தொடரும் தோழர்கள்

திங்கள், பிப்ரவரி 29, 2016

ஒரு நாவல்



என்னய்யா மோந்து பாக்கறே?

நீ என்ன சாதின்னு கண்டுபிடிக்கத்தான்.

அடச்சீ!மோந்து பாத்து சாதியைச் சொல்வியோ?சொல்லு!நான் என்ன சாதின்னு.

நீ நினைக்கிற சாதி இல்ல இது.

பின்ன?

பெண்களை பத்மினி,சித்தினி,சங்கினி,அத்தினின்னு நாலு சாதியாப் பிரிச்சிருக்காங்க.
ஒவ்வொரு சாதிப் பெண்ணு கிட்டயும் ஒரு வாசனை.;நாற்றம்!


ஓகோ!நான் என்ன சாதிய்யா?

நிச்சயமா முதல் மூணு இல்ல!
.....................    

முதல் முத்தம்     
 
இதழ் தேடிக் குனிந்தான் 

அய்யோ!என்ன நாற்றம்?பல் தேய்க்க மாட்டாளா?

விலகினான்

அவள் ஏமாற்றத்துடன் கேட்டாள்,ஆங்கிலத்தில்தான்”என்ன ஆச்சு!”

ஒன்றுமில்லை.இன்று வேண்டாம்!       
....................       


இது வெளி வர இருக்கும் ஒரு நாவலின் முன்னோட்டம்!

நாவலின் தற்காலிகத் தலைப்பு”கற்பூரம் நாறுமோ?”

மேலும் அதிகத் தகவல்கள் ....தொடரும்!

................

என்ன ஆயிற்று உனக்கு?

இரவு சரியான உறக்கம் இல்லை.சரி

அதன் காரணமாக உடற்சோர்வு ஏற்படவே செய்யும்

அது மனச் சோர்வுக்கு வழி வகுக்கலாமா?

நம் கவலையால் எதுவும் மாறப் போவதில்லை.

இணையம் மனச்சோர்வுக்கு ஒரு மருந்து.

படைக்க இயலாவிடினும்  படிக்கலாம் அல்லவா?

அதையாவது செய். 

கருத்துச் சொல்.பாராட்டு.

செய்வாய் என நம்பு!


புதன், பிப்ரவரி 03, 2016

இறுதிச்சுற்று-ஒரு பார்வை!



ஒரு சராசரித் தமிழ்ப் பட இயக்குனரும்,தயாரிப்பாளரும் உரையாடுகின்றனர்

“என்ன டைரக்டர் சார்,”இறுதிச்சுற்று” பார்த்தீங்களா?”

“என் உதவிப் பசங்க பார்த்துட்டு வந்து புகழ்ந்தாங்களேன்னு போனேன்.தியேட்டர்ல கூட்டமே இல்லை!வசூலே இல்லை போல”

படம் எப்படி இருந்தது”

ஏதோ இருக்கு!என்ன சார் இது,ஒரு காமெடி இல்ல,லவ்  டூயட் இல்ல,கவர்ச்சி இல்ல. படம் எப்படி ஓடும்?

“இந்தக்கதையில அதுக்கெல்லாம் இடம் இல்லையே சார்”

“ஏன் இல்ல?ஒரு நல்ல வாய்ப்பு கதையிலயே இருக்கு.மாதவன் மனைவி இன்னொருத் தனோட ஓடிப் போயிட்டான்னு ஒரு வசனத்தோட முடிச்சுடறாங்க.அதை நல்லா பெரிசாக்கி இருக்கலாமே!

“எப்படி”

மாதவன் மனைவி வேடத்தில ஒரு கவர்ச்சி நடிகையைப் போடணும்.அவங்க முதல்ல ஒரு நீச்சல் குளத்துல சந்திக்கணும்.அவ நீந்தும்போது ஒரு பாட்டு!ரெண்டு பேரும் நீச்சல் உடையில!லவ் மலருது.அப்புறம் ஆஸ்திரேலியாவில ஒரு டூயட்.அப்புறம் கல்யாணம்.
புது குத்துச் சண்டை வீரன் அறிமுகம்.அவன் பக்கம் அவ சாயிறா.மாதவன் தோத்ததும் அவ புதியவனோட ஓடிப் போயிடறா. தாடியோட மாதவன்.இந்த இடத்துல இடை வேளை விடறோம்.

இதில குத்துச் சண்டை ,பயிற்சி அதெல்லாம் வரல்லையே”

காட்டாம விடுவமா?இப்போ சொன்னது பூரா ஃப்ளேஷ்பேக்தானே!நடுவில் நடுவில அதையும் காட்டுவோம்.நாயகியோட அக்காவுக்கும் கோச் மேல லவ் வருது அதனால் வரும் சிக்கல், அதையும் சேர்த்துப்போம்

சரி,காமெடி?

பயிற்சிக்கு வரும் இளைஞர்களில் சந்தானம் ஒருவர்!இது போதாதா?

சண்டைக் காட்சி?

மாதவனை அது யாரவரு,ஜாகிர் ஹுசேனா அவரு ஆள் வச்சு அடிக்க முயற்சி செய்யறார், அப்பொ அவங்களை மாதவன் போட்டுப் பொரட்டியெடுக்கறார்!


கடைசியில மாதவனுக்கும் ரித்திகாவுக்கும் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க அது கையில கிளவுஸோட பிறக்கிற மாதிரி சிம்பாலிக்கா காட்டித் தொடரும்னு கார்டு போடுவோம்!

இதெல்லா செஞ்சா வசூல் அள்ளிடுமே!


படம் பற்றி பல விமர்சனங்கள் வந்து விட்டன.எனவே நான் புதிதாக என்ன சொல்ல இருக்கிறது?

எனக்கு மிகவும் பிடித்திருந்தது   

டிஸ்கி:இந்தாளுக்கு இதே வேலை ! படப் பெயரைத் தலைப்பா வச்சிட்டு வேறா ஏதாவது எழுதி ஏமாத்துவது;இந்த வாட்டி பல்பு வாங்க மாட்டோம்னு வந்தீங்களா?

உங்களுக்கு ஒரு நூறு வாட் பல்பு!

வெள்ளி, ஜனவரி 22, 2016

பயணங்கள் முடிவதில்லை...தொடரும் தொடர் பதிவு



என் தனியான பயணங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக அமைந்ததில்லை. தில்லி யிலிருந்து சென்னை வரும்போது ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மாதிரி அமையும். ஒரு முறை சுற்றியிருப்பவர்களுடன் கலகல உரையாடலில் நேரம் கழிப்பேன்;ஒரு முறை யாருடனும் பேசாமல் புத்தகத்தில் மூழ்கி நாளைக் கழிப்பேன். ஒரு முறை சாப்பிடுவதும் தூங்குவதும் தவிர வேறெதுவும் நடக்காது. பயண நாளில் என் மன நிலையைப் பொறுத்தது என் விருப்பு வெறுப்புகள்.!என் கல்லூரி நாட்களில் பயணிக்கும்போது கையில் இயான் ஃப்ளெமிங்க் நிச்சயம்!


பயணத்தில்  முன்பெல்லாம் வாக்மேன் இப்போதெல்லாம் ஐபாட் இவற்றில் ஏதோ கேட்டபடிப் பலர் பயணிப்பதைக் கண்டிருக்கிறேன்.ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார்”என்னுள் நானே ஓர் இசையை உருவாக்கி ரசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று.நீங்களும் கவனித்திருக்கலாம்,பயணத்தின்போது உங்களுக்குப் பிடித்த ஒரு பாட்டு எங்கிருந்தோ ஒலித்தபடியே உங்களுடன் கூட வருவதை.நான் கூட நினைப் பதுண்டு,வழியில் இருக்கும் இடம் ஒன்றிலிருந்து அப்பாட்டுக் கேட்கிறதோ என்று. ஆனால் அது எவ்வாறு தொடர்ந்து வர முடியும்?  அந்த இசை தவிர நான் வேறு எந்த இசையையும் கேட்பதில்லை.எனக்கு எரிச்சல் தரும் ஒன்று,பேருந்துகளில் அலற விடும் இசைதான்.இசையின் மென்மை தொலைந்து போய்,மனத்தை வருடிக்கொடுக்கும் தன்மை அங்கு காணாமல் போகிறது.பயணிக்கும்போது சில நேரங்களில்  வாய்க்குள் முணு முணுக்கும் இசை என்றால் அது பெரும்பாலும் ஏதாவது கர்நாடக  சங்கீதமாகவே இருக்கும்; தப்பித் தவறிச் சப்தம் வெளியே கேட்காமல் பார்த்துக் கொள்வேன்;பின் விளைவுகள் பற்றிய பயம்தான்!


பயண நேரம் என்று பார்த்தால்,சிறு பயணமாயின் வசதிப்படும் நேரம்;நீண்ட பயண மாயின் வசதியான வண்டியின் நேரம் அவ்வளவே.வாழ்க்கைப் பயணத் திலேயே சிறந்த துணை நமக்கு நாமே எனும்போது ,இப்பயணங்களில் யார் துணை?


எனக்கு வெளிநாடுகள் செல்ல ஆர்வம் இல்லை;ஆனால் நம் நாட்டிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் எத்தனையோ?இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிலவற்றையேனும் காண இயலுமா,அல்லது கனவாய்ப் போகுமா? 

அவன்தான் தீர்மானிப்பான் .

வியாழன், ஜனவரி 21, 2016

பயணங்கள் முடிவதில்லை!...தொடர் பதிவு


அன்பு நண்பர் திரு தமிழ் இளங்கோ  அவர்களின் ஆணைக்கிணங்க(ஆணையின்றி எதுவும் நடக்குமோ!) தொடர்கிறேன்......  

//அந்தத் தொடர் வண்டி புகையைக் கக்கிக்கொண்டு மதராஸ் எழும்பூர் நிலையத்தை விட்டுப் புறப்பட்டது. ஆம்.அப்போது மதராஸ்தான்.அப்போது புகை விட்டுக் 
கொண்டுதான் ரயில் செல்லும்.டீசல் எஞ்சின் எல்லாம் கிடையாது.சன்னல் பக்கம் அமர்ந்திருந்தால் கண்களில் கரி விழுவது நிச்சயம்.பயணம் முடிந்து இறங்கும்போது சட்டை கருப்பாக இருப்பது உறுதி. 

ஆனால் இப்போது போல் கூட்டமெல்லாம் கிடையாது. இரண்டு மாதங்களுக்கு முன் பதிவு செய்தாலும் காத்திருப்புப்  பட்டியலில் இருக்கும் நிலை கிடையாது. ஆம்;அது 1950 ஆம் ஆண்டு,ஜூன் மாதம்.இப்போது எல்லோரும் எங்காவது போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்.அநேகர் தேவையே இல்லாது பயணித்துக் கொண்டி ருக்கிறார்களோ என்ற சந்தேகம் பல நேரம் எழுகிறது. இன்றைய மக்கள் தொகைப் பெருக்கமும் ஒரு காரணம் அல்லவா?சரி விஷயத்துக்கு வருகிறேன்.
 

அந்த ரயிலில் பயணம் தொடங்கிய பலரில்,ஒரு குடும்பம். சமீபத்தில் அக்குடும்பத் தலைவர் இறந்து விட்டிருந்தார். கணவனை இழந்த,31 வயதே நிறைந்த,32 நடக்கும்  பெண்; அவளது குழந்தைகள்-முதல் பையன்,ராமசாமி(வயது 16), அடுத்த பெண், ரமணி(13), அடுத்தபெண்,ரமா(11), அடுத்த பெண்,மகா(7), கடைக்குட்டி  சுந்தர்(5).

அந்தக் கடைசிப் பையனைத்தவிர,மற்ற அனைவரும் அந்த இழப்பின் தாக்கத்தில் இருந்தனர். அப்பயணத்தை மகிழ்ச்சியாக எதிர்நோக்கியவன் அந்த சிறுவன் ஒருவன் தான்.மற்ற அனைவருக்கும் அந்தப்பயணம் ஒரு தெளிவில்லாத  எதிர் காலத்தின் தொடக்கமாகவே தோன்றியது. ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள்./

இது சில ஆண்டுக்ளுக்கு முன் நான் எழுத்த் தொடங்கிய “ஒரு வரலாறு” என்னும் தொடரின் தொடக்கம்.அந்தக்குட்டிப்பையன் ’சுந்தர்’ தான் நான்.இதுவே என் நினைவில் நிற்கும் முதல் இரயில் பயணம்!
.............
//திருச்சி இரயில் நிலையத்தில் திருவனந்தபுரம்-சென்னை பகல் நேர விரைவு வண்டி யில்,  சென்னை செல்வதற்காக நான் ஏறிய போது நினைக்கவேயில்லை,என் உள்ளத் தைத் தொலைக்கப்போகிறேன் என்று.

இரயிலில் ஒரே கூட்டம்.நான் ஏறிய பெட்டியிலும் கூட்டம்.உட்கார இடம் இல்லை. என் பார்வையை மெதுவாக பெட்டி முழுவதும் செலுத்தினேன்.சுழன்று வந்த என் பார்வை உன்னிடத்தில் வந்ததும் நிலை குத்தி நின்றது.அந்தக் கூட்டத்தில் நீ “பளிச்” என்று தனித்துத் தெரிந்தாய்-எனக்கு.சராசரி உயரம்,ஆண்களைச்சுண்டி இழுக்கும் கவர்ச்சி ஏதுமில்லாத தோற்றம் பகட்டில்லாத புடவை,குறைவான அணிகலன்கள் ,மாநிறம். ஆனால் என்னை ஈர்த்தது எது தெரியுமா?உன் முகம்.சாந்தம் தவழும் அந்தத் தெய்வீக அழகு.மற்ற நாகரிக மங்கையர் போலன்றி நீ அணிந்திருந்த மூக்குத்தி .லட்சுமி கரமான தோற்றம்.எனக்கு ரவிவர்மாவின் லட்சுமியைப் பார்ப்பது போலிருந்தது.அந்த வினாடியிலேயே நான் வீழ்ந்து விட்டேன்.

நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் நீயும் என்னைப் பார்த்தாய்.நம் கண்கள் கலந்த அந்த நொடியில் என் நாடி நரம்புகளில் எல்லாம் ஒரு மின் அதிர்ச்சி ஏற்பட்டது.விவரிக்க இயலாத ஒரு உணர்வு.நெஞ்சு ‘பட,பட’ என வேகமாக அடிக்கத் துவங்கிய்து.உன் கண்கள் என்னும் கடலில் முழ்கி மூச்சுத் திணற ஆரம்பித்தேன். பலவந்தமாக என் கண்களை உன் மீதிருந்து பிடுங்கி வேறு பக்கம் பார்க்க ஆரம்பித் தேன்.யோசித்தேன்” என்ன ஆயிற்று எனக்கு?இது வரை எந்தப்பெண்ணும் பாதிக்காத அளவு இந்தப்பெண் ஏன் என்னைப் பாதிக்கிறாள்”.

மீண்டும் என் பார்வை பெட்டியைச் சுற்றி வந்தது.எங்கும் இருக்கை இல்லாத நிலையில் சாமான்கள் வைக்கும் மேல் பலகை மேல் உட்கார முடிவு செய்தேன்.ஒரு துள்ளலில் மேலே ஏறி அமர்ந்தேன்.இளமையின் வேகம்.நீ பார்த்துக் கொண்டி ருக்கிறாய் என்ற எண்ணம் தந்த எழுச்சி.மேலேறி அமர்ந்த பின் உன்னைப் பார்த்தேன்.நீ அவசரமாக உன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாய்.நான் தெரிந்துகொண்டேன்-நீயும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய் என்று. புரிந்துகொண்டேன்-உனக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் உணர்வுகளை.

மேலேறி அமர்ந்த பின் கையில் வைத்திருந்த’இந்து’ பத்திரிகையைப் பிரித்தேன். படிப்பது போன்ற பாவனையில் அடிக்கடி உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன். உன் பார்வையும் அவ்வப்போது என் மீது விழுந்தது.நான் உன்னைப்பார்க்கும் போதெல்லாம். அவசரமாக உன் பார்வையைத் திருப்பிக் கொண்டாய் .(”யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்”). சிறிது நேரம் சென்று உன்னுடன் வந்த சிறுமியிடம் நீ சொன்னாய் ” இன்னைக்கு பேப்பரே பார்க்கவில்லை”.
நான் என் கையில் இருந்த பத்திரிக்கையை மடித்து அதன் மேல் பகுதியில் என் பெயரை எழுதி அந்தச்சிறுமியிடம் கொடுத்தேன்”படிச்சிட்டுக் கொடுக்கலாம்” என்றவாறே .நீ அதை வாங்கிப் பிரிக்காமலே மேலே எழுதியிருந்த என் பெயரைப் படித்தாய் .உன் செவ்வாய் அசைவையே நான் கவனித்தேன் ”ராதாகிருஷ்ணன்,M.A. ” கொஞ்ச நேரம் பேப்பரைப் புரட்டி விட்டு அந்த சிறுமியிடம் நீ என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னாய் “மெட்ராசில் பெரியம்மா இப்ப சொல்லிட்டிருப்பா-’ராதா ரயில்ல வந்திட்டிருப்பா’ என்று”.உன் பெயரை மிக நாகரிகமாக எனக்குத் தெரிவித்து விட்டாய். என்னில் பாதி நீ என்பதைத் தெரிந்து கொண்டேன்.இது நம் இருவர் வாழ்வின் முக்கியமான நாள் என உணர்ந்தேன்.நம் பார்வைகள் மீண்டும் கலந்தன, பிரிந்தன, மீண்டும் கலந்தன.இன்பமான ஒரு விளையாட்டு.

ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்ற போது பசியால் அழுத ஒரு குழந்தைக்குப் பால் வாங்கித் தர நான் சென்று திரும்புவதற்குள் வண்டி புறப்பட்டு விட ,நான் ஓடி வந்து ஏறும்போது சன்னல் வழியே தெரிந்த உன் முகத்தில் எத்தனை கவலை;உள்ளே வந்த என்னைப் பார்த்தபின் எத்தனை நிம்மதி;என்ன கனிவு; என்ன பாராட்டு .இது போதுமே ஒருவாலிபனுக்கு ,சாதனைகள் படைக்க.

சென்னை நெருங்கிக்கொண்டிருந்தது.நாம் பிரிய வேண்டிய நேரமும்தான். இருவருமே அமைதி இழந்திருந்தோம்.பார்வைகள் பிரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம் .
சென்னை வந்து விட்டது.எல்லோரும் பரபரப்பாக இறங்க ஆரம்பித்தனர்.அந்த நெரிசலில் இற்ங்கும் வழியில் அருகருகே நின்ற நம் கைகள் கலந்தன. மெல்லக் கேட்டேன்”மெட்ராஸில் எங்க?” நீ மெல்லிய குரலில் உன் பெரியப்பா பற்றிய விவரங்களைக் கூறும்போது பிளாட்பாரத்திலிருந்து எப்படியோ உன்னைப் பார்த்து விட்ட உன் உறவினர் உன்னைப் பெயர் சொல்லி அழைக்க நம் பேச்சு நின்றது.இறங்கிய பின் என்னை ஒரு முறை பார்த்துவிட்டு நீ சென்று விட்டாய்,என்மனதையும் எடுத்துக்கொண்டு.//

இது எனது “எங்கிருந்தாலும் வாழ்க “என்ற பதிவின்  ஒரு பகுதி.இதை விட மகிழ்ச்சியான,மறக்க முடியாத பயணம் இருக்க முடியுமா?

இது ஒரு தொடர் பதிவல்லவா?எனவே நாளையும் தொடரும்!

டிஸ்கி:இரண்டு மூன்று நாட்களுக்கு அறுவை தாங்க முடியாமல்  இனிமேல் ஒருவரும் என்னைத் தொடர்பதிவுக்கு அழைக்க மாட்டார்கள்! நிம்மதி!!