தொடரும் தோழர்கள்

வியாழன், பிப்ரவரி 24, 2011

அன்புள்ள அப்பா!

(இதுவும் ஒரு காதல் கதைதான்.ஒரு வித்தியாசமான காதலைப் பற்றி பேசும் கதை.நீளம் அதிகம்.பொறுமையாகப் படியுங்கள்.முடிவில் ஒரு கொக்கி!)
27-01-1965
அன்புள்ள அப்பா,
நீங்கள்,அம்மா,ராஜி,சீனு எல்லாரும் சௌக்கியமென்று நம்புகிறேன். இங்கே, நியூயார்க்கில், குளிர் நடுக்குகிறது;ஆனால் அவர் சொல்கிறார்,நான் கடுங்குளிரிலிருந்து தப்பி விட்டேன் என்று.

கொட்டுகின்ற பனியை பார்க்காமல் போய் விட்டேனே என்று வருந்துகிறேன்.அதே சமயம் திருச்சியை விட்டு வந்ததும் வருத்தமாகத்தான் இருக்கிறது.திருச்சி மற்றும் அதனுடன் இணைந்த மற்றவை-நீங்கள்,அம்மா,ராஜி, சீனு,பக்கத்தாத்து ரமா,உச்சிப்பிள்ளையார் கோயில், விகடன், ஃபில்டர் காஃபி,ஹோலி க்ராஸ் கல்லூரி,ஃபிசிக்ஸ் துறை, அனைத்துக்கும் மேலாய் சக்தி-இந்த நினைவாகவே இருக்கிறேன்.

இக்கடிதத்தில் சக்தி பற்றி எழுதியது உங்களுக்குப் பிடிக்காதுதான்.கவலைப் படாதீர்கள் அப்பா.நீங்கள் என் நன்மைக்காகவே என்னை விசுவுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தீர்கள் என்பது எனக்குத்தெரியும்.நான் சக்தி பற்றி உங்களிடம் சொன்ன அன்று,நீங்கள் கோபத்தில் கத்தியதும்,அம்மா தன் கண்ணீரை மடிசார் தலைப்பினால் மௌனமாகத் துடைத்துக் கொண்டதும் இன்னும் என் நினைவில் நிற்கின்றன.அதன் பின் பொறுமையாக நான் ஏன் சக்தியை மணக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விவரித்தீர்கள்.20 என்பது வாழ்க்கை பற்றித் தீர்மானிக்க மிகவும் சிறிய வயது என்பதையும், குடும்பத்துக்கும், ராஜிக்கும் இதனால் பாதிப்பு எற்படுவதையும், அக்ரஹாரத்தில் நமக்கு ஏற்படும் தலைகுனிவையும்,ஒரு மாமிசம் சாப்பிடும் ஆண், வெங்காயம் கூடச் சாப்பிடாத ஒரு பெண்ணுக்கு சரியான துணையாக முடியாது என்பதையும் இன்னும் எத்தனையோ காரணங்களயும் எடுத்துரைத்தீர்கள்.சக்தி ஒரு சமணமுனிவராக மாறினாலும் கூட உங்களால் வேறு பல காரணங்கள் சொல்லியிருக்க முடியும்.ஆனால் இதற்கு எதிராக,விசு,பூணல் அணிந்தவர், நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை,அமெரிக்காவில் கம்ப்யூடர் துறையில் உயர்ந்த வேலையில் இருப்பவர்,இப்படி எத்தனையோ காரணங்கள் உங்களுக்கு இருந்தன, விசுவைத் தேர்ந்தெடுப்பதற்கு..அப்பா,நான் குறை கூறவில்லை,விசுவும் ரொம்ப நல்லவர்தான்.
அம்மாவிடம் சொல்லுங்கள்,அம்மா சொன்னபடி நான் கொழுக்கட்டை செய்யவில்லையென்று,ஏனென்றால் இங்கே தேங்காய் விலை அதிகம்,அவருக்கு கொழுக்கட்டை பிடிக்காதாம்.

ஆனால் சங்கராந்தி அன்று,அவர் விருப்பப்படி வெளியில் போய் சாப்பிட்டோம்.ஒரு கடல் உணவு விடுதிக்குச் சென்றோம்.சாட்டர்ஜி குடும்பத்தையும் அவர் அழைத்திருந்தார்.அவர்கள் பேசிய அமெரிக்க ஆங்கிலம் எனக்குச் சரியாகப் புரியவில்லை.மெனு கார்டில் தலையைப் புதைத்துக் கொண்டேன்.மற்றவர்கள் என்னவெல்லாமோ ஆர்டர் செய்தனர்.நான் ஒரு சாண்ட்விச்சும் ஜூசும் கொண்டு வரச் சொன்னேன்.அன்றுதான் அப்பா நான் தெரிந்து கொண்டேன்,அவருக்கு மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும், மீனும் மிகவும் பிடிக்கும் என்று.

உங்களுக்குத் தெரியுமா அப்பா,எனக்காக சக்தி அசைவம் சாப்பிடுவதையே விட்டு விட்டாரென்று.அதுவும் நான் எதுவும் சொல்லாமல், அவராகவே.ஆனால் சக்தி நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை இல்லையே,அவரால் சுப்பிரமணிய ஐயரின் பெண்ணான கல்யாணியை எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும்?

அவ்வப்போது,எங்கள் நலம் பற்றி எழுதுகிறேன். என்னால் சீனுவின் பூணலுக்கு வர முடியாது என நினைக்கிறேன். எனக்குப் பட்டுப் புடவை வாங்க வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லுங்கள்.இங்கே அதையெல்லாம் கட்டிக் கொள்ள முடியாது.கோமாளித்தனமாக இருக்கும்.
இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி

அன்புள்ள அப்பா, 20-10-1968

நாங்கள் சௌக்கியம்
கௌதம் பேச ஆரம்பித்துவிட்டான்.அவன் ’தோசை’ என்று சொல்வதுபோல் எனக்குக் கேட்டது.ஆனால்,விசு அது வெறும் உளறல்தான் என்கிறார்.

உங்கள் முந்திய கடிதத்திலிருந்து பக்கத்தாத்து ராஜிக்குக் கல்யாணம் நடந்து ஜாம்ஷெட்பூரில் இருக்கிறாள் என அறிந்து கொண்டேன்.சந்தோஷம்.சாரதா மாமியிடம் கேட்டு அவள் விலாசத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.அவளுடன் தொடர்பு கொள்கிறேன்.

ராஜி கணவருடன் மெட்ராசில் சந்தோஷமாக இருப்பாள் என நம்புகிறேன்.சென்ற மாதம் அவளுடன் ஃபோனில் பேச ரொம்ப சந்தோஷமாக இருந்தது.சீனுவைப் பரிட்சைக்கு நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள்.சக்திக்குக் கல்யாணம் ஆகி விட்டதாக ராஜி சொன்னாள். அவனுக்கு என் வாழ்த்துக்களை மானசீகமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனென்றால் ராஜி என் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டாள்.என் காரணமாக நீங்கள் உங்கள் நீண்ட நாள் நண்பரான, சங்கரவேலுடன்(சக்தியின் அப்பா) உங்கள் நட்பைத்துண்டித்து விட்டீர்கள் என்று எனக்குத்தெரியும்.சக்தி அவன் அம்மா விருப்பப்படி மாமா மகளை கல்யாணம் செய்துகொண்டதாக அறிகிறேன்.


ஆவணி அவிட்டம் வழக்கம் போல் சிறப்பாக நடந்ததா? விசுவின் அம்மா ஒரு கட்டுப் பூணல் கொடுத்திருந்தார்கள், ஆவணி அவிட்டத்துக்காக.ஆனால் அன்று அவர் பாஸ்டனில் இருந்தார்.இங்கே இருந்திருந்தாலும் பூணலை உபயோகித்திருக்க மாட்டார்.சென்ற மூன்று வருடங்களில் அவர் பூணல் அணிந்து நான் பார்த்ததே இல்லை.கௌதம் இப்போது அந்த நூல் சுருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.அது வெறும் நூல்தான்,வேறென்ன சொல்ல.அதன் முக்கியத்துவம் அவனுக்கு என்றாவது தெரியுமா என்பது சந்தேகமே.விசு அவன் ஆங்கிலத்தை மட்டுமே கேட்கும்படி செய்து வருகிறார்.அதுவே அவனுக்கு நல்லது செய்யும் என்கிறார்.ஆனல் நான் தனியாக இருக்கும்போது பொன்னியின் செல்வனையும்,பாரதியார் கவிதைகளையும் படித்துக் காட்டுகிறேன்.அந்த கவிதைப் புத்தகம்,சக்தி எனக்கு பரிசளித்தது.அவன் கையெழுத்து அதன் முதல் பக்கத்தில் இருக்கிறது.அப்புத்தகத்தைப் பார்த்த விசு ஒரு முறை சக்தி பற்றி என்னிடம் கேட்டார்.பயப்படாதீர்கள்,அப்பா.விசு ரொம்ப நல்லவர்.அதை சாதாரணமாக எடுத்துகொண்டார்.பின் அவர் அவரது அமெரிக்க நண்பி பற்றிக்கூறினார்.அவருடன் பணி புரிந்த அவளுடன் மூன்று மாதம் சேர்ந்து வாழ்ந்தது பற்றியும் சொன்னார்.அவள் ஒரு நாள் வந்திருந்தாள்.நல்லவள்தான்.


அம்மாவை ஒரு வருஷத்துக்குப் போதுமான சாம்பார் பொடி அனுப்பச் சொல்லுங்கள்.என் ஃபிரண்ட் சுதா அடுத்த வாரம் மெட்ராஸ் வருகிறாள்,சீனுவை சென்னைக்கு அனுப்பி அவளிடம் பொடியைக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி

3-6-1974.

அன்புள்ள அப்பா,

நாங்கள் சௌக்கியமாக வந்து சேர்ந்தோம்.இரண்டு மாதங்கள் இந்தியாவில் கழித்துவிட்டு இங்கு வந்தவுடன்,இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது சிரமமாகத்தான் இருக்கிறது.கௌதமும் ரஞ்சனாவும் வடை பாயசத்தோடு வாழை இலையில் சாப்பாடு கேட்கிறார்கள்,இந்த ஊரில்!அமெரிக்காவுக்குத் திரும்பி வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர் விசுதான்.


நான் இந்தியாவில் சில புத்தகங்களை விட்டுவிட்டேன்.அவை என் மாமியாராத்தில்தான் இருக்கவேண்டும்.அவை கிடைத்தால் பத்திரமாக வைத்திருங்கள்,நான் அடுத்த முறை வரும் வரை.அவை எனக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை;ஏனென்றால்,அவை சக்தி எனக்களித்த பரிசு.அப்பா,சக்தியின் விலாசத்தை நான் சாரதா மாமியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.அப்பா,உங்களுக்குத் தெரியுமா,சக்தி இப்போது மெட்ராஸில் ஒரு பிரசித்தமான இதய நோய் நிபுணர்;எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.நான் அவனுக்குக் கடிதம் எழுதினேன்.அதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.அவன் பெண்களுக்கு என்ன பெயர் தெரியுமா அப்பா?-கல்யாணி,ராகமாலிகா.அவன் என்னுடன் ஃபோனில் பேசினான்.அவன் இன்னும் மாமிசம் சாப்பிடுவதில்லை;நான் கிடைக்கவில்லை என்பதனால் அவன் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.அவன் இன்னும் பாடுகிறாயா என்று கேட்டபோதுதான் எனக்கே நினைவு வந்தது,நான் ஒரு காலத்தில் பாடிக்கொண்டிருந்தேன் என்பது.ஆனால் நான் திருச்சியையும்,என் சிறந்த ரசிகனான சக்தியையும் பிரிந்து வந்தபின் அதை மறந்தே போனேன்.

அவன் ஃபோன் வந்தபின் நான் பாட முயன்றேன் ‘குறையொன்றும் இல்லை’ என்று.ஆனால் குறை இருந்தது.நீண்டநாள் பாடாததனால் மட்டுமல்ல;என் கண்களில் நீர் நிறைந்து தொண்டை அடைத்துக் கொண்டதாலும்தான்.ஒருநாள் விசு,குழந்தைகளின் முன் பாடினேன்.கௌதம் ரசித்துக் கேட்டான்;ஆனால் அப்பாவும் பெண்ணும் பாட்டு முடியும் வரை பொறுமையின்றித் தவித்தார்கள்.

அப்பா,அடுத்தமுறை யாராவது இந்தியா வந்து திரும்பும்போது மறக்காமல் ஒரு சுருதிப் பெட்டி அனுப்பவும்.நான் மீண்டும் பாட ஆரம்பிக்கப் போகிறேன்.

இப்படிக்கு

உங்கள் அன்புள்ள
கல்யாணி.

(இன்னும் வரும்)

(மயிலை சட்ட மன்றத்தொகுதி வேட்பாளர் சென்னை பித்தனின் வேண்டுகோள்!
இண்ட்லியைப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு!
தமிழ் 10 ஐப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு!
தமிழ்மணத்தைப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு!
அம்மாக்களும்தான்! )

11 கருத்துகள்:

 1. ,அமெரிக்காவில் கம்ப்யூடர் துறையில் உயர்ந்த வேலையில் இருப்பவர்,


  ....In 1965 itself? :-)

  பதிலளிநீக்கு
 2. கடிதங்கள் மூலமாகவே கதை சொல்லி கொண்டு வருவது நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 3. உங்களுடைய ஒவ்வொரு கதையிலும் காதலின் ஒரு புதிய பரிணாமம் தெரிகிறது. மிகவும் கண்ணியமாகவும் நன்றாகவும் யாதார்த்தமாகவும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. Chitra கூறியது...

  //அமெரிக்காவில் கம்ப்யூடர் துறையில் உயர்ந்த வேலையில் இருப்பவர்,....In 1965 itself? :-)//
  அப்பா..!ரொம்ப ஊன்றிப் படிக்கிறீர்கள்! காரணம்?..கடைசியில்!
  வேறு ஏதாவது துறையென்று வைத்துக்கொள்ளுங்களேன்!:-)
  //கடிதங்கள் மூலமாகவே கதை சொல்லி கொண்டு வருவது நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.//
  மிக்க நன்றி சித்ரா!

  பதிலளிநீக்கு
 5. ஹூம்..............இப்படியும் ஒரு கதை. நன்றாகவே போகிறது.
  சென்னைக்காதலர் உண்மையிலேயே ஒரு பெரிய காதல் மன்னர்தான் நம்ம ஜெமினி போல:)))

  பதிலளிநீக்கு
 6. சில கதைகளை படித்தபின் திரும்பத்திரும்ப படிக்கத்தோன்றும்.
  அது போலத்தான் இதுவும் என
  எண்ணுகிறேன்.கதையின் முடிவை
  அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. கக்கு - மாணிக்கம் கூறியது...

  // ஹூம்..............இப்படியும் ஒரு கதை. நன்றாகவே போகிறது.
  சென்னைக்காதலர் உண்மையிலேயே ஒரு பெரிய காதல் மன்னர்தான் நம்ம ஜெமினி போல:)))//
  இப்படி நீங்கள் சொன்ன பிறகு சும்மா இருக்கலாமா?இந்தக் கதை முடிந்து அடுத்த பதிவும் காதல்தான்!
  பாவம் நீங்கள்!
  நன்றி கக்கு - மாணிக்கம்

  பதிலளிநீக்கு
 8. வேடந்தாங்கல் - கருன் கூறியது...

  //கதை அருமை நண்பரே...//
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 9. வே.நடனசபாபதி கூறியது...

  //சில கதைகளை படித்தபின் திரும்பத்திரும்ப படிக்கத்தோன்றும்.
  அது போலத்தான் இதுவும் என
  எண்ணுகிறேன்.கதையின் முடிவை
  அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.//
  அதிகம் காத்திருக்கத் தேவயில்லை!
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 10. கல்யாணியின் கதை படித்து முடித்த பின் மனம் கனமாக இருந்ததை உணர்ந்தேன் . சக்தியுடன் இணையமுடியா ஆதங்கம் அவள் மனதில் இறுதி வரை இருந்தது உணரமுடிகிறது ... மாமிசம் உண்ணும் கணவனை பற்றி எழுதி உள்ளது அருமை ...பாலச்சந்தர் படம் பார்த்த உணர்வு ...வாசுதேவன்

  பதிலளிநீக்கு