தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஏப்ரல் 07, 2015

செவ்வாய் அமுது.செவ்வாய் அமுது என்றதும் என் நினைவுக்கு வருகிறது ஒரு திரைப் பாடல்

”தேடி வந்த திங்கள்
 திங்களில் செவ்வாய்
 செவ்வாயின் வெள்ளி
 சேர்த்தெடுத்தேன் அள்ளி”

காதலியின் முகம் நிலவு போல் இருக்கிறது
அந்நிலவில் சிவப்பான வாய்
அந்த செம்பவழ வாயில் முத்துப் பற்கள்
அங்கு ஊறும் நீர்
அள்ளி அணைத்து இதழ் அமுது பருகுகிறான் காதலன்.

இதையே வள்ளுவர் சொல்கிறார்
”பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”

தலைவியின் இதழ் நீர் பாலும் தேனும் கலந்தது போல் இனிக்கிறதாம் தலைவனுக்கு!

ஆனால் பெண்ணின் முகத்தை நிலவுக்கு ஒப்பிடுவதில் ஒரு  சிக்கல் இருக்கிறது.

நிலவில் களங்கம் உண்டு
அவள் முகத்தில் அது இல்லை

எனவேதான் நா பா சொன்னார்(குறிஞ்சிமலர்)—

”நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்”

அரவிந்தன் பார்வையில் பூரணியின் முகம் அப்படி இருக்கிறது!

இது போலவே பெண்களின் நெற்றியை பிறை நிலவோடு ஒப்பிடுவார்கள்;அதுவும் எண்ணாட்டிங்கள்,அதாவது அட்டமி நிலவு!

ஆனால் இதையும் மறுக்கிறார் நாமக்கல் கவிஞர்—

”கூன்பிறை நெற்றியென்றால் குறைமுகம் இருண்டு போகும்!”
ஆம்! முழுமுகமும் ஒளிர்கிறதல்லவா?

முதலில் பார்த்த திரைப்பாடலின் தொடக்க வரிகள்
”தோள் கண்டேன் தோளே கண்டேன்” என்பதாகும்

கவியரசுக்கு இப்பாட்டுக்கான அகத்தூண்டுதல் கம்பனின் பாடலிலிருந்து பிறந்திருக்கிறது

இராமாயத்தில் இராமன் வருகையில் பார்க்கும் பெண்கள்.....

"தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரோ வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன் னானுருவு கண்டாரை யொத்தார்''

தடந்தோள் பார்த்தவர்களின் பார்வை,அதை விட்டு அகலவில்லை
தாமரை போன்ற பாதங்களில் பதிந்த பார்வை நகர மறுக்கிறது.
முழங்கால் வரை நீண்ட வலிமையான கரங்கள் பார்வையைக் கட்டிப் போட்டு விட்டன.
வெட்டும் விழிப் பார்வை கொண்ட எப்பெண்ணாலும் அவனை முழுதும் பார்க்க முடியவில்லை

அடுத்ததுதான் பிரச்சினை.

அது என்ன ஊழ் கொண்ட சமயத்தன்னான்?

 பொதுவான கடவுளா?

அவன் உருவை முழுவதும் எவரும் கண்டதில்லை எனப் பொருளா?

அல்லது குறிப்பாக  அழிக்கும் தொழில் நாயகனான சிவபிரானா?

அரியும் அயனும் அரனின் அடிமுடி தேடிக் கண்டு பிடிக்க இயலாத்தைக் கம்பன் கூறுகிறானா?

ஒரு வைணவக் காப்பியத்தில் சிவனது பெருமை உரைக்கப் படுமா?

கேள்விகளுடன் முடிக்கிறேன் ,...............

இச் செவ்வாயின் தமிழ் அமுதை!

7 கருத்துகள்:

 1. //ஒரு வைணவக் காப்பியத்தில் சிவனது பெருமை உரைக்கப் படுமா?//
  ‘அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவர்கள் வாயிலே மண்ணு.’ என்ற சொல்லாடல் நீங்கள் அறியாததல்ல.
  அடுத்து புதன் சந்தை உண்டா?

  பதிலளிநீக்கு
 2. விளக்கவுரை அருமை ஐயா
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 3. அருமையான பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள். ஒருமுறை கேட்டுவிட்டு வருகிறேன்.

  :)))))))

  பதிலளிநீக்கு
 4. ம்ஹீம்... பதில் சொல்லியே ஆக வேண்டுமாக்கும்...! ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 5. அருமை......

  காவிய புதன் நோக்கி இதோ வருகிறேன்.

  பதிலளிநீக்கு