தொடரும் தோழர்கள்

குழந்தைகள் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 14, 2015

குழந்தைகளும்,நீரிழிவும்!



தலைப்பைப்  பார்த்ததும் குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோய் பற்றி எழுதியிருக் கிறேனோ என்று எண்ணியிருக்கலாம்.
இல்லை!

இன்று இரண்டு தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன

குழந்தைகள் தினம் மற்றும்

உலக நீரிழிவு தினம்

எனவே அத் தலைப்பு!

குழந்தைகள் தினத்தில்  என்ன  எழுதலாம்...........

குழந்தைகளுக்கான கதை சொல்லலாம்....அதைத் தளிர் சுரேஷ் பார்த்துக் கொள்வார்

நேரு மாமா பற்றி எழுதலாம்...அதைக் கரந்தையார் பார்த்துக் கொள்வார்

குழந்தைகளுக்காக அல்லது குழந்தைகள் பற்றி ஏதாவது கவிதை எழுதலாம்.....அதை சசிகலா, இளமதி,அம்பாளடியாள்,அருணா செல்வம் பார்த்துக் கொள்வார்கள்.

பாரதி குழந்தைகளுக்குச் சொன்னதை பகிரலாமா?லாம்!

ஆனால் வேறு யாராவது கவிஞரின் சிந்தனையைப் பகிரலாமே !

இதோ கவிஞரின் அறிவுரை.........

//சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா
நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா-நீ
எண்ணிப் பாரடா  
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி -உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
தரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி-உன்
நரம்போடுதான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி-

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா-தம்பி
மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ
வலது கையடா-நீ
வலது கையடா

தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா-நீ
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா-எல்லாம்
பழைய பொய்யடா!


வேப்பமர உச்சியில் நின்னு
பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே-நீ
வெம்பி விடாதே!-//
----------------------------------------------

//ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே!-நீ
ஏன்படித்தோம் என்பதையும்
மறந்துவிடாதே

நாட்டின் நெறிதவறி
நடந்துவிடாதே-நம்
நல்லவர்கள் தூற்றும்படி
வளர்ந்துவிடாதே!
மூத்தோர்சொல் வார்த்தைகளை
மீறக்கூடாது-பண்பு
முறைகளிலும் மொழிதனிலும்
மாறக்கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி
வாழக்கூடாது-தன்
மானமில்லாக் கோழையுடன்
சேரக்கூடாது!  
துன்பத்தை வெல்லும் கல்வி
கற்றிடவேணும்
சோம்பலைக் கொல்லும் திறன்
பெற்றிடவேணும்
வம்புசெய்யும் குணமிருந்தால்
விட்டிடவேணும்-அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிடவேணும்!
வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப்
பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல்
விளங்கிடவேணும்
பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த
மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு
வளர்ந்திடவேணும்!//

பட்டுக்கோட்டையார் சொல்லும் இவ்வறிவுரைகளுக்கு மிஞ்சி வேறென்ன இருக்கிறது?

இனி நீரிழிவு நோய் பற்றி ஒரு சிறு கருத்து.
பாதிக்கப்பட்ட ஒருவர்தானே அழகாகச் சொல்ல முடியும்.எனவே பார்த்தசாரதி பேசுகிறார்.........

நீரிழிவு நோயோடு வாழ்வோம்!
.................................................
இன்று குழந்தைகள் தினம்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இனிப்பு
இரத்த இனிப்பு அதிகமானால் நா இனிப்பை இழக்கும்!
ஆம்!இந்தப் பலவீனம்தானே நீரிழிவு.
கணையம் சுரக்கும் இன்சுலின் அளவு குறையும்போது வரும் மாற்றம்தானே இது.


இந்த நீரிழிவின் வீரியத்தைக் குறைத்து,மற்ற நோய்களைக் கட்டுப் படுத்தி வாழ வேண்டிய அவசியத்தைப் பற்றி விழிப்புணர்ச்சி ஊட்டும் நாளே “உலக நீரிழிவு நோய் நாள்”



 நடத்தையில் இனிப்பைக் கூட்டி, இனியவை பேசி ,நாவில் இனிப்பை நீக்கி, இன்னாது உண்டு,நல்வாழ்வு என்ற கனியைக் கவர்ந்திடுவோம்.
நீரிழிவு நோயை உதாசீனப் படுத்தினால்,நல்வாழ்வு நம்மை புறக்கணித்து விடும்.


திங்கள், நவம்பர் 14, 2011

மழலை உலகம் மகத்தானது!


இன்று குழந்தைகள் தினம்.

சில நாட்களாகப் பதிவுலகில்  ஓய்ந்திருந்த ஒரு விளையாட்டை இன்று நண்பர் கணேஷ் மீண்டும் துவக்கியிருக்கிறார்.தொடர் பதிவைத்தான் சொல்கிறேன். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ”மழலை உலகம் மகத்தானது” என்ற தலைப்பில்  என்னையும் எழுதப் பணித்து விட்டார்.முதல் இன்னிங்க்ஸிலேயே ஆடச் சொல்லி விட்டார்.அன்புக் கட்டளை.உடனே இறங்கி விட்டேன்.

அப்டமன் கார்ட்,ஆர்ம் கார்ட்,செஸ்ட் கார்ட்  எல்லாம் போட்டாச்சு.காலில் தடுப்புக் கட்டியாச்சு.கையுறைகளை மாட்டிக்கொண்டு ,மட்டையைச் சுழற்றிக் கொண்டு  இதோ மைதானத்தில் இறங்குகிறேன்.தலையைத் திருப்பி சூரியனைப் பார்க்கிறேன்.

முதல் பந்தில் அடித்தால் சிக்ஸரோ இல்லை நடு ஸ்டம்ப்  எகிறப் போகுதோ!


என்ன எழுதலாம் ?

புது விதமாக ஏதாவது?தமிழ் இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் என்று ஒரு பிரிவு உண்டு.இறைவனையோ,இறைவியையோ குழந்தையாக உருவகித்துப் பாடும்  பாடல் அது.குழந்தைகள் தினத்தில் ஏதாவது பிள்ளைத்தமிழ் பற்றி எழுதலாமா?
(நீ என்ன பெரிய முனைவர் குணசீலனா,தமிழ் இலக்கியம்  பற்றியெல்லாம் எழுதுவதற்கு.ஏதோ கொஞ்சம் தமிழ் படித்ததற்கே அலட்டிக் கொள்கிறாயே! அதெல்லாம் அவர் எழுதுவார்--1)


இன்றைய மாணவர்கள் பற்றி அவர்கள் நடத்தை பற்றி.புத்திசாலித்தனம் பற்றி,குறும்புகள் பற்றி எழுதலாமா?(உனக்கென்ன தெரியும்?நீ ஆசிரியரா?அதையெல்லாம் வேடந்தாங்கல் கருன் பார்த்துக் கொள்வார்.--2)


மழைக்காலம் வந்து விட்டது.குளிர் காலம் வரப்போகிறது.குழந்தைகளுக்குப் பல உடல் உபாதைகள் ஏற்படும்-சளி,காய்ச்சல்.செரியாமை என்பது போல். அவர்களுக்கு மருத்துவரிடம் போகாமல் ஏதாவது வீட்டு வைத்தியம் செய்வது  எப்படி என்று குறிப்புகள் எழுதலாமா?(அதுக்கெல்லாம்  நிறையத் தெரிஞ்சி ருக்கணும்.உன்னால் முடியாது. அன்பு உலகம் M.R. பார்த்துக் கொள்வார்--3.)

பின் என்னதான் எழுத?என் இளமை நினைவுகளை நினைத்துப் பார்த்துச்  சுவை படக் கூறலாமா?எத்தனையோ இருக்கிறதே!(அதெல்லாம் எழுத ,’நினைத்துப் பார்க்கிறேன்’,வே .நடனசபாபதி இருக்கிறார். அவர் எழுதட்டும்.--4)

இப்படியே போனால் நான் எழுத எதுவுமே இருக்காதே!கணேஷுக்கு என்ன பதில் சொல்ல?

ஒரு சிறுவன் தன் அப்பா பற்றி ஒரு கவுஜ எழுதுகிறான்

“என் அப்பா ரொம்ப நல்லவர்தான்.
 ஒரே ஒரு கெட்ட குணம் அவரிடம்

பொய் அதிகம் சொல்வார் அடிக்கடி.

 ஆஃபீசில் விடுப்பெடுக்க
 அழகாய் ஒரு பொய்!

லேட்டாய் வீடு திரும்பினால்
 அம்மாவிடம் ஒரு பொய்!

 கடன் காரன் தேடி வந்தால்
 கண்டிப்பாய் ஒரு பொய்!

 பார்த்தார் என் பிராக்ரஸ் ரிபோர்ட்
 சொன்னார் கோபமாய்

“முட்டாப் பய மகனே”

 ஹை!அப்பா ஒரு நிஜம் சொன்னார்!!”

கடைசியில் இன்றைய டைம்ஸில் வந்த செய்தி-

இன்றைய சிறுவர்களின் EQ குறைந்து வருகிறது.மிக எளிதில் பொறுமை இழக்கிறார்கள்.சகிப்புத்தன்மை குறைவாக இருக்கிறது.எளிதாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.எதையும் தாங்கும் சக்தி குறைந்து விட்டது. இப்போதெல்லாம் ஏழு,எட்டு வயதுக் குழந்தைகள் கூட வன்முறை பற்றியும் மரணம் பற்றியும்  பேசுகிறார்கள்”
இவை மனோதத்துவ நிபுணர்களின் கருத்து.

மற்றொரு செய்தி.சென்னையில் வசதியான பள்ளிகளில் படிக்கும் சிறுவர்களில் 20 விழுக்காடு பேர் பருமனாக இருக்கிறார்கள்.8 விழுக்காட்டுக்கு மேல் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். 2ஆவது வகை நீரிழுவு நோய் இவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

Quo vadis!

தொடர அழைக்கும் நால்வர் யாரென்பதைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமோ?!