தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 29, 2015

விதி வென்றதா?-அன்புள்ள மான்விழியே-3எவ்வளவு ஆராய்ந்தும் இந்த அபாயத்தைப் போக்கும் உபாயம் அவருக்கு புலப்படச் சற்று நாட்கள் ஆயின.

நயனியின் வாழ்க்கைத் துணை விஜயசிம்மன் என்பதால் அவனுடைய ஜாதகத்தையும் கணித்து ஆராய்ந்த போது மிஹிரருக்கு ஒரு பொறி தட்டியது.

பங்குனி உத்திரம் ஸ்ரீமன் நாராயணன் திருமகளை ஸ்ரீரங்கச் க்ஷேத்திரத்தில் மணந்த நாள் வரவிருக்கும் அந்தத்திருநாளின் ஒரு குறிப்பிட்ட இரு நிமிடங்களில் மாங்கல்ய தாரணம் முடிந்தால் விஜயனின் ஆயுள் பலம் பெறும் என்பதை உணர்ந்தார்.

அப்போதே தை மாதம் நடந்து கொண்டிருந்தது. வஸந்தகால பங்குனி உத்திரத்தில் அந்த இருநிமிட சுபமுகூர்த்தத்தில் நயனி-விஜயன் திருமண முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டது

அரண்மனை பொற்கொல்லனை அழைத்து, தன்வந்திரி தைலத்தை தடவி நயனியின் மூக்கில் அணிவிக்கப்பட்ட ஐந்து கல் வைர மூக்குத்திக்கு அவளுடைய நாசி அழகு சேர்த்தது.

நயனியின் ராசிக்கு பொருத்தமான கல் வைரம் என்பதால் மிஹிரர் திருப்தி அடைந்தார்.

முகூர்த்த நாழிகையில், குறிப்பிட்ட இரண்டு நிமிடங்களில் மாங்கல்ய தாரணம் முடிந்தேர மிஹிரரே ஒரு துல்லியமான மணிக்காட்டியை வடிவமைக்க முற்பட்டார்.

குடும்பத்துடன் பிரயாகை யாத்திரை மேற்கொண்டு, பிரத்யேகமாக திரிவேணி சங்கமத்திலிருந்து மணல் எடுத்து வந்தார். மணிக்காட்டியில் நிரப்புவதற்காக, விஜயனின் தாயினது ஆத்மா சாந்தி அடைய விசேஷ சடங்குகளையும் செய்தார். தந்தையின் நலனுக்காக பிரார்த்தித்தார். ஷிப்ரா நதிக்கரையில் மாசி, பங்குனி மாதங்களில் மிஹிரர் நடத்திய யாகங்கள் உஜ்ஜயினியை புனிதமாக்கி இருக்கக்கூடும்.

மாதங்கி, பிரயாகையிலிருந்து எடுத்து வந்த புனித மண்ணை நன்கு உலர்த்தி, ஐந்து முறை சலித்து மிஹிரர் முன்னிலையில் மணிக்காட்டியில் நிரப்பினாள். மணிக்காட்டி துல்லியமாக இயங்கியது.

நடுநிசியிலிருந்து விடிவெள்ளி தோன்றும் வரை தான் நிசப்தம். மற்ற நேரங்களில் வேத கோஷங்களும், பக்தி கீதங்களும் இடைவிடாது ஒலித்துக் கொண்டு இருந்தன. திருமணத்திற்கு முன்தினம் மாதங்கியும் நயனியும் மீண்டும் மண்ணை சுத்தம் செய்து மணிக்காட்டியில் நிரப்பினார். மிஹிரர் சரிபார்த்து திருப்தி அடைந்தார்.

மணநாள் உஜ்ஜயினியை குதூகலிக்கச் செய்தது. முன்பு  மிதிலையில் ஜனகர் நடத்திய சீதாராம கல்யாணம் இப்படித்தான் இருந்திருக்கும் என பிரஜைகள் நம்பினர்.

குறிப்பிட்ட முகூர்த்த்த்தில் மிஹிரர், மாதங்கி தம்பதியினர் சௌ.நயனியை சி.விஜயசிம்மனுக்கு கன்யாதானம் செய்து வைத்தனர். மனத்தளவில் மகனாக ஏற்றுக் கொண்டிருந்த மிஹிரர் தம்பதிகளுக்கு விஜயன் இப்போது மருமகன் ஆனான்.

சப்தபதி போன்ற சடங்குகளுக்குப் பிறகு, மகளை மடியில் வைத்து விஜயனிடம் ஒப்படைக்கும் நிகழ்வின் போது நயனியின் கண்களில் ததும்பிய  கண்ணீரை மிஹிரர் துடைத்தார். அவள் மூக்குத்தியில் பதித்த ஒரு கல்லை காணவில்லை என்பதைக் கண்டு துணுக்குற்றார்.

வெளியே ஒடிப்போய் சூரியனைப் பார்த்தார். மணிக்காட்டியில் மணல் தூவலை உற்று கவனித்தார். தூவலின் வேகம் சற்று குறைந்தது போல உணர்ந்தார்.
மணவிருந்து முடிந்தவுடன் மீண்டும் சூரியனின் கோணத்தையும் மணிக்காட்டியின் வேகத்தையும் ஒப்பிட்டார். நேரத்தில் தவறு இருப்பதை உணர்ந்தார். மணிக்காட்டியை உள்ளே எடுத்துச் சென்று மாதங்கியை அழைத்து மணலை சலிக்கச் செய்தார்.

மூக்குத்தியின் ஒரு வைரம் சல்லடையில் ஒளிர்ந்தது. அந்தக்கல் மணிக்காட்டியின் மணல் வழி துவாரத்தில் மாட்டிக் கொண்டதால் ஓட்டம் குறைந்து வேகம் மாறியது. வைரக்கல்லை மீண்டும் மூக்குத்தியில் பதிக்க ஏற்பாடு செய்தார் மிஹிரர்.

நேற்று மாதங்கியும் நயனியும் மணிக்காட்டியின் மணலை சுத்தம் செய்து நிரப்பியபோது நடந்த அசம்பாவிதம் நயனி-விஜயன் மணவாழ்க்கையில் சூறாவளியை கிளப்பி விட்டிருக்கிறது என மிஹிரர் அனுமானித்தார்.

முகூர்த்தம் குறிப்பிட்ட இரண்டு நிமிடங்களில் நடந்திருக்குமா என்ற அச்சம் மிஹிரரை கவ்விக் கொண்டது.

பிற்பகலில் சகல கிரக பலன்களும் நீயே சர்வேஸ்வராஎன்ற பொருளில் அடானாராகத்தில் இசை வித்வான் பாடிய பாடல் சபையை மகிழ்ச்சியில் பொங்க வைத்தாலும் மிஹிரரின் மனத்தை சஞ்சலத்தில் ஆழ்த்தியது.

வராக மிஹிரரின் மூளை இடர்பாட்டிலும் வெகு வேகமாக செய்யப்பட்டது.
கால ஓட்டத்தை எத்தனை சிரத்தையாக அளவிடமுற்பட்டாலும் பிழை ஏற்பட சாத்யம் உண்டு.”

சுபவேளையை தவறவிட்டிருந்தால் இளம் தம்பதிகளின் மண வாழ்க்கை எத்தகைய வழியில் பாதிப்பு ஏற்படும் என்பதைக் காலம் தான் சொல்லும்.

(தொடரும்)

என் குறிப்பு: சாதகத்தில் எட்டாம் இல்லம் என்பது ஆயுள் இடம் என்று சொல்லப்படுகிறது.இந்த எட்டாம் இடமும் அதன் அதிபதியும் சாதகரின் வாழ்நாளின் அளவைச் சொல்லும்.சாதக கணிதம் என்பதே இடமாற்றமும் சேர்மானமும்தான்!(permutation and combination) நான்காம் இடம் தாயைக் குறிக்கும்.எனவே நான்குக்கு எட்டாம் இடம் தாயின் ஆயுளைக் குறிக்கும்!இது போலவே மற்ற வீடுகளுக்கும்.தேவகேரளம் எனும் நூலில் மிக அருமையான சூத்திரம் ஒன்று சொல்லப்பட்டிருக்கிறத,மரண காலத்தை அறிய.

10 கருத்துகள்:

 1. சொதிடக் கோட்பாடுகளை அறிந்தவர்க்கு இது ஒரு திரில்லர் போல இருக்கும்.

  உமது கை வண்ணம் வியக்கும்படியாக உள்ளது.

  God Bless You

  பதிலளிநீக்கு
 2. சிறப்பாகச் செல்கிறது! மனித சக்தியை மீறிய ஓர் சக்தி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது கதை! நன்றி!

  பதிலளிநீக்கு
 3. அருமை ஐயா
  தொடர்ந்து கொண்டே இருக்கின்றேன்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 4. தொடர்கின்றோம்...அருமையாகச் செல்கின்றது..
  மிஹிரர் என்னதான் மணற்கடிகை சரியாகக் குறித்து வைத்தாலும் நேரம் தப்புவது விதி என்றால்...இது கிட்டத்தட்ட நம்ம மக்கள் குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்று சிசேரியன் செய்யச் சொல்வார்கள். வேடிக்கை....அவர்களாக ஒரு நல்ல நேரம் பார்த்துக் குறித்து...என்று....நல்ல வேடிக்கை...நாமா இறைவன்? அவன் என்றோ குறித்துவிட்டிருப்பான் நேரத்தை....அதை எப்படி நாம் மாற்ற முடியும்?

  இரண்டாவது நாம் என்னதான் நேரம் குறித்தாலும், நாம் இங்கு ஓடும் மணி பார்த்துதானே சிசேரியனில் குழந்தை பிறக்க வைக்கிறார்கள்? எந்த கடிகாரம் சரியாக நேரத்தைக் காட்டும்? சரியான நேரம் என்பது என்ன...எதுவுமே நம் கையில் இல்லை...எல்லாம் அவன் செயல்..என்பதை நம்பி முழு சரணம் அடைந்துவிட்டல் மனது சஞ்சலப்படாது...ம்ம்மனிதர்கள்தானே நாம்...

  பதிலளிநீக்கு
 5. இதுபோல் ஏதாவது நடக்கும் என நினைத்தேன். அடுத்து நடந்தது என்ன என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  Permutation என்பதிற்கு வரிசை மாற்றம் என்றும் சொல்லலாம். சாதகக் குறிப்பிற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. விதியை வெல்ல முடியாது போலும்.

  பதிலளிநீக்கு
 7. #அந்தக்கல் மணிக்காட்டியின் மணல் வழி துவாரத்தில் மாட்டிக் கொண்டதால் ஓட்டம் குறைந்து வேகம் மாறியது. #
  இவ்வளவு சிரமப்பட்டு நேரத்தை மாற்றி அமைத்தார்களா ?இப்போ நாம விரலால் சுலபமாக செய்து விடுகிறோம் :)

  பதிலளிநீக்கு
 8. #அந்தக்கல் மணிக்காட்டியின் மணல் வழி துவாரத்தில் மாட்டிக் கொண்டதால் ஓட்டம் குறைந்து வேகம் மாறியது. #
  இவ்வளவு சிரமப்பட்டு நேரத்தை மாற்றி அமைத்தார்களா ?இப்போ நாம விரலால் சுலபமாக செய்து விடுகிறோம் :)

  பதிலளிநீக்கு