன்.

நினைத்துப்பார்க்கும்போதே இனிக்கிறதே!



திங்கள், நவம்பர் 12, 2012

தீபாவளி வாழ்த்துகள்

                                                       புத்தாடை அணிந்து

                                                       இனிப்புகள்   புசித்து

                                                           பட்டாசு வெடித்து


                                     குடும்பத்துடன் குதூகலமாகக் கொண்டாடுங்கள்

                                                                   தீபாவளியை

           அனைத்துப் பதிவுலக உறவுகளுக்கும்          
          இனிய தீபாவளி வாழ்த்துகள்

                            அன்புடன்
                                                         சென்னை பித்தன்
   


வெள்ளி, நவம்பர் 09, 2012

நாயுள்ளம் --2 --நிறைவுப்பகுதி


20  நாய்கள்  மறைவாக  இருந்த   காலி  கிரௌண்டில்  கூடி இருந்தன.   ராஜாவும்  இதில்  அடக்கம்.   பாபுவின்   மறைவுக்காக ஒரு  நிமிடம்  மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்  பட்டது.   பெரிய   சாலைகளை  கவனமாக  கடக்க வேண்டும்  என்று  உறுப்பினர்கள்  அறிவுறுத்தப்பட்டன.

சாலையில்  வரிக்குதிரைகள்  கடக்க வழி  செய்யப்பட்டது போல்     நாய்கள்  கடக்க  தனி  வழி  செய்யப்படவேண்டும்  என மூத்த  நாய்  முன்  வைத்த  தீர்மானம்  நிறைவேறியது.

அடுத்தது   "நாய்  உள்ளம்"  பற்றி  விவாதம்  நடந்தது.   நாய்களிடையே  கதைக்கு பலவகைப் பட்ட கருத்துகள்.  ஜெகந்நாதன்  நல்லவரா  கெட்டவரா என்ற  கேள்வி  யாவரையும்  குழப்பியது. நாய்களுக்கு  இலவசமாகக்  கிடைக்கும்  டீ, பொறைகளைப்  பற்றி விமர்சிப்பது சில  நாய்களுக்குப்  பிடிக்கவில்லை. செக்யூரிடி  காவலர்களுக்கு  ரூபாய்  7000  சம்பளம கொடுக்கும்போது நாய்களுக்கு மட்டும் டி,  பொறைதானா.  ஒரு  சில்லி  சிக்கன் பிரியாணியாவது  வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று   பெரும்பான்மையான நாய்கள்  சீறின.   நாய்க்  கடியால் பரவும்  ராபிஸை எப்படித்தடுப்பது என்ற  கேள்விக்கு சரியான  பதில்  கிடைக்க வில்லை.  நம்முள் எத்தனை  நாய்களிடம் ராபிஸ் கிருமிகள்  முடங்கிக்  கிடைகிறதோ என்று மூத்த  நாய்  கூறிய போது,  மற்ற நாய்கள்  பயந்தன.  மனிதர்களை கூடுமானவரை  கடிக்காதீர்கள் என்ற  தீர்மானம்  உடனே  நிறைவேற்றப்பட்டது.

வீட்டில்  வளர்க்கப் படும்  நாய்கள்   சிறந்தவையா ,  தெரு நாய்கள் சிறந்தவையா என்ற கேள்வி  எழுந்த போது  ஆயுத  பூசை அன்று  பட்டி மன்றம்  நடத்தலாம்  என்று  முடிவு  செய்யப்பட்டது.

அப்பொழுது  சுறுசுறுப்பான வேகமுள்ள  அதிகம்  சிந்திக்கக் கூடிய  நாய்  ஒன்று  ஏன்  வெளி நாட்டு  நாய்கள்  தான்  வீடுகளில்  வளர்க்கப்  படுகின்றன.  நாம்  எந்த  வகையில் அவைகளுக்கு  குறைச்சல்  என்று  கர்ஜனை  செய்தது.
அரசாங்கத்திடம்  பேசி இட ஒதுக்கீடு சட்டம்  கொண்டுவர முயற்சிப்பதாக  மூத்த நாய் அறிவித்தது.   ஒரு வட்டாரத்தில் ஒரு வெளி நாட்டு நாய்க்கு  இருபது  நம் நாட்டு  நாய்களை வளர்க்க சட்டம்  இயற்றப் படவேண்டும்  என முழக்கம்  எழுந்தது. 

மற்ற பகுதிகளுக்கு சென்று வேவு பார்க்கும்  நாய் ஒன்று   முதலமைச்சர் “அம்மா” அவர்களுக்கு நாய்கள் என்றால்  உயிர் எனச் சொல்ல.  அவர்கள் வீட்டில்  உள்ள  நாய்களுடன்  பேசி நாய்களுக்கு  தடுப்பு  ஊசி,  இலவச உணவு  வழங்கும்  திட்டம்,  வீட்டுக்கு ஒரு   நாய்  வளர்க்கும்  திட்டம் போன்றவைகளை நிறைவேற்ற முயற்சிக்க  வேண்டும்  என  முடிவு செய்தன.

வரும்  தீபாவளியை நினைத்து வருந்தின.  வெடிகளின் தொல்லையிலிருந்து தப்புவது எப்படி என்று  ஆலோசனை  நட்த்தின.  சென்னை  மாநகராட்சி பெண்  நாய்களுக்கு  ஊசி போட்டு நாய்  இனத்தையே  அழித்துவிடும் ஒரு  திட்டம்  உள்ளது என்று  ஒரு  பெண் நாய்  புலம்பியது. 

அதற்கு  மூத்த நாய் இப்போதே நமக்கு  அரை வயிறு சாப்பாடு  கிடைப்பதே சிரமமாக இருக்கிறது.   ஒரு  பிரசவத்திற்கு நாலைந்து  குட்டி  பெத்து தள்ளறாங்க.   ஜனத்தொகை  கட்டுப்பாடு  அவசியம் தான்  என்ற உடன் எல்லா நாய்களும்  உடனே ஏற்றுக்  கொண்டன.

“இந்து”  பத்திரிகை,  “ஃப்ளுகிராஸ்”  நிறுவனம் ஆகியோர்  நாய்  குலத்திற்கு  ஆற்றும் பணிகளை  பாராட்டி  தீர்மானம் நிறைவேற்றப்  பட்டது.

ராஜா , “நடராஜன்,  ஜெகந்நாதன்  இருவருமே  நல்லவர்கள்  தான்.  டாக்டர் “டு லிட்டில்”  இந்தியா வரும் போது இவர்களை வைத்து  பேச்சு  வார்த்தை  நடத்தி பெரிய  அளவில்  சாதிக்கலாம்”  என்றது.  அவர்கள்  இருவருமே  நாய்  குலத்தின் ஆதரவாளர்கள் தான்.  ஆனால்  அகில இந்திய  அளவில்  ஏதாவது  சாதிக்கணும்னா இந்திரா காந்தி மாதிரி  ஆளுங்கதான் சாதிக்கமுடியும்  என்றது  ஒரு  நாய். 

“என்ன  நீ  “மொழி”  பட்த்தில்  வர மொட்டைத் தலையன்  எம்.எஸ்.பாஸ்கர்  மாதிரி  பேசறே.  பாபு  செத்துப் போன  உடனே பல வருஷ நினைவுகள் அழிஞ்சு போச்சா”  என்று  பிருதிவி ராஜ்  மாதிரி கூச்சலிட்டவுடன் “எனக்கு  இப்ப  நிகழ்  கால நினைவு  வந்திடுச்சு.  இப்ப சோனியா  காந்தியை  புடிச்சாதான் அகில இந்திய  அளவுலே ஏதாவது  சாதிக்கலாம்.”  என்று  புலம்பியது.உடனே மூத்தநாய்“ அவரோட ஓரகத்தி மேனகாவுக்கு மிருகங்கள்னா உசிரு”என்றது.

“யார்  சஞ்சய் காந்தி   மனைவியா”  என்றது  ஒரு  வெள்ளை   நாய்.

அப்போது   சங்கீதா ஒட்டலின்  குப்பை வண்டி பக்கத்தில்  உள்ள  பெரிய  குப்பை தொட்டியில் எச்சில்  இலைகளை  கொட்டவே எல்லா  நாய்களும் லஞ்ச்  தின்ன குப்பைதொட்டியை  நோக்கித் தலை தெரிக்கப் பறந்தன.

ராஜாவிற்கு  தன்  இனத்தைப்  பார்த்து  கோபம்  பொத்துக் கொண்டு  வந்தது.  பசி  என்றால்  பத்தும் பறக்கத்தானே  செய்யும்.

அடுத்த  நாள்  மாலை  3.45 மணிக்கு ராஜா போர்டிகோவில்  இருந்த டாமியைத் தேடி  வாயில்  ஒரு  பிளாஸ்டிக் பையை  கவ்விச்சென்றது.   ஆஞ்சனேயர்  கோவில்  பிரசாதம்  சகிதம்   டாமியை  சந்தித்தது.  

பொங்கல்  புளியோதரையை  ரசித்து  உண்டது   டாமி

“உங்க  சங்கத்தோட கூட்டம்  எப்படி  இருந்தது”

“எல்லாக் கூட்ட்த்திலேயும் இத்தையே  பேசறோம். எங்க  வாழ்விலெ  எப்ப தான்  விடிவெள்ளி  முளைக்குமோ”

“நீ என்ன  சொல்லறேன்னு புரியல.  நேத்து  நடராஜன்  சார்  வெங்கிக்கு  போன் செய்தார் போல  இருந்தது.  நான்  நல்லா  இருக்கேன்.  கொஞ்சம்,  இளச்சிப்  போய்ட்டேன்னு  வெங்கி  சொன்னான்”

“நாயுள்ளம்  கதையிலே உன்ன மாதிரி  ஒரு  நாயோட  ஒரு பையன்  விளயாடற  மாதிரி   நடராஜனும்  அவர்  மனைவியும்  பார்த்ததா   ஒரு வரி வர்றதே”

“அப்படியா  அது  நானாத்தான்  இருக்கும். ராமுவோட பல்லாவரம்  வரை ஒரு நாள்  சுத்திட்டு வந்தேன்.  வெங்கி  அண்ணா ராமுவை  செமத்தியா டோஸ் விட்டான்.”

“போற போக்கப்  பாத்தா சீக்கிரமே நீ    நடராஜா அய்யா  வீட்டுக்கு போயிடுவே போல”

“திடீர்ன்னு  வந்து  கூப்பிட்டுக்கிட்டு  போய்ட்டா?

சிறிது  யோசனைக்குப்  பிறகு  ராஜா

“நான்  உனக்கு  ஒரு  பாட்டு  சொல்லித்தரேன்.  அத பாடு  உடனே வந்துடறேன்.”

“ பாட்டு   எல்லாம்  எனக்கு  வராதே.  “

“தினமும்  சாதகம்  பண்ணு  வந்திரும்”

‘ஹும்ன்னு...............
ளொள்,   ளொள்    ளொள்.  மச்சான்  உன்னைப் பார்த்து மயங்கிப்போனேன்  நேத்து”

“நல்லாவே  இல்லையே”

“ நீ எதிர்  நீச்சல்  மாது  விசிறி  ஆச்சே. தமிழுக்கும்  அமுதென்று  பேர்”

நாய்  மொழியில்  டாமி  எளிதாக  பிடித்துக் கொண்டது.  ராஜா
“என்னோட   ஆளை வேற போய்  பார்க்கணும்.  கோவிலுக்கும்  போகணும்.   வர்ரேன்”

டாமி  ‘தமிழிக்கும்  அமுதென்று  பேர்’ என்று  பாடிய உடன் ராஜா திரும்பிப்  பார்த்து ‘டாடா’ சொல்லிவிட்டு பறந்தது.

“என்ன  ஜெகந்நாதன்  எப்படி  இருக்கே”  போனில்  நடராஜன்.
“
முக்திநாத்திலிருந்தா பேசறே.  “

“தினமும்  ட்ரை  பண்ணுவேன்.  இன்னிக்கு தான் லைன்  கிடைச்சது.”

“தரிசனம்  எல்லாம்  நல்லா ஆச்சா”

“பிரமாதம்  நீயும்  வந்திருக்கலாம்.   நான்  டாமியை  பெருங்குடிக்கே கூட்டிட்டு வந்திடலாம்ன்னு நினைக்கிறேன்.”

இணைப்பு துண்டித்துவிட்டது.

ஜெகந்நாதன்  மனதில்  சிறு  மகிழ்ச்சி அரும்பியது.

சில நாட்களுக்குப்  பிறகு அதே  பல்லாவரம் – பம்மல்  ரோடு  சிக்னலில் ஐ-10 நின்றது. நடராஜன்  தம்பதிகளுடன்  டாமி  இருந்ததால் கார்  கண்ணாடி  இறக்கி விடப்பட்டிருந்தது.   புறபட்ட  அவரசத்தில் டாமி  பாட மறந்து விட்டது.
ஜன்னலுக்கு  வெளியே ராஜா இன்னொரு  கார்  டையரை  நனைத்துக்கொண்டிருந்தது.   டாமி  உற்சாகத்துடன் ‘தமிழுக்கும்  அமுதென்று  பேர்’  என்று  பாட ராஜா  டாமியை  கவனித்துவிட்டது.  ராஜாவுக்கு  சந்தோஷம்  கலந்த துக்கம்.  நல்லா இரு மச்சி  என்று  கூவியது.

“இரண்டு  மனம்  வேண்டும்
இறைவனிடம்  கேட்டேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து  வாழ  ஒன்று”
என  ராஜா பாடிக்கொண்டே  ஹனுமார்  கோவில்  நோக்கி நன்றி  சொல்ல  ஓடியது.  அன்று தான்  ஒரு  மண்டலம்  முடிகிறது.  டாமியின்  கண்களில் கண்ணீர்  பனித்தது.

(  ஆக்கம்-பார்த்தசாரதி- )