சில நாட்களுக்கு முன் ஒரு நாள் காலை திடீரென்று தலை சுற்ற
ஆரம்பித்தது.(தலைக்கே தலை சுற்றலா என்று பதிவு நண்பர்கள் கேட்பது காதில் விழுகிறது!) அப்படியே
நாற்காலியில் அமர்ந்து விட்டேன்.
டாக்டர் வந்து
பார்த்தார்.பரிசோதனைகள் செய்தார்.கடைசியில் சொன்னார் “உங்களுக்கு வெர்டிகோ” என்று!
ஏனக்குத் தெரிந்து
வெர்டிகோ என்றால் உயரங்களின் பயம் (fear of heights).இங்கு நான் ஒரு ஸ்டூலில் கூட ஏறவில்லையே!இது
வேறு வெர்டிகோ போலும்!
நான் பல ஆண்டுகளுக்குமுன்
ஒரு ஹிட்ச்காக் படம் பார்த்திருக்கிறேன்.
படத்தின் பெயர்
வெர்டிகோ.
அதில் நாயகனுக்கு
உயரத்தைக் கண்டால் பயம்.
அதைப் பயன்படுத்தி
ஒரு கொலை நடக்கிறது
இந்தப் படத்தைத்
தழுவித் தமிழில் ஒரு படம் எடுத்தார்கள்.
பெயர்”கலங்கரை
விளக்கம்”.
கலங்கரை விளக்கம்
என்பது கடற்கரையில்,கடலில் செல்லும்
கலங்களுக்கு
வழிகாட்டுவதற்காக அமைக்கப் படுவது.
சோழர் காலத்திலேயே
கடல் வாணிபம்,கடற்படை எல்லாம் இருந்த காரணத்தினால்,கலங்கரை விளக்கமும் இருந்தது.கோடிக்கரையில்
இருக்கும் கலங்கரை விளக்கமே சாட்சி.
புராணகாலத்திலேயே
வான் ஊர்தியும்இருந்திருக்கிறது.
இராமாயணத்தில்
புஷ்பக விமானம் பற்றிச் சொல்லப்படுகிறது
மகாபாரத காலத்தில்
போரில் பயங்கரமான அஸ்திரங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.நாகாஸ்திரம்,அக்னியாஸ்திரம்என்று
பலப் பல.அனைத்தையும் விட சக்தி வாய்ந்தது பிரம்மாஸ்திரம்.அதுதான் இன்றைய அணுகுண்டாக
இருக்க வேண்டும்.
அணுகுண்டு என்றதும்
தீபாவளி நினைவு வருகிறது.சிறுவனாக இருந்தகாலத்தில் அணுகுண்டு வெடித்து அந்தப் பேரொலியைக்
கேட்பதில் பெருமகிழ்ச்சி.
ஆனால் இப்போதோ,காதைப்
பொத்திக் கொண்டு உட்காரத் தோன்றுகிறது.
ஒரு குடும்பத்தலைவருக்கு
தீபாவளி என்றால் கலக்கம்தான்,செலவுகளை எண்ணி.
அனைவருக்கும்
புதுத்துணி,இனிப்பு கார வகைகள் ,பட்டாசு என்று எத்தனை.
தலை சுற்ற ஆரம்பித்து
விடும்.
அது நிச்சயம் வெர்டிகோ இல்லை!