தொடரும் தோழர்கள்

புதன், மே 12, 2010

சிங்கமொன்று புறப்பட்டதே!

கும்பகர்ணத் தூக்கம் கலைந்தது!
ஏனிந்த நீண்ட உறக்கம்?
சாக்குகளோ,சமாளிப்புகளோ இன்றிச் சொன்னால்
--சோம்பேறித்தனம்,கற்பனை வறட்சி,விளக்கவியலாத
மனச்சோர்வு,எச்செயலிலும் பிடிப்பற்ற நிலை-அவ்வளவே!
சில நண்பர்கள் இடித்துரைக்க
இன்று எழுந்துவிட்டேன்- உங்கள் தலையெழுத்து!
மாதம் ஒரு இடுகையாவது எழுத எண்ணம்.
என்னையும் உங்களையும் இறைவன் காப்பாற்றட்டும்!!

புதன், செப்டம்பர் 02, 2009

ஓணம்


ஓணம் நல் வாழ்த்துகள்.
திருப்பதி பாலாஜி பிறந்த நட்சத்திரம்-திருவோணம்
சூபர் ஸ்டார் பி்றந்த நட்சத்திரம்-திருவோணம்
இவன் பிறந்த நட்சத்திரம்-திருவோணம்

முதல்வர் கோடி கோடீஸ்வரர்
இரண்டாமவர் கோடீஸ்வரர்.

இவன்?!

புதன், ஜூலை 29, 2009

முத்தத்தின் சுவை என்ன?

முத்தம்!!
சொல்லும்போதே,கேட்கும்போதே,நினைக்கும்போதே மனசெல்லாம் ஒரு மகிழ்ச்சியை, உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒரு சொல். நாம் முத்தம் என்றவுடன் நினைப்பது உதடுகள் இணையும் முத்தத்தையே.ஆனால் முத்தத்தில் எத்தனை வகை?

பாசத்தின் வெளிப்பாடாக நெற்றியின் உச்சியில் இடும் முத்தம்.குழந்தையை அணைத்துக் கன்னத்தில் இடும் முத்தம்.(கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி)ஒரு மரியாதைக்காகக் கையில் இடும் முத்தம்.(இங்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.மங்களூரில் ஒரு கிருத்துவ நண்பரின் திருமணத்துக்கு சர்ச்சுக்குப் போயிருந்தோம்.திருமணம் முடிந்ததும் அனைவரும் மணப்பெண்ணின் கையில் முத்தமிட்டனர்.நாங்களும்தான்.எங்கள் நண்பர் ஒருவர் நேரம் கழித்து வந்தார்.நாங்கள் சொன்னதைக் கேட்டு ’மிஸ், பண்ணி விட்டேனே என்று வருத்தப்பட்டார்!)

முன்பெல்லாம் ஆங்கிலப் படங்களில்தான் முத்தத்தைப் பார்க்க முடியும்.ஆனால் இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களிலும் அவ்வப்போது முத்தத்தைப் பார்க்க முடிகிறது-உபயம்-உலகநாயகன்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த முத்தத்தில்?அதன் சுவை என்ன?

வள்ளுவர் சொல்கிறார்---
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.”

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும் (டாக்டர்.மு.வ.-உரை).

இது உண்மையா?விவாதம் தொடங்கட்டும்!

வியாழன், ஜூன் 11, 2009

சில சாத்தியங்கள்

எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது.ஆனால் எனக்கு ஒரு(!) கனவு இருந்ததில்லை.பல கனவுகள்?

1)என் வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது வெவ்வேறு வயதில் நடந்த நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நான் சென்றிருக்கக்கூடிய பாதைகளின் சாத்தியங்களைக் காட்டுகின்றன.

என் 7 வயதில் சாத்தூரில் பொதுத்தேர்தலின் போது கையில் மெகா போனுடன் வீதி வீதியாகச் சென்று காங்கிரஸ் கட்சிக்காகத் தொண்டர்களுடன் சேர்ந்து பிரசா ரம் செய்தேன் .நாடாளுமன்றத்துக்கு திரு.காமராஜ் அவ்ர்களும் சட்டப் பேரவைக்கு திரு.எஸ்.ஆர்.நாயுடு அவர்களும் போட்டியிட்டனர் .வெற்றி ஊர்வலத்தில் திரு.நாயுடு அவர்களுடன் மகிழ்வுந்தில் அருகில் அமர்ந்து சென்றேன்.சில தெருக்கள் சென்றபின் தொண்டர்கள் என்னை இறக்கி ஹோட்டலுக்கு அழைத்து சென்று மைசூர்பாகும் தோசையும் வாங்கித்தந்தனர்.நான் இறங்கு முன் திரு.நாயுடு அவர்கள் என்னை அன்புடன் தட்டிக்கொடுத்தார்.

அன்று முதல் அந்தத்தொடர்புகள் விடாமல் ஒரு அரசியல் அஸ்திவாரம் எனக்கு அமைத்துத் த்ரப்பட்டிருந்தால் நான் என்னவாயிருப்பேன்?-அமைச்சர்?ஏன் அவ்வாறு நடக்கவில்லை?இழப்பு யாருக்கு???

2)சிவகாசியில் பள்ளியில் படிக்கும்போது பள்ளி நாடகங்களில் கதாநாயகனாக(ராஜபார்ட்)நடித்தேன்.மறக்கமுடியாத வேடம் ராஜ ராஜ நரேந்திரன்.நடிப்பின் காரணமாகவே தமிழ் ஆசிரியருக்கும் பள்ளி மேலாளருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தேன்.பள்ளி வளாகத்தில் நடக்கும் கண்காட்சியிலும் நாடகத்தில் நடித்தேன்.எல்லோரும் என்னை “குட்டி நடிகர் திலகம்” என்றே அழைத்து வந்தனர்.வங்கியில் பயிற்சியில் இருந்த போது நண்பர் ஒருவர் ,ஒரு பிரபல நடிகர் ஒருவரின் பெயரைக்கூறி அவரெல்லாம் நடிக்கும்போது நீ ஏன் நடிக்கக்கூடாது என்று கேட்டார்.இவ்வாறு பலநேரங்களில்,பல விதங்களில் எனக்குள் ஒரு ஆசை எழுப்பப்பட்டது.திரைத்துறையில் புகுந்திருந்தால் பெரிய நடிகனாயிருப்பேனோ? அவ்வாறு ஏன் நடக்கவில்லை?இழப்பு யாருக்கு????

3)பட்டமேற்படிப்புக்குப்பின் சிறிது காலம் வருமான வரித்துறையில் பணியாற்றி வந்த போது ஐ.ஏ.எஸ் படிப்பதில் தீவிரமாக இருந்தேன்.நன்கு தயார் செய்து கொண்டு இருந்தேன்.அந்த நேரத்தில் வங்கிப்பணிக்கான அழைப்பு வந்தது.செல்ல வேண்டாம் என்று எண்ணினேன்.என் அண்ணாஅவர்களும் ஆமோதித்தார்.ஆனால் போக வேண்டிய நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பாக வங்கிப்பணிக்குச்செல்லும்படி என் அண்ணா அறிவுரைத்தார்.அவரும் ஒரு வங்கி அதிகாரிதான்.வங்கியில் சேர்ந்து விட்டேன்.ஐ.ஏ.எஸ் அதோடு முடிந்தது. ஏன் எண்ணப்படி நடக்கவில்லை?இழப்பு யாருக்கு?????

முதல் கேள்விகளுக்கு விடை1.குடும்ப சூழ்நிலை2.Risk(த்மிழ் என்ன) எடுக்கத்துணியாத நடுத்தர வர்க்க மனோ பாவம்(சுருக்கமாக விதி என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாமா)

இரண்டாவது கேள்விகளுக்கான விடை;-இழப்பு அரசியலுக்கு,திரைப்படத்துறைக்கு,அரசுப்பணிக்கு என்று சொல்வேன் என எண்ணினீர்களா?இல்லை எனக்குத்தான்.

இதைப்படித்து விட்டு நான் வாழ்க்கையில் திருப்தியின்றி இருந்திருக்கிறேன் என்று எண்ண வேண்டாம்.

என் பணியிலும் நான் மகிழ்வுடன்தான் இருந்தேன்.இது வரை வாழ்க்கையை முழுமையாகவே வாழ்ந்திருக்கிறேன்.

எல்லாம் இறைவன் செயல்.

(பழைய வீட்டிலிருந்து)

சனி, மே 02, 2009

ஒரு வரலாறு-ராஜியும் பாட்டும்(அத்தியாயம் 3(a)

ராஜி பள்ளிக்கூடத்தில் பாடிய பாட்டு பற்றி சொல்லும்போதே அவளது வேறு ஒரு பாட்டு அனுபவம் பற்றியும் சொல்லியாக வேண்டும்.அந்தக்காலத்திலெல்லாம்,திருமணத்தன்றே சாந்தி முகூர்த்தமெல்லாம் கிடையாது.முக்கியமான காரணம் மணமாகும் போது பெரும்பாலும் பெண் வயதுக்கு வந்திருக்க மாட்டாள்.ராஜியைப் பொருத்தவரை,திருமணத்துக்கு முன்பே வயசுக்கு வந்து விட்டாலும்,அவளது சாந்திகல்யாணம் நான்கு மாதம கழித்துத்தான் நடந்தது.ஏப்ரலில் கல்யாணம்;ஆகஸ்டில் சாந்திகல்யாணம்..வயதென்னவோ அந்த ஜூலையில்தான் பதினான்கு முடிந்திருந்தது.எனவே அவள் ஒரு சிறுமிதானே?

நவராத்திரி சமயத்தில் யார் வீட்டிலெல்லாம் கொலு வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் அண்டை அயலில் உள்ள வீட்டுக்காரர்களை கொலுவுக்கு அழைப்பது வழக்கம்.இப்போதும் அந்த வழக்கம் இருக்கிறது என்றாலும்,ஏதாவதொரு குறிப்பிட்ட ஒரு நாளில்தான் அழைக்கிறார்கள்.அன்று தினமும் அழைப்பார்கள்.தினமும் ஏதாவது தின்பண்டமும் உண்டு.விஷயத்துக்கு வருவோம்.

ராஜியின் கணவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர்.
திருவல்லிக் கேணியில் அவரை அறியாதவர்கள் கிடையாது.
(அவர் பிரமாதமாகக் கொலு வைப்பார்.அதைப்பற்றிப் பின்னால் பார்ப்போம்.).எனவே ராஜியையும் பலர் கொலுவுக்கு அழைத்திருந்தனர்.ராஜியும் சாக்குப்போக்கு எதுவும் சொல்லாமல் போய் வந்தாள்.அப்படி அழைத்திருந்த வீடுகளில் ஒன்று ஒரு சங்கீத வித்வானுடையது.அங்கு ராஜி போயிருந்த போது அந்த வித்வானும் வீட்டில் இருந்தார்.அந்த வீட்டு மாமி அவரிடம்”ப்ரொஃபசர்.நாராயணனோட ஆத்துக்காரி” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.நவராத்திரியின் போது வீட்டுக்கு வரும் பெண்களைப் பாடச் சொல்வது வழக்கம்.அதுவும் ராஜி ப்ரொஃபசர் நாரயணின் பார்யா.எனவே அவர் அவளை ‘ஒரு பாட்டுப் பாடும்மா’ என்றுகேட்டார்.

முன்பே சொன்னது போல் யாராவது பாடச்சொன்னால் ராஜி தயக்கம் ஏதுமின்றி உடனே பாடி விடுவாள்.அவர் சொன்னவுடன் ஒரு பாட்டுப் பாடி விட்டாள்.

அதைப்பற்றி இப்போது நினைத்தாலும்,ராஜி பெருமை கொள்கிறாள்;வெட்கமும் அடைகிறாள்.

அவ்வளவு பெரிய வித்வான் தன்னைப் பாடச்சொல்லித் தான் பாடியதில் பெருமை,

சங்கீதத்தை முறையாகப் பயிலாத தான் அவர் முன் பாடினோமே என்ற வெட்கம்.

அந்த வித்வான் ஜி.என்.பி. என்று அழைக்கப்படும் திரு.ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்கள்!

மறக்க முடியாத நினைவுதானே!

திங்கள், ஏப்ரல் 27, 2009

நானும் இட்லிவடையும்!

எனது முந்தைய ’பச்சோந்தி’ என்ற இடுகையைப் பாருங்கள்.

இட்லிவடையின் இன்றைய ‘உண்ணாவிரதம் முடிந்தது’ என்ற வீடியோவைப் பாருங்கள்.

ஒரு விஷயத்தை வி்ஷுவலாகச் சொன்னால் எப்போதுமே எஃபெக்ட் அதிகம்தான்.

GREAT MEN THINK ALIKE!

வெள்ளி, ஏப்ரல் 24, 2009

பச்சோந்தி

என் வீட்டுத் தோட்டத்தில்
ஒரு பச்சோந்தி.
நீர் பாய்ச்சும்போதொரு நாள்
என்கண்ணில் பட்டதந்தப் பச்சோந்தி
சிறு கல்லெடுத்தெறிந்தேன் அதன் அருகே
வேகமாய் ஓடி மரத்திலேறியது.
எங்கு மறைந்ததென்று தேடினேன்
மரக்கிளையின் நிறமெடுத்துக்
கிளையோடு கிளையாய்க் கிடந்தது.
மீண்டும் ஒரு கல்.
ஓடியது.
எங்கு போயிற்று?
இப்போது இலைகளின் இடையே
இலையோடு இலையாய்
பச்சை நிறத்தில் அந்தப் பச்சோந்தி.
தன்னைக் காத்துக்கொள்ள
எத்தனை நிறம்தான் எடுக்குமந்தப் பச்சோந்தி?
அதன் உண்மை நிறமென்ன?
எனக்குத்தெரியாது.
அப் பச்சோந்திக்காவது தெரியுமா?