தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 19, 2013

ஒரு பொன் மாலைப் பொழுதும்...கதையின் புதிய முடிவும்!


என் சென்ற பதிவில் நான் குறிப்பிட்டிருந்தவர்களில் ரூபக் ராம் தன் முடிவை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார்.ஒரு புதிய கோணத்தில் சிந்தித்து எழுதப்பட்ட சுவாரஸ்யமான முடிவு............

இதோ உங்களுக்காக..............
*************************************
புகைப் படம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய அன்று, இரவு முழுவதும் அந்தப் பெண்ணின் ஞாபகமே. அவள் அழகை எண்ணி அல்ல, ஒரு வயதை கடந்த பின் உடல் அழகு பெரிதாக தெரிவதில்லை. அவள் இதழால் சிரித்தாலும் அவள் மனதில் ஒரு சலனம் இருந்ததை என்னால் உணர முடிந்தது. இலவச தேநீர் குடிக்க அங்கு செல்லும் பொழுது, அவளிடம் அவளைப் பற்றி முழுதும் கேட்டறிந்து, இயன்ற வரை உதவ வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த நான் எப்படி தூங்கினேன் என்றே தெரியவில்லை.
கனவில், என் தலைமையில், இந்திய-பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சமீபத்திய எல்லைச் சண்டைகளை பற்றி சமாதானம் பேசுகையில், என் மனைவி என் தலையில் தட்டி எழுப்பி, பால் வாங்க பையைக் கொடுத்தாள். அதிகாலை ஆறு மணி, சென்னையில் சூரியன் தோன்றும் அந்த விடியலின் இதமான வானிலையை ரசித்துக் கொண்டு, பேப்பர் போடும் சிறுவர்களின் வேகத்துக் ஈடு கொடுக்க முடியாமல், மெதுவாகவே எங்கள் தெரு முனையில் இருக்கும் பால் கடைக்குச் சென்றேன்.

பாக்கெட் பால் வாங்கிக் கொண்டு, அருகில் இருக்கும் டீக் கடையில் ஒரு தந்தி வாங்குகையில், இலவ மூலிகை தேநீர் பற்றி எண்ணம் எழ, இதழோரம் சிக்கனமாக சிரித்துக் கொண்டேன். அப்பொழுது அந்த டீக் கடை சிறுவன், செய்தி போஸ்டர்களை மாற்றிக் கொண்டிருந்தான். 

'எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறல் - நான்கு இந்திய ராணுவ வீரர்கள் மரணம்' .....
'தலைவா படம் தமிழ் நாட்டில் வெளி வருமா? - விஜய் ரசிகர்கள் ஏக்கம்' ... 

'ஆரணி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏழு பேர் பலி'....
'இந்திய அரசின் இலங்கைத் தமிழர் கொள்கைகளை எதிர்த்து மர்மக் கும்பல்  பகிரங்க மிரட்டல்- புலனாய்வுத் துறை வலைவீச்சு'...

வேகமாக எல்லாச் செய்திகளையும் ஒரு நோட்டம் விட்டு, வீடு திரும்பினேன்.     
வீட்டு வாசலில் ஒரு வெள்ளை நிற ஸ்கோடா-பேபியா நின்று கொண்டிருந்தது. வாசலில் ஒரு ஜோடி கருப்பு சூ மற்றும் ஒரு ஜோடி செருப்பு இருந்தன. உள்ளே நுழைந்தால் முகம் முழுதும் முடி, மண்டைக்கு மேல் கருப்பு கொண்டையுடன் ஒரு சிங் மற்றும் வீரப்பன் மீசை, ஐந்து லிட்டர் தொந்தியுடன் ஒருவரும் சோபாவில் அமர்ந்திருந்தனர். நேராக என் மனைவி என்னிடம் வந்து 'உங்க ப்ளாக் பிரண்ட்ஸ்னு சொல்றாங்க, காலைலேயே வந்து உசிர வாங்கணுமா?' என்று என் காதைக் கடித்து விட்டு, பால் பையை வாங்கிக் கொண்டு சமையல் அறையினுள் சென்றாள்.
அந்த சிங் 'உம்' என்றிருக்க, உடன் வந்தவர் 'மிஸ்டர் பித்தன் நாங்க உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. எங்க கூட வெளிய வரிங்களா?' என்று ஒரு அதிகாரத்துடன் கேட்டார். அவரிடம் என்னால் ஏனோ மறுப்பு சொல்ல முடியவில்லை. பித்தன் என்று என் புனைப் பெயரால் அழைத்த பெருமிதமாகக் கூட இருக்கலாம். என் மனைவியிடம் 'வெளியே போகிறேன்' என்று சொல்லியவுடன் 'மூணு காபி மிச்சம்' என்ற சந்தோஷத்துடன் பச்சைக் கொடி காட்டி வழியனுப்பினாள். வெளியே வந்து அந்த காரில் ஏறும் பொழுதுதான், அந்த நம்பர் பிளேட்டை கவனித்தேன். அதில் 'G' என்று சிவப்பில் இருந்தது.           
முன் சீட்டில் அமர்ந்த  சிங் என்னிடம் (ஆங்கிலத்தில் பேசியது வாசகர்களுக்காக தமிழில்), 'நாங்க உங்க ப்ளாக்ல 'ஒரு பொன் மாலைப் பொழுதும் ஒரு பெண்ணின் அழைப்பும்!' அப்படின்னு எழுதின கதைய படிச்சோம். அதுல நீங்க குறிப்பிட்ட பெண் எப்படி இருப்பா என்று சொல்ல முடியுமா?' . 'இவங்க என் ப்ளாக் எல்லாம் படிக்கறாங்களா, பரவாயில்லையே' என்று என்னுள் மகிழ்ந்து, அந்தப் பெண்ணின் அடையாளங்களை சொல்லி முடித்து, பின்னர் 'ஏன் கேக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?' என்று நான் கேட்கும் பொழுது,காரில் சற்று குளுமை அதிகம் இருப்பதை உணர்ந்தேன்.     
'ஒரு கும்பல் நம்ம அரசுக்கு சவால் விடுது. இந்தக் கும்பல் நக்ஸலைட்ட விட ஆபத்தானது என்று எங்களுக்கு தகவல் வந்திருக்கு. அவங்க தங்களுக்கு தேவையான ஆட்கள பல வழியில அடையாளம் கண்டு அவங்க கூட்டத்துல இணைச்சிக்கறாங்க. இலவ தேநீர் வழியில சிக்கனவர் தான் நீங்க' என்று வண்டி ஒட்டிக் கொண்டிருந்த தொந்தி கணபதி கூறியவுடன் என்னுள் ஒரு ஆவேசம் எழுந்தது.
'சார் நான் எல்லாம் அவங்க கூட சேர மாட்டேன். நான் ஒரு சாமானியன்.' என்று கூறி சன்னல் வழியே ஓரக் கண்ணால் பார்க்கையில் வண்டி அடையார் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தது. 
'நீங்க ஒத்துக் கலைன்னா அவங்க உங்கள கட்டாயப் படுத்தி கடத்தி, சித்தரவதை செய்து உங்கள வேல வாங்கிடுவாங்க' என்று அந்த சிங் கூறினார்.
'அட இருந்தாலும் இந்த முதுமையில என்ன வச்சி அவங்க என்ன செய்வாங்க?' என்று நான் கேட்டு முடிக்கும் பொழுது வண்டி ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு முட்டுச் சந்தில் நின்றது.         
அந்த தொந்தி கனபதி ஒரு ஏளனச் சிரிப்புடன் என்னை பார்த்து 'உங்க தமிழ் தான் அவங்களுக்கு வேணும்' என்றார்.
ஆச்சரியத்துடன் 'என் தமிழா? ஒன்னும் புரியலையே ' என்று நான் விழிக்க, 'இப்ப எல்லாம் தீவிரவாதம் என்பது, குண்டு ரத்தம் அப்படி எல்லாம் இல்லை. எல்லாச் சண்டைகளும் இணையத்தில் தான். எந்த நிமிடமும் நம் அரசு ரகசியங்களை ஊடுருவ நூறு சீன ஹாக்கர்கள் அயராது உழைப்பதாக செய்தி உள்ளது. இவங்க புது இயக்கம், தமிழ் சார்ந்த இயக்கம், அவங்க கொள்கைகளை தமிழ் மக்கள் கிட்ட கொண்டு சேர்க்க அவங்களுக்கு உங்களப் போல தமிழில் நல்ல புலமை உள்ள ஒரு பிளாக்கர் தேவைப் படுது' என்று கூறி சிங் என் சந்தேகத்தை தீர்த்தார்.
'உங்களுக்கு தான் எல்லாம் தெரியுதே, அவங்கள புடிச்சு விசாரிக்கறத விட்டு என்ன ஏன் அழைச்சுக் கொண்டு வந்தீங்க?' என்று கேட்டேன்.
'அவங்களுக்கு பின்னால ஒரு பிரபலம், நிறைய பண பலம் கொடுக்குது, அது யார் என்று கண்டு பிடிச்சுட்டு அப்பறம் தான் அவங்கள பிடிக்கனும். அவரைக் கண்டு பிடிக்கற வரைக்கும் மிஸ்டர் பித்தன் நீங்க அரசு ஒற்றனா செயல்படனும்' என்றார் சிங்.             
இருவரும் என் வாயில் இருந்து வரப்போகும் வார்த்தையை எதிர் பார்த்து என்னை நோக்க, என் நெற்றியில் இருந்து கிளம்பிய வியர்வைத் துளி, என் புருவத்தில் மோத, அதை துடைக்க வேண்டுமா என்று என் கை யோசித்தது.   

*******************************************************?!

16 கருத்துகள்:

 1. தமிழில் நல்ல புலமை உள்ள ஒரு பிளாக்கர் தேவைப் படுது... = நீங்கள் இருக்கும் போது....

  பதிலளிநீக்கு
 2. ம்.... உங்கள் தமிழுக்காக நீங்கள் ஒற்றனா.... நல்லா எழுதியிருக்கிறார்...

  பதிலளிநீக்கு
 3. சூப்பர் ரூபக்... புது விதமான முயற்சி, பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 4. படு சுவாரஸ்யமான தகவலா இருக்கே.. சொல்ல முடியாது இப்படியும் நடக்கலாம், நடந்துக்கிட்டும் இருக்கலாம். அதனால நமக்கு பழக்கம் இல்லாதவங்கக் கிட்ட பொதுவிலும் பேசக்கூடாதுங்கோ....:))

  பதிலளிநீக்கு
 5. குட்டனே வந்த விட்டார்...

  தங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //குட்டனே வந்த விட்டார்...//

   அதென்ன குட்டனே வந்து விட்டார்?புரியவில்லை
   நன்றி

   நீக்கு
 6. உண்மைதான். திரு ரூபக் ராம் அவர்கள் ஒரு மாறுபட்ட கோணத்தில் சிந்தித்திருக்கிறார். திரு சென்னை பித்தனின் சேவை அரசுக்குத் தேவை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு