தொடரும் தோழர்கள்

வியாழன், ஏப்ரல் 09, 2015

ஓ ‘அதற்கு ஒரு பக்குவம் தேவை’



1961-1964.

நான் பட்டப்படிப்பில் இருந்த காலம் .

எங்கள் தமிழ் விரிவுரையாளர் “இவரல்லரோ எழுத்தாளர்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் பணித்தார்.

நான் ஒரு எழுத்தாளரைப் பற்றி ,அவரது சிறுகதைகள் பற்றியெல்லாம் எழுதி அக் கட்டுரையை  “ஓ!அதற்கு ஒரு பக்குவம் தேவை” என்று முடித்திருந்தேன்.

அப்போது விகடனில் ஒவ்வொரு வாரமும் முத்திரைக் கதை ஒன்று பிரசுரமாகி வந்தது. அப்படி வந்த முத்திரைக்கதை ஒன்றின் கடைசி வரியே நான் எழுதியிருந்தது.

அக்கதையின் பெயர் “யுகசந்தி”

புராதன சிந்தனைகளைப் புறந்தள்ளி.ஒரு புதிய பாதையைக் காட்டும் ஒரு பாட்டியின் கதை.

அந்தக்கால கட்டத்தில் அப்படிப் புரட்சிகரமாக எவரும் சிந்தித்திருக்க முடியாது

கௌரிப்பாட்டியின் மூலமாக அவர் சிந்தித்தார்.
”
காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்” இதைத்தான் கௌரிப்பாட்டி சொல்கிறாள்.சொல்வது மட்டுமில்லை .செய்கிறாள்

கதை இப்படி முடியும்.
“வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால் ?......
ஓ ' அதற்கு ஒரு பக்குவம் தேவை ”

பல முத்திரைக்கதைகள் அவர் எழுதினார்.நான் அவர் எழுத்தில் பைத்தியமானேன்.

அவரது “அக்னிப்பிரவேசம்” பெரிய சர்ச்சையைக் கிளப்பிய கதை

பலரது கேள்விகளுக்குப் பதிலே போல்தான் பிறந்தது “சில நேரங்களில் சில மனிதர்கள்”
கம்யூனிஸ்டாக இருந்தவர் காங்கிரஸ்காரராக மாறி பீரங்கிப் பேச்சாளர் என்றழைக்கப் பட்ட காலத்தில்,ஐந்து மைல் சைக்கிளில் சென்று அவர் பேச்சைக் கேட்டேன் (உத்தமபாளயம் டு கம்பம்)  

திரைத் துறையிலும் தன் முத்திரை பதித்தவர்.

அவர் இயக்கிய “உன்னைப்போல் ஒருவன்” தேசிய விருது பெற்றது

ஜெயகாந்தன் என்ற எழுத்து இமயத்தின் மறைவு,தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்பாகும்

அவரது ஆன்மா சாந்தியடைப் பிரார்த்திக்கிறேன்.

*************************************************************
அந்தக்கால கட்டத்தில் நான் வசித்த ஊர் உத்தமபாளையம்

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர்.

எந்த விழாவாக இருந்தாலும் தவறாமல் என் காதுகளில் விழுந்த ஒரு பாடல் ”இறைவனிடம் கையேந்துங்கள்,அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”

அந்த வெண்கலக்குரல் என்னை வெகுவாக கவர்ந்தது.

நான் அப்பாடலின் ரசிகனானேன்.

அக்குரல் இன்று ஓய்ந்து விட்டது

நாகூர் ஹனீபாவின் மறைவும் ஒரு பேரிழப்பே.

அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்


புதன், ஏப்ரல் 08, 2015

காவீய புதன்



என்ன இது ’காவிய ’என எழுதாமல் ’காவீய ’என எழுதியிருக்கிறாரே ,எழுத்துப் பிழையோ என எண்ண வேண்டாம்.

காவீயம்தான்

காவி பற்றியது

எனவே காவீயம்!

இந்துத்துவா பற்றிப் பேசும் கட்சி என்பதால் பா ஜ க காவிக்கட்சி எனப்படுகிறது.

காவி என்பது இந்து சாமியார்களின் அடையாளம் மட்டுமா?

புத்தத் துறவிகளும் காவி உடை அணிவதுண்டு.

நமது தேசியக் கொடியிலேயே காவி நிறம் உள்ளது

இந்நிறம் பற்றி டாக்டர் சர்வேபள்ளி இராதாகிருஷ்ணன் சொன்னார்” Bhagwa or the saffron colour denotes renunciation or disinterestedness. Our leaders must be indifferent to material gains and dedicate themselves to their work.”
என்ன ஆயிற்று?  

காவி அணிந்தவரெல்லாம் சாமியாரல்ல.

ஆனால் காவி அணியாத சாமியாரும் உண்டு.

அவர்களில் ஒருவர் ஸ்வாமி பித்தானந்த சரஸ்வதி.

அவரது அருளுரையிலிருந்து ஒரு பகுதி மீண்டும் உங்கள் பார்வைக்கு

//ஒரு கிராமவாசி இருந்தான்.ஒரு முறை வெளியூருக்கு ரயிலில் போக எண்ணினான். அதுவே அவனுக்கு ரயிலில் முதல் முறை.பயணச்சீட்டு வாங்கும்போது அவனிடம் சொன்னார்கள் ’20 கிலோ எடையுள்ள பொருள்தான் எடுத்துச் செல்லலாம்’ என்று! அவனிடம் இரண்டு பொருள்கள் இருந்தன.ஒன்று பத்து கிலோ எடை;மற்றது 20 கிலோ எடை!

அவன் ரயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்தான்.20 கிலோ எடையுள்ள பெட்டியைக் கீழே வைத்தான்.அதிக பட்சம் 20 கிலோ எடையைத்தான் ரயிலில் கொண்டு செல்லலாம் என்று சொல்லப்பட்டதால்,10 கிலோ எடையுள்ள பையைத் தன் தலை மீது வைத்துக் கொண்டான்.

டிக்கட் பரிசோதகர் வந்தார்,தலையில் பையுடன் அமர்ந்திருக்கும் மனிதனை பார்த்துத் திகைத்தார்.கேட்டார்”ஏன் இப்படிப் பையைத்தலையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள்”

அவன் சொன்னான்”ஐயா! 20 கிலோ எடைதான் எடுத்துச் செல்லலாம் என்று சொன்னார்கள்.பெட்டி மட்டுமே 20 கிலோ.எனவே அதை ரயிலில் வைத்துவிட்டு இந்தப் பையைத் தலையில் சுமக்கிறேன்!”

அவருக்குச் சிரிப்பு வந்தது!அவன் தலையில் இருக்கும் எடையையும் ரயில்தானே சுமக்கிறது என்று உணராத அவன் அறியாமையை எண்ணி ,’இப்படியும் ஒரு மனிதனா’ என வியந்தார்!

நம்மில் பலரும் அந்த மனிதன் போலத்தான் இருக்கிறோம்!வேண்டாத கவலைகளை, எண்ணங்களைச் சுமந்து கொண்டு நம்மை நாமே வருத்திக் கொள்கிறோம்!நமது கவலைகளச் சுமப்பதற்கு அவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து,நாம் சுமந்தாலும் அவனும் அவற்றைச் சுமக்கிறான் என்பதை உணராது காலம் தள்ளுகிறோம்.

"
சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே,என்னிடத்தில் வாருங்கள்;நான் இளைப்பாறுதல் தருவேன்”—ஏசு பிரான் கூற்று.

”
எல்லாவற்றையும் என்னில் அர்ப்பணித்து என்னையே சரணடைபவர்களை அவர்கள் தளைகளிலிருந்து விலக்கி அமைதி தருகிறேன் “என்கிறார் கிருஷ்ண பரமாத்மா!

வள்ளுவர் அழகாகச் சொல்கிறார்--

“
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”

வாருங்கள்.நம் வருத்தங்களைக்,கவலைகளை,மனச்சுமைகளை அவன் காலடியில் போட்டு விட்டு நாம் சுமையின்றி இளைப்பாறுவோம்!

’
நான் கடவுளை நம்பவில்லை’ என்று சொல்பவர்களாக இருப்பினும் கவலையில்லை!

நார்மன் வின்சன்ட் பீல் சொல்கிறார்”ஒவ்வொரு நாளும் படுக்கப் போகுமுன் உங்கள் கவலைகளை, வருத்தங்களை, ஒரு கற்பனையான கைக்குட்டையில் கட்டி அவற்றை வெளியே தூக்கி எறிந்து விடுங்கள். மனம் இலேசாகும்.மறு நாளைப் புதிதாகத் துவக்குங்கள்.””//

வாருங்கள்!தினம் தினம் புதியவர்களாகப் பிறப்போம்!

செவ்வாய், ஏப்ரல் 07, 2015

செவ்வாய் அமுது.



செவ்வாய் அமுது என்றதும் என் நினைவுக்கு வருகிறது ஒரு திரைப் பாடல்

”தேடி வந்த திங்கள்
 திங்களில் செவ்வாய்
 செவ்வாயின் வெள்ளி
 சேர்த்தெடுத்தேன் அள்ளி”

காதலியின் முகம் நிலவு போல் இருக்கிறது
அந்நிலவில் சிவப்பான வாய்
அந்த செம்பவழ வாயில் முத்துப் பற்கள்
அங்கு ஊறும் நீர்
அள்ளி அணைத்து இதழ் அமுது பருகுகிறான் காதலன்.

இதையே வள்ளுவர் சொல்கிறார்
”பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”

தலைவியின் இதழ் நீர் பாலும் தேனும் கலந்தது போல் இனிக்கிறதாம் தலைவனுக்கு!

ஆனால் பெண்ணின் முகத்தை நிலவுக்கு ஒப்பிடுவதில் ஒரு  சிக்கல் இருக்கிறது.

நிலவில் களங்கம் உண்டு
அவள் முகத்தில் அது இல்லை

எனவேதான் நா பா சொன்னார்(குறிஞ்சிமலர்)—

”நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்”

அரவிந்தன் பார்வையில் பூரணியின் முகம் அப்படி இருக்கிறது!

இது போலவே பெண்களின் நெற்றியை பிறை நிலவோடு ஒப்பிடுவார்கள்;அதுவும் எண்ணாட்டிங்கள்,அதாவது அட்டமி நிலவு!

ஆனால் இதையும் மறுக்கிறார் நாமக்கல் கவிஞர்—

”கூன்பிறை நெற்றியென்றால் குறைமுகம் இருண்டு போகும்!”
ஆம்! முழுமுகமும் ஒளிர்கிறதல்லவா?

முதலில் பார்த்த திரைப்பாடலின் தொடக்க வரிகள்
”தோள் கண்டேன் தோளே கண்டேன்” என்பதாகும்

கவியரசுக்கு இப்பாட்டுக்கான அகத்தூண்டுதல் கம்பனின் பாடலிலிருந்து பிறந்திருக்கிறது

இராமாயணத்தில் இராமன் வருகையில் பார்க்கும் பெண்கள்.....

"தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரோ வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன் னானுருவு கண்டாரை யொத்தார்''

தடந்தோள் பார்த்தவர்களின் பார்வை,அதை விட்டு அகலவில்லை
தாமரை போன்ற பாதங்களில் பதிந்த பார்வை நகர மறுக்கிறது.
முழங்கால் வரை நீண்ட வலிமையான கரங்கள் பார்வையைக் கட்டிப் போட்டு விட்டன.
வெட்டும் விழிப் பார்வை கொண்ட எப்பெண்ணாலும் அவனை முழுதும் பார்க்க முடியவில்லை

அடுத்ததுதான் பிரச்சினை.

அது என்ன ஊழ் கொண்ட சமயத்தன்னான்?

 பொதுவான கடவுளா?

அவன் உருவை முழுவதும் எவரும் கண்டதில்லை எனப் பொருளா?

அல்லது குறிப்பாக  அழிக்கும் தொழில் நாயகனான சிவபிரானா?

அரியும் அயனும் அரனின் அடிமுடி தேடிக் கண்டு பிடிக்க இயலாத்தைக் கம்பன் கூறுகிறானா?

ஒரு வைணவக் காப்பியத்தில் சிவனது பெருமை உரைக்கப் படுமா?

கேள்விகளுடன் முடிக்கிறேன் ,...............

இச் செவ்வாயின் தமிழ் அமுதை!

திங்கள், ஏப்ரல் 06, 2015

திங்கள் சந்தை.



இது திங்கள் சந்தை.இந்தப் பெயர் சொன்னதும் என் நினைவுக்கு வருவது குமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்….திங்கள்சந்தை.அதை இப்போது திங்கள் நகர் என்றும் அழைக்கிறார்களாம். நான் 1977இல் முளகுமோடு என்னும் ஊரில் இருந்தபோது பரிச்சயமான ஊர் இது.நெய்யூர் என்றும் சொல்வார்கள்.

எனக்குத் தெரிந்த  இன்னொரு திங்கள் சந்தை டில்லியில்.கரோல்பாக்கில் கடைகள் அனைத்துக்கும் திங்கட்கிழமை விடுமுறை.அப்போது மிக நீளமான அஜ்மல்கான் ரோடில் பிளாட்பாரக் கடைகள் முளைத்து விடும் பேரம் பேசத் தெரிந்தால் மலிவாக எதையும் வாங்கலாம்.

 ஊரைப் பொறுத்து வெவ்வேறு நாட்களில் சந்தை நடைபெறும். இது போன்ற சந்தைக்காகவே காத்திருந்து பொருள் வாங்குபவர் பலருண்டு.

அந்தக் காலத்தில் கிராமத்தில் சந்தைகளில் விலை கூறுவது குழூஉக்குறிகளின் மூலம் என்று சொல்வார்கள்.சலகை,சலகைத்தட்டை போன்றெல்லாம் குழூஉக்குறிகள் அமைந்திருக்கும்.

தகுதிச் சொல் வழக்குகள் மூன்று வகைப்படும்.அதில் ஒன்று குழூக்குறி.மற்ற இரண்டும் மங்கலம், இடக்கரடக்கல் ஆகும்.தாலி பெருகிற்று என்பது மங்கலச் சொல்லாகும்.கால் கழுவினான் என்பது இடக்கரடக்கல் ஆகும்.

இப்பொதெல்லாம் பல்பொருள் அங்காடி என்கிறோம்.சூப்பர் மார்க்கெட் என்கிறோம். ஷாப்பிங் மால் என்கிறோம்.இதற்கெல்லாம் முன்னோடி சந்தை.அந்தக்காலம் முதல் பிரபலமாக இருப்பது.

தமிழ்நாட்டில் உழவர்சந்தை பற்றி அறிந்தவர்கள் சொல்வர் அதன் பயன் பற்றி.

 தமிழ்ப்படங்களில் சந்தை ஒரு முக்கியமான களம்;மற்றது திருவிழா

சந்தையில் நாயகனுக்கும் ரவுடிகளுக்கும் சண்டை தூள் பறக்கும்.கடைகள் சேதமாகும்; எல்லாம் ஒரு பெண்ணுக்காகவே இருக்கும்.

அவர்கள் சந்தைக்குப் போவதே  சண்டைக்குப் போவதற்காகத்தானோ எனத் தோன்றும்!

சந்தை என்றாலே விற்பவர்கள்,வாங்குபவர்கள்,கூட்டமாகப் பேசுபவர்கள் என்று அனைவரின் உரத்த குரலாலும் இரைச்சல் மிகுந்தே காணப்படும்.எனவேதான் எங்காவது இரைச்சல் அதிகமாக இருந்தால் சந்தை மாதிரி இருக்கிறது எனச் சொல்வார்கள்.

இயன்றால் அடுத்த திங்கள் சந்தையில் சந்திப்போம்,பல சரக்குடன்!



ஞாயிறு, ஏப்ரல் 05, 2015

சன்டே,ஃபன்டே !

இரு மனைவிகள் பேசிக் கொண்டார்கள்
ம.1:நேற்று எப்படி?
ம 2:மகா மோசம்.என் கணவர் அலுவலகத்திலிருந்து வந்தார்.5 நிமிடம் கழித்து சாப்பிட்டார்; அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கி விட்டார்.உனக்கு எப்படி?
ம 1.பிரமாதம்.என் கணவர் திரும்பியதும் என்னை உணவுக்கு வெளியே அழைத்துச் சென்றார். சாப்பாட்டுக்குப் பின் கைகளைக் கோர்த்தவாறே வீடு வரை நடந்தோம்.வீட்டுக்கு வந்த பின் வீடு முழுவதும் மெழுகு வர்த்தி ஏற்றினார். ஆகா!

அதே நேரத்தில் அவர்கள் கணவர்கள் பேசிக் கொண்டனர்

க 1.நேற்று எப்படி?
க.2.பிரமாதம்.அலுவலகத்திலிருந்து வந்தேன்.உணவு தயாராக இருந்தது. நன்றாகச் சாப்பிட்டேன்..சிறிது நேரம் கழித்து நன்றாகத் தூங்கி விட்டேன்.நீ எப்படி?
க.1.மகா மோசம்.வீட்டுக்கு வந்தேன்.மின்சார பில் கட்டாததால், இணைப்பத் துண்டித் திருந்தார்கள் ஒரே இருட்டு .என்ன செய்ய.சாப்பிட மனைவியை வெளியே அழைத்துச் சென்றேன்;ஏகப்பட்ட செலவு.திரும்ப பஸ்ஸுக்குக் கூடக் காசில்லை.நடந்தே வீடு திரும்பினோம்.வெளிச்சம் வேண்டுமே?வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தேன்.
-------------------------------------------------------
எதையும் சொல்லும் விதம் முக்கியம்!